Skip to main content

வாடாமல்லிகை - 08




அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக ஓடத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது.  பஸ் கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் விரைந்து சென்றது . நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களைச்  சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த வாசத்தை நெஞ்சார இழுத்து விட்டேன்.

புலத்தில் பலவருடங்களை தொலைத்த எனக்கு சிறு வயதில் என்னுடன் இறுக்கமான பிணைப்பை கொடுத்த இந்த பஸ்ஸில் பயணம் செய்வது தொலைத்த நாட்களை மீண்டும் எடுப்பது போன்ற மன உணர்வையே ஏற்படுத்தியது. எல்லோருமே ஞாபகவீதியில் பயணம் செய்து மனக்கிளர்ச்சியை கொண்டு வந்து அதில் பலவித உணர்ச்சி நிலைகளுக்கு ஆளாவது பிடித்தமான செயல் .அது போலவே எனக்கும் இந்த இ போ ச பஸ் பயணம் அமைந்தது. 

இப்பொழுது அந்த பஸ்ஸில் ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது. எல்லோரும் அலுவலகத்துக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களுமாகவே இருந்தார்கள். முன்பு போல பச்சை மனிதர்களின் அரையண்டங்கள் இல்லாவிட்டாலும், இயங்கியும் இயங்காத பல படை முகாம்களையும் வீதிகளில் செல்லும் பச்சை வாகனங்களையும் என்னால் அவதானிக்க முடிந்தது. வீதிகளில் பச்சைகளுக்கு பதிலாக காக்கிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதிதைக் கண்ட புழுக்கத்தில் புழுதி பறக்க ஓடும் வாகனங்களுக்கு இந்த காக்கிகள் என்ற கடிவாளம் அத்தியாவசியமாகவே எனக்குப் பட்டது. ஏனெனில் வேகமாக போனதில் வாழ்வை வேகமாக போக்கியவர்கள் இந்தப் பாதையில் பல பேர்கள் இருந்திருக்கின்றார்கள். ஒரு சில இடங்களில் பட்டியில் உள்ள மாடுகள் குடும்பசகிதமாக மேச்சலுக்கு சென்று கொண்டிருந்தது மனதை அள்ளியது. அவற்றை ஒழுக்கு படுத்த ஒரு நாயும் சென்று கொண்ருந்தது. ஒரு சில மாடுகள் நடுவீதியினாலும் சென்று கொண்டிருந்தால் நான் சென்ற பஸ் தன வேகத்தை மட்டுப்படுத்தியே ஓடியது. இந்த மாடுகளும் ஒருகாலத்தில் நாட்டின் எதிரிகளாக கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவைதான். அதனால் என்னவோ இந்தமாடுகள் கண்டுக்கும் மாட்டுக்கும் இடைப்பட்டவையாக இருந்தன.

தூரத்தே ஓமந்தை சோதனை சாவடி வருவதற்கு அறிகுறியாக வீதிக்கு குறுக்கே மறிப்புகள் காணப்பட்டன. எனக்கு அடிவயிற்ரில் அமிலங்கள் சுரந்து உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கின. என்னை இயல்புபடுத்த முனைந்த நான் என்னிடம் தோற்றுக்கொண்டே வந்தேன். ஓமந்தை சோதனை சாவடி எங்களைப் பொறுத்தவரையில் பல சோதனைகளை கொண்டதாகவே இருந்து இருந்திருக்கின்றது. அதன் ஒவ்வரு அங்குலமும் பல கண்ணீர்கதைகளை கொண்டது. அதில் இரத்தவாடைகள் முற்றுமுழுதாக மறையாது மௌனசாட்சியங்களாக இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இராச்சியத்துக்குள் இராச்சியமாக எல்லை போட்ட பூமி அது. மண்ணை ஆண்டவர்களும் ஆளத்துடித்தவர்களும் இராச்சியத்தின் மக்களை பங்கு போட்டு வருத்திய இடம் இது . எங்கள் ஒருவரையும் இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கி சோதனை சாவடியை நோக்கி நடந்தார்கள்.அங்கே இருந்த இராணுவ அலுவலகரிடம் தங்கள் அடயாள அட்டையை பதிந்து கொண்டு வந்தார்கள். ஒருவகையில் பார்த்தால் நுட்பமாக பின்னிய வலையில் அவர்களே எமக்கான பலியாடுகள். நான் பஸ்ஸில் இருந்து கொண்டு சுற்றாடல்களை அவதானித்தேன் . 

படைமுகாமில் இராணுவ வீரர்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். போர் முடிந்த பின்பும் மக்களை அச்சத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற நுண்ணிய சிந்தனைகளால் தொடர்ந்தும் முகாம்களில் அடைத்து வளர்க்கப்படுபவர்கள். இவர்கள் எப்பொழுது எஜமானர்களை கடித்து குதறுவார்கள் என்பது எஜமானர்களுக்கே தெரியாதவிடயம். எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு பஸ் பவ்வியமாக ஓமந்தை சோதனை சாவடியில் இருந்து வெளியேறி மீண்டும் எண்பதுகளில் வந்த சினிமா பாடல்களைப் போட்டபடியே ஏ 9 பாதையில் விரையத் தொடங்கியது. பஸ்ஸினுள் பலவிதமான மக்கள் பலவிதமான பிரச்சனைகளுடன் பயணித்தார்கள். அவர்களை நான் வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுவாரசியமாகத்தான் இருந்தது. இந்தக்காலை வேளையிலேயே வெய்யில் உச்சியில் நின்றது. பஸ் ஜன்னல்களின் ஊடாக காலை வெய்யில் முகத்தில் சுளீரிட்டது. நான் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். விரைந்து சென்ற பஸ் கிளிநொச்சியை கடந்து பரந்தனை தொட்டுக் கொண்டிருந்தது. பரந்தனும் முன்பு போல் இல்லாது அபிவிருத்தி என்ற புயலில் சிக்கி செழுமையாகவே இருந்தது. இந்த அபிவிருத்திகள் வெளிப்பார்வைக்கு அழகான மாளிகைகளாகத்  தெரிந்தாலும், அதன் உள்ளே பச்சை மனிதர்கள் என்ற கறையான்கள் ஊர்ந்து கொண்டுதான் இருந்தன.

காலை எட்டு மணியை நெருங்கியதால் எல்லோரும் சாப்பிடுவதற்காக பஸ் பரந்தனில் தன்னை நிறுத்தியது. எனக்கு அதிகம் பசிக்காததால் முன்னே இருந்த கடையில் ஒரு தேநீரையும் வடை ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அந்தக்கடை இப்பொழுது தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் அது யுத்தத்தின் கறைபடிந்த சாட்சியமாகவே இருந்தது. இதே இடத்தில் முன்பு நான் தேநீரும் ரோல்சும் சாப்பிடிருக்கிறேன். மன்னர்கள் முக்கியமாக தாங்கள் வேட்டை ஆடியதற்கான எந்த விதமான அடயாளத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மக்கள் மனதை வெல்ல நகர்த்திய காய்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகின. சூடான தேநீரும் வடையும் புகைந்த வயிற்றுக்கு இதமாகவே இருந்தது. பஸ் வெளிக்கிட நேரம் இருந்ததால் சிகரட் ஒன்றின் முனையை லைட்டரால் சிவப்பாக்கி அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். சோர்ந்த நரம்புகழும் தசைகளும் புத்துணர்ச்சி பெற்றன. பஸ் மீண்டும் தனது பயணத்தை தொடர ஹோர்ண் அடித்து உறுமத் தொடங்கியது. 

08 வைகாசி 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம