Skip to main content

Posts

Showing posts from February, 2020

தெய்வானை-சிறுகதை-கோமகன்

நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்துப் பின்னர் மேலே எழும்பிய சுவர் பனையோலையினால் நன்கு வேயப்பட்டிருந்த கூரையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. மாலின் உட்புறமாக இருந்த பாரிய வட்டத்தின் குறுக்குப்பாடாக சாமான்களை போட்டு வைப்பதற்கான களஞ்சிய அறை இருந்தது. அதற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த புகட்டில் மூன்று கண்களைக் கொண்டு சுட்ட களிமண்ணினால் வனையப்பட்டிருந்த நான்கு சூட்டடுப்புகள் இருந்தன. அதில் ஒன்றின் மீத