Skip to main content

வாடாமல்லிகை - 12




நானும் மருமகளும் மீண்டும் வீடு நோக்கி சென்ற பொழுது ஒழுங்கையை இருட்டு ஓரளவு தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. ஒருவரை ஒருவர் அடயாளம் காணும் அளவுக்கே வெளிச்சம் இருந்தது. தூரத்தே வீட்டு வாசலில் மனைவியும் தங்கைச்சியும் நின்று கதைதுக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை கண்டவுடன் எனது கைகளில் இருந்த மருமகளின் பிடி விலத்திக்கொண்டது. அவள் அவர்களை நோக்கி ஓடத்தொடங்கினாள். ஒன்று கிடைத்தவுடன் மற்றையதை மறக்கும் இயற்கை வகுத்த சட்டத்துக்கு மருமகள் மட்டும் விதிவிலக்கா என்ன? 

கிணற்ரடியில் வியர்த்து கசகசத்து இருந்த உடலை நன்றாக கழுவி விட்டு வேறு உடைகளுக்கு தாவிக்கொண்டு வீட்டு முன் முற்றத்தில் இருந்து கொண்டேன். மருமகள் எனக்கு பகோடாவும் தேநீரும் கொண்டு வந்து தந்தாள். தேநீரின் இனிப்பும் பகோடாவின் உறைப்பும் வித்தியாசமான சுவையை எனக்கு தந்தன. தேநீருடன் லயித்துக்கொண்டிருந்த என்னை அண்ணையின் பிள்ளைகளது குரல்கள் கலைத்தன. எனது லயத்தைக் கலைக்காது கண்களால் என்னவென்று கேட்டேன். நான் அவர்களை யாழ்ப்பாணம் கூட்டிச் செல்வதாகச் சொன்னதை நினைவு படுத்தினார்கள். அவர்கள் எல்லோருமே தோளுக்கு மேல் வளர்ந்திருந்தார்கள். நான் எவ்வளவு தூரம் நட்பு பாராட்டினாலும் அவர்கள் என்னிடம் "மரியாதைப் பயம்" என்ற எல்லைக் கோட்டினிலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் அண்ணையின் இடத்தை எனக்கு கொடுதிருக்கின்றார்களோ தெரியவில்லை. யாழ்ப்பாணத்து வாழ்வு முறமையின் எச்ச சொச்சங்கள் அவர்களிடம் சிறிது தூக்கலாகவே காணப்பட்டன. இது எனக்கு அவர்களுடனான தொடர்பாடலில் சிக்கல்களையே கொண்டு வந்தது. " நீ மட்டும் என்ன திறமா? உனது அப்பாவிடமும் சகோதரர்களிடமும் நண்பர்கள் போல் பழகினாயயா?" என்று மீண்டும் என்மனம் என்னிடம் நக்கலடித்தது. 

நேரம் இரவு பத்து மணியை கடந்திருந்தது நாங்கள் படுப்பதற்கு நான் சிறுவயதில் படுக்கும் சுவாமி அறையை ஒதுக்கியிருந்தாள் தங்கை. நான் அறையினுள் நுழைந்தபொழுது சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய வேப்ப மரத்தில் செய்த அதே பழைய கட்டில் என்னைப்பார்த்து பல்லிளித்தது. அதைத் தொடுகையிலேயே ஒருவித பரவசம் என் உடலில் பாய்ந்தது. அந்த கட்டிலில் தான் எனது பொழுதுகள் அதிகம் கழிந்திருக்கின்றன. நேரமே போவது தெரியாமல் கதைப் புத்தகங்களை அந்தக் கட்டிலில் படுத்திருந்து வாசித்துக்கொண்டிருப்பேன். அந்த கட்டில் நான் கதைகளில் வாசிக்கும் கட்டில்களைப் போலவே மிகவும் அகலமாகவும் புசுபுசுவென்று மென்மையாகவும் இருக்கும். நான் அதில் படுக்கும் பொழுது ஒரு மகாறாஜா படுப்பதைப் போலவே உணர்ந்திருக்கின்றேன். நினைவுகளில் கட்டறுந்த என் மனம் சொல் கேட்க மறுத்தது .என் கண்கள் அறையை நோட்டமிட்டான அம்மாவும் அப்பாவும் கறுப்பு வெள்ளை படங்களில் சுவாமி படங்களுடன் அங்கத்தவர்களாகி இருந்தார்கள். நான் அவர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் தாமும் வாழ்ந்து மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து உதிர்ந்து விட்டிருந்தார்கள். ஆனால் நான்? என் கண்களில் தன்னிச்சையாக கண்ணீர் குமுழிகள் எட்டிப் பார்த்தன. அன்றைய இரவு எனக்கு பலவித எண்ணச் சுழல்களால் நத்தை வேகத்திலேயே நகர்ந்ததது. ஒருகட்டத்தில் மூளை களைக்க நித்திரை தானாகவே வந்தது .

வழமைபோலவே அதிகாலையில் எனக்கு விழிப்பு வந்துவிட்டது. மெதுவாக எழுந்து குசினியில் எனக்காக தேநீரை தயாரித்துக்கொண்டு எனக்காக வழங்கப்பட்ட அந்தக் காலையின் மொக்கவிழ்ப்பைக் கண்டு ருசிக்க வெளியில் வந்தேன். தூரத்தே கலந்து வந்த காகங்களின் கரையலும், மாமரத்தின் மேல் இருந்த பறவைகளின் கலகலப்பும் அந்த அதிகாலையை மெருகேற்றின. பிள்ளையார் கோவில் பக்கம் இருந்த வானம் சிவக்கதொடங்கி விட்டது. சுற்றாடலை வெக்கை மெதுமெதுவாக தன் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது . ஒழுங்கையில் மாடுகள் மேச்சலுக்காக தரவைக்கு சென்றுகொண்டிருந்தன. மாடுகளுடன் கன்றுக்குட்டிகளும் பால் குடித்தவாறே சென்றுகொண்டிருந்தன .அவற்றின் வாயால் நுரை தள்ளிகொண்டிருந்தன . நான் இந்த நிகழ்சிகளில் லயித்துக்கொண்டிருக்கையில் மனைவி கோப்பியுடன் வந்து நான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருப்பதை நினைவு படுத்தினா. நான் கோப்பியை குடித்து விட்டு ஆசை தீர குளித்து வெளிக்கிட்டேன் அண்ணையின் பிள்ளைகளும் வெளிக்கிட்டு நின்றிருந்தார்கள். 

நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல தபால் பெட்டியடி பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இந்த தபால் பெட்டியடி பஸ் நிலையத்தை இபோதுள்ள பஸ் நடத்துனர் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. நாங்கள் குறிப்பறிந்தே ஏறி இறங்கி வேண்டியிருந்தது. ஏறத்தாழ முப்பதுவருடங்களுக்கு முன்பு இதே வீதியால் சிறுவயதில் இடுப்பால் காற்சட்டை வழுக வழுக வெள்ளைச்சட்டையுடன் பள்ளிக்கூடம் சென்றது நினைவில் வந்தது. திரும்பி வரும்பொழுது வெள்ளை சேர்ட் ஈஸ்மன் கலர் மயமாகி புளியங்காயையும் மாங்காயையும் புளிப்பு மண்டையில் அடிக்க தின்று கொண்டு வந்ததும் அம்மாவிடம் அதற்கென்றே அடிவாங்கியதும் இந்த வீதியில் தான். அதுமட்டுமா பல தேடுதல் வேட்டைகளையும் பல இரத்தங்களையும் ருசி பார்த்தததும் இந்த வீதிதானே. இ போ சா பஸ் வருகையின் கோர்ண் ஒலி எனது நினைவுகளை கலைத்தது. எல்லோரும் அடித்து பிடித்து ஏறிக்கொண்டோம். நாங்கள் இருக்கைகளை தேடிப்பிடித்து இருந்து கொண்டோம். எனதருகில் எனது பெறாமகள் இருந்து கொண்டாள் . பஸ் யாழ்ப்பாணத்தை நோக்கி தனது பயணத்தை விரைவுபடுத்தியது. எனது மனமோ மீண்டும் அரிப்பெடுக்கும் ஞாபக வீதிகளிலும் ,அதன் குறுக்கு ஒழுங்கைகளிலுமே பயணிக்க விரும்பியது. 

எங்களால் செல்லமாக "ரவுண்" என்று செல்லமாக அழைக்கப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம் ஒருகாலத்தில் எங்களுக்கு கனவு உலகமாகவே இருந்ததது. அதனை சுற்றி இருந்த சுற்றுப்பட்டிக் கிராமங்களுக்கு எல்லாம் ரவுணுக்கு செல்வதென்றால் திருவிழாக்கு செல்வது போலவே இருக்கும். ஆரிய குளத்தடியும் ,மூத்திர ஒழுங்கையும், புல்லுக்குளத்தடியும் ,முனியப்பர் கோயிலடியும் ,நியூ மார்கெற்றும், றேடியோஸ் பதியும், நியூ விக்றேஸ் சும் , விக்னா ரியூட்டரியும் , பொண்ட் ரியூட்டரியும் எமது மனதில் கனவுலகத் தலங்களாக அழியாது இடம் பிடித்தவை. அதன் பின்பு காலங்களும் கோலங்களும் மாற யாழ்ப்பாண இராச்சியம் பல நெடுநில , குறுநில மன்னர்களின் பரிபாலனத்தில் வந்ததது. மக்கள் கனவுகளைத் தொலைத்து நடைப்பிணமானார்கள். மக்களுக்காகவே வாள்களை தூக்கினோம் என்ற மன்னர்களது வாள்கள் அதே மக்களது இரத்தத்தின் வாடையை மெதுமெதுவாக ருசி பார்த்து, ஒருகட்டத்தில் அந்த வாள்களுக்கு இரத்த வாடை இல்லாமல் உறக்கமே வராத காலங்களையும் இந்த யாழ்பாண இராச்சியம் கண்டது. காலம் காலமாக வாழையடி வாழையாக யாழ்ப்பாண இராச்சியத்தில் குடியிருந்த சொந்த மக்களை ஒரே இரவில் அகதிகளாக்கி அவர்கள் கண்ணீரில் குதூகலித்த மன்னர்களது விதி , காலம் என்ற கடவுளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பல வருடங்களின் பின்பு கணக்கு சமனாக்கப்படதும் இதே யாழ்ப்பாண இராச்சியதில்தான். என் கால்கள் ஞாபவீதியில் நடந்து வலியடைந்து துவண்டன . மனதில் ஆயிரம் பாம்புகள் பின்னிப் பிணைந்து மனத்தைக் கொத்த ஆரம்பித்தன . 

பஸ் இப்பொழுது நல்லூர் கோவில் பின் பகுதியால் திரும்பிக்கொண்டிருந்தது . எனது கண்கள் எதேச்சையாக கந்தன் கருணை வீட்டை தேடின. நான் படிக்கும் காலங்களில் அந்த வீடு பார்க்க எவ்வளவு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும்? கந்தன் கருணை இருந்த இடமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு வங்கி முளைத்து இருந்ததது. அந்த வங்கிக்கு இந்த வீட்டின் இரத்தவாடைகள் மணந்திருக்குமோ தெரியவில்லை. ஒரேயொரு இறப்புக்காக இராச்சியப் பரிபாலகர்கள் இந்த வீட்டை இரத்தக்களரியாக்கி பல மண்டையோடுகளை மண்ணுக்குப் பசளையாக்கினதும் இந்த வீட்டில்தான். "ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்" என்று சொன்னவர்களுக்கும், இந்த இராச்சியப் பரிபாலகர்களுக்கும் எதுவித வித்தியாசமும் இல்லை என்றே என் மனம் அடித்துக் கூறியது. நான் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி எனது முகபாவத்தை மறைத்திருந்ததது. என்னுடன் இருந்த பெறாமகள் என் மனநிலை உணராது எனக்கு இடங்களை காட்டிக்கொண்டு வந்தாள். ஆரியகுளத்தடியும் தூர்வாரி அன்னங்கள் நீந்திக்கொண்டிருந்தன. சிதிலமடைந்து இருந்த நாகவிகாரைப் புத்தர் இப்பொழுது பணக்காரப் புத்தராக மாறியிருந்தார் .அவருக்கு பணிவிடைகள் செய்ய அளவுக்கதிகமான காவியுடைகள் வந்திருந்தார்கள். இவர்களது பணி யாழ்ப்பாண இராச்சியத்தில் முறிந்த பௌத்த மதத்தை வேர் விடச் செய்வது தான். 

பஸ் தனது இயக்கத்தை நிறுத்தியதால் எனது ஞாபக வீதி அறுந்ததது. எல்லோருமே அடித்துப் பிடித்து இறங்கினார்கள். காலத்தை எமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி வளைக்க முயல்வதால்தானோ இந்த மனிதர்களுக்கு பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொள்கின்றது என்று என் மனம் ஒரு செய்தி அனுப்ப என் உதடு ஒரு குறுநகையை வெளியிட்டது. என் கண்முன்னே யாழ்ப்பாணப் பட்டினம் பரந்து விரிந்ததது. யுத்தத்தின் கோரவடுக்களையும் இரத்த வாடைகளையும் பல வருடங்களாக சந்தித்த யாழ் பட்டினம் "நவீனம்" என்ற புது அலங்காரத்துடன் இருந்ததது. ஆனாலும் இரத்த வாடைகளின் நெடில் என் மூக்கைத் துளைத்துக்கொண்டுதான் இருந்ததது. குடிமக்களின் வாழ்வியல் நலனில் அக்கறை கொள்ளாது வெறும் அலங்காரத்தால் வடுக்களை மூடிமறைக்கும் தந்திரங்கள் கண்டு மனம் வெதும்பினேன். நாங்கள் மக்களுடன் மக்களாக யாழ் பட்டினத்தில் நீந்திக்கொண்டிருந்தோம். பெறாமக்கள் தாங்கள் விரும்பியதை வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் நான் ஓடித்திரிந்த வீதிகள் எல்லாம் இன்று அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. நான் அன்னியனாக்கப்பட்டவன் போலவே உணர்ந்தேன். என்னால் வின்சர் தியேட்டரைக் காண முடியவில்லை. அதில் புதிய கட்டிடம் ஒன்று முளைத்திருந்தது. ஸ்ரீதர் தியேட்டர் அரசியல் அலுவலகமாக மாறியிருந்தது. என்னால் ராஜா தியேட்டர் ஒன்றையே முழுமையாக காண முடிந்தது. அந்த தியேட்டரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் மதியத்தைக்கடந்து கொண்டிருந்தது. பெறாமக்கள் தங்களைக் கே எப் ஸி க்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார்கள் ."இங்கு அது இருக்கின்றதா?" என்று அவர்களிடம் கலவரத்துடன் கேட்டேன். தங்கள் எனக்கு காட்டுகின்றோம் என்று அழைத்துச் சென்றார்கள். 

மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலே பெறாமக்கள் சொல்லிய மூன்று மாடிகளைக் கொண்ட கார்கில்ஸ் மோல் இருந்தது. அனேகமாக இதுதான் யாழ் பட்டினத்துக்கு வந்த முதலாவது மோலாக இருக்கவேண்டும். அதன் அருகே சதாசிவம் கபே பரிதாபமாக அதிக ஆளரவமில்லாது இருந்தது. நான் கார்கில்ஸ் இல் நுழைந்த பொழுது குளிரூட் டியின் குளிர் முகத்தில் அடித்தது. அது அந்த வெய்யிலின் அகோரத்துக்கு இதமாகத்தான் இருந்தது. கீழ்தளத்தில் ஹைப்பர் மார்க்கெற்றும்  இரண்டாவது தளத்தில் கடைகளும் தியேட்டர்களும்  மேல் தளத்தில் கே எப் ஸி யும் என்று  யாழ் பட்டினத்தின் கனவுலகமான கார்கில்ஸ் விஸ்தாரமாகவே இருந்ததது . கீழ் இருந்து மேலே செல்ல எஸ்கலேடர் பூட்டியிருந்தார்கள். அதில் போவதற்கு பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஒழுங்கு பண்ணி அனுப்ப ஒரு பணியாளை வைத்திருந்தார்கள். நான் எனக்கு கோப்பி மட்டும் எடுத்துக்கொண்டு பெறாமக்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தேன். நான் கே எப் ஸி யின் தார்ப்பரியங்களை அவர்களுக்கு சொல்லி அவர்களின் உற்சாக மனநிலையை கெடுக்க விரும்பவில்லை. அவர்கள் சாப்பிட்டதன் பின்பு "இங்கு ஒரு சாதாரண தினக்கூலி வந்து சாப்பிடமுடியுமா?" என்று மட்டும் கேட்டு வைத்தேன். அவர்கள் "இல்லை" என்றார்கள். குறைந்த வருமானத்தில் இருப்பவனுக்கு ஆடம்பரத்தைக் கொடுத்து ,அதை அடைய அவன் குறுக்கு வழிகளை நாடும் சூட்சுமத்தையே இப்படியான மோல்கள் செய்கின்றன என்றாலும் , இன்று உள்ள சூழ்நிலையில் அந்த மக்களுக்கு இவைகள் போன்றும் தேவைதான் என்று எனது மனம் என்னிடம் நியாயம் பேசியது . அன்றைய நாளின் அதிக அலைச்சலுடன் நாங்கள் கோப்பாய் திரும்பினோம் . 

27 ஆடி 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில