Skip to main content

வாடாமல்லிகை - 10



தாரே இல்லாத ஒழுங்கையில் புழுதி தோய நடப்பது புதுவிதமான அனுபவமாகவே இருந்தது. இருளும் வெளிச்சமும் கலவையில் மாறுபட்டு மொக்கவிழ்க்கும் வேளையில் ஒழுங்கையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மதில்களால் எட்டிப்பார்த்த செம்பரத்தை, அலரி, மயிற் கொன்றை பூக்கழும் வெளிச்சம் என்ற சூடு பட்டு நெட்டி முறித்துக்கொன்டிருந்தன. அங்கிருந்து வந்த  பூக்களின்  வாசம்  மூக்கை துளைத்தது. ஒரு சில பூக்களில் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின. இவையாவுமே என்மனதில் ஒருவகை கிளர்ச்சியை  ஏற்படுத்தின. எனது கால்கள் ஒருவித தாள கதியில் புழுதி தோயத் தோய நடந்து கொண்டிருந்தன.  காலை வேளையிலேயே பாடசாலை மாணவர்களது லுமாலாக்கள் டியூசன் சென்டர்களை நோக்கி படை எடுத்துக்கொண்டு இருந்தன. எனது இளமைக்கால நினைவுகளும் அப்பொழுது முட்டி மோதி நின்றன. வாழ்க்கையில் எல்லோருமே இளமைக்காலத்தில் அதை வகைவகையாக அனுபவிப்போம். ஆனால் நாங்கள் பக்குவப்படும் பொழுது எங்கள் முன் இளையவர்கள் அதே குசும்புகளை செய்யும்பொழுது எங்கள் மனம் ஏனோ ஏற்க மறுக்கின்றது. நான் இப்பொழுது முதலாம் கட்டை சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தேன் .

எனது உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்து இருந்ததது. அந்தக்காலை வேளையில் கடைக்காரர்கள் கடைகளைத் திறப்பதற்கு கடைவாசலிலின் முன்பாக தண்ணி தெளித்து கூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த புழுதி வாசம்  மூக்கைத் துளைத்தது. பருத்தித்துறை வீதியில் விரைவாக நடக்கத் தொடங்கிய பொழுது அது  அதிகாலை சோம்பலை மெதுமெதுவாக முறித்துக் கொண்டிருந்தது. நான் முன்பு பார்த்த காவல் அரண்களும் அதில் குந்தியிருப்பவர்களும் இப்பொழுது இல்லை. ஆனால் அதன் மறுவடிவமாக காலை உடல் பயிற்சி செய்கின்றோம் என்று அவர்கள் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள். 

அதிகாலை வேளையில் மந்திகை பால் கூட்டுறவு சங்கம் பால் கொடுக்க வந்தவர்களாலும் எடுக்க வந்தவர்களாலும் கலகலத்துக் காணப்பட்டது. புலத்தில் செக்குமாடு போன்று உழன்று கொண்டிருந்த எனக்கு அந்த அதிகாலை வேளையும், பால் வாங்கும் இடத்தில் மக்களது வஞ்சகமற்ற கதைகளும் வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றன. நான் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் அன்று நான் செய்ய வேண்டியவைகளை மனதில் உருப்போட்டு கொண்டு நடந்தேன். இதனால் களைப்பு என்னிடம் ஒட்ட மறுத்து உடலெங்கும் புத்துணர்ச்சி பொங்கிப் பரவியது. நான் கிராமக்கோட்டு அடியில் வந்த பொழுது எனது கால்கள் என்னை அறியாமல் ஒரு கடைவாசலில் நின்றன. கடையின் முன்பக்கமாக அன்றைய பத்திரிகைகளும் ஒரமாக கதலி வாழைக் குலைகழும் தொங்கிக்  கொண்டிருந்தன. அந்த கடையை வைத்திருப்பவர் ஓரளவு எனக்கு அறிமுகமானவர். என்னைக் கண்டதும் அன்பாக நலம் விசாரித்தார். நான் கேட்காமலேயே உதயன் பேப்பரும் கோல்ட் லீப் சிகரட் பெட்டியும் எடுத்து வைத்தார். குடும்பத்தை போரில் கொடுத்தாலும் வாழவேண்டும் என்ற இவரின் மனவைராக்கியம் எனக்கு பல நேரங்களில் முன் உதராணமாக இருந்திருக்கின்றது. அவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். இப்பொழுது வீதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதால் நான் சிறிது அவதானமாகவே நடக்க வேண்டியிருந்தது. 

நான் வீட்டிற்கு வரும் பொழுது காலை ஏழு மணியாகி இருந்தது. மனைவி விளக்கு மாற்றால் தனது தாயின் வீட்டு முற்றம் கூட்டிக்கொண்டிருந்தா. நான் பால் போத்தலை மாமியிடம் கொடுத்து விட்டு அருகே இருந்த இன்னுமொரு விளக்கு மாற்றை எடுத்துக்கொண்டு எங்கள் வீடிற்கு வந்தேன். நிலம் பூராக பூவரசம் இலை சருகுகளும், இப்பிலிப்பில் இலைகளும் பரவி இருந்தன. மதிலுடன் ஓட்டியிருந்த குரோட்டன்களும், வாடாமல்லிகைகளும், செம்பரத்தைகளும் தண்ணீர் கண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டு இருந்ததை மண்ணின் வறட்சி காட்டியது. நான் விளக்கு மாற்றால் கூட்ட கூட்ட முற்றமும் அதன் சுற்றாடாலும் புதுப்பொலிவு பெற்றன. முற்றம் எங்கும் புழுதி நிரம்பி இருந்தது. வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் நீரை அள்ளி முற்றத்தில் தெளித்தேன். அப்பொழுது எழும்பிய புழுதி, புழுதி வாசத்துடன் அடங்கியது. நான் ஊற்றிய தண்ணீரில் பூக்கண்டுகள் யாவும் புத்துயிர் பெற்றன. தண்ணீரை ஊற்றி விட்டு பூக்கண்டுகளை ஆசை தீரப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது மாமி சுடச் சுட பால் கோப்பியுடன் நின்றிருந்தா.  காலையில் புகைந்த வயிற்றுக்கு சூடான பால் கோப்பி இதமாகவே இருந்ததது. 

வீட்டுக்கு முன்பாக இருந்த ஒழுங்கையின் மீது நான் தெளித்த தண்ணீரால் எழும்பிய புழுதி வாசமும், கையில் வைத்திருந்த கபே வாசமும் என்னை அற்புதமான உலகத்தினுள் இழுத்துச் சென்றன. இதற்கு துணையாக ஒரு சிகரட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று என்னுள்ளிருந்த மனம் நெகிழ்வாக கேட்டது. அதன் ஆசையை   நிறைவேற்ருவது எனது கடமையாயிற்று. இதுவரை நேரமும் அமைதியாக இருந்த ஒழுங்கை பள்ளிக்கூடம் செல்பவர்களாலும், அலுவலத்துக்கு செல்லும் ஒரு சிலராலும் அமைதியிழந்தது. எனக்கு அதுவும் ஒருவகையில் அன்றைய பொழுதை ஓட்டுவதற்கு உதவியாகத்தான் இருந்தது. 

நான் பாரிஸில் இருந்து வெளிக்கிடும் பொழுது இரண்டு இலக்கிய நண்பர்களை சந்திப்பதற்கு அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தேன். அவர்களுடனான தொடர்பு இலக்கியரீதியாக ஓரளவு இருந்தாலும்,அவர்களை நான் சந்திக்கபோவது இதுவே முதல் தடவை. அவர்களில் ஒருவரை தொடர்பு கொள்ள எனது கைத்தொலைபேசியில் எண்களை ஒற்றினேன். சிறிது நேர இடைவேளையின் பின்பு மறுமுனையில் யோ கர்ணனின் குரல் கேட்டது. இறுதிப்போரில் மரணத்தின் எல்லை வரை சென்று இன்றும் உயிருடன் வாழும் இளைஞர்தான் யோ கர்ணன் . இவரது சொல்லாடலிலும் கதை சொல்லும் விதத்திலும் மயங்கிய நான் இவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தேன். எனது மனங்கவர் எழுத்தாளர் சுஜாதாவின் இளமைத் தோற்றமே இவரையிட்ட கற்பனை உருவமாக என்மனதில் தோன்றியிருந்ததது .இருவரும் பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்குப் பின்பு நாங்கள் சந்திக்க வேண்டிய நாளை குறித்துக் கொண்டோம். 

மாலை வேளை எனது கால்கள் முனைப்பகுதியை நோக்கி கல்லூரி வீதியில் நடந்து கொண்டிருந்தன போன முறை நான் இங்கு வந்த பொழுது யுத்த சாட்சியங்களாக பல கட்டிடங்களும் வீடுகளும் என்கண் முன்னே விரிந்திருந்தன. இப்பொழுதும் அவற்றில் ஒரு சில என் கண் முன்னே துருத்திக் கொண்டிருந்தன. ஹாட்லிக்கல்லூரியின் முன்பாக இருந்த கொன்றை மரம் பூக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் ஹாட்லிக்கல்லூரியை கடந்து முன்னேறிய பொழுது என்கண் முன்னே கருநீல வண்ணத்தில் முனைக் கடல் பரந்து விரிந்து இருந்ததது. தூரத்தே ஒரு சில கட்டுமரங்களும் விசைப்படகுகளும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. மெதடிஸ் கல்லூரியின் முன்னால் இருந்த குந்து ஒன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

தூரத்தே தங்கத்தாம்பாளமாய் தகதகத்த சூரியனின் செம்மையினால் கடலெங்கும் நிறக்கலவையால் வர்ணம் காட்டியது. கூழைக்கடாகள் கூட்டமொன்று ஆரை வடிவில் தென்கிழக்காக வலசை போய்க்கொண்டிருந்தன. எல்லாமே முடிந்து விட்டது இனி நீ என்னிடம் பேச எதுவுமே இல்லை என்பது போல கடல் என்னிடம் மௌனமொழி பேசிக்கொண்டிருந்தது. ஒருகாலத்தில் எங்களைத் தாங்கி உயர்த்திய அதே கடல், இன்று தனது அலைகளால் மட்டும் என் கால்களை வருடி நலம் விசாரித்தது எனக்கு ஒருவித எரிச்சலையே ஏற்படுத்தியது. எங்கள் மனதில் கோளாறுகளை வைத்துக்கொண்டு கடலுடன் முரண்டு பிடிப்பதில் அர்த்தமே இல்லை என்று மறுபக்க மனது என்னுடன் தத்துவ விசாரணை செய்தது. எனது கண்கள் இமைவெட்டாது கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. பொங்கி வரும் கடலலையில் சுழியோடிய நண்டு ஒன்றின் செல்லக்கடியால் சுயநினைவுக்கு வந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். சுற்றுப்புறச் சுழல் நன்றாக இருட்டிவிட்டிருந்ததது. 

நான் பருத்தித்துறை ரவுணை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கடற்கரையில் அங்காங்கே இருந்த வாடிவீடுகளில் காட்டா விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நான் ரவுணை அடைந்தபொழுது ரவுண் அந்த நாளின் இறுதிப்பரபரப்பில் இருந்ததது. நான் எனது வழக்கமான தேநீர்கடையினுள் நுழைந்தேன். என்னைக் கண்ட சந்தோசத்தில் கடைப் பெடியன் என்னிடம் அன்பாக நலம் விசாரித்தான். நான் றோட்டைப் பார்த்துக்கொண்டு மேசைக்கு முன்பாக அமர்ந்து இருந்தேன். கடைப் பெடியன் எனக்கு பிளெயின் ரீயும் றோல்சும் கொண்டு வந்து தந்தான். றோல்சின் மெதுவான உறைப்பு பிளெயின் ரீக்கு வித்தியாசமான சுவையைக் கொடுத்தது. கடையின் உள்ளே கொத்து றொட்டி ஒருவித தாளகதியில் கொத்தும் சத்தம் கேட்டது. கடையின் வெளியே இருந்த பாட்டுப்பெட்டியில் சிங்கள பைலாப் பாட்டுக்கள் போய் கொண்டிருந்தன. இது எனக்கு மனதில் உறுத்த தொடங்கியதால் கடை பெடியனிடம் ,

"ஏன் தமிழ் பாட்டுக்கள் கிடையாதா "? என்று கேட்டேன். 
"அண்ணை உங்களுக்கு பிஸ்னஸ் ட்ரிக் தெரியாது".
என்று அவன் பதில் தந்தான். இதுதான் தக்கன பிழைக்கும் என்று சொல்வார்களோ ?? என்று என் மனம் என்னிடம் சொல்லியது. மேலும் அங்கு இருக்கப் பிடியாமல் தேநீர் கடையை விட்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நாளை கோப்பாய் செல்ல வேண்டும் என்று என் மனது சொல்லிக்கொண்டது . 

11 ஆனி 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...