Skip to main content

ஈஸி ஜெட்டில் ஈசியில்லா பயணம்




போன மாசம் வியாழன் மாறினது மற்றாக்களுக்கு நல்லதோ கூடாதோ எண்டது எனக்கு சிவசத்தியமாய் தெரியாது. ஆனால் நான் இந்த ஒருநாள் லண்டன் பயணத்தாலை எனக்கு வந்த குளறுபடியளை உங்களுக்கு சொல்லுறன் கண்டியளோ. ஒருநாள் என்ரை மனுசி எனக்கு சொன்னா ‘இஞ்சரப்பா நியூசிலாந்திலை இருந்து என்ரை கூட்டாளி குடும்பம் லண்டனிலை இருக்கிற அவையின்ரை தமக்கை வீட்டை வருகினமாம். எங்களை லண்டனிலை வந்து பாக்க சொல்லி கேக்கினம். ஒருக்கால் போட்டு வருவமே ‘எண்டு கேட்டுது. சரி என்னட்டை பெரிசாய் ஒண்டும் கேட்டு அரியண்டம் பண்ணாத மனிசி கேக்கிறாதாலை சரி போவம் எண்டு சொன்னன். நான் பேந்து வேலை பிராக்கிலை உதுகளையெல்லாம் அயத்து போனன். ஒருநாள் நான் வேலை முடிஞ்சு தும்பாகி போய் வர , என்ரை மனுசி கையிலை லண்டனுக்கு போக ரிக்கற்ரோடை நிண்டா. என்ன ஏது எண்டு வாங்கி பாத்தன். அந்த ரிக்கற் எனக்கும் சேத்து மனுசி ஈசி ஜெட்டிலை போறதாய் இருந்துது. எனக்கு கண்டியளோ நாடி விழுந்து போச்சுது . ஏற்கனவே என்ரை கூட்டாளி ஒருத்தன் இந்த ஈசி ஜெட்டிலை போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை மண்டையிலை லைட் அடிச்சுது .நான் மனுசியை கேட்டன் ‘கட்டாயம் இதிலை போகவேணுமோ ? யூறோ ஸ்ராறாலை போகேலாதோ ‘எண்டு கேட்டன். அதுக்கு மனுசி சொன்னா ‘நெடுகத்தானே அதிலை போறம் .இதாலை போனால் நேரத்தை மிச்சப்படுதலாம்தானே ? நான் ரிக்கற்றை போட்டுட்டன் ‘எண்டு சொன்னா. பின்னை நானும் சரி எண்டு கொஞ்ச நேரம் எழுப்ப பிறியம் விட்டு சரி இதிலை போவம் எண்டு சொன்னன்.

நாங்கள் போற நாளும் வந்துது . விடியக் காத்தாலை வேலைக்கு எழும்பி போறமாதிரி நாலு மணிக்கே எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு பக்கத்திலை கிடக்கிற எயார்போட்டுக்கு போனம். காத்தாலை ஏழுமணிக்குத்தான் பிளேன் அதோடை பக்கத்து நாட்டுக்கு போறதாலை கையை ஆட்டிக்கொண்டு போனம். எல்லா சோலியளையும் முடிச்சு கொண்டு பிளேனுக்குள்ளை போய் இருந்தம். இந்த பிளேனிலை குடிக்கிற தண்ணியிலை இருந்து கோப்பி எல்லாத்துக்கும் நாங்கள் காசு குடுக்கவேணும். அதாலைதான் இந்த பிளேனுக்கு காசு குறைய. இண்டைக்கு நடக்கப்போற கூத்துகள் தெரியாமல் யூறோ ஸ்ராறை விட குறைஞ்ச விலையிலை ரிக்கற் எடுத்த மனுசியின்ரை பவறை நினைச்சு உண்மையிலை மண்டை குளிர்ந்து போனன் . நானும் கடைசியாய் 98 க்கு பிறகு இ​ப்பதான் கிட்ட முட்ட பத்து பதினைஞ்சு வாரியத்துக்கு பிறகு லண்டனுக்கு போறன் எனக்கு இந்த லண்டன்காறரின்ரை எடுப்பு சாய்ப்புகழுக்கும் கதை பேச்சுகழுக்கும் எட்டாப் பொருந்தம் பாருங்கோ . மனுசி ஆசைப்பட்டு போட்டாவே எண்டு போறன். காலமை ஏழு அரை போலை கண் மூடி முழிக்க லண்டனிலை பிளேனை இறக்கபோறதாய் பைலட் சொன்னார் .நான் கண்ணாடிக்குள்ளாலை கீழை பாத்தன் வயலுக்குள்ளை பயிர்பச்சையள் எல்லாம் பச்சைப்பசேல் எண்டு இருந்திது. பிளேனும் கெற்விக் எயார்போட்டிலை இறங்கி ஓடி போய் நிண்டிது. நாங்கள் எல்லாரையும் இறங்க விட்டு போட்டு இறங்கினம் . நானும் இப்பதான் கெற் விக் எயார்ப் போட்டை முதல்தரம் பாக்கிறன். எனக்கெண்டால் கொழும்பு எயார்ப் போட்டுக்குள்ளாலை நடந்து போற மாதிரி கிடந்துது. ஏனெண்டால் அதே போட்டோ கொப்பி பாருங்கோ . நாங்கள் எல்லா சோலியளையும் முடிசுக் கொண்டு வெளியாலை வந்தம். எனக்கு வயிறு புகைஞ்சு ஒரு கோப்பியும் குறசொனும் சிகறட்டும் அடிச்சால் திறம் போலை கிடந்திது. மனுசியும் தேத்தண்ணி குடிக்க வேணும் எண்டு சொன்னா .நான் கோப்பியையும் சிகறட்டையும் எடுத்துக்கொண்டு வெளியாலை வந்தன். இண்டைக்கு எண்டு பாத்து இப்பவே வெய்யில் கொழுத்த தொடங்கீட்டுது .நான் விடுப்பு பாத்துக்கொண்டு ரெண்டையும் ஒரேயடியாய் இழுத்தன். என்ரை வயித்து புகைச்சல் அடங்கீச்சுது. ஆனாலும் இந்த குறசொன் எங்கடை நாட்டு குறசொன் மாதிரி இல்லை எண்டு எனக்கு கடுப்பாய் போட்டுது .

நாங்கள் ஒருமாதிரி காலமை சாப்பாட்டு பிரச்சனையை முடிச்சுக்கொண்டு லண்டனுக்கு போக கோச்சி எடுத்தம். நாங்கள் பரிசிலை இருந்து வெளிக்கிட முன்னமே லண்டன் சிற்ரி எவ்வளவு தூரம் ?? அங்கை போக கோச்சிக்கு எவ்வளவு காசு? பேந்து நாங்கள் சந்திக்கப் போற ” ஹறோ ” எண்ட இடத்துக்கு எவ்வளவு தூரம் ? எவ்வளவுகாசு ? எண்ட விசையம் எல்லாம் கூகிள் ஆண்டவரிட்டை கேட்டு விரல் நுனியிலை வைச்சுக் கொண்டு தான் வெளிக்கிட்டனாங்கள் கண்டியளோ. லண்டன் சிற்றி எயார்போர்ட்டிலை இருந்து கிட்டமுட்ட ஐம்பது கிலோ மீற்றர் தள்ளி இருந்திது. நாங்கள் கோச்சியிலை ஏறி வலு குசாலாய் இருந்தம் . நானும் வலு புழுகமாய் எல்லா இடத்தையும் பாத்து கொண்டு வந்தன். நான் அப்ப பாத்த லண்டனுக்கும் இப்பத்தையான் லண்டனுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்திது . கோச்சி ஒரு அரை மணித்தியாலம் ஓடி லண்டன் சிற்றிக்குள்ளை போய் நிண்டுது. நாங்களும் இறங்கி நாங்கள் போற ஹரோ வுக்கு பாதாள ரயில் எடுத்தம். இந்த இடத்திலை இந்த றெயிலுகளை பத்தி சொல்லவேணும் கண்டியளோ . உலகத்திலை அப்பவே கிடங்கு வெட்டி றெயில் ஓடினவன் வெள்ளைக்காறன். றெயின் கொண்டிசனுகள் சொல்லிவேலையில்லை. பாதாள றெயில் ஓடிக்கொண்டு இருகேக்கை எனக்கு ஒரு வெளிச்சம் மண்டையுக்கை தட்டி மனுசியை திரும்பி பாத்து ” பிள்ளை நாங்கள் சந்திக்க போற வீட்டு அட்றஸ் கொண்டு வந்தியளோ ?? ” எண்டு கேட்டன். மனுசி என்னை ஒருமாதிரி பாத்துப்போட்டு ” நான் நினைச்சன் நீங்கள் எல்லாம் எடுத்து வைச்சு இருப்பியள் எண்டு . நான் கொண்டு வரேலை ” எண்டு சொன்னா. நான் உடனை சொன்னன் ” என்னப்பா உங்களிட்டைதானே நான் அவையோடை ஸ்கைப்பில சட் பண்ணின நேரம் அவை தந்த அட்ரஸ் எல்லாம் தந்தனான் . அதோடை ரெயில்வே ஸ்ரேசனிலை இறங்கி 10H பஸ் வேறை எடுக்க வேணும் எண்டு சொன்னவை. இப்ப என்ன செய்யிறது எண்டு பதகளிப்பட்டன் .

எனக்கு என்னமோ இது குருவன்ரை விளையாட்டு போலைதான் கிடக்கு போலை கிடந்துது. என்ரை மண்டை வேறை றேஞ்சிலை ஓடிக்கொண்டு இருந்திது. என்ரை ஐ பாட் கிடக்கு, ஐ போன் கிடக்கு, ஐ போனிலை அவையின்ரை போன் நம்பர் கிடக்கு, பேந்தென்ன ஸ்கைப்பை திறந்து அட்றஸ் எடுக்கலாம். குருவன் ஒண்டும் பண்ணேலாது எண்டு சன்னதம் ஆடின நெஞ்சை சாமாளிச்சன். நான் மனுசியிட்டையும் என்ரை பிளானை அவிட்டு விட்டன். மனுசி ஒண்டும் பேசாமல் வந்தா. என்னாலை அவா பேசாமல் வாறதை பத்தி ஒண்டும் மட்டுக்கட்ட ஏலாமல் இருந்துது .ஏனெண்டால் சுனாமி வாறத்துக்கு முதல் கடலும் இப்பிடித்தான் அமைதியாய் இருக்கும். இந்த நிகழ்ச்சியள் ஒருவளத்தாலை ஓடிக்கொண்டிருக்க நாங்கள் இறங்க போற ” ஹறோ ” வும் வந்துது. நாங்கள் றெயில்வே ஸ்ரேசனை விட்டு வெளியாலை வந்து அதிலை கிடந்த ஒரு ரெலிபோன் பூத்துக்கு போனம். நான் அதிலை காசை போட்டு அவியின்ரை ரெலிபோன் நம்பரை அடிச்சன். நம்பர் அடிக்கிறதாய் காணேலை. பிறிட்டிஷ் ரெலிகொம் காறனும் ரெலி போன் நம்பருக்கு என்ன நடந்ததெண்டு ஒரு அறுப்பும் சொல்லிறான் இல்லை. அடிச்ச சத்தத்தோட மற்றப்பக்கம் ஒரு சத்தத்தையும் காணேலை. எனக்கெண்டால் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு போச்சுது. சரி,” நான் கொண்டு வந்த ஐ பாட்டிலை ஸ்கைப் கிடக்கு தானே? அதாலை போய் அட்றசை எடுப்பம்” எண்டு ஐ பாட்டை திறந்தன் . ஐ பாட்டுக்கு வை ஃபி இன்ரர்நெற் கனெக்சன் வருகுதில்லை. ” இதென்ன கோதாரி விழுந்த சீவியம் ? இவ்வளவு ரெக்நோலோஜி வளந்த நேரத்திலை ஒரு றூட்டும் கை குடுக்குதில்லையே ” எண்டு எனக்கு பண்டி விசராய் போச்சுது. அப்ப தொடங்கீச்சுது சுனாமி . றோட் எண்டும் பாராமல் மூண்டு பனை அளவு உயரத்துக்கு அலை எழும்பி அடிசுத்து. அந்த அலையிலை ” என்ரை குணங்குறியள் குடும்ப பின்னணியள்” எண்டு அந்த காலமை நேரத்திலை ஹறோவிலை அக்கு வேறை ஆணி வேறையாய் சிக்கு எடுக்க , நானும் ரென்சனாய் போய் ” சரி அப்ப இதிலை நிண்டு இந்த இடத்தை சுத்தி பாத்து போட்டு அப்பிடியே திரும்பி போவாம்” எண்டன் . கொஞ்ச நேரத்திலை சூடு இறங்க ரெண்டு பேரும் ஒரு அக்கிரிமன்ற்றுக்கு வந்தம். ” தான் கூகிள் ஆண்டவரிட்டை கேட்ட குறிப்புகளை வைச்சு போவம்” எண்டு என்ரை மனுசி சொன்னா. நானும் எனக்கு பொழுது போனால் சரி எண்டு நெஞ்சுக்குள்ளை நினைச்சுக்கொண்டு ரெண்டு பேரும் 10H டபுள் டெக்கர் பஸ் எடுத்தும். நான் அவா சொன்ன குறிப்பு படி ஒவ்வரு பஸ் ஸ்ராண்டை எண்ணிக்கொண்டு வந்தன் . நாங்கள் சரியாய் எட்டாவது பஸ் ஸ்ராண்டிலை இறங்கினம்.

நான் இடத்தை சுத்தி சுழட்டி பாத்தன். எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போட்டுது. ஏனெண்டால் அந்த இடம் ஒரு நாலைஞ்சு கடையளோடை முழுக்க வீடுகளாய் கிடந்திது​. நான் ஒருகடையிலை போய் விசையத்தை சொல்லி “அண்ணை உங்களிட்டை வை ஃபி இருக்கோ ? காசுதாறன் ” எண்டு கேட்டன் .அவனுக்கும் வை ஃபி க்கும் கன தூரம் போலை கிடக்கு, தாங்கள் விக்கிறேலை எண்டு சொன்னான். இவனுக்கு விளக்கம் சொல்லி பத்தியப்படாது எண்டு எனக்கு வலு கிளியறாய் விழங்கீச்சுது. என்ன செய்வம் எண்டு வெளியாலை வந்து தடுதாளி பட்டு கொண்டு நிக்க, அதாலை ஒரு டொட் கொம் அன்ரியும் அங்கிளும் வந்தீச்சினம். நான் அவையிட்டை என்ரை பிரச்சனையை சொல்லி உதவி கேட்டன் . அவைக்கு தமிங்கிலிஸ் தான் வாய்க்காலை வந்திது. உவையோடை கதைச்சு வேலை இல்லை எண்டு நினைச்சு கொண்டு ஒரு சிகறட்டை எடுத்து பத்த வைச்சன் கொஞ்ச நேரம் யோசிச்சு கொண்டு அதிலை நிண்டன். எனக்கெண்டால் இவையளை சந்திப்பம் எண்ட நம்பிக்கை துண்டாவே இல்லாமல் போட்டுது. நான் நிண்ட சந்தி வீட்டின்ரை மூலையிலை ஒரு தமிழ் அங்கிள் சிகரட் அடிச்சு கொண்டிருந்தார். ” கோமணமே போட்டுதாம் இனி வெக்கம் போனால் என்ன?” எண்டு நான் நினைச்சுக் கொண்டு அவரிட்டை போய் ,

“இன்னாரை உங்களுக்கு தெரியுமோ”? எண்டு கேட்டன் .

அவர் சிரிச்சு கொண்டு ,

“நீங்கள் தானே பிரான்சிலை இருந்து வாறியள்? இதுதான் எங்கடை வீடு .அங்கை என்ரை ஆள் உங்களை தேடிக்கொண்டு இருக்கிறா” எண்டு சொன்னார்.

எங்களுக்கு சிவசத்தியமாய் நம்பேலாமல் போச்சுது. இன்ரர் நெற் இல்லை .போன் நம்பர் இல்லை .ஸ்கைப் இல்லை . இவ்வளவு இடறுப்பாடுகளுக்கும் இடையிலை நேரை போய் நாங்கள் சந்திக்கபோற ஆக்களின்ரை வீட்டடியிலை போய் நிண்டம். இப்ப சொல்லுங்கோ கடவுள் இருக்கிறாரோ?? இல்லையோ ??







மலைகள்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...