அந்த அதிகாலை வேளை பருத்தித்துறை பஸ்நிலையம் பல சோலிகளை கொண்ட மக்களால் திணறியது. வவுனியா செல்லும் பஸ் புறப்பட நேரம் இருந்ததால் பஸ் சனங்களின்றி வெறுமையாக இருந்தது நான் வழக்கமாக செல்லும் தேநீர்கடையினுள் நுழைந்து ஓர் வடையையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு கடைவாசலில் நின்று தேநீரை அருந்தியவாறே பஸ்நிலையத்தை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். ஐரோப்பாவின் இறுகிய வாழ்க்கை சூழலும் தலைதெறித்த பரபரப்பும் இல்லாத இந்த சூழல் என்னை கொள்ளை கொண்டது. இருந்தால் போல் என் மனதோ உன்னால் இங்கு தொடர்ந்து இருக்க முடியுமா? நீ இந்த விடயத்தில் நடிக்கின்றாய்தானே? என்று என்னை நக்கலாக கேட்டது. மனதுடன் பேச எனக்கு ஓர் சிகரட் தேவைப்பட்டது. கடையின் பின்னால் போய் அதில் இருந்த மா மரத்து நிழலில் நின்று கொண்டு சிகரட்டை பற்ற வைத்தேன் . என்மனமோ பதிலுக்கு காத்திதிருந்தது. சிகரட் புகையை ஆழமாக இழுத்து பின் பிடரி முழுவதும் தடவி மூக்கால் வெளிவிட்டுக்கொண்டே நான் மனத்திடம் பேச ஆரம்பித்தேன்.
" இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலனவர்கள் காசை தேடவே போனார்கள். அப்படி போன இடத்தில் காசை தேட வசதிகள் வந்தது. அவர்கள் அதில் சுகம் கண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த காசும் வசதியும் சொந்த இடத்தில் வைத்து கொண்டு வெளியில் போனவர்களது மனநிலை பெரும்பாலும் இங்கேயே இருக்க ஆசைப்படும். காரணம் அவர்களை இந்த காசும் வசதியும் எதுவும் செய்யாது. " என்று சொன்னேன் எனது பதிலால் அப்போதைக்கு அது தன் வாலை சுருட்டிக்கொண்டது .தேநீருக்கு காசைக் கொடுத்து விட்டு ஓர் உதயன் பேப்பரையும் வாங்கிகொண்டு பஸ் நிற்கும் இடத்துக்கு வந்தேன்.
பஸ்ஸினுள் ஓரளவு சனங்கள் நிரம்பி இருந்தார்கள். நான் ட்றைவரின் இருக்கைக்கு இரண்டு நிரை தள்ளி ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ் புறப்பட்டு பருத்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. நான் உதயன் பேப்பரை மேயத்தொடங்கினேன். அரசியல் வெடில்களே அதில் அதிகம் இருந்ததன. சனங்கள் ஓவ்வருமுறையும் புதியவர் வரும் பொழுது , இவரவாவது தங்கள் பிரச்சனைகளை அக்கறையுடன் கவனித்து தங்களுக்கு விடிவை தருவார் என்ற நம்பிக்கையிலேயே புதியவர்களை தெரிவு செய்கின்றார்கள். ஆனால் வந்தவர் நாற்காலியில் அமர்ந்ததும் அந்த நாற்காலி எந்த நல்லவரையும் தனக்கேற்பவே மாற்றி விடுகின்றது. நான் அவற்றை ஒரு பக்கமாக தள்ளி விட்டு அங்காங்கே கிடக்கும் சனங்களின் பிரச்சனைகளை மேயத்தொடங்கினேன். பஸ் ஒருவாறாக கிளம்பி பருத்துத்துறை வீதியில் வேகமெடுத்தது. நேரத்தைப் பார்த்தேன் காலை ஏழு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது வீதியில் ஓரளவு வாகன நடமாட்டங்கள் தெரிந்தன. அந்தக்காலையிலும் வெய்யில் கொழுத்த தொடங்கியது. திறந்த ஜன்னலினூடக வந்த காத்து என்னில் வழிந்த வியர்வையை ஓரளவு கட்டுப்படுத்தியது .
கொடிகாமம் சந்தை களைகட்டத் தொடங்கியிருந்தது. வியாபாரிகள் சந்தையில் சாமான்கள் கூவி விற்கும் சத்தம் என்காதில் நன்றாகவே விழுந்து கொண்டிருந்தது. தோட்டங்களில் வீழ்ந்த ஏழை விவசாயிகளின் வியர்வையானது விளைச்சலாகி அங்கே காசாக மாறிக்கொண்டிருந்தது. பஸ் கொடிகாமத்தில் சிறிது நேரம் நின்று விட்டு வவுனியா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. பஸ்ஸில் பயணிகளுடன் வந்த பிலாப்பழமும் வாழைப்பழமும் வித்தியாசமான வாசத்தைக் கொடுத்தன. நான் பேப்பர் படிப்பதை நிறுத்தி விட்டு வெளியே வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.
பஸ் பளையை நெருங்கும் பொழுது ஓர் இளைஞன் பஸ்ஸில் ஏறினான். அவன் நெடிய உருவத்தையும் கட்டுமஸ்தான உடம்பையும் கொண்டிருந்தான். ஆனால் அவனது நடை வழமைக்கு மாறாக இருந்தது. விந்தி விந்தி நடந்து வந்த அவன் என்னருகில் இருந்து கொண்டான். பஸ் நகரத்தொடங்கியதும் அவன் என்னிடம் பேச்சுக் கொடுத்தான். நான் வரும் இடத்தை அறிந்து கொண்ட அவன்,
" அண்ணை எப்பிடி அங்கை செல் அடி ஒண்டும் இல்லையோ ? நேற்றும் செல் அடியிலை உங்கடை இடத்திலை கன சனம் செத்து போட்டுதுகள். எப்படி தப்பி வந்தியள்"?
என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினான். நான் அவனது வழமைக்கு மாறான கதைகளால் அவனை உன்னிப்பாக பார்க்கத்தொடங்கினேன். அவன் மேலும் தொடர்ந்தான்,
"அண்ணை நாங்கள் இந்த முறை இவையளை விடமாட்டம். தலைவர் நல்ல பிளான் ஒண்டு வைச்சிருக்கிறார். பொறுத்து பாருங்கோ நாங்கள் தான் வெல்லுவம்".என்றான்.
அவனது நினைவு எதோ ஒரு நிகழ்வால் அப்படியே நின்று விட்டுருந்தது. அவனது நடையை வைத்து அவனது கால்கள் செயற்கை கால்களாக இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். நான் அவன் கதைப்பதை கவனிப்பது போல பாவனை செய்தேன். யுத்தத்தின் கோரப்பிடியின் நேரடிசாட்சியமாக அவன் எனக்குத்தெரிந்ததான். அவனைப்போல எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்வைத்தொலைத்து விட்டு மனதாலும் உடலாலும் அங்கவீனர்களாகப் போய் விட்டார்கள்? அவனது கதைகள் என்மனதை நன்றாகவே விளாறி விட்டிருந்தன. அதிலிருந்து மனவலியென்ற குருதிப்பொட்டுக்கள் மெதுவாக எட்டிப்பார்த்தன. எனது முக மாற்றத்தை சூரியக்கண்ணாடி மறைத்து இருந்தது. நான் அவனது கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தத்தால் அவனும் தனது கதைகளை எனக்கு சொல்லி மன ஆறுதல் பட்டான்போலும் .அவன் இயக்கச்சியில் இறங்கும் பொழுது ,
"அண்ணை அடுத்தமுறை நாங்கள் எங்கடை சொந்த நாட்டிலை சந்திப்பம். தலைவர் இருக்கிறார் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ". என்று எனக்கு சொல்லி விட்டு இறங்கிகொண்டான்.
தூரத்தே ஆனையிறவு வருவதற்கு இசைவாக உப்பும் சேறும் கலந்த காற்று எனது முக்கை அடைத்தது. உப்பளத்தில் வழக்கமாய் நிற்கும் கொக்குகளைக் காணவில்லை. அவைகளும் பிரச்சனையால் இடம் மாறிவிட்டனவோ? சாதாரணமாகவே இந்த உப்பளம் மீன் பிடிக்க கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும். ஆனால் இப்பொழுது உப்பளம் வெறுமையாகவே இருந்தது. பஸ் சோதனைச் சாவடியில் சிறிது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக நடித்துக்கொண்டு மீண்டும் வேகம் எடுத்தது. என்மனமோ கருணாகரனை சந்திக்கும் ஆவலில் தடம்புரண்டு கொண்டிருந்ததது. இலங்கையில் பெயர் சொல்லும் பெரிய எழுத்தாளர். அவர் என்னையும் தனக்குச் சமனாக வைத்துக் கதைப்பாரா?
பஸ் கரடிப்போக்கு சந்தியைக் கடந்து கிளிநொச்சிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நான் கச்சேரியடியில் இறங்குவதற்கு தயாரானேன். பஸ் நிறைந்து இருந்ததினால் முன்னதாகவே இறங்கும் வழிக்குப் போகவேண்டியிருந்தது. பஸ் என்னை கச்சேரியடியில் இறக்கி விட்டு வவுனியா நோக்கி நகர்ந்தது. கண்டி வீதியில் வாகனங்கள் எதிரும் புதிருமாக விரைந்து கொண்டிருந்தன. நான் கருணாகரனுக்கு போன் செய்துவிட்டு நகரை சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் போனமுறை வந்த பொழுது இருந்த பாழடைந்த கிளிநொச்சியை பார்க்க முடியவில்லை. மிகவும் பரபரப்பான புதுப்பொலிவு பெற்ற நகரையே என்னால் பார்க்க முடிந்ததது. ஆனாலும் மக்கள் என்னவோ இனம்புரியாத கலவரத்துடனும், ஆழப்புதைந்த சோகங்களுடனுமே வளையவந்தார்கள். அவர்களோ வேறு உலகில் இருந்தார்கள். அவர்களை இந்தப் புதுப்பொலிவுகள் எதுவும் செய்துவிடவில்லை. நாட்டின் குடிமக்களை காக்கத்தவறிய முடிக்குரிய அரசர்களை அவர்கள் என்றுமே மன்னிக்கத்தயாராக இல்லை என்பதை அவர்களின் பேச்சுகளின் மூலம் என்னால் அறியமுடிந்தது.
நான் கண்டி வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றபொழுது என்பின்னால் ஓர் மோட்டசைக்கிள் வந்து நின்றது. அதில் நான் எதிர்பார்த்த கருணாகரன் வந்திருந்தார். தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டவாறே நட்புடன் கைதந்தார். இருவரும் திருநகரில் இருந்த அவர் வீட்டிற்கு சென்றோம். அவர் வீடு குளிர்மையின் நிழல் போர்த்தி இருந்தது. மாவும், வாழையும், பிலாவும் வளவெங்கும் சடைத்து நின்றன. வேலியின் அருகே குரோட்டன்கள் நிரை கட்டி நின்றன. முதல் பார்வையிலேயே அவரின் வீடு எங்கள் வீடு போல் இருந்தமையால் நான் அதில் லயிக்கத்தொடங்கினேன். நாங்கள் இருவரும் பல விடையங்களை மணிக்கணக்காக கதைத்துக்கொண்டிருந்தோம். நாம் இருவருமே இலக்கியம் சம்பந்தமாக ஒரே நேர்கோட்டில் சென்றதால் அவரின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் பொங்கி வழிந்தன. நான் எதிர்பார்த்ததை விட மிகவும் இயல்பாகவே பழகிக்கொண்டார். அவர் தயாரித்த தேநீரை அருந்தி விட்டு இருவரும் கிளிநொச்சி பார்க்க கிளம்பினோம். நான் சிறுவயதில் ஓடித்திரிந்த கிளிநொச்சி பலதழும்புகளை உள்வாங்கி எனைப்பார்த்து இளித்தது. பிரதம தபாலகம், கண்டிவீதி , கந்தசாமி கோவில் ,மத்திய கல்லூரி, புகையிரத நிலையம், கிளிநொச்சி குளம் என்று எமது மோட்டார்சைக்கிள் வலம் வந்தது. நாங்கள் கிளிநொச்சி குளத்து அணைக்கட்டில் ஏறிநின்றபொழுது , கிளிநொச்சி குளம் என் கண்முன்னே பரந்து விரிந்து இருந்தது. வழக்கமாக நீர் முட்டியிருக்கும் குளம் என்மனதைப் போலவே வறண்டு இருந்தது. அங்கு வழக்கமாக கூடியிருக்கும் நாரைகளும் இல்லை. கொக்குகளும் இல்லை. எங்குமே ஒருவிதமான வெறுமை படர்ந்தது இருந்தது. இந்த கொக்குகளும் நாரைகளும் இப்பொழுதும் உயிருடன் இருக்கின்றவா ? எனக்கு விடை தெரியவில்லை. நான் பலநேரமாக அணைக்கட்டில் வெறித்துப்பார்த்துகொண்டு நின்றேன். எனது தோளில் கருணாகரனின் கைகள் ஆதரவாக விழுந்தது. எனக்கு இந்த இடங்களில் கால்கள் வைக்க கூசியது. இந்த மண்ணின் கீழ் எத்தனை துயரங்கள் புதைந்து கிடக்கின்றன? என்கண்கள் என்னையறியாது கலங்கின. எமக்கு வந்த துயர் இலகுவில் மறக்க கூடியதா? எத்தனை எத்தனை பேரின் வாழ்வின் வேரையே ஆட்டி அவர்களை நடைப்பிணமாக்கியது. சிந்தனையில் வசப்பட்ட என்னை கருணாகரனின் கலகல பேச்சு இயல்புநிலைக்கு திருப்பியது. தினம் தினம் மரணத்தை அருகில் நின்று பார்த்தவருக்கு எப்படி கலகலப்பாக இருக்கமுடிகின்றது என்று மனதில் வியந்தேன்.
நாங்கள் கதைத்தவாறே வீடு திரும்பும் பொழுது கிளிநொச்சி சந்தைக்கு சென்றோம். நான் சிறுவயதில் சென்ற இடம். இந்த சந்தைக்கு அம்மாவுடன் வந்திருக்கிறேன். பலகாலத்தின் பின்பு இப்பொழுதுதான் வருகின்றேன். பச்சை காய்பிஞ்சுகளும், மீன்களும் சந்தையெங்கும் கும்பிகும்பியாக குவிந்திருந்தன. நான் விலைகளையும் சனங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன். ஒருமூலையில் பாலைப்பழம் குவிந்து இருந்தது. அதைக்கண்டவுடன் எனது கால்கள் நின்றன. அவற்றில் சிறிது வாங்கிக்கொண்டேன். பாலைப்பழம் இனிமையுடன் வாயினுள் வழுக்கியது. நாங்கள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பும்பொழுது, கருணாகரன் மத்தியானம் கனடாவிலிருந்து மீராபாரதி வருகின்றார் என்றும் அவரையும் அழைக்க புகையிரத நிலையத்துக்கு போகவேண்டும் என்று சொன்னார். நாங்கள் இருவரும் புகையிரத நிலையம் நோக்கி சென்றோம். அப்பொழுது மதியம் ஒருமணியாகி விட்டிருந்தது. கோடை வெய்யில் உச்சி மண்டையில் இறங்கியது. சிறிதுநேர தாமதிப்பின் பின்பு தூரத்தே யாழ் தேவி வருவது தெரிந்தது. புகையிரத மேடை சனங்களால் பரபரத்தது. நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும் மீராபாரதி யாழ்தேவியில் இருந்து இறங்கினார். மீராபாரதி என்னை அங்கு எதிர்பார்க்கவில்லை. கருணாகரனும், எனக்கு மீராபரதியை தெரியும் என்று எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் அந்த சந்திப்பு மூவருக்குமே அதிசயமான சந்திப்பாக அமைந்தது.
மாலை நான்கு மணிபோல் கருணாகரனிடமும், மீராபாரதியினிடமும் பிரியமனமின்றிப் பிரிந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு சிலவேளைகளில் மனிதர்களை புரிந்து கொள்ளமுடிவதில்லை.கடினமான தோற்றத்தை கொண்டவர்கள் இனிமையானவர்களாகவும், மென்மையான தோற்றத்தை கொண்டவர்கள் அதற்கு நேர்மாறாக இருப்பதையும் காண்கின்றோம்.இன்று நான் சந்தித்த இருவருமே முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் எனது பார்வயில் இருந்து கிளிநொச்சி மெதுமெதுவாக விடுபட்டுக்கொண்டிருந்தது. என்மனமோ பல்வேறு சிந்தனைகளில் பின்னிப்பிணைந்து கொண்டிருந்தது. நினைவுகளின் சுழல்களில் மனைவியின் முகமும் தெரியவே நான் வந்துகொண்டிருப்பதாக மனைவிக்கு போனில் சொன்னேன். குளத்தில் எறிந்த கல்லாக நினைவுகளாய் விரியும் என்மனதை கட்டுக்குள் கொண்டுவர என்கண்களை மூடினேன். மனமோ முரண்டு பிடித்து ஞாபகவீதியில் தறிகெட்டு ஓடியது. இறுதியில் ஓடிய மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன். அங்கும் இங்கும் அலைந்ததினால் வந்த உடல் அலுப்பு நித்திரையைகொண்டுவந்தது. பஸ்நின்றதாலும் அதனால் வந்த சனஇரைச்சலாலும் நான் கண்விழித்தேன். பஸ் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் நின்றிருந்தது. எனது கால்கள் பஸ்ஸால் இறங்கி வீடுநோக்கி தன்னிச்சையாக நடக்கத்தொடங்கின. நான் வீட்டை அடைந்தபொழுது உடல் வியர்வையால் தெப்பலாக நனைந்து இருந்தது. கிணற்றடியில் உடைகளை களைந்துவிட்டு குளிக்கத்தொடங்கினேன். கப்பியில் இருந்த இரண்டு வாளிகளும் எனதுகைகள் பட்டு வேகமாக இயங்கின. குளிர்ந்த நீர் உடலில் பாய்ந்து உடலைப் புத்துணர்வாக்கியது. நான் உடைகளை மாற்றிக்கொண்டுவர, மனைவி பருத்தித்துறை வடையும் தேநீருடனும் எனக்காக காத்திருந்தா. நான் மாமரத்தடியில் முக்காலியைப்போட்டுவிட்டு அதிலிருந்து தேநீரை குடித்தேன். தேநீரிலிருந்து மெதுவான ஆவி மேலேழுந்தது. நான் அதனுள் அமிழ்ந்துபோனேன். தேநீரைக்குடித்துவிட்டு கையில் சிகரட்டுடன் வீட்டுபடலையில் நின்று ஒழுங்கையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். நாங்கள் கொழும்பு செல்ல இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. கொழும்பு செல்வதற்கு முதல் வல்லிபுரக்கோவிலுக்கு போகவேண்டும் என்று மனைவி சொல்லியிருந்தா. இரவுச்சாப்பாட்டை எடுத்துவிட்டு மறுநாள் வல்லிபுரக்கோவில் செல்லும் திட்டத்துடன் படுக்கைக்கு சென்றோம்.
October 27, 2014
Comments
Post a Comment