ஒழுங்கை முழுவதும் இருள் மண்டி இருந்ததது. நட்சத்திர ஒளியில் தடம் பிடித்து நடக்கத் தொடங்கினேன். முழு நிலவு வானத்தில் அப்பளமாக விரிந்து இருந்தது. எனது நடை வேகத்தில் மீண்டும் உடம்பு வியர்வையில் குளிக்கத் தொடங்கியது.நட்சத்திர ஒளியிலும் நிலவு வெளிச்சத்திலும் நடப்பதும் என்மனதில் ஒருவகையான புத்துணர்ச்சியை உருவாக்கின. வீட்டு வாசலில் மனைவி நின்றிருந்தா. மாலை வெக்கையை அடக்குவதற்கு மீண்டும் மனைவி வீட்டு முற்றதிற்கு தண்ணீர் தெளிதிருந்தா. தெளித்த தண்ணியின் குளிர்மை வியர்த்த உடலுக்கு இதமாகவே இருந்ததது. என்னைக் கண்ட புழுகத்தின் வெளிப்பாடாக எங்கள் வீட்டு நாய் என் மீது ஏறிப்பாய்ந்தது. என் மனம் என்னிடம் ,
"இப்பொழுது குளித்தால் நன்றாக இருக்குமே ?" என்று கேட்டது.
"ஓ ........ குளிக்கலாமே " என்று அதை தட்டிக் கொடுத்தேன்.
பொதுவாகவே நின்று இருந்து படுத்து என்று எல்லோருமே பல விதமாக குளிக்கின்றார்கள். அதுவும் புலத்தில் எனக்கு பெரும்பாலும் காகக் குளிப்பே அமைந்திருந்தது. மேலிருந்து ஷவரால் கீழே விழும் ஒவ்வரு தண்ணீர் துளியும் யூறோவாய் விழுவதால் அங்கு ஆனந்த குளிப்புக்கு இடமில்லை. ஆனால் இங்கு பாரதி கனவு கண்டதை நிஜத்தில் கொண்டு வரும் தென்னையும் வாழையும் சுற்றி வர நடுவில் கப்பியுடன் அமைந்த கிணற்றில் அள்ள அள்ள குறையாத தண்ணீரில் குளிப்பது என்பது எனது புலத்து வாழ்க்கையை ஒருவித வெறுப்புடனேயே பார்க்க வைத்தது. எவ்வளவு நேரம் குளித்தேன் என்று தெரியவில்லை கண்கள் புகையடித்தன. குளித்து முடிந்தவுடன் மனைவி தந்த பிளெயின் ரீயுடன் வீட்டு வாசலுக்கு வந்தேன். இப்பொழுது அமைதி ஒழுங்கையை முற்று முழுதாகவே தனது ஆட்சியில் கொண்டுவந்து இருந்ததது. அவ்வப்பொழுது தூரத்தே ஒலித்த நாய்களின் குரைப்பொலி அந்த அமைதிக்கு நாவூறு கழித்தது.
அதிகாலை வேளை நாங்கள் பருத்தித்துறை பஸ்நிலையத்தை அடைந்த பொழுது அது அமைதியாகவே காணப்பட்டது. அந்த நாளைத் தொடங்குவதற்கான ஆரம்ப நிலைகளை பஸ்நிலையம் எடுத்துக்கொண்டிருந்ததது. கடற்கரையில் இருந்து வந்த மென்மையான குளிர் காற்று அந்த வெக்கை நிலையில் இதமாகவே இருந்ததது. பஸ்களை நிறுத்திவிட்டு சாரதிகளும் நடத்துனர்களும் காணமல் போயிருந்தனர். நேரம் செல்லச் செல்ல பாடசாலை செல்வோராலும் அலுவலகம் செல்வோராலும் அந்த இடம் அமைதி இழக்கத் தொடக்கி இருந்ததது. நாங்கள் யாழ்ப்பாணம் செல்லும் 750 இ போ சா பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம். என்னதான் தனியார் பஸ்கள் சொகுசு சேவைகளை வழங்கினாலும். இ போ சா பஸ்சுக்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். காலத்தின் நகர்வு காலை ஏழு மணியை தொடத் தொடங்கியதும் இதுவரை காணமல் போயிருந்த சாரதி தனது இருக்கையில் அமர்ந்து பஸ்ஸை இயக்கும் பொத்தானை அழுத்தினார். பெரும் உறுமலுடன் பஸ் புறப்படத்தயாரானது. வெளியே நின்ற இறுதி நேரப் பயணிகளும் பாய்ந்து விழுந்து ஏறதொடங்கினார்கள். பஸ்ஸினுள் எண்பதுகளின் பாட்டுகள் தவழ ஆரம்பித்தன. பஸ் யாழ்ப்பாணம் நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது.
பருத்தித்துறை வீதியும் இப்பொழுது குறுக்கு வளத்தால் அகன்று கார்ப்பெட் என்ற நகை அணிந்து மிடுக்காக இருந்தது . ஒரு காலத்தில் யுத்த டாங்கிகளும், புளொக் செயின்களும் ஓடித் திரிந்து இந்த வீதியில் மனித இரத்தத்தை ருசி கண்ட பொழுது காற்று மட்டுமே இந்த வீதியுடன் கதை பேசியதும் என் நினைவில் வந்து போயின. அதே வீதி இன்று புதுப் பொலிவுடன் இருப்பதென்றால் மக்கள் மீண்டும் கவசமாகப் பட்டிருக்கின்றார்களா? இல்லையென்றால் ஏன் பச்சை உடைகள் உடற்பயிற்சி என்ற போர்வையில் வீதிகளில் ஓடிவர வேண்டும்? இவர்களின் தேவைகள்தான் முன்னிலை படுத்தப்பட்டுள்ளனவா? என்ற கேள்விகள் என்மண்டையை சொறிந்து கொண்டிருந்தன .
அந்த காலை வேளையிலும் வெய்யில் முகத்தில் ஓங்கி அடித்தது. கறுப்புக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டேன். பஸ் இப்பொழுது வல்லை வெளியைக் கடந்து அச்சுவேலிப்பக்கமாக திரும்பி இருந்ததது. வேலிகளும் மதில்களும் நிறைந்த அந்த அச்சுவேலி வீதியில் பயணம் செய்வது ஒரு புதுஅனுபவமாகவே இருந்ததது. பஸ் அச்சுவேலியை அண்மிக்கும் நேரம் ஜன்னலின் வெளியே கண்ட காட்சி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. யாரோ ஒருவரின் வெளிநாட்டு பணம், ஐரோப்பாவின் முன்று நட்சத்திர அந்தஸ்துக்கு நிகரான உல்லாச தங்குமிட விடுதியாக நீச்சல் தடாகத்துடன் விரிந்து இருந்ததது. என்மனம் என்ற குரங்கு மீண்டும் சிந்தனை என்ற கொப்புக்கு தாவியது இப்படியான உல்லாச தங்குமிட விடுதிகளில் தங்குவதற்கு இந்த மண்ணின் மைந்தர்கள் முன்னேறி விட்டார்களா? அல்லது வெளிநாட்டு பண்ணையார்களை குறி வைத்து எழுப்பிய விடுதியா? என்னையும் விட வீடுகளை துலைத்த இந்த மண்ணுடன் உறவு கொண்ட பல அன்னியர்கள் இங்கு வருவார்கள் தானே என்று என்மனம் எனக்கு போதனை செய்தது.
நாங்கள் வந்த இ போ சா பஸ் முக்கால் மணிகளை விழுங்கி எங்களை கோப்பாயில் தள்ளி விட்டுத் தனது பயணத்தை யாழ்ப்பாணம் நோக்கி தொடர்ந்தது. நான் பலவித உணர்சிக் கலவையின் அடிமையானேன். சிறுவயதில் இடுப்பில் நிக்காத கால்சட்டையுடன் மூக்குச்சளி வழிய வழிய உடலெங்கும் புழுதி படிய ஓடித்திரிந்த ஒழுங்கையும், தேமா மரத்தடியும் நாகரீகத்தின் சுழலில் சிக்கி மறைந்து இருந்தன. நான் அந்த இடத்தில் திசைதவறிய பயணியைப் போல நின்றிருந்தேன். என்னை யாராவது அடயாளம் கண்கின்றார்களா என்று பார்க்கவிரும்பி சிறிது நேரம் அங்கு நின்றிருந்தேன். எனக்கு ஏமாற்றமும் அயர்ச்சியுமே மிஞ்சியது. அவரவர் பாடு அவர்களுக்கு. மறுவளத்தில் எனது மனமோ "நீ என்ன பெரிய பிஸ்தாவா எடுத்த உடனே எல்லோரும் அடையாளம் காண ? ஒரு பொம் அடியிலேயே நாட்டை விட்டு ஓடித்தப்பியவன் தானே? உனக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கின்றது?" என்று என்னிடம் மல்லுபோர் செய்தது .என்கண்கள் என்னையறியாமல் குளமாகின. கண்களைத் துடைத்துக்கொண்டு மனைவியுடன் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டு வாசலில் தங்கைச்சியும் மருமகளும் எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். என்னை கண்டதும் மருமகள் தங்கையின் காலிற்குள் மறைந்து கொண்டாள். வானத்தில் மூடிய மேகத்தினிடையே அவ்வப்பொழுது எட்டிப்பார்க்கும் நிலவு போல இடைக்கிடை மருமகள் எங்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கைச்சியைத் தவிர வீடு வெறிச்சோடி போய் இருந்தது அண்ணை வேலைக்கு போய் இருப்பதாக தங்கை சொன்னாள்.
என்றுமே கலகலப்பாக இருந்த வீடு பிய்த்தெறியப்பட்ட தேன்வதை போல ஏகாந்தமான அமைதியுடன் காணச் சகிக்காது இருந்தது. நான் அயர்ச்சியுடன் முன் வாசலில் இருந்து கொண்டேன். என்மனம் மீண்டும் ஞாபக விதிகளில் பயணம் செய்ய தொடங்கியபொழுது என் தங்கையின் குரல் என்னைக் கலைத்தது. அவள் தந்த தேநீருடன் சிகரட்டை எடுத்துக்கொண்டு வீட்டு படலை வாசலுக்கு வந்தேன். எதுவித எதிர்பார்ப்பும் இல்லாது என்மீது கொண்ட அன்பினால் தயாரித்த தேநீரோ தெரியவில்லை தங்கையின் தேநீர் அருமையாகவே இருந்ததது. எனது கைகள் சிகரட்டை வாயில் வைத்து அதன் முனையை சிவப்பாக்கின. புகையை இழுத்து வெளியே விட்டேன். அதனுடன் சேர்ந்து எனது மனவேக்கையும் வெளியேறியது. மதிலை மூடி நின்ற போகைன் வீலா பூக்கழும், கொன்றை மரமும், செம்பரத்தைகளும் என்னுடன் மௌன மொழி பேசின. வீட்டு முற்றத்தில் சடைத்து நின்ற கறுத்தக்கொழும்பான் மா மரத்தில் அணில் பிள்ளைகள் துள்ளி விளையாடி கொண்டிருந்தன. எனது மனதை போலவே ஒழுங்கையின் இரண்டு பக்கமும் வெறுமையாகவே இருந்தன.
ஒருகாலத்தில் இந்த ஒழுங்கை நானும் எனது நட்புகளாலும் எப்படி கலகலப்பாக இருந்ததது? ஏன் இன்று தன்னை தொலைத்து விட்டு நிற்கின்றது ? என்று என்னுள் பல கேள்விகள் முட்டி மோதிக்கொண்டிருந்த வேளையில், ஒழுங்கை முடக்கில் அண்ணையின் மோட்ட சைக்கிளின் உறுமல் சத்தம் கேட்டது. அண்ணியும் அவர் பின்னால் இருப்பது தெரிந்தது. அண்ணையின் மோட்டசைக்கிள் உள்ளே வர நான் ஒதுங்கி நின்றேன். எனது கையில் இருக்கும் சிகரட்டை அணைக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு வரவில்லை. ஏனெனில் போலி மரியாதைகளை காட்டுவதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. என்னை கண்ட புழுகம் அண்ணையின் முகத்தில் தெரிந்தது. என்னிடம் உரிமையாக ஒரு சிகரட்டை வாங்கி தானும் பத்திக்கொண்டார். இருவருக்குமிடையான பேச்சுக்கள் பல இடங்களை தொட்டுச் சென்றன. பாடசாலை சென்ற அண்ணையின் பிள்ளைகள் வரத்தொடங்கினார்கள். கால ஓட்டங்கள் அவர்களை நன்றாக வளரச் செய்து விட்டிருந்தது. நாங்கள் எல்லோருமே மத்தியானச் சாப்பாடு சாப்பிட மேசையில் ஒன்று கூடினோம். நானும் அண்ணையும் எதிரும் புதிருமாக இருக்க எங்களை சுற்றி பிள்ளைகள் இருந்து கொண்டார்கள். தங்கையின் முகத்தில் பலவித உணர்சிகலவைகள் ஓடியிருப்பதை என்னால் காண முடிந்தது. என்னதான் நாங்கள் எல்லோரும் வளர்ந்திருந்தாலும் அடிப்படையில் எல்லோருமே எதோ ஒரு ஞாபக வீதிகளில் பயணிப்பதையே விரும்புகின்றோம். இதற்கு தங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?? நாங்கள் சாப்பிட்டு முடிந்துவிட்டு மீண்டும் குடும்பக்கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். நான் தூக்கத்தின் நெருக்குதலால் நெளிந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் சொல்லிவிட்டு நான் படுக்கப் போய்விட்டேன். மாலைநேரம் நெருங்கி கொண்டிருந்த பொழுது என்னை மருமகள் எழுப்பினாள்.
நான் கேணியடியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மருமகளின் கைகள் எனது கையைப் பற்றியிருந்தன. வழியை தொலைத்த வழிப்போக்கனுக்கு வழி காட்டும் பொழுது ஒருவர் முகத்தில் தெரியும் பெருமிதம் போல அவள் முகம் பெருமையால் விரிந்திருந்ததது. நான் அவள் சிறுபிள்ளை பாவனையை ரசித்தாலும், நாங்கள் வளர்ந்து ஆளான பொழுதிலும் சில விடயங்களில் மட்டும் பலருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போலத்தானே வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று என் மனம் ஒரு நக்கல் சிரிப்புடன் என்னைப் பார்த்தது. என் மன உணர்வுகளை வெளிக்காட்டாது அவளுக்கு ஏற்றால் போலக் கதைதுக்கொண்டு அவளுடன் நடந்துக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இருபுறமுமே வேலிகளில் நின்ற பூவரசுக்கள் நிழல் பரப்பியது அந்த கோடைகால மாலை வேளைக்கு இதமாகவே இருந்ததது .
நான் கேணியடியை நெருங்கியபொழுது என் கண் முன்னே கோப்பாய் சம்பு புல்லு தரவை பரந்து விரிந்தது. பழுக்கக் காச்சிய இரும்பைப்போல வான்வெளி சிவந்து காணப்பட்டது. அதனூடே ஆரை வடிவில் வலசை சென்றுகொண்டிருந்த கூழைக் கடாக்கள் என் மனதைக் கிளர்ந்தெளச் செய்துகொண்டிருந்தன. நான் கேணிக்கட்டில் இருந்து கொண்டு கால்களை தண்ணீரில் படும்படி கீழே விட்டேன். கேணியில் இரண்டு சோடி வாத்துக்களின் நீந்தலினால் வெளியான சிறிய அலைகள் "சளக் " "சளக் "என்று கரையில் அடித்துக்கொண்டிருந்தன. மேய்ச்சலுக்குப் போன மாடுகள் கண்டுக்குட்டிகளுடன் பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. மருமகள் தன பாட்டில் விளையாடிகொண்டிருந்தாள். ஒருகாலத்தில் உளுந்தும், சணலு,ம் நெல்லும் என்று வளர்ந்த இந்த தரவை இன்று சவர் பற்றிப் போய் இருக்கின்றது. அதுமட்டுமா செய்கின்றது? பல சமர்களையும் ,இந்தியப்படைகளுகான மரணக்குழிகளையும் உருவாக்கியதும் இதே தரவைதான். ஆனால் இன்று எதுவுமே நடக்காதது போல என்னுடன் மௌனக்கதை பேசிக்கொண்டிருந்தது என்மனதில் வலியையே ஏற்படுத்தியது . என்மனமோ கேணியில் வாத்துக்கள் நீந்தியதால் வந்த அலைகள் போல தத்தளித்தது. மேலும் அங்கு இருக்கப்பிடிக்காமல் மருமகளுடன் மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன்.
29 ஆனி 2014
Comments
Post a Comment