Skip to main content

வாடாமல்லிகை - பாகம் 14







வியர்வையை அவ்வப்பொழுது கண்டு வந்த எனக்கு இந்த வெய்யிலும் அதனால் வரும் வியர்வையும் நன்றாகவே பிடித்துக்கொண்டது. சூரியக்கண்ணாடியை அணிந்து கொண்டு அருகே இருந்த மரத்தின் கீழே ஒதுங்கிக் கொண்டேன். ஊரையே கொழுத்திய எறிகணைகளின் நடுவே இந்த மரங்கள் சில தப்பிப் பிழைத்தது அதிசயம்தான். துரத்தே 751 பஸ் வருவது தெரிந்தது. பஸ்ஸில் அதிகம் கூட்டம் இருக்கவில்லை . நான் இடம் பார்க்க வசதியாக முன்பக்கத்தில் ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ்ஸில் இப்பொழுது வேலைக்கு செல்லும் ஆட்கள் ஏறத்தொடங்கினார்கள். பஸ் கப்பல் கட்டும் தொழிற்சாலையை கடந்து சென்று, நாவலடி சந்தியில் வியாபாரி மூலைப்பக்கமாக திரும்பியது. 

வியாபாரி மூலை காணுமிடமெல்லாம் பச்சைகளைப் போர்த்தி செழிப்பாகவே இருந்தது. புகையிலையும், வெங்காயமும், வாழைகளும் போட்டி போட்டு அந்த மண்ணை நிரவியிருந்தன. சிறிது நேர ஓட்டத்தின் பின்பு கடற்கரை சாலையில் திரும்பிய பஸ் இன்பிருட்டியினூடாக வேகமெடுத்தது. கடற்கரை காற்று உப்புக்கமறலுடன் என் முகத்தில் வீசியது. இன்பிருட்டி அடிப்படையில் மீனவக்கிராமமாகவே இருந்தது. இடதுபக்கம் தென்னை மரங்களுடன் கூடிய பெரும் கல்லு வீடுகளும் , இடதுபக்கம் வாடிவீடுகளும் காணப்பட்டன. வீடுகளில் பலர் வலைகளை செப்பனிட்டுக் கொண்டிருந்தனர். சிறிய ரக வள்ளங்களும், கட்டுமரங்களும் கடற்கரையெங்கும் அணிவகுத்து நின்றன. தூரத்தே கடல் கருநீலத்தில் பரந்து விரிந்து இருந்தது. இதே போல ஒரு கடற்கரை சாலை கொழும்பிலும் இருந்தது .இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் அதிகமாகவே இருந்தன. 

பஸ் கடற்கரை சாலையில் ஓடி வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை நெருங்கியது. கோவிலின் முன்னால் பெரிய ஆலமரம் ஒன்று சடைத்து நின்றது .வெய்யிலில் ஓடிவந்த பஸ்சிற்கு அந்த இடம் குளுமையாகவே இருந்தது. எனது மனமோ ஒரு சிறிய ஞாபக வீதியில் பயணம் செய்ய ஆசைப்பட்டது. நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தக்கோவிலில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அப்பா என்னைக் அழைத்துச் சென்று இருந்தார். அதில் எல் ஆர் ஈஸ்வரியும் கலந்து கொண்டிருந்தா. அந்த நிகழ்வில் அவா பாடிய "பைலட் பிறேமநாத்" படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில்" நாலு பக்கம் சூழ்ந்த சிங்கள தீவு "என்ற வரி வந்தது. அதை எல்.ஆர் ஈசுவரி வாய் தவறி பாட , பார்க்க வந்த சனங்கள் எல்லோரும் அவாவுக்கு எதிராக கோசம் போட, எல் ஆர் ஈசுவரி அதை திருத்தி "நாலு பக்கம் சூழந்த இலங்கை தீவு" என்று பாடினா. அப்பொழுதுதான் சனங்கள் அவாவை தொடர்ந்து பாட அனுமதித்தார்கள். அவ்வளவு தூரத்திற்கு இந்த வல்வெட்டித்துறை வாசிகள் வளமானவர்களாகவும், எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருந்தார்கள். நான் ஞாபகவீதியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, பஸ் சிவன் கோவிலைத்தாண்டி சிறிது தூரம் ஓடி வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் நுழைந்தது. இறங்குவதற்கு முண்டியடிக்கும் சனங்களின் ஊடாக நான் மிதந்து சென்று இறங்கிக்கொண்டேன். 

வல்வெட்டித்துறை பஸ்நிலையம் பருத்திதுறையப் போல அதிக சந்தடி இல்லாது இருந்தது. நகரம் என்றாலே ஒருவித பரபரப்பு மக்களிடம் காணப்படும். ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இருந்தது எனக்கு ஒருவித எச்சரிக்கையுணர்வையே ஏற்படுத்தியது. நான் கடலைப்பார்க்கும் ஆவலில் ஓர் ஒழுங்கையினூடாக கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஓர் அருங்காட்சியகம் போல குண்டுத்தாக்குதல்களிலும், எறிகணைதாக்குதல்களிலும் சிதைவடைந்த கட்டிடங்கள் அங்கே கொட்டிக் கிடந்தன. அவற்றைச் சுற்றி பற்றைகள் வளர்ந்து இருந்தன. எல்லா இடத்திற்கும் வசந்ததை கொண்டுவந்த மன்னர்களின் சேவகர்கள், இங்கு மட்டும் இருட்டையே இந்த மக்களுக்கு காட்டினார்கள். நான் ஒழுங்கையினால் நடந்து சென்ற பொழுது சூரியன் சுட்டெரித்தாலும், பச்சைகளின் நிழல் குடைகள் பல்வேறு வண்ணங்களில் நான்கு புறமும் பரந்து விரிந்து இருந்ததைக் கண்டேன். என்கால்கள் கடல் தண்ணீரில் அமிழ்ந்த பொழுது என் மனமும் நினைவலைகளில் சேர்ந்தே அமிழ்ந்தது. இந்தக் கடற்கரை எத்தனை தண்டையல்களையும், கடலோடிகளையும் பார்த்திருக்கும்? எத்தனை விதமான சாகசங்களைப் பார்த்திருக்கும்? இதில்தானே எமது முதல் பாய்மரக்கப்பல் அன்னபூரணி அமெரிக்கா நோக்கி சென்றாள். எத்தனை கடல் சமர்களை இந்த கடல் சந்தித்தது ? இன்று இந்தக்கடல் எல்லாவற்றையும் தன்னுள் புதைத்துக்கொண்டு என்னை நோக்கி பால்குடிக் குழந்தையைப் போலத் தன் அலைகளைத் தவழ விட்டுக்கொண்டிருக்கின்றது. கால்களுக்கடியில் சிறிய நண்டுகள் கடித்ததால் நிஜத்துக்கு வந்தேன். 

நேரம் மதியத்தை தாண்டிக்கொண்டு இருந்தது. கடல் நீர் இளஞ் சூடாக இருந்தது. தூரத்தே சிறிய ரகப் படகுகளும் கட்டுமரங்களும் கடல் நீரில் தவம் செய்து கொண்டிருந்தன. இன்னும் சற்று தூரத்தில் மங்கலாக சரக்குக்கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்தியான நேரமாகையால் கடற்கரை ஓரிரு மனித சஞ்சாரத்துடன் காணப்பட்டது. அது எனக்கு ஒருவித திகில் உணர்வை ஏற்படுத்தியது. நான் கைகளில் செருப்புகளை எடுத்துக்கொண்டு, கடல் குரு மண்ணில் கால்கள் புதையப் புதைய மீண்டும் நான் வந்த ஒழுங்கையை நோக்கி நடந்தேன். அப்பொழுது ஒருவர் ஒற்றைக் காலுடன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். சாப்பிடக் காசில்லை எனவும் காசு இருந்தால் தரும்படி கூசிக் கூசி என்னிடம் கேட்டார். அவரின் முகம் பசியின் கொடுமையை அப்படியே காட்டியது. உடல் மெலிந்து கட்டுக்குலைந்து இருந்தது. நான் அவருடன் கதைத்ததில், தான் ஒரு முறை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது கடல் கண்ணி வெடியில் சிக்கி கால் போய்விட்டது என்றார். கால் இல்லாமையால் தான் இப்பொழுது தொழில் செய்வதில்லை என்றும், வலை பின்னுவது,மீன்களை கருவாடு போடுவது போன்ற சிறு சிறு உதவிகளை சம்மாட்டிகளுக்கு செய்து கொடுப்பதாக சொன்னார். நான் தொடர்ந்தும் அவரது மனதை புண்படுத்த விரும்பாது எனது கால்சட்டை பொக்கற்ருக்குள் இருந்த நூறு ரூபாய் நோட்டுக்களில் ஐந்தை அவரிடம் கொடுத்தேன். அவர் கண்களில் இயலாமையின் வெளிப்பாடாக கண்ணீர் முட்டியது. நான் அவரின் முகத்தை பார்க்க முடியாது பார்வையை திருப்பிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன். 

யுத்தம் வெறுமனே ஆயுதங்களுடன் மோதவில்லை. மனிதமனங்களுடனும் உடலுடனும் நிறையவே மோதியிருக்கிறது. மனதை இழந்த அங்கத்தை இழந்த நடைபிணங்கள் பல யுத்த வெற்றியின் எதிர்வினையாக நேரடிசாட்சியாக நடமாடுவதை கண்ணாரக் கண்டு என்மனம் துவண்டது. சோர்ந்த நடையுடன் சிவன் கோவில் பக்கமாக எனது கால்கள் நகர்ந்தன. மீன்றும் கோவிலடி ஆல மர நிழலில் நின்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்தேன். எதிரே இருந்த வல்வெட்டித்துறை மத்தியமகா வித்தியாலயத்தில் உள்ளே இருந்து மாணவர்களது இரைச்சல் காதுகளை துளைத்தது. வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றவர்கள் காத்து நின்றார்கள். ஒவ்வோர் முகத்திலும் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் கனவுகளாய் விரிந்து இருந்தது. திடீரென அரசசேவகர்களின் பச்சைப் படையணி ஒன்று சைக்கிள்களில் பருத்தித்துறை நோக்கி விரைந்து சென்றது. அவர்களுக்கும் என்ன அவசரமோ சிலவேளை இல்லாத புலியை அதன் புழுக்கை வாசத்தில், இருப்பதாக நினைத்து ஓடுகின்றார்களோ என்று என் மனம் என்னிடம் கிண்டல் தொனியில் கேட்டது. நான் அதை சும்மாய் இரு என்று அடக்கினேன். 

தூரத்ததே பஸ் வருவது தெரிந்தது என்னுடன் ஒருசிலர் ஏறிக்கொண்டனர். வல்வெட்டித்துறை கடற்கரையின் கோலமும் அங்கு சந்தித்த மனிதர்களும் எனது மனதை, பனமட்டைக்கருக்கால் விளாறியது போல செய்திருந்தனர். வழியில் வந்த காட்சிகளை என்கண்கள் காணமுடியாதவாறு மனதுமுட்ட வலிகளே நிரம்பி இருந்தன. நான் ஆயாசத்துடன் கண்களை மூடிகொண்டேன். முக்கால் மணிகளை விழுங்கிய பஸ் என்னைத் தம்பசிட்டிப் பள்ளிக்கூடதடியில் இறக்கிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. நேரம் மதியம் ஒருமணியைக் கடந்து இருந்தது சனங்கள் வெய்யிலின் கொடுமையினால் வீட்டிற்குள் அடைந்து இருந்தார்கள். ஒழுங்கையினால் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். பூவரசு மரங்களும் இப்பிலிப்பில் மரங்களும் ஒழுங்கை வேலிகளை நிறைத்து இருந்ததினால் ,ஒழுங்கை குளிர்மையாகவே இருந்தது. அந்தக் குளிர்மையை அனுபவித்தபடியே எனது நடையை வேகப்படுத்தினேன். இடையில் வந்த கதிரவேற்பிள்ளை வாசிகசாலையில் சனங்கள் இருந்து படித்துக்கொண்டிருந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்றும் சனங்களுக்கு வாசிகசாலைகளில் இருந்து படிப்பது ஒரு திறிலாகவே இருந்தது. நடந்து நடந்து கால்கள் வலி எடுத்ததால் பண்டாரி அம்மன் கோவிலடியில் சிறிது நேரம் நிற்கவேண்டும் போல மனது சொல்லியது. கட்டளையை மூளை கிரகிக்க எனது உடல் தானாகவே கோவிலின் முன்னால் இருந்த மரநிழலில் ஒதுங்கியது. 

கோவில் சுற்றாடல் அமைதியாக இருந்தது. நான் அமர்ந்திருந்த மரத்தின் மேலே அணில்கள் துள்ளி விளையாடின. தூரத்தே ஓரிரு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வீச வேண்டிய காற்று அமைதி காத்தது. பண்டாரியம்மனுக்கு பூசை செய்யும் நேரத்தில் சிறிது கூட்டம் வரும். மிகுதி நேரத்தில் இந்த அம்மனும் யாருமற்ற அனாதையாகவே இருக்கின்றாள். இந்த இடமும் சூழலும் என்மனதை கிளரச்செய்தன. இப்படியே இந்த சூழலில் இருந்துவிடலாமா என்றுகூட என்மனது ஏங்கியது. இந்தமனம் இருக்கிறதே இயற்கை தந்த ஒரு அற்புதமான அமைப்பு. இந்த மனதில்தான் மனிதன் தான் விரும்பியவாறு பயணம் செய்ய முடியும். இந்த மனமும் இல்லாவிட்டால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். சிறிது நேரம் சூழலை ரசித்துவிட்டு மீண்டும் நடையைத் தொடங்கினேன். என்னை அதிக நேரம் காணாது வீட்டு கேற்றடியில் எமது வீட்டு நாய் நின்றுகொண்டிருந்தது. என்னைக்கண்டதும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவந்து என்மேல் பாய்ந்து புரண்டது. இந்த ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கும் எம்மைப்போல பந்தபாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்மீது விழுந்து புரண்ட நாய்க்குப் போக்குக்காட்டியவாறே வீட்டினுள் நுழைந்தேன். காலையில் இருந்து அலைந்ததினால் மனதும் உடலும் ஒரேசேரக் களைத்து இருந்தன. மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சிறிது குட்டிதூக்கம் போட்டேன். நான் மீண்டும் எழும்பிய பொழுது மாலை ஆறுமணியைத் தாண்டி விட்டிருந்தது. மனைவி தந்த தேநீரைப் பருகியவாறே கருணாகரனின் எண்களை எனது தொலைபேசியில் தடவி ஒற்றினேன். சிறிது இடைவெளியில் கருணாகரனின் கரகரப்பான குரல் ஒலித்தது. பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்கிடையே நாளை நான் அவரிடம் வரவிருக்கும் செய்தியை சொன்னேன். தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். 

நாங்கள் கொழும்பு செலவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மனைவியும் மாமியும் இறுதிநேரத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனக்கோ ரவுணுக்குப் போக வேண்டும் போல இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு பிளெயின் ரீயும், றோல்சுடனும் கையில் சிகரட்டுமாக மம்மல் பொழுதில் தனிய இருக்க என் மனது ஆவல்பட்டது. மாமாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு பருத்தித்துறை ரவுணுக்கு புறப்பட்டேன். நீண்டகாலதிற்குப் பின்னர் சைக்கிள் ஓடுவதால், ஆரம்பத்தில் எனது சொல்கேட்க அடம்பிடித்த சைக்கிள், இப்பொழுது என்சொல்கேட்டு ஒழுங்கையில் ஒழுக்கமாகச் சென்றது. சிறிது நிமிடங்களை விழுங்கிய சைக்கிள் நான் வழக்கமாக ஒதுங்கும் ரீ கடையில் ஒதுங்கியது. என்னைக்கண்டதும் சீனி போடாத பிளெயின் ரீயையும் றோல்சையும் கடைப்பையன் என்னருகே கொண்டுவந்து வைத்தான். ஒருமுறை நான் கொடுத்த பேச்சால் என்னை கண்டதும் சிங்கள பைலாவை நிறுத்தி தமிழ்ப் பாட்டைப் போட்டுவிட்டான். தேநீரின் ஆவியும் வாசனையும் என்னைக் கிறுங்கடித்தன. பொன்னிறமாக இருந்த தேநீர் என்னுடன் மௌனமொழி பேசியது. சிறிது நேரம் அதனை வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தேன். தேநீரில் பல முகங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. மனதில் இனம்புரியாத வலியொன்று அவ்வப்பொழுது எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. நான் எவ்வளவோ இந்த மனதை சந்தோசப்படுத்த முயற்சி செய்தாலும் இறுதியில் தோல்வியத்தான் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். 

தேநீரையும் றோல்சையும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்தேன். ரவுணை இருள் மெதுமெதுவாகத் தன்பிடியில் கொண்டு வந்தது. ஓரிரு பஸ்களே பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்ல நின்றிருந்தன. சனங்கள் அவசரமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். நான் சிகரட்டை பற்றவைத்துக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்தேன். அப்பொழுது எனது மனமோ "இந்த அமைதியான வாழ்க்கை இன்னும் ஓரிரு நாட்கள் தானே மீண்டும் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்தானே போகின்றாய்" என்று என்னிடம் நக்கல் அடித்தது. இந்த இடம் எனக்கு அன்னியமாகி போனதன் வலி என்னை ஆட்டிப்படைத்தது. ரீ கடையில் நிற்கப்பிடிக்காமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி மிதிக்கத் தொடங்கினேன். ஒழுங்கையை இருட்டு அப்பியிருந்தது. வானில் நட்சத்திரங்கள் பாயாக விரிந்திருந்தன. அவற்றின் ஒளியில் சைக்கிளை வேகமாக உழக்கினேன். வீட்டில் இரவுச்சாப்பாடாக தோசையும் இடி சம்பலும் மாமி செய்திருந்தா. சாப்பிட்டுவிட்டு கருணாகரனை சந்திக்கும் ஆவலில் நித்திரைக்குச் சென்றேன். 

September 22, 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...