Skip to main content

சுந்தரி





வேம்படியில் வாழ்ந்த வந்த தங்க வேலாயுதத்தாருக்கும் தெய்வானைபிள்ளைக்கும் மூத்த மகளாக பிறந்த கனக சுந்தரிக்கு நண்டும் சிண்டுமாக நான்கு தம்பிகளும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். தங்க வேலாயுதம் ஆசிரியர் தொழிலுடன் பதினைந்து பட்டி தோட்டமும் செய்துவந்ததால் அந்தப் பெரிய குடும்பம் ஓரளவு வசதியாக இருந்து வந்தாலும், யுத்தத்தின் கோரப்பிடியினுள் சிக்கிய அந்தக் குடும்பம் படிப்படியாக அதன் வளங்களை இழக்கத் தொடங்கியது. தங்க வேலாயுதத்துக்கு பிள்ளைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது. கனக சுந்தரி பல்கலைக்கழகப் பட்டப் படிப்பும் முடித்து கலியாண வயதையும் எட்டி விட்டாள். அவளது அழகில் கடவுள் எதுவித வஞ்சகமும் செய்யாத காரணத்தால் கனகசுந்தரியின் அழகில் மயங்காத பெடியளே வேம்படியில் இல்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ அவளுக்குப் பேசிவந்த கலியாணங்கள் எல்லாம் அவளது செவ்வாய் குற்றத்தினால் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தன. இது தெய்வானைப்பிள்ளைக்கு மனதளவில் பெரிய தாக்கமாக இருந்தது. தெய்வானைபிள்ளை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டாள். நோய்வாய் பட்ட தாய்க்குப் பிறகு கனகசுந்தரியிடமே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்தன. கோழி தன்குஞ்சுகளை எப்படி பார்க்குமோ அப்படியே அவள் தனது தம்பி தங்கைகளை பொத்தி பொத்தி வளர்த்தாள்.

கோடைக்காலத்தின் ஓர் மாலைப்பொழுதில் புறோக்கர் சவரிமுத்து கனக சுந்தரிக்கு ஓர் குறிப்பை கொண்டுவந்தான். பிரெஞ் பிரஜையான மனோகரன் அண்மையில் தனது மனைவியை விபத்தொன்றில் பலிகொடுத்து இருந்தார். அவருக்கு சிறிய வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். முக்கியமாக மனோகரன் தனக்கு எதுவித சீதனமும் வாங்கப்படாது என்று நிபந்தனை போட்டிருந்தார். அவருக்கு தேவை தனது சிறிய பிள்ளைகளைப் பார்பதற்கு ஓர் அன்பான அம்மா வேண்டும் அவ்வளவே.சவரிமுத்து இந்த சம்பந்தத்தால் வரப்போகும் நன்மைகளை தங்க வேலாயுதத்துக்கு எடுத்து சொன்னாலும், தனது மகள் இரண்டாம் தாரமாக ஒருவனுக்கு வாழ்க்கை படபோவதையிட்டு அவரின் மனம் கலங்கியது. கனக சுந்தரியோ அப்பாவின் பேச்சுக்கு எதிர்(ப்) பேச்சு பேசாது மனோகரனை கலியாணம் செய்ய சம்மதித்தாள். அவளைப்பொறுத்த வரையில் இந்த கலியாணத்தால் தனது சகோதரங்களின் எதிர்காலமே அவளுக்கு முக்கியமாக பட்டது. வேம்படியே வெப்பிராயத்தில் புகை கக்க மனோகரன் கனக சுந்தரியை கலியாணம் செய்து கொண்டார்.

000000000000000000

கடுமையான பனிப்பொழிவு பொழிந்த ஓர் பனிக்காலப் பொழுதொன்றில் கனகசுந்தரியின் வருகை பிரான்ஸில் பதிவானது.இந்த சூழலை இயல்பாக்குவதற்கு கனகசுந்தரி நிறையவே போராட வேண்டி இருந்தது. அவ்வளவு சுலபமாக அது அவளுக்கு இருக்கவில்லை. புரியாத மொழியும், முற்றிலும் மாறான வாழ்கை முறைகளும் அவளை திணறடித்தன. காலம் செல்லச் செல்ல பாரிஸின் நெளிவு சுழிவுகளை மெதுவாகப் பிடித்து கொண்டாள். அவள் மேலும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானாள். நான்கு பிள்ளைகளையும் ஒரு வித வித்தியாசம் இல்லாமலேயே வளர்த்தாள். பிள்ளைககளைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் உதவித்தொகைகளை வழங்கியது. அத்துடன் வீட்டு வாடகையில் குறிப்பட்ட தொகை உதவிப்பணமாக வந்தது. இதனால் கனகசுந்தரிக்கு வேலைக்குப் போய் கடுமையாக உழைத்து வெட்டி அள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் உதவித்தொகைகளால் வந்த பணத்தின் ருசி அவளை மெதுமெதுவாக வளைத்துக்கொண்டது. இலகுவான வழியில் பெரிய முதலீடு இல்லாமல் காசு பார்க்க அவளுக்குப் பாரிஸ் வாழ்க்கை ஒரு வழியைக்காட்டியது.

00000000000000000000

இந்த தொழில் இருக்கிறதே தமிழரின் பழமை வாய்ந்த தொழில். அன்றாடங்காய்ச்சிக்கு முழு நிலவு போல எட்டத்தில் நின்று அழகு காட்டும் காசை பலரின் சப்போர்ட்டுடன் குறுகிய நேரத்தில் பெருமளவு காசை கிட்ட வைத்து பாக்கும் செப்படி வித்தைக் கலை இது. ஒருபக்கத்தில் தமிழரது சேமிப்பாக இருந்தாலும் இந்த சீட்டு தொழிலால் புலம் பெயர் தேசங்களில் பல குடும்பங்கள் சிக்கிச்சிதறி சின்னா பின்னாமானதுதான் மிச்சம். அதைவிட சீட்டு காசு கட்டப்பிந்தினால் தாச்சி மறித்தவர் அவர்களிடம் கேட்கும் கேள்விகளும் வில்லங்கமானவை. சில இடங்களில் மனைவிமாரையே படுக்கைக்கு அழைத்த சம்பவங்களும் இந்த பாரிஸ் பட்டினத்தில் நடந்துதான் இருக்கின்றது. அநேகமான களவு கொலைகளுக்கு மூலம் தேடிப்போனால் இந்த சீட்டு தொழிலே அதில் முக்கிய புள்ளியாக இருக்கும். இருந்தாலும் இந்த தமிழ் சனங்கள் இருக்கிறார்களே! இந்த சீட்டு கட்டுவதில் எவ்வளவுதான் ரிஸ்க் இருந்தாலும் அவர்கள் இதை வெறுத்ததே கிடையாது. சீட்டுப்பிடித்தல் தொழில் கனக சுந்தரியை வலு சிம்பிளாக தன்னுள் இழுத்துக்கொண்டது. ஆரம்பத்தில் ஒன்று இரண்டு ஒன்று சீட்டுக்களைப் பிடித்த கனகசுந்தரி,காலப்போக்கில் அவளை ஒரே நேரத்தில் பல சீட்டுக்களை பிடிக்கும் முதலாளியாக்கி விட்டிருந்தது. காசே அவளின் குணத்தையும் தீர்மானித்தது. ஊரில் இருந்த தனது சகோதரங்களை பாரிஸுக்கு கூப்பிட்டு நல்ல இடங்களில் கலியாணம் செய்துவைத்தாள். நான்கு பவியோன்களை (வளவுடன் கூடிய தனி வீடு ) வாங்கிப் போட்டு, அதை எங்கடை சனத்துக்கு எழுதாமல் வாடகைக்கு ( வரிகளில் இருந்து தப்ப ) விட்டாள். தானும் ஓர் பவியோன் வீட்டில் இருந்து கொண்டாள். இப்பொழுது இருக்கின்ற பாரீஸ் சனங்களுக்கு கனக சுந்தரி என்ற பெயர் மறந்து “சீட்டு சுந்தரி” என்றே அறியப்பட்டாள்.

0000000000000000000000

சீட்டுச்சுந்தரி எப்பொழுதும் கழிவு சீட்டுத்தான் பிடிப்பாள். குலுக்கல் சீட்டில் பெரிய லாபம் இல்லை என்பது அவள் கணக்கு. முதல் சீட்டு தாச்சி மறிக்கும் அவளுக்கே போய்சேரும். அத்துடன் “கொம்முயூனிக்கேஷன் செலவு” என்று ஒரு தொகையை சீட்டு ஆரம்பிக்கும் பொழுது வாங்குவாள். இதைவிட சீட்டு காசு கட்ட பிந்தினால் அதை கலெக்சன் செய்யும் முறையில் தான் சீட்டுச்சுந்தரி பாரிஸில் தனிமுத்திரை பதித்தாள். முதலில் அன்பாக பேசி பின்னர், மீற்ரர் வட்டியில் தொடங்கி அதற்கும் மசியாமல் இருந்தால், சீட்டுசுந்தரியின் கொமாண்டோ படை களத்தில் இறங்கும். இந்த தரையிறக்கம் அனேகமாக லாச்சப்பலில் றெக்கியெடுத்து இறக்கப்படும். ஒன்றில் காசு அல்லது கையை காலை எடுப்பதில் அந்த ஒப்பறேசன் முடியும்.இதற்கென பூனை குறூப் என்றும் கறடி குறூப் என்றும் இரண்டு வகையான குறூப்புகள் (கொமாண்டோ ) அவளுக்கு இருந்தன. முதலில் பூனை குறூப்தான் ஏரியாவில் இறங்கும். இந்த குறூப் முதலில் வெருட்டல் மட்டுமே சம்பந்தபட்டவருக்கு விடும். அதற்கும் மிஞ்சினால் கறடி குறூப் இறங்கும். கறடி வெட்டுக்கொத்து கேஸ் தான். அது இரத்தம் காணாமல் திரும்பாது. இதனால் லாச்சப்பல் ஏரியா பலதடவை ரணகளப்பட்டிருக்கின்றது.

இந்த குறூப்புகள் ஏறத்தாள றோட்டு போடும் றோலர் போன்றவைதான். இவர்களுக்கு உள்ள இலக்கு என்பது விளைவுதான். இடையில் இருக்கும் எதையுமே இந்த குறூப்புகள் கணக்கில் எடுப்பதில்லை. பொது இடங்களில் சம்பந்தப்பட்டவர் கூனி குறுகி அவமானப்படுகின்றாரே என்பதெல்லாம் அவர்களுக்கு வேண்டாத கவலை. குறுக்கு வழியின் முடிவிடம் என்றும் பாவத்தின் விளைச்சல் நிலமாகவே இருந்திருக்கின்றது. ஆனால் அதில் பல வெற்றிக்கனிகள் காய்த்துத் தொங்கியிருக்கும். இந்த வழியால் செல்கின்றவர்கள் வெற்றிக்கனிகளை சுலபமாக தம்வசப்படுத்துகின்றார்கள்தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களும் இவற்றைப்^பார்த்துப் பெருமூச்சு விடுகின்றார்கள்தான். அனால் அவைகள் நிரந்தரமாக இருப்பதில்லை. அந்த வெற்றியின் பின்னே ஒளிந்திருக்கும் பாவத்தின் பலாபலன்கள் சந்ததிக்கும் ஆட்டிப்படைக்க வல்லன.

000000000000000000000000

ஓர் வசந்தகால முற்பகுதியில் அம்மாவிடம் இருந்து எனக்கு ஓரு தொலைபேசி அழைப்பு வந்தது. அக்காவுக்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஓரு எஞ்சினியர் மாப்பிள்ளையின் குறிப்பு சரிவந்து கலியாணம் முற்றாகி விட்டது என்றும், நாப்பது லட்சம் காசும் வீடுவளவும் சீதனமாக மாப்பிளை பகுதி கேட்கின்றது என்றும் அந்தத் தொலைபேசி அழைப்பு சொல்லியது. அக்காவுக்கு கலியாணம் சரிவந்தது சந்தோசமாக இருந்தாலும், சிமிக் (அடிப்படை) சம்பளத்தில் வேலைசெய்து, அறை வாடகை கட்டும் எனக்கு இந்த செய்தி உண்மையில் ஜவல் (குளோரின்) குடித்த மாதிரி இருந்தது. என்னை நம்பி இவ்வளவு காசை யார் தருவார்கள்? என்ற எண்ணமே மண்டைக்குள் எந்தநேரமும் பிராண்டிக்கொண்டு இருந்தது. வீட்டைப் பொறுத்தவரயில் நான் ஓரு தேவன். இந்தத் தேவனால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையை அம்மாவுக்கு வளர்த்துவிட்டேன். அம்மாவும் பாவம் யாரிடம்தான் போவா? அப்பா இல்லாத இடத்தில் தேவன் பதவியை நான் நிரப்பிக்கொண்டேன். எனது சுகதுக்கம் எல்லாம் அம்மாவுக்கு இரண்டாம் பட்சம்தான். அம்மாவில் எனக்கு வெறுப்பு கொட்டிக்கிடந்தாலும், அம்மா இல்லாவிட்டால் நான் வந்திருப்பேனா என்ற நினைப்பே அம்மாவில் இருக்கும் வெறுப்பை கரைக்கப்பண்ணி விடும். இப்பொழுது வந்த அக்காவின் செய்தியும் அப்படியே இருந்தது.

ஒரு நாள் மாலை பொழுதொன்றில் நானும் என்னுடன் ஒன்றாக படித்த யோகேசனும் அருந்தகம் ஒன்றில் சந்தித்துக்கொண்டோம். வீதி ஓரத்தில் இருந்த மேசையில் இருந்து கொண்டு நான் அவனுடன் பேசியபொழுது கபேயின் வாசத்துடன் எனது மன வெப்பிராயமும் சேர்ந்து வந்து விழுந்தது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த யோகேசன் எங்கள் மற்றக்கூட்டாளி ரமணனுடன் சேர்ந்து மூன்று பேரும் முப்பதினாயிரம் யூறோ சீட்டு பெரிய சீட்டாக பிடிப்போம் என்று சொன்னான். சொன்னதும் அல்லாமல் எனக்கு முன்னாலேயே சீட்டுச்சுந்தரிக்கு தொடர்பெடுத்து பெரிய சீட்டு இப்ப கட்டலாமா என்ற விபரத்தையும் எடுத்து விட்டான்.

ஒருநாள் மாலை நானும் யோகேசனும் ரமணனும் சீட்டுச்சுந்தரி வீட்டிற்கு போனோம். சீட்டுச்சுந்தரியின் வீடு பெரிய கேற்றுகளுடன் பிரமாண்டமாக இருந்தது. நாங்கள் அங்கு சென்ற பொழுது ஓர் முப்பது பேர் அங்கு இருந்தார்கள். எல்லோருக்கும் ரீயும் வடையும் தந்தார்கள். சிறிது நேரத்தில் சீட்டுச்சுந்தரி அங்கு வந்தாள். இப்பொழுது தான் நான் சீட்டுசுந்தரியை முதன் முதலாக பார்க்கின்றேன். அழகென்றால் அப்படி ஒரு அழகு. பார்த்தால் நான்கு பிள்ளைகளுக்கு அம்மா என்று யாரும் அவளைச் சொல்ல மாட்டார்கள். ஏன் சனங்கள் சீட்டுச்சுந்தரியிடம் சீட்டு கட்ட அள்ளுப்படுகின்றார்கள் என்று இப்பொழுது எனக்கு விளங்கியது.

சீட்டுசுந்தரி சீட்டு கூறும் அழகே அழகுதான். எல்லோருக்கும் நடுவில் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து கொண்டு சீட்டை இவ்வாறு தொடங்கினாள் ,

“உங்கடை கஸ்ரங்களை குறைக்கவேணும் எண்டுதான் இந்தச் சீட்டை தொடங்கினான். மத்தும்படி மற்றவையை போலை வியாபாரப் புத்தி எல்லாம் எனக்கு இதிலை இல்லை. உங்களுக்கு எவ்வளவு கஸ்ரம் இருக்கோ அந்தளவுக்கு இந்த சீட்டு முடியிற வரைக்கும் எனக்கும் இருக்கு. சீட்டுத்தொகை முப்பதினாயிரம் யூறோ. கட்டு காசு ஆயிரம் யூறோ. முதல் சீட்டு தாச்சி மறிக்கிற எனக்குத்தான். செக்குகள் எடுக்கமாட்டன். காசாய் தான் தரவேணும். அடுத்த சீட்டு வாற மாசம் பத்தாம் திகதி கூறுவம்” என்று சொல்லி முடித்தாள்.

நாங்கள் எல்லோரும் காசை சீட்டுச்சுந்தரியிடம் எண்ணிக்கொடுத்து விட்டு வந்தோம்.

00000000000000000000000000000

சீட்டுச்சுந்தரியிடம் காசுகளை எண்ணி கொடுத்து விட்டு வந்ததில் இருந்து மனம் அங்கும் இங்கும் டான்ஸ் ஆடியது. நம்பிக்கைதானே வாழ்க்கை. நான் இங்கு வரும்பொழுது இந்த பிரான்ஸ் என்னை வாழவைக்கும் என்று எந்த நம்பிக்கையில் வந்தேன்? தேடலும் நம்பிக்கையும் ஒரே கோட்டில் வரும்பொழுது வெற்றி விளைவாக இருக்கும். சீட்டுச்சுந்தரி நாணயமானவள்தான் நாம்தான் முதலில் நம்பகமாக நடக்க வேண்டும். அடுத்தமுறை என்ன கழிவெண்டாலும் எடுக்க வேணும். இந்த புள்ளியை வைத்து தான் நான் பெரிய வட்டங்களும் சதுரங்களும் கீற முடியும். மீண்டும் வீட்டில் இருந்து அம்மாவின் பாசஅழைப்பு வந்தது. அது அக்காவின் சீதனக்காசிலேயே சுற்றி சுழண்டு கொண்டிருந்தது. மாப்பிள்ளை பகுதி கலியாணத்தை வருகிற மாத முடிவுக்குள் செய்ய நெருக்குகின்றார்கள் என்றும் இல்லாவிட்டால் கலியாணம் குளம்பி விடும் என்று அம்மா பதகளிப்பட்டா. அக்காவும் பாவம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தன்ரை பிறப்பை நினைச்சு உள்ளுக்கை கவலைப்படும். நான் பலவித மான குழப்பங்களுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன்.

எனது சம்பளத்தில் எடுத்து காசைக்கொடுத்ததால் சிக்கனத்தில் சிக்கனமாக இருக்க வேண்டியதாகிவிட்டது. ஒன்றிற்காக ஒறுத்தலிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்த நாள் சீட்டு எடுக்கிற நாள் என்பதால் அன்றைய பொழுது எனக்கு பதட்டமாகவே இருந்தது. யாரும் சீட்டை வேணுமென்று ஏத்தாமல் விட்டாலே காணும். இதற்காகவே யோகேசனை கொண்டு எல்லாரையும் சரிக்கட்டி இருந்தேன். அடுத்தநாள் வேலையை முடித்துக்கொண்டு பசிக்களையுடன் சீட்டுச்சுந்தரியின் வீட்டுக்குப் போனேன். நான் வந்து இறங்கிய மெத்றோ (பாதாள புகையிர நிலையம்) வாசலில் இருந்து சீட்டுச்சுந்தரியின் வீட்டுக்குப் பத்து நிமிடங்களுக்கு மேலாக நடக்க வேண்டும். நான் றோட்டு சந்தியால் சீட்டுச்சுந்தரியின் வீட்டுக்கு திரும்பிய பொழுது தூரத்தே றோட்டு முழுக்க பொலிஸ் நிற்பது தெரிந்தது. சிவிலில் இருந்த நான்கு வெள்ளைகள் தங்கள் அடையாள அட்டையை காட்டி எனது விசாவை பரிசோதிக்க மற்றயவர்களோ பக்கத்தில் இருந்த சுவரில் என்னைப் பின்புறமாக சாய்த்து வைத்த அவர்களது கைகள் எனது உடம்பில் ஊர்ந்தன.





முகடு-02 வைகாசி 2016

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...