Skip to main content

வாடாமல்லிகை- இறுதிப்பாகம்




அந்த அதிகாலை வேளையில் வல்லிபுரத்தாழ்வாரின் சன்னதி மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் வல்லிபுரத்தாழ்வார் அனந்த சயனமாகியிருந்தார். மனைவி கோயிலின் உள்ளே செல்ல நான் வெளியே இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்தேன். காலைவேளையின் சீரான தென்றல் முகத்தில் அடித்தது. தூரத்தே கடல் அலையோசை மெதுவாகக் கேட்டது. நான் நின்ற மரத்தின் மேலே புலுனி ஒன்று தனியாக குரல் கொடுத்துக்கொண்டது. அதற்கும் என்னைப்போல யாரும் இல்லையோ என்னவோ. அதன் குரலில் ஒருவித சோகம் இளையோடியிருந்தது. அந்த சந்தடியில்லாத அமைதியான சூழல் மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ஒருவிதத்தில் பயம் தருவதாகவே இருந்தது. தூரத்தே பச்சைப் படையணி ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தது .பச்சைக்கச்சான் வறுக்கும் மணமும், தோசை சுடுகின்ற மணமும் ஒரேசேர மூக்கில் நுழைந்தன. மனதில் பலவிதமான சிந்தனைகள் ஒரேநேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பின்னிப்பிணைந்தன. அதில் ஒர் சிந்தனை என்ற பாம்பு "எதுவாகினும் நீ ஒரு அந்நியன் தானே .இந்த மண் உனக்கு சொந்தமானதா? வீண் ஆசைகளை ஏன் வளர்க்கின்றாய் "? என்று என் மனதில் ஓங்கி ஓர் கொத்து கொத்தியது. மனதில் ஓர் சிறிய இரத்தத்துளி மெதுவாக எட்டிப்பார்த்தது. பரிதாபமாக வல்லிபுரத்தாழ்வார் இருக்கும் திசையை நோக்கிப்பார்த்தேன். கடிவாய் விண் விண்ணென்று வலித்தது. இந்த மனம் என்ற ஒன்று இருக்கின்றதே அது எப்பொழுதுமே தனக்குப் பிடித்ததைத்தான் பற்றிக்கொள்ளும். ஆனால் நடைமுறை யதார்த்தமோ வேறுமாதிரி இருக்கும். தனது பிடித்தனங்களுக்கு எதிராக வரும் எதையுமே அது ஏற்றுக்கொள்ளாது சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கும். எனது நிலையும் அதுவாகவே இருந்தது. நான் ஓர் அந்நியன் என்று தெரிந்தும் என் மனம் இந்தப் பாழாய்ப்போன மண்ணைச் சுற்றியே கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தது. என்னையறியாது என்கண்களில் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தன. விடுமுறை என்ற நாடகத்தின் இறுதி அங்கத்தில் நடிப்பதையிட்டு எனக்கே வெறுப்பாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மை என்ற யதார்த்தத்தை மனம் ஏற்க மறுத்து என்னுடன் சண்டைபிடித்துக்கொண்டிருந்தது. 

என்பின்னால் குளிர்ந்த விரல்கள் என்னை ஆதரவாகத்தொட்டன. நான் திரும்பிய பொழுது என்மனைவி பக்திப்பழமாக நின்றிருந்தாள். வழக்கமாக கோவில் பக்கம் செல்லாதவள் இந்தக்கோவிலில் மட்டும் அவளுக்கு ஒரு லயிப்பு. அவள் நெற்றியில் திருமண்ணும் குங்குமமும் பளீரிட்டன. என்னிடம் திருமண்ணை நீட்டினாள். எனக்கும் திருமண்ணை போடவேண்டும் போல் இருந்தது. என்னிடம் சில காசுக்கற்றைகளை நீட்டி உள்ளே போய் உண்டியலில் போட்டுவரும்படி சொன்னாள். மறுத்த என்னை பலவந்தமாக உள்ளே அனுப்பினாள். நான் உண்டியலில் போட்டுவிட்டு திரும்பி இருவரும் கச்சானும் பட்டாணியும் வாங்கிக்கொண்டு மீண்டும் பருத்தித்துறை செல்ல பஸ்சுக்கு நின்றோம். எனக்கு தேநீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. அருகே இருந்த தேநீர்க்கடையில் தேநீரும் வடையும் வாங்கினேன் சூடான தேநீருக்கும் உழுந்து வடைக்கும் எதோ ஜென்ம பந்தம் போலும் .எத்தனை முறை இவையிரண்டையும் குடித்தாலும் அதனால் வரும் புத்துணர்ச்சி ஒரு தனிரகம் தான். அத்துடன் ஓர் சிகரட்டும் சேர்ந்து கொண்டால் அந்தக்கணம் மிகவும் அழகாக இருக்கும். என்நிலையும் அப்பொழுது அப்படித்தான் இருந்தது. தூரத்தே பஸ் வருவது தெரிந்தது. பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை .மக்கள் கூட்டம் கோயிலில் இருந்தே தொடங்கியது. என் கண்களில் இருந்து வல்லிபுரத்தாள்வார் மெதுவாக மறையத்தொடங்கினார். என்மனதிலிருந்து ஓர் ஏக்கப்பெருமூச்சொன்று வெளிப்பட்டது. எனது மனநிலைமையை மாற்ற மனைவியுடன் குடும்பக்கதைகளைக் கதைத்துக்கொண்டு வந்தேன். 

தும்பளை வீதியினூடாக பருத்தித்துறையை அண்மித்துக்கொண்டிருந்த பஸ் திடீரெனத் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டது .நான் ஜன்னலினூடாக எட்டிப்பார்த்த பொழுது பஸ்ஸின் முன்னே நடுவீதியினூடாக பச்சை படையணிகள் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தன .எனக்கு மெதுவாக எரிச்சல் எட்டிப்பார்த்தது. நான் பஸ்சினுள் பார்வையைத்திருப்பினேன் சனங்கள் எதுவுமே நடக்காததுபோல் இருந்தார்கள் .இவர்கள் சனங்களின் இயல்பு வாழ்க்கைக்கு எப்பொழுதுமே இடைஞ்சலாக இருந்து கொண்டு இருக்கின்றார்கள். இதுவும் ஒருவகை உளவியல் யுத்தமாகவே எனக்குப்பட்டது. தங்கள் இருப்பை அடிக்கடி காட்டிக்கொண்டு இருப்பதன் மூலம் தாங்கள் முன்பு விதைத்த சமன்பாடுகளை சனங்களுக்கு நினைவு படுத்துவது ஒருவகைத்தந்திரமாகவே எனக்குப்பட்டது. சைக்கிள் படையணி யாழ்ப்பாணப்பக்கம் திரும்ப பஸ் பருத்தித்துறைப் பக்கம் திரும்பி நோக்கி வேகமெடுத்தது. 

பருத்தித்துறை சந்தையில் தேவையான மரக்கறிவகைகளை வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தோம். உச்சிவெய்யில் மண்டைக்கு நேராக நின்றது .உடலெங்கும் சூடு பரவி வியர்வை தண்ணியாக ஓடியது. கடையில் வாங்கிய தண்ணிப்போத்தல் அடிக்கடி வாயினுள் சரிந்து கொண்டது. நாங்கள் வீட்டை அண்மிக்கும் பொழுது வீட்டு நாய் எங்களுக்காக வாசலில் பார்த்துக்கொண்டிருந்தது. அது எங்களைக்கண்ட புழுகத்தில் என் மீது பாய்ந்து விளையாடியது. மனைவி அதைப் பேசியவாறே வீட்டினுள் நுழைந்தா .அது என்னை ஓர் ஏக்கப்பார்வை பார்த்தது. நான் அதனுள் கரைந்து போனேன் .நான் அதனுடன் விளையாடியதில் அது மீண்டும் மகிழ்ச்சியில் துள்ளியது. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படுத்துவிட்டு மாலை நான்கு மணிபோல் கோப்பாய்க்கு பயணம் சொல்லப் புறப்பட்டேன். அத்துடன் நான் வவுனியாவுக்கு செல்ல ஆசனங்களையும் பதியவேண்டி இருந்தது. என்னைச் சுமந்து கொண்டு பஸ் யாழ்ப்பாணத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை. என் மனமோ வெறுமையாகிக் கிடந்ததது. இதுவே எனது கோப்பாய்க்கான கடைசிப் பயணம். பின்பு நான் அங்குள்ளவர்களை சந்திக்க மாட்டேன் என்ற எண்ணமே மனதெங்கும் வலியாகப் பரவியது. கண்களை ஆயாசமாக மூடிக்கொண்டேன். எனது வாழ்க்கை இப்படித்தான் அமையுமா ?? நான் யாருக்காக இந்த வாழ்க்கையை இப்படி வாழ வேண்டும்?? என்ற கேள்விகளே மனத்தைக் குடைந்து கொண்டடிருந்தன. பஸ் நடத்தினரின் குரல் கேட்டு என்மனம் ஞாபக வீதியில் இருந்து இறங்கி வந்தது .நான் பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டேன். என்மனமோ ஒழுங்கை முகப்பில் சிறிது நேரம் நின்று பார்க்க விரும்பியது .நான் ஓடித்திரிந்த ஒழுங்கை வெறுமையாகக் கிடந்தது .முன்னே இருந்த பருத்தித்துறை வீதியில் வாகனங்கள் விட்டதை எடுக்கும் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. யாருமே என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை .நான் தளர்ந்த நடையுடன் வீடு நோக்கிச் சென்றேன். 

நான் வீட்டினுள் நுழைந்த பொழுது அண்ணியும் மருமகளுமே நின்றிருந்தார்கள். அண்ணையும்,தங்கையும், பெறாமக்களும் வெளியே சென்றிருந்தார்கள். அம்மா இல்லாத வீடு ஓ என்று இருந்ததது. அண்ணி தயாரித்த தேநீரை வாங்கிக் குடித்து விட்டு மருமகளுடன் கேணியடிப்பக்கம் சென்றேன். பாரிஸில் எனது வீட்டு பல்கணி தியான மண்டபமாக இருந்தது போல, கோப்பாயில் சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான தியான மண்டபம் கேணியடியே. இந்தக் கேணியடி பலசரித்திரங்களை உள்வாங்கியிருந்ததது. எனது சிறுவயது நினைவுகளையும், பின்னர் நான் இல்லாத பொழுது இந்திய அமைதிப்படையினரின் கறுப்புப் பக்கங்களையும், இலங்கைப்படையினரின் இன்னோரன்ன செயல்களையும் உள்வாங்கி கள்ளமௌனம் சாதித்துக்கொண்டிருந்தது.கேணியடிக்கு சிறிது வயது போய் இருந்தாலும் பழைய நடிகைகளைப்போல தண்ணீரால் நிரம்பி அழகாகவே இருந்தது. நான் கேணிக்கட்டில் கால்களைத் தண்ணியில் நனையுமாறு விட்டு இருந்தேன். கேணியின் முன்னே சின்னன் பொன்னன்கள் என்று இன்றைய தலைமுறை கள்ளன் பொலிஸ் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மருமகளும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.காலம் எவ்வளவுதான் சுழன்றடித்தாலும் சில மாற்றங்களை அது செய்ய விரும்புவதில்லைப்போலும். 

தூரத்தே சூரியன் அன்றைய பொழுதை முடிக்கத் தாயாராகியதால் வானம் கோபம் கொண்டு சிவந்திருந்தது. எனது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த இலுப்பை மரத்தில் இருந்த குயில் ஒன்று பாடியது. அதற்கு எதிர்குரல் சற்றுத்தொலைவில் இருந்து வந்து கொண்டிருந்தது. அகச்சூழல்களால் சூம்பியிருந்த மனசில் மகிழ்ச்சிப் பொட்டுக்கள் மெதுமெதுவாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன .சூரியன் மறைந்து மெதுமெதுவாக இருள் கப்பத் தொடங்கியது. தூரத்தே கைதடி செம்மணிப் பக்கமாக ஒளிப்பொட்டுகள் ஒளிர ஆரம்பித்தன. நான் மருமகளை அழைத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பினேன். விளையாட்டை இடையில் குழப்பியதால் வந்த கோபம் மருமகளின் முகத்தில் அப்படியே தெரிந்தது. நான் அதைத திசைதிருப்ப அவளுக்குக் கதைகள் சொல்லிக் கொண்டு நடந்தேன். நான் வீட்டை அடைந்த பொழுது வெளியில் போன அண்ணையும் தங்கைச்சியும் வந்திருந்தார்கள். நான் அவர்களிடம் விடைபெற்ற பொழுது தங்கைச்சியின் கண்கள் கலங்கியிருந்தன. நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தலையை குனிந்தவாறே ஒழுங்கையால் பருத்தித்துறை விதிக்கு நடந்தேன். பத்து நிமிடக்காத்திருப்புக்குப் பின்னர் எனதருகே பருத்தித்துறைக்குச் செல்லும் பஸ் வந்து நின்றது. பஸ்ஸில் சிறிது கூட்டம் இருந்தது. பின் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்து கண்களை மூடிக்கொண்டேன். இருட்டினூடாக பஸ் பருத்தித்துறைய நோக்கி விரைந்தது.பஸ் பருத்தித்துறை பஸ்நிலையத்தை தொட இரவு ஒன்பது மணியாகி விட்டிருந்தது. ஒழுங்கையில் நட்சத்திர வெளிச்சங்களினூடாக என்கால்கள் விரைந்தன. ஒழுங்கை அந்த இருளில் அடங்கியிருந்தது.மறுநாள் வவுனியா செல்ல வேண்டும் என்ற நினைப்பே மனதில் ஒருவிதமான வெறுமையைக் கொண்டுவந்தது. 

நான் வீட்டை அடைந்த பொழுது மாமாவும் சித்தியும் வீட்டு முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின் கீழ் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். மாமியும் மனைவியும் மாலுக்குள் இருந்தார்கள். நான் முகத்தை கழுவி வீட்டினுள் நுழைந்தபொழுது, நாளை பயணத்துக்கான ஏற்பாடுகளுடன் வீடு தயாராக இருந்தது. வீட்டின் ஒருமூலையில் எமது சூட்கேசுகளை எனது மனைவி நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள். இரவு சாப்பிட்டு விட்டு மாமாவுடன் சில நிமிடங்கள் இருந்து கதைத்துவிட்டு நான் படுக்கப்போய் விட்டேன். அந்த இரவிலும் வெக்கை சீமெந்து நிலத்தினூடாக வந்து கொண்டுதான் இருந்தது. புல்லுப்பாயில் கூரையை வெறித்துப்பர்த்துகொண்டு படுத்திருந்தேன். ஆரம்பத்தில் புல்லுப்பாயில் படுக்க அவதிப்பட்ட எனக்கு, இப்பொழுது புல்லுப்பாய் இல்லாமல் நித்திரை வசப்படாத நாட்களை நினைத்ததில் என் இதழின் ஊடே ஓர் குறுநகை எட்டிப்பார்த்தது. "என்ன ?" என்று அதனிடம் கேட்டேன். " இல்லை வர வர நீ இப்பொழுது நன்றாகத்தான் நடிக்கப் பழகிவிட்டாய்" என்றது அந்தக் குறுநகை. எனது மனமோ மௌனத்தையே பதிலாக்கியது. சும்மாவா சொன்னார்கள் மனதை குரங்கு என்று. பிடித்ததை பிடிக்காதது மாதிரியும் பிடிக்காததைப் பிடித்தமாதிரியும் நடிப்பதில் இந்த மனதுக்கு நிகர் எவருமில்லை. நினைவுச்சுழலை விட உடல் அலுப்பினால் நித்திரை இலகுவில் வசப்பட்டது. 

மறுநாள் காலை வழமை போலவே பண்டாரியம்மன் கோவில் மணியும் சேவல் கொக்கரோக்கோவும் என்னை எழுப்பி விட்டிருந்தன. மனைவியோ வழமை போல் என்னைக் கொழுகொம்பாக்கியிருந்தாள். அவளின் கைகளை மெதுவாக எடுத்து வைத்து விட்டு. கையில் சிகரட்டுடன் கேற் வாசலுக்கு வந்தேன். இருள் பிரியாத அந்தக்காலை பொழுதில் பக்கத்து வீட்டு மாமா மிளகாய் கண்டுகளுக்கு தண்ணி மாறும் சத்தம் மெதுவாகக் கேட்டது.காற்றில் மிதந்து வந்த சுப்பிரபாதம் மனதிற்கு இதமாக இருந்தது. எனது கண்கள் அந்த கன்னிக்காலையை முழுமையாக விழுங்கிக் கொண்டிருந்தன. இதுதான் நான் இங்கு நிற்கும் இறுதி நாள். நான் சோம்பல் முறித்து விரைவாக இயங்கத்தொடங்கினேன். முற்றத்தில் சொரிந்திருந்த குழைகள் எனது விளக்குமாறு பட்டு இருந்த இடம் தெரியாமல் மறையத்தொடங்கியது இப்பொழுது முற்றம் பளிச்சென்று மின்னத்தொடங்கியது. நான் கூட்டியதால் எழும்பிய புழுதி உடலெங்கும் பரவியது. நான் தண்ணித் தொட்டியில் மோட்டரைப் போட்டு தண்ணீர் நிரப்பிய பொழுது மனைவி நித்திரை முறிந்து எழுந்து வந்தாள். இப்பொழுதுதான் அவள் அழகாக இருப்பதாக எனக்குப் பட்டது. காலை வேளைகளில் எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் இருப்பார்களோ? மறு வீட்டில் இருந்து கொண்டு மாமி பால்க்கோப்பி தயாரித்துக்கொண்டு வந்தா. முற்றத்துக்கு தண்ணீர் தெளித்து விட்டு கோப்பியை எடுத்துக்கொண்டு கேற் வாசலுக்கு வந்தேன். நிலம் நன்றாக வெளுத்து இருந்தது ஒழுங்கை சன நடமாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது. நான் ஆசைதீரக்குளித்து வெளிகிட்டு சூட்கேசுகளை முன் போர்ட்டிக்கோவில் கொண்டுவந்து வைத்தேன். காலை 9 மணி போல நாங்கள் சொல்லி வைத்த ஓட்டோ கேற் வாசலடியில் வந்து நின்றது. வீட்டு முற்றத்தில் செழித்து வளர்ந்திருந்த வாடாமல்லிகைகளை ஆசை தீரப் பார்த்துக்கொண்டேன். எங்களைச் சுமந்துகொண்டு ஓட்டோ ஒழுங்கையில் நகரத்தொடங்கியது. மாமா பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஓட்டோ சில நிமிட ஓட்டத்தின் பின்னர் எங்களை பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டது. பஸ் நிலையம் காலைப் பரப்பரப்பில் மூழ்கி இருந்தது.வவுனியா செல்லும் இ போ ச பஸ் எங்களுக்காக காத்திருந்தது. 

பஸ் காற்றை கிழித்துக்கொண்டு பளபளத்த காப்பெற் தார் சாலையில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்தது. பருத்தித்துறை என் கண்களை விட்டு மறைந்து மணித்தியாலத்துக்கு மேலாகி விட்டது. வீட்டைப் பிரிந்த கவலை மனைவியின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது. அவள் எதுவும் பேசாது வந்து கொண்டிருந்தாள். என் மனமும் கண்களும் வெளியே என்னை விட்டு மறைந்து கொண்டிருக்கும் காட்சிகளுடன் மௌனமொழி பேசிக்கொண்டு வந்தன. வெய்யில் உச்சிக்கு வந்து காற்று வெளியை சூடாக்கிக்கொண்டிருந்தது. வியவைத்துளிகள் என் உடலெங்கும் எட்டிப்பார்த்தன. பஸ் பரந்தனில் சாப்பாட்டிற்காக நின்ற பொழுது நான் தேநீர் குடிப்பதற்காக இறங்கினேன். நான் முன்பு வந்த பொழுது இருந்த அந்த தேநீர் கடை முதியவரை தேடினேன். நான் அங்கு நுழைந்த பொழுது என்னை அடையாளம் கண்டு கொண்ட அந்த முதியவர் என்னை நலம் விசாரித்தார். அவரது கடை இப்பொழுது யுத்த காயங்களை ஆற்றி புதுப்பொலிவுடன் இருந்தது. ஆனால் அதை நடத்தும் முதியவரிடம் யுத்த வடு மாறாமலேயே இருந்தது. நான் அவருக்கு தேநீருக்கும் றோல்சுக்கும் காசைக் கொடுத்து விட்டு கடை வாசலுக்கு வந்து நின்றேன். புகைந்த வயிறுக்கு தேநீரும் றோல்சும் இதமாக இருந்தது என்னைக் கவனிக்க மாட்டாயா என்று சிகரட் என்னைப் பார்த்து இளித்தது.தேநீர் முடியும் தருணத்தில் சிகரட்டை எடுத்து உதட்டில் வைத்து அதை சிவப்பாக்கினேன். என்கண்கள் சுற்றாடலில் லயித்தன. அந்த இடம் யுத்த அழிவுகளில் இருந்து மெதுமெதுவாகவே புத்துயிர் பெறுவதை பார்க்க முடிந்தது .இப்பொழுதும் சில கட்டிடங்கள் சிதைந்துதான் இருந்தன. அவைகளை பளபளப்புகள் மறைக்க முயன்று கொண்டிருந்தன. என்கண்கள் நான் முன்பு சந்தித்த அக்காவைத் தேடிக்கொண்டிருந்தன. பஸ் புறப்படுவதற்கு ஆயுத்தமாக இயந்திரத்தை முறுக்கவும் எனது சிகரட் முடியவும் சரியாக இருந்தது. நான் கடை முதியவரிடம் விடை பெற்றுக்கொண்டு பஸ்ஸினுள் ஏறியதும் மீண்டும் பஸ் வவுனியா நோக்கி தன்னை விரைவு படுத்தியது. 

கார்ப்பெட் வீதியில் விரைந்து வழுக்கிய பஸ் வவுனியாவைத்தொட மத்தியானம் ஒரு மணியாகி விட்டிருந்தது. எனக்குப பசியால் வயிறு சுடத்தொடங்கியது. எங்களைச் சுமந்த ஓட்டோ அக்கா இருக்கும் இறம்பைக்குளம் இருக்கும் இடம் நோக்கிச் சென்றது .சரியாக மூன்று கிழமைகளை ஞாபக வீதிகளில் பயணித்து விட்டு மீண்டும் அக்காவைச் சந்திக்கப்போகின்றேன். அந்த நினைவே இனித்தது. சிறுவயதில் இருந்தே அக்கா என்னைத் தூக்கி வளர்த்தவா. ஓட்டோ அக்கா வீட்டு வாசலில் நிற்க எனது சிந்தனைப்பட்டம் அறுந்து விழுந்தது. என்னைக்கண்டவுடன் அக்காவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது .நான் குளித்துவிட்டு சாப்பிடத்தயாரானேன். அக்கா எனக்குப் பிடித்த வன்னி எருமையின் முட்டித்தயிருடன் பல கறிகளுடன் சோறு சமைத்திருந்தா. எனது உணவுக்கட்டுப்பாட்டையும் மீறி அவற்றை ஒரு பிடி பிடித்தேன். எல்லோரும் முன் போர்ட்டிக்கோவில் இருந்து கதைத்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு நித்திரை தூக்கியடித்தது. நான் மனைவியைக் கதைக்க விட்டுவிட்டு மெதுவாகக் கழண்டுகொண்டேன். 

உண்டகளைப்பும் பயணக்களைப்பும் நேர்கோட்டில் வர நித்திரையை வரவழைப்பதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை.நான் மீண்டும் நித்திரையை விட்டு எழும்பியபொழுது உடல் புத்துணர்ச்சியாக இருந்தது. நான் மீண்டும் அக்காவுடன் கதைப்பதில் இணைந்துகொண்டேன். நாங்கள் வுனியாவை விட்டுப்பிரிய இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. என்மனதைப்போலவே சுற்றாடலும் கனத்து இருந்தது .அக்கா தந்த இரவுச்சாப்பாட்டை இறுக்கமான மனநிலையில் சாப்பிட்டுவிட்டு வவுனியா புகையிரத நிலையம் நாங்கள் இருவரும் செல்ல ஆயுத்தமானோம் எங்களுடன் அத்தான்கள் இருவரும் வந்தார்கள் நான் ஒருவித எக்கப்பார்வையுடன் அக்காவிடமிருந்து விடைபெற்றேன். ஒருகாலத்தில் பலசெல்லடிகளையும் நித்தம் கந்தகப்புகைநெடியுமாக இருந்த வவுனியா புகையிரதநிலையம் இன்று பளபளப்பாக இருந்தது ஆனால் அந்தப் பளபளப்புகளுக்குப் பின்னால் பல இரத்த நெடில்களையும் சதைக்குவியல்களையுமே என்னால் பார்க்க முடிந்தது "உனக்கு எப்பவுமே காமாளைக் கண் தானா ?" என்று என்மனம் என்னிடம் ஓர் கேள்வியை எழுப்பியது. இதைப் பளபளப்பாகியவர்கள் மன்னர்கள். நாங்களோ இந்த இரத்த நெடில்களின் நேரடிப்பங்காளிகள்". என்று நான் மனதிடம் சொன்னேன் எனது மனம் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாங்கள் புகையிரத நிலையத்தை வந்தடைந்தபொழுது வவுனியாப் புகையிரதநிலையம் சனவெள்ளத்தில் திமிறியது. நாங்கள் அவர்களினூடே நீந்தியே புகையிரதமேடைக்கு செல்ல வேண்டியிருந்தது. சில நிமிட இடைவெளியின் பின்னர் அத்தான்கள் இருவரும் எங்களிடமிருந்து விடைபெற்றனர். நாங்கள் இருவரும் இப்பொழுது தனியர்களாக நின்றிருந்தோம். அதுதான் நிஜமாகவும் இருந்தது. தூரத்தே தெரிந்த சிறிய ஒளிப்பொட்டொன்று வரவரப் பெரிதாகி சிறிதுநேரத்தில் யாழ்தேவி புகையிரதமேடையில் வந்து நின்றது. எல்லோரையும் ஏறவிட்டு நாங்கள் இருவரும் எமக்காக அக்கா பதிவு செய்திருந்த இருக்கைகளில் இருந்துகொண்டோம். சில மணித்துளிகளை விழுங்கிய யாழ்தேவி மெதுவாக நகர்ந்து கொழும்பு நோக்கித் தன்னை விரைவுபடுத்தியது. 

இருளுக்கும் வெளிச்சத்துக்கும் நடந்த நிறப்பிரிப்பொன்றில் யாழ் தேவி கோட்டே புகையிரத நிலையத்தில் தன்னை அடக்கியது. சனங்கள் கலைந்த நெல்லிக்காய் மூட்டைகளைப் போல சிதறிப் பிரிந்தார்கள். அந்தக்காலை வேளையில் கோட்டே புகையிரத நிலையம் அமைதியை இழந்துதான் இருந்தது. நாங்கள் பரபரப்புக்குள் பரபரப்பாகி ஓர் ஓட்டோவை பிடித்துக்கொண்டு பம்பலப்பிட்டிக்குப் பயணமானோம். கொழும்பை என்மனம் ஏனோ லயிக்க மறுத்தது. ஓர் அந்நிய தேசத்துக்குள் வந்த உணர்வையே அது எனக்கு ஏற்படுத்தியது. நாங்கள் பம்பலப்பிட்டி பிளட்சை அடைந்த பொழுது மனைவியின் நண்பி பல்கணியில் எங்களுக்காகக் காத்திருந்தா. மனைவி நண்பியுடன் ஐக்கியமாக எனக்கு பல்கணியே துணையாகியது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியும் கடலையும் குமுறிப்பாயும் கடலலையும் எனது தற்காலிக நண்பர்களாகினர். 

பல்கணியில் நின்றிருந்த எனக்கு யாரோ போன் அடிப்பதாகச் சொல்லி எனது மனைவி போனை தந்தா. எதிர்முனையில் எனது கல்லூரி நண்பன் இருந்தான். அவன் என்னை சந்திக்க ஆசைப்படுவதாக தான் இப்பொழுது வந்தால் நிற்பாயா என்று கேட்டான். அவனது தொழில் வைத்தியராக இருந்தாலும் இலக்கியத்திலும் எழுத்திலும் அதிக ஈடுபாடு இருந்ததாலும் , எனக்கும் ஒரு பேச்சுத் துணை தேவைப்படதாலும் நான் அவனைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தேன். சிறிதுநேரத்தில் அவனது கார் கீழே வந்து நின்றது. நான் அவனை மேலே வரும்படி சொன்னேன். அவனோ என்னைக் கீழே வரும்படி சொன்னான். நான் மனைவியிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினேன். அவன் என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டியில் இருந்த ரேஸ்ற் ஒப் ஏசியாவுக்கு அழைத்துச் சென்றான். அவனது முகத்தில் என்னைச் சந்தித்த மகிழ்ச்சி அப்படியே ஒட்டி இருந்தது. அவன் ஓரளவு மாறித்தான் இருந்தான். ஒருகாலத்தில் தாம் கற்ற வித்தைகளை காசாக்க வெளிநாடு சென்ற வைத்தியர்களில் அவன் மாறுபட்டு சொந்தமண்ணில் தனது மக்களுக்கு தனது வித்தையை வழங்கியதால் எனக்கு அவன்மேல் தனிப்பிடிப்பு வரக்காரணமாக இருந்தது.ரேஸ்ற் ஒப் ஏசியாவில் நுழைந்த இருவரும் எமது கண்பார்வை காலி றோட்டை பார்க்குமாறு இருந்த இருக்கைகளில் இருந்துகொண்டோம்.என்னை முற்றுமுழுதாக அறிந்த அவன் என்னைக் கேட்காமலேயே எல்லாவற்றையும் ஓர்டர் பண்ணினான். நாங்கள் வந்த சாப்பாடுகளை மேய்ந்துகொண்டு பழைய கதைகளை கதைக்க ஆரம்பித்தோம். எமது பேச்சுக்கள் இலக்கியத்தில் மேய்ந்து பின்னர் அரசியல் பக்கம் திரும்பியது. இருவருக்கும் காட்டமான விமர்சனங்கள் ஆரம்பமாகியது. அவனோ நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதற்கு காரணமாயிருந்த மன்னர் பரம்பரையையும் புகழ்வதிலேயே குறியாக இருந்தான். நான் அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக இருந்து கேட்டுவிட்டு " எல்லாம் சரி உன்னுடைய வாதங்களில் உண்மைத்தன்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மன்னர் பரம்பரை சனங்களில் உருவாக்கிய ரணங்களும் புத்திர சோகங்களும் முற்றுமுழுதாக இல்லாமல் போய் மகிழ்ச்சிக்கடலில் நீந்துகின்றார்களா என்ன ?? உள்ளதைச்சொல் " என்றேன் .அவன் மௌனத்தையே எனக்குப் பதிலாக்கினான். மன்னர்கள் அள்ளியதை மக்களுக்கு சிறிது தெளிக்க, அதைப்பார்த்து வியப்பு மிகுந்திட மன்னர் புகழ் பாடும் புலவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்று என்மனம் என்னிடம் குசுகுசுத்தது. நான் இறுக்கமான சூழ்நிலயை தளர்த்த விரும்பி மீண்டும் பழைய கதைகளை கதைக்கத்தொடங்கினேன். சிறிதுநேரத்தில் அவனும் சகஜ நிலைக்குத் திருப்பினான். நீண்டநேரம் கதைத்ததால் சாப்பாட்டுக்கோப்பைகள் உலர்ந்துவிட்டன. அவனுடைய போனுக்கு சிறிது நேரத்தில் அவன் செய்யவேண்டிய சத்திரசிகிச்சையை நினைவுபடுத்தி அவனது காரியதரிசி போன் அடித்தாள். என்னை வீட்டில் இறக்கிவிட்டு மனைவியிடமும் விடைபெற்றுக்கொண்டு அவன் வைத்தியசாலைக்குப் பறந்தான். 

நேரம் மாலை நான்கு மணியைத் தொட்டுக்கொண்டிருந்ததது. வெய்யில் ஓரளவு தணியத் தொடங்கியிருந்தது. நாங்கள் விமான நிலையத்துக்குப் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரங்களே இருந்தன. நான் பல்கணியில் நின்று தூரத்தே தெரியும் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றேன். என்மனமோ நாங்கள் இங்கு தொடந்து இருக்கத்தான் முடியுமா? என்று என்னிடம் தத்துவ விசாரணை செய்துகொண்டிருந்தது. மனைவி பயணப்பொதிகளை சரிபார்த்து வீட்டு ஹோலினுள் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தா. நான் எனது மனதைத் திருப்ப அவாவுடன் சேர்ந்து பயணப்பொதிகளை ஹோலுக்குள் கொண்டுவைக்கத் தொடங்கினேன். எங்களை அழைத்துச் செல்ல நண்பியின் தம்பியினது கார் வெளியே வந்து நின்றது. நாங்கள் நண்பியிடம் விடைபெற்றுக்கொண்டு விமானநிலையத்துக்குச் சென்றோம். அதிகாலை ஒரு மணிக்கே விமானம் என்பதால் எங்களுக்கு நேரம் நிறையவே இருந்தது. போகும் வழியில் நீர்கொழும்பில் ஓர் உணவகத்தில் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு எமது கார் விமானநிலையத்தில் நுழைந்தது. விமான நிலையத்தில் நான் பதட்டமாகவே இருந்தேன். எனது முதுகுக்குப் பின்னால் இரகசியக்கண்கள் மேய்வது போல உணர்ந்தேன். நாங்கள் இருவரும் குடியகல்வு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விமானத்தில் எமது இருக்கைகளை தேடிப்பிடித்து அமர்ந்து கொண்டோம். எயார் சவுதியா சிறிது நேர நிமிடங்களை விழுங்கி விட்டு ஓடுபாதையில் மெதுவாக நகரத்தொடங்கியது. ஓடுபாதையில் தன்னை நிலைப்படுத்திய எயார் சவுதியா வேகமாக ஓடி தனது கால்களை எக்கிக்கொண்டு மேல் எழும்பிய பொழுது, எனக்கு எனது வீட்டின் முற்றத்தில் சடைத்து வளர்ந்திருந்த வாடாமல்லிகைகளும் அதன் பூக்களுமே நினைவில் பட்டுத்தெறித்தன. அவைகள் அழகாக இருந்தன ஆனால் அவற்றில் வாசங்கள் இருக்கவில்லை. 

December 14, 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம