Skip to main content

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை

ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது.


அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர்.

புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம் மதக்கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்கள் குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், புலம்பெயர் தேசத்தில் பல தமிழர்கள் இதன்பால் ஈர்க்கப்பட்டார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

இந்தத்தொடரை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிகின்றேன்:

01 பௌத்தத்தின் தோற்றம் / உச்சம்

02 தமிழர் வாழ்வியலில் பௌத்தத்தின் வகிபாகம்

03 பௌத்தத்தை பரப்பியவர்கள்

தமிழர் வாழ்வியலில் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய மூன்று பெரும் காப்பியங்களை எமக்குத்தந்தது பௌத்தத்தமே . இவ்வளவு சிறப்புகளையும் தமிழர்வாழ்வில் ஒன்றுபட்டுக்கலந்த பௌத்தம் பின்னர் என்ன காரணத்தினால் சரிவை சந்தித்தது என்றவொரு கேள்வி எழுகின்றது. காலத்துக்குக்காலம் பௌத்த சித்தாந்தங்களை மதம் என்னும் அபின் தடவி கொண்டோடித் திரிந்த மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளுமே இதற்குப் பொறுப்பாளிகளாகின்றனர்.

பௌத்தம் ஒரு சித்தாந்தமே ஒழிய மதமல்ல என்பதனை தெளிவு படுத்துகின்றேன். நான் யாழ் இணையத்தில் 2013-களில் இருந்த பொழுது அவ்வப்பொழுது இது தொடர்பாக எழுதிய தகவல்களும் ,மயிலை சீனி. வேங்கடசாமியின் பௌத்தம் தொடர்பான நூல்களும் இந்த தொடரை எழுதுவதற்கு உசாத்துணைகளாகி நின்றன. இந்தத் தொடர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பெரும் ஆதரவினையும் வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிக்க நன்றி.

கோமகன்-பிரான்ஸ்

29 ஆடி 2021


00000000000000000000000000000000000

01 பௌத்தத்தின் தோற்றம் / உச்சம்


வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும்வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாக, தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்னும் எண்ணமுடையவர்கள். பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதிவைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும்கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும்கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதிவைத்துள்ளார்கள்.

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மையும் கொண்டவர்களான சமணர்கள் தங்கள் மதக்கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மதநூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்துவைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெரும் பாவம் என்பது சமணர்களின் கொள்கை. சமணர்களின் இக்கொள்கையை விளக்கக் கீழ்க்கண்ட வரலாறுகளே போதுமானவை.

பௌத்தர்களுக்குரிய சுல்லவக்க என்னும் பாளி மொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது :-

பௌத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் புத்ததேவரிடம் சென்று, புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற் சென்று போதித்துவருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர்மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக! என்றனர். இங்குச் சந்தம் என்பது சம்ஸ்கிருத சுலோகம். சம்ஸ்கிருத சுலோகத்தில் புத்தர் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து, நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறியவேண்டும் என்றனர்.

இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகின்றது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்துவந்தனர்.

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த கொள்கையுள்ளவர் என்பது பின்வரும் வரலாற்றிலிருந்து அறியலாம் :-

உஜ்ஜைனி தேசத்து அரசனது அவைக்களத்தில், சம்ஸ்கிருதம் கற்றுத்தேர்ந்து பெரும்புகழ் பெற்றுவிளங்கிய சித்தசேன திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப் போலவே கல்விக்கடலைக் கரை கண்டவர் என்று புகழுடன் வாழ்ந்துவந்த விருத்தவாதி முனிவர் என்னும் ஜைனத்துறவி ஒருவரும் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப்பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பின்னர், இவர் ஒருவரையொருவர் நேரில் காணும்படி நேரிட்டது. உடனே இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதில் தோற்றவர் மாணவரும், வென்றவர் குருவும் ஆவர் என்று முடிவு செய்துகொண்டு, வாது செய்யத் தொடங்கினார். அவ்வூர்ப் பொதுமக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடு நிலையாளராயிருந்தனர். சித்தசேன திவாகரர் தமது வட மொழிவல்லமையை விளக்க எண்ணி, சம்ஸ்கிருதத்தில் வாது செய்தார். விருத்தவாதி முனிவரோ, சம்ஸ்கிருதத்தில் நன்கு தேர்ந்தவராயிருந்தும், அந்த மொழியில் வாதம் செய்யாமல், நாட்டுமக்கள் பேசும் தாய்மொழியிலேயே வாதம் நிகழ்த்தினார். இவ்வாதப் போரில் வெற்றிபெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடுநிலையில் நின்றவர் முடிவு சொன்னார். ஆகவே, உடன்படிக்கைப்படி, விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் மாணவர் ஆனார்.

அதன் பிறகு, சித்தசேன திவாகரர், மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்த மாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த ஜைனமத நூல்களைச் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கக் கருதித் தமது கருத்தைத் தமது குருவான விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். ஜனங்கள் பேசியும் கற்றும்வரும் அர்த்த மாகதி பாஷையில் உள்ள நூல்களைப் பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் எழுதி வைத்து, பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தமது குரு சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டுவரையில் வாய்பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார். இவர் கி. மு. முதல் நூற்றாண்டில் இருந்தவர். இந்த வரலாற்றினால், ஜைனரும் பௌத்தரைப் போலவே தாய் மொழிகளின் வாயிலாகப் பொது மக்களுக்குத் தங்கள் மதக்கொள்கையைப் போதிக்கவேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பது விளங்குகின்றது.

பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச்செய்யுங் கருத்துடையவர்களாய்ப் பௌத்த ஜைனர்களான சமணர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மதநூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு தமிழர்களால் மறக்கற் பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப்பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி,. அவர்களுக்குத் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்பித்துவந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற பள்ளிக்கூடம் என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. பள்ளி என்னும் பெயர்க்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ் நாடு வருவதற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள்தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்விகற்பித்த ஆசிரியருக்குக் கணக்காயர் என்ற பெயர் சங்க நூல்களில் காணப் படுகின்றது. பின், ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், சமணர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச்செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.

சமண மதத்தார் தாய்மொழியான தேசபாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றிவைத்ததுபோல, வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள்மட்டும் படிக்க வேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்னும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப்பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அஃதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ் மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் மூன்றையும் பௌத்தரும், சிலப்பதிகாரம், சிந்தாமணி என்னும் இரண்டையும் ஜைனரும் இயற்றினர். அவர் அப்பெருமாட்டிகு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உண்டு.

பௌத்தரும் ஜைனரும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகள் வாயிலாகத் தங்கள் கொள்கையைப் பரப்பிய செய்தியை இந்த அதிகாரத்திற் கூறினோம். இனி, தமிழ் நாட்டிலிருந்த பௌத்த பெரியார் யாவர் என்பதை ஆராய்வோம்.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில