“தமிழ் எழுத்துப்பரப்பில் ஒருவர் மீதுள்ள அபிமானம் என்பது வேறு அடிமைநிலை எனபது வேறு . எனக்கு எனது தோட்டத்து மல்லிகைகளே அதிக வாசம் கூடியவை.”
கோமகன்
000000000000000000000000000
இன்று தமிழகத்தில் இருந்து எஸ் ரா வந்திருக்கின்றார். எல்லா ஈழத்து படைப்பாளிகளும் ஏதோ தேவதூதனை கண்டு பரவசப்படுவது போல் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போடுகின்றார்கள் . இது எனக்கு கவலையளிக்கின்றது . அதற்காக நான் எஸ் ராவுக்கு எதிரானவன் இல்லை . ஏன் நாளை ஜெ மோ, சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோரும் ஈழத்துக்கு வரலாம். இதன் பின்னணியில் உள்ள நுண்ணரசியல்களை நாங்கள் விளங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். எமது ஈழத்து மூத்த படைப்பாளிகள் அவர்கள் வாழுங் காலத்திலேயே கொண்டாடப்படல் வேண்டும் . இதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அத்துடன் எமது படைப்புக்களமும் தமிழகத்து படைப்புக்களமும் ஒன்றல்ல. இரண்டுமே வேறுபட்ட பாதைகளில் பயணிப்பவை . நாங்கள் நீண்ட நெடிய போரின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எமது அனைத்து வளங்களும் காயடிக்கப்பட்டன. காலம் இலக்கியத்துறையில் எமக்குரிய சந்தர்ப்பங்களை தருவதில் வஞ்சனை செய்தாலும் அது நல்லதையே செய்திருக்கின்றது. போரின் பின்னணியே எமது படைப்பின் இருப்பு. அதுவே தமிழகத்தில் உள்ள எல்லோரையும் எம்மை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்தியாவும் இரண்டுவிதமான போர் பின்னணிகளை கொண்டது. ஆனால் அவர்களால் எம்மைப்போல் போரியல் படைப்புகளை படைக்க முடியவில்லை. இதை நான் அண்மையில் பேராசிரியர் அ ராமசாமியிடம் நேர்காணல் செய்த பொழுது நான் எதிர்பார்த்த பதில் அவரிடம் இல்லை . அவர் இவ்வாறு சொல்கின்றார் ,
கேள்வி : ” ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி சுதந்திரத்துக்கான போராட்டங்கள் வடிவ வேறுபாட்டில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் போரியல் இலக்கியம் அதிகமாக உள்வாங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எண்ணுகின்றீர்கள் ?
அ ராமசாமி : இந்திய சுதந்திரப் போராட்டம் போரியல் அம்சங்கள் கொண்டதல்ல. காந்தியின் வருகைக்கு முன்பேகூடத் திட்டமிட்ட போர்முறைகளைச் சுதந்திரப்போராட்டத்தின் வடிவமாக நினைக்கவில்லை. ஆங்காங்கே கலவரங்களும் தனிநபர் அழிப்பும் நடந்தன என்றாலும் கருத்தியல் ரீதியாகவும் நடைமுறைக்காரணமாகவும் போரை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நேதாஜி போன்ற தலைவர்கள், வெளியிலிருந்து கிடைக்கும் உதவியை நம்பியே ராணுவ அமைப்பை உருவாக்கினார்கள். அதுவும்கூட இந்தியாவுக்குள் கட்டப்பட்ட ராணுவ அணிகள் கிடையாது. பிரிட்டானியர்களின் ஐரோப்பிய எதிரிகளோடு இணைந்து நடத்த நினைத்த போர்தான்.
விடுதலைக்குப் பிந்திய இந்தியாவிலும்கூட போரியல் என்பது ஒரு கருத்தியல் வடிவமாக ஒன்றிணைக்கப்படவில்லை. வெவ்வேறு மொழிசார் இனங்களாகப் பிளவுபட்ட ஒரு பெரும்பரப்பை ஒற்றைநாடாக ஆக்கியதும், அதனை ஒரே அரசால் ஆளமுடியும் என்ற நம்பிக்கையையும் பிரிட்டானியர்கள் உருவாக்கிவிட்டுப் போய்விட்டார்கள். போகும்போது சிக்கலான நிலப்பரப்புகளைத் தனித் தேசங்களாகப் பிரித்துவிட்டுப் போனார்கள். என்றாலும் இனப்பிரச்சினைகள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. அதனை முன்னெடுக்கும் சக்திகள் போர்வடிவங்களைக் கருவியாக நினைப்பதில்லை. அப்படி நினைப்பது நிகழ்காலத்தின் தேவையாக இருக்க முடியுமா? என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டங்கள் போரியலின் தன்மையையும் மையத்தையும் அர்த்தமிழக்கச் செய்துவிட்டன. இன்றைய போர்கள் ஆயுதங்களால் மட்டுமே நடப்பதில்லை என்பது உறுதியாகிவிட்டன. உலகநாடுகளின் சதிப்பின்னணிகளின் கண்ணிகளால் ஒவ்வொரு நாட்டின் விடுதலைப்போராட்டங்களும் திசைதிருப்பப்படுகின்றன. ஆயுத உற்பத்தி நாடுகளின் வியாபாரத்திற்காகவே தேசிய இனப்போர்களும், வட்டாரப் போர்களும் நடக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் இந்தியமொழிகளில் போரியல் இலக்கியப் பதிவுகள் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
எம் மீதான தமிழகத்துப்படைப்பாளிகளது பார்வையின் மையப்புள்ளி இங்குதான் ஆரம்பமாகின்றது. நாங்கள் எந்தவிதத்திலும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.
Comments
Post a Comment