Skip to main content

“நான் எதையும் பெரிதாக போதிக்க வந்தவனல்ல, இந்தச் சமுதாயத்துக்கு மருந்து கொடுக்கும் வைத்தியனுமல்ல”. சோலைக்கிளி





ஈழத்து கவிகளில் முக்கியமானவர் சோலைக்கிளி. தாயகத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் சோலைக்கிளி, தமிழகத்துப் பிரபலங்களை எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர். உதுமா லெவ்வை முகம்மது அதீக் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சோலைக்கிளியாகவே தமிழ் இலக்கியப்பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இவரது கவிதைகள் எல்லாமே சித்தாந்தங்கள் கோட்பாடுகளில் சிக்கி விடாது எளிய சொல்லாடல்களைக் கொண்டிருப்பது இவரது தனித்துவம் ஆகும்.

இதுவரையில் பத்து கவிதைத்தொகுதிகழும் ஓர் பத்தியும் இவரால் தமிழ் இலக்கியப்பரப்புக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் “பாம்பு நரம்பு மனிதன்”(இலங்கை அரசின் சாகித்திய விருது 1996) , “காகம் கலைத்த கனவு” (சுதந்திர இலக்கிய விழா விருது 1991, “பனியால் மொழி எழுதி” (இலங்கை அரசின் சாகித்திய விருது சிறந்த கவிதைத் தொகுதி, 1997), “எட்டாவது நகரம்” (இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருது 1988) “என்ன செப்பங்கா நீ..” (ஜப்பான் அரசின் கலாசார விருது 2005) ஆகியவை விருதுகளைத் தட்டிச்சென்றவையாகும். ஏனைய கவிதை தொகுதிகளாக ,’நானும் ஒரு பூனை’,’ஆணிவேர் அறுந்த நான்’, ‘வாத்து ‘, ‘அவனம்’, ‘பகல் தண்டவாளத்தில் ரயில் ‘ அத்துடன் , ‘பொன்னாலே புழுதி பறந்த பூமி (பத்தி)’ போன்ற நூல்கள் தமிழ் இலக்கியப்பரப்புக்குக் கிடைத்துள்ளன.

ஜப்பான் அரசின் கலாச்சார விருதான ‘புங்கா ‘ (2011),கம்பன்கழகத்தின் ‘மகரந்தச் சிறகு ‘விருது ,சமாதானக் கற்கைகள் நிறுவனத்தின் ‘இலக்கியத்திற்கான சமாதானத் தூதுவர்’ விருது, என்று தானாகவே விருதுகள் இவரை நெருங்கின .

இவரது கவிதைகள் சிங்களம் ,ஆங்கிலம், கன்னடம் ,ஜெர்மன், மலையாளம் என்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது கவிதைகள் பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடவிதானமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

சோலைக்கிளியின் பதில்கள் கவித்துவம் மிக்கதாக அமைந்தது இந்த நேர்காணலின் சிறப்பம்சமாகும். நடு வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது ……..

கோமகன்

00000000000000000000000000000000

சோலைக்கிளியை நாங்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்? 

ஏன் அறியப்போக்கின்றீர்கள்? ஏதாவது தரப்போக்கின்றீர்களா என்ன? இருந்தாலும் உங்கள் மீது நான் கொண்ட அளவற்ற அன்பின் நிமித்தம் சொல்கின்றேன்.

சோலைக்கிளி ஓர் காற்று.அதுவுங் குளிர் காற்று. அது இந்த மண்ணில் எப்பொழுதும் வீசிக்கொண்டிருக்கும் ஒன்று. அதற்கு இந்த மண்மீது எப்போதும் திராத காதல். தான் ஊட்டி வைத்து விளையாடும் கிளியைப் போல் இந்த மண்ணை இன்று வரைக்கும் விரும்பி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். இந்தக்கிளிக்கு இந்த மண் தான் நெய் , தேன்,சர்க்கரை எல்லாம். இவற்றை உண்டு உண்டே இது கொளுத்துப் போய் கிடக்கிறது. பம்மாத்து தெரியாத இந்தக்கிளி பாடிப் பறந்து கொண்டிருக்கின்றது.

இதன் சிறகை நோண்ட சில வேடர்கள் எத்தனித்தாலும் அது முடியாது. தனது அலகால் அவர்களைக் கத்தரித்தே கடித்துத் துப்பக்கூடியது இது.

தமிழ் இலக்கியப்பரப்பில் சோலைக்கிளி என்ற கவிஞர் வரவேண்டிய பின்புலங்கள்தான் என்ன?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்! இந்த ஊர்தான் என்னை இருகரமேந்தித் தூக்கி விட்டது. இங்குள குளத்தில் தாமரைப்பூவாக மலர்ந்தவனே நான்தான்.

இந்த ஊர் காற்றில் ஏறித்தான் நான் இன்றைக்கும் பயணம் செய்கின்றேன். இந்த ஊரை நான் கண்ணுக்குள் வைத்திருப்பது போல, என்னையும் இந்த ஊர் வைத்திருக்கின்றது.

எனது ஊரின் நிலா நான் எழுதுவதற்கு மிகவும் உதவி புரிகின்றது. பாலை அள்ளி எறிகின்றது.

நான் வாழைப்பழம் போட்டு சோறு கரைப்பது நிலவின் பாலில் தான். வானம் ஒவ்வரு இரவையும் பூத்துக் காட்டுகின்றது. புதினமும் காட்டுகின்றது. வானத்தைப் பார்த்து வாயூறி நான் எழுதிய கவிதைகள் பல இருக்கின்றன. கடல் எனது குதிரை. அதன் அலைகளில் ஏற்றி என்னை எங்கெங்கோ கொண்டு செல்லும்.

இப்படிப்பட்ட ஊரை வைத்திருக்கும் துரும்பும் கழிக்கின்ற சிறுநீரும் இனிப்பாக ஓடுமல்லவா! அதில் என் வியர்வையும் மணக்கின்றது.

அடிப்படையில் நீங்கள் ஓர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். உங்கள் இயற்பெயரை தெரிவு செய்யாது சுத்த தமிழ் பெயரான ‘சோலைக்கிளி’ என்ற புனை பெயரை தெரிவு செய்ததின் காரணம்தான் என்ன?

நீங்கள் விஷயத்துக்கு வந்து விட்டீர்கள். எனக்கு சாதி,சமயம் ,ஊர் ,பெயர்,பால், தெரியாத ஓர் பெயர் தேவைப்பட்டது. இது எனக்கு அதிர்ஸ்டமான பெயர். எனது சொந்தப் பெயர் எனக்கே இப்பொது மறந்து விட்டது. ஆனால், இந்தப் பெயரால் இன்னும் சங்கடங்கள் இருக்கின்றன. கிழவியைக் காதலிக்கும் வாலிபர்கள் நம் மத்தியில் நிறையப் பேர் இருக்கின்றார்கள். எனக்கு காதல் கடிதங்கள் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் ஒருகாலத்தில் சிலருக்குக் கனவுக்கன்னியாக இருந்திருக்கின்றேன். அது பரவாயில்லை. என்னிடம் அப்பொழுது இளமை இருந்தது. ஆனால்,இப்பொழுதுமல்லவா தங்கள் மலர்க ‘கணைகளை’ இந்த ‘ரதிக்கு’ வீசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

‘கண்ணே நாம் திருமணம் செய்வோமா,அல்லது சேர்ந்து வாழ்வோமா?’ என்று ஒருவர் அண்மையில் கூட எழுதியிருந்தார்.

எனக்கு ‘சேர்ந்து போக விரும்பினால் வாருங்கள்.மயானம் அழைக்கின்றது’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

இந்தச் ‘சோலைக்கிளியால்’ நான் படுகின்ற பாடு கொஞ்ச நஞ்சமில்லை. ஒருவன் மலை நாடாம். அவனது வீட்டின் பின் புறத்தில் மலை வாழைத்தோட்டம் இருக்கிறதாம். நான் அவனைக் கைப்பிடித்தால் எனக்குத் தினமும் மலைவாழைப்பழங்கள் சாப்பிடும் பாக்கியம் உண்டாகுமாம்.

நான் தினமும் மலைவாழைப்பழம் சாப்பிட்டால் ‘பேதி’ ஏற்படாதா?

நான் எல்லாம் கடந்தவன் என்று எனது பெயரில் காட்டப் போய் எனக்கு மலைவாழைப்பழம் தீத்த வருகிறார்கள்!

இறைவா, இங்கு என்ன கொடுமையடா எல்லாம் கடந்தவனுக்கு!

உங்கள் கவிதைகள் எதைத்தான் சனங்களுக்கு சொல்ல முயலுகின்றன?

நம்ப மாட்டீர்கள். எதையுமே இல்லை. முடிந்தால் காலையில் எழும்புங்கள். பல் துலக்குங்கள். காலைக்கடன்களைத் தீர்த்து, சந்தைக்குப் போய் மனைவி மக்களுக்கு சாமான்கள் வாங்கிப் போடுங்கள் என்று சொன்னாலே போதும் என்று நினைக்கின்றேன். இப்பொழுது பாரிய பிரச்சனைகள் இதுதான்.

நான் எதையும் பெரிதாகப் போதிக்க வந்தவனல்ல. இந்த சமுதாயத்துக்கு மருந்து கொடுக்கும் வைத்தியனுமல்ல. நான் ஓர் சாதாரண கவிஞன். நான் எனது உணர்வுகளை எழுதுகின்றேன். மலர்களில் தேன் இருக்கக் கண்ட வண்டு அதில் வாய் வைத்து உறிஞ்சுவது போல் அதில் ஏதும் இருந்தால் மக்கள் பெற்றுக்கொள்ளட்டும்.

என்னை விடுங்கப்பா, நான் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றேன். என்னில் தோணிகள் ஓடினால் ஓடட்டும். மீன்கள் அகப்பட்டால் அகப்படட்டும். எனக்கு உங்களின் சுட்ட கருவாடு கூடத் தேவையில்லை.

வருங்காலங்களில் கவிதைக்கான பரப்புக்கள் எப்படியாக இருக்கும்?

யாருக்குத் தெரியும்? பொய்யனும்,புளுகனும் கவிதை எழுதத் தொடங்கியிருக்கின்றான். கவிதை என்ன செய்யும்? அது அழுது கொண்டிருக்கின்றது. தமிழ் தெரியாதவன் அதை அடித்து மடக்கி கொல்லன் கத்தி செய்வது போல் கவிதை செய்து காட்டுகின்றான். மொட்டைக்கத்திகள் வெங்காயம் உரிக்கவும் ஆகவில்லை. கவிதை என்ன செய்யும். யாருக்குத் தெரியும்?

நவீன கவிதைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றவோர் எண்ணப்பாடு உண்டு. இதுபற்றி……?

விளங்க முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். எந்தக்கலையும் பார்த்தவுடன் விளங்கிவிடாது. கவிதையும் அப்படித்தான். அதற்காக சில வெளவால்கள் கழித்து வைக்கும் எச்சங்களைச் சொல்லவில்லை.

“பப்லோ நெரூடாவின்” சில கவிதைகள் எனக்கு அண்மையில்த்தான் விளங்கின. சச்சிதானந்தனின் கவிதைகளும் இப்படி இருக்கின்றன. அதற்காக அவை கவிதைகள் அல்ல என்று கழித்துவிட முடியாது. கவிதைகள் எல்லோருக்கும் விளங்குகின்ற ஒன்றுமல்ல. அப்படி விளங்காதவர்கள் அதை படிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றேன். அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஓர் கவிதையானது எப்படியாக இருக்க வேண்டும்?

கவிதையாக இருக்க வேண்டும். காக்கா ,குருவிகள் கழித்த எச்சங்கள் போன்று இருக்கக் கூடாது. அதை படித்துப் படித்து ஓர் வண்ணப் பட்சியாக நமது மனதுக்குள் வைத்து வளர்க்க வேண்டும். கவிதையானது நமக்குத் பழம் தரவேண்டும். நமக்கிருக்கும் நோய்கள் கவிதைகளால் தீரவேண்டும். பார்வையில்லாத ஓர் ‘அந்தகனுக்கு’ கவிதை கண் கொடுக்க வேண்டும். கவிதை ‘பொன்னான’ ஒன்றாக மாறவேண்டும். தமது மனைவிமாருக்கு நகை செய்து போட திருடிக்கொண்டு போகத் திருடர்கள் ‘நிலவறை’ தோண்ட வேண்டும். மொத்தத்தில் கவிதையானது தெருவில் முளைத்த குப்பை மேனியாக இருக்கக் கூடாது. குறைந்தது அறுகம்புல்லாவதாக அது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பூனை கடித்தாவது அதன் பிணியைத் தீர்த்து தொடர்ந்து அது எலி பிடிக்கும்.

ஒரு கவிதையானது உங்களுக்குள் எப்படியாகப் பிறக்கின்றது? அப்பொழுது உங்களுடைய அனுபவங்கள் எப்படியாக இருக்கின்றன? 

கேட்கக் கூடாத விடயத்தையெல்லாம் கேட்கிறீர்கள். எனது கவிதையின் பிறப்பைப் பற்றி கேட்கின்றீர்கள்.

நீங்களும் நானும் பிறந்த மாதிரி, சுத்தமான எனக்கு கவிதைகள் சுத்தமாகத்தான் பிறக்கின்றன. நான்தான் எனது கவிதைகளுக்குப் பெயர் வைக்கின்றேன்.

ஓர் கவிதை பிறந்ததும் எனக்கு எழும்பி நடக்க முடியாமல் இருக்கும். ஓர் புள்ளைத்தாச்சியைப் போல் சோர்ந்து இருப்பேன். எனக்கு ‘மிளகு தண்ணி’ வைத்து சாப்பிட வேண்டும் போல இருக்கும். பால் மணம் வீசும் எனது குழந்தைகள் என்னைப் பார்த்துக் கத்தும். தூக்கிக் கொஞ்சுவேன். அவர்கள் எனது மனம் என்ற தொட்டிலுக்குள் கிடந்தது பல நாட்களாக ஆடிக்கொண்டிருப்பார்கள்.

எனக்குக் கவிதை பிறப்பதற்கு நேர காலங்கள் இல்லை. நான் எந்த நேரமும் கருத்தரித்தபடியே இருக்கின்றேன். நான் குடும்பக்கட்டுப்பாடு எல்லாம் செய்வது கிடையாது. கவிதைகள் இயல்பாகவே பிறக்கின்றன. அவைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லை ,ஏன் தையல் போடுவதும் கிடையாது.

கவிதை இனி மெல்லச் சாகும் என்று கூறுவோர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

அவர்கள் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் புதைக்கக் குழிகளைத் தோண்டுங்கள். அவைகளில் தும்பிகளை ஏவுங்கள்.

எதிர்ப்பால் கவிஞர்களின் கவிதைகளை அவதானித்தபொழுது உடல் அரசியலை பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் படைக்கப்படுகின்றன. இப்படியான பாடுபொருட்கள் இவர்களால் எத்தகைய நோக்கங்களுக்காகப் படைக்கப்படுகின்றன?

கவிதைத்தெருக்களில் நிர்வாணமாக ஓடி இலகுவாகப் பிரசித்தம் பெற்றுவிடுவதற்காக. இந்தப் பிரசித்தம் நிரந்தரமானதல்ல மாறாகப் போலியானது.

போரியல் இலக்கியத்தில் கவிதைகளின் பங்கு எப்படியாக இருந்தன?

ஆயுதங்களாக !! நெருப்புக்குள் பழுத்த அப்பிள்களாக !!!

புதுக்கவிதையையும் மரபுசார் கவிதையையும் எவ்வாறு வேறுபடுத்துகின்றீர்கள்?

மொட்டைத்தலையனையும் முடி வளர்ந்தவனையும் போலப் பார்க்கின்றேன். அவனில் இருந்து இவன் நவீனம் பெற்றிருக்கின்றான். கவிதையும் மரபிலிருந்து நவீனம் பெற்றிருக்கின்றது. இவற்றை நாம் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. கவிதை என்றே அழைப்போம். மொட்டைத்தலையில் நிலா விழுந்து சிரிக்கும். முடி வளர்ந்தவனின் தலைக்குள் நிலா இறங்கி எதையோ தேடும்.

அவன் தலையில் மழை விழுந்தால் வழுக்கி ஓடும். முடி வளர்ந்தவனின் தலையில் அதே மழை விழுந்தால் பயிர் வளரும்.

உங்கள் கவிதைகள் மீது வருகின்ற விமர்சனங்கள் அல்லது எதிர்வினைகளை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

கண்ணாடி போட்டுக்கொண்டு வாசித்துப் பார்க்கின்றேன். சிலதை வைத்து யோசித்துப் பார்ப்பேன். சிலதை தூக்கி வீசி விடுவேன். எனக்காக ஒருவர் தொடர்ந்து எழுதிய அவதூறுகளை அப்படித்தான் செய்தேன்.

நமது விமர்சகர்களில் பலர் வியாதிக்காரர்களாகவும் அரைகுறைகளாகவும் இருக்கின்றனர். தம்மை மேதாவிகளாகக் காட்ட இன்னுமொருவனைப் பாவிப்பார்கள். இப்படித்தான் ஈழத்தில் இலக்கியத்தைக் கண்டு பிடித்த ஓர் எறும்பு என்னைப் பார்த்தது. நான் அதைப் புறங்கையால் தட்டி விட்டேன். கூழன் பலாமரத்தின் கனிகளை யாரும் புசிப்பதில்லை.

புலம் பெயர்ந்தோர் நடாத்தி வரும் இலக்கிய சந்திப்புகள் பற்றிய உங்கள் அவதானிப்பு எப்படியாக இருக்கின்றது? 

நான் இதுவரை எந்தச் சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. போன சந்தர்ப்பம் ஒன்று வருமானால் அதுபற்றி பேசுவோம். இன்னும் எனக்கு அதற்குப் போவதற்கான ‘குதிரை ‘ வாய்க்கவில்லை.

சமகாலத்தில் தாயகத்தில் சனங்களிடம் படைப்பாளிகள் பற்றிய இருப்பானது எப்படியாக இருக்கின்றது ?

நல்ல படைப்பாளிகளுக்கு மதிப்பு இருக்கின்றது. சாக்கடைகளுக்கு சோறும் கிடைக்காது. பெண்ணைப் பெற்றவர்கள் பலருக்குப் பெண்ணைக் கொடுக்கவும் தயங்குகின்றார்கள். பல படைப்பாளிகளின் மனைவிமார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றார்கள். ஓர் நல்ல பிறவியிடம் இருக்க வேண்டிய பல அம்சங்கள் பல படைப்பாளிகளிடம் இல்லை. நானும் சிலரை வாசலுக்கு வர அனுமதிப்பதில்லை. அவர்கள் வந்து போனால் எனது வாசல் மரங்கள் கருகுகின்றன. சிலர் போன வீடுகளிலேயே நிரந்தரமாக இருக்க இடம் கேட்கின்றார்களாம். இவர்களால் இந்த மண் தாங்குமோ என்று பலர் என்னிடம் வினாவியிருக்கின்றார்கள். நான் வெட்கத்தால் வெந்திருக்கின்றேன். தனது மானம் சிறிதும் சரிந்துவிடாமல் தான் அணிகின்ற ஆடைக்கு மேலால் இன்னுமொரு ஆடை அணிந்து கொண்டு திரிய வேண்டியவனல்லவா படைப்பாளி?

ஓர் எழுத்தாளனுக்கும் அல்லது கவிஞனுக்கும் படைப்பு சம்பந்தமான அறம் என்று நீங்கள் எதைக்கருதுகின்றீர்கள்?

தனது ஆத்மாவுக்கு விசுவாசமாக வாழ்வது. எழுதுவது. ஒழுக்கத்தில் ஓம்புவது. இறைஅம்சம் கொள்ளவது. யாரையும் புண்படுத்தாமல் இருப்பது. புல்லையும் மனிதனாக மதித்து நடப்பது. புல்லுக்கும்,புழுக்களுக்கும் சமமான மனிதர்களைப் புறக்கணித்து நடப்பது.

முஸ்லீம் சமூகத்தில் சாதீயங்கள் உள்ளனவா? இருந்தால் அவை எப்படியாக இருக்கின்றன?

எனக்குத் தெரியாது. நான் கிளி . எனக்குத் தெரிந்ததெல்லாம் கொச்சிப்பழமும் பாக்கு மரமும்தான்.

தமிழுக்குத் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்த அடிகள் பற்றிய உங்கள் எண்ணப்பாடு என்ன ?

பெரிய மனிதர். எனக்குப் பக்கத்து ஊரில் பிறந்திருந்தார். நான் அவரையிட்டுப் பெருமைப்படுகின்றேன். மழையை விட இந்த மண்ணில் அவருக்கு அதிக மதிப்பு இருக்கின்றது. வாழ்க்கையைத் தவிடுபொடியாக்காமல் வாழ்ந்து நமது வேஷங்களைக் கடந்தால் என்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கலாம் என்பதற்கு சுவாமி விபுலானந்தர் ஓர் சிறந்த எடுத்துக் காட்டு. நான் அவர் பிறந்த அந்த ஊரைக் கடக்கும் போதெல்லாம் இவரின் ஞாபகம்வரும். நம்மையே நாம் மறந்து போகின்ற இந்தக் காலத்தில் இது ஓர் முக்கியமான விடயமல்லவா?

ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் முஸ்லீம் படைப்பாளிகளது பங்களிப்பு எப்படியாக இருக்கின்றது?

குறிப்பிடும்படியாக இருக்கின்றது.

இலக்கிய கலகக்கார்கள் பற்றிய உங்கள் மதிப்பீடுதான் என்ன?

இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லாத்துறையிலும் கலகக் காரர்கள் இருக்கின்றார்கள். இவர்களை நாம் பொருட்படுத்தக்கூடாது. வானத்து மழைக்கும் கூட இடிமுழக்கம் கலகக்காரனாத்தான் இருக்கின்றது. அதற்காக வானம் மழையைப் பொழியாது விட்டதா? பொதுவாகவே ஏதாவது குறைபாடுகள் உள்ளவர்கள்தான் கலகக்காரர்களாகி விடுகின்றார்கள். குறித்த துறையை குழப்பியடித்து இன்பம் காணுகின்றார்கள். இவர்களுக்கு இரையாகி எம்மை நாம் இழந்து விடக்கூடாது. நமது வேர்கள் ஓடும் இடமெல்லாம் இவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களும் மண்புழுக்களும் ஒன்று. இவர்கள் ஒருபோதும் ‘மனிதன்’ஆகப்போவதில்லை.

ஈழத்து இலக்கியப் பரப்பில் உங்களை அதிகம் பாதித்த இலக்கிய ஆளுமைகள் யார்? 

பேராசிரியர் எம் ஏ நுஃமான்,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,பேராசிரியர் சி .மௌனகுரு ,கலாநிதி திரு ரகுவரன்,கலாநிதி திரு கந்தையா சிறிகணேசன், உமா வரதராஜன் ,டொமினிக் ஜீவா,அஸ்ரப் சிகாப்தீன்,சோ பத்மநாதன்,நிலக்கிளி பால மனோகரன் போன்றோர். இவர்கள் எல்லோருமே ஒவ்வரு விதங்களில் என்னைப் பாதித்திருக்கின்றார்கள்.

பிரமிள் பற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது ?

கவிஞன்.

எஸ் பொ வின் நினைவுநாள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. அவரது படைப்புகள் பற்றிய உங்கள் புரிதல்தான் என்ன?

துணிச்சலான படைப்பாளி. கூஜா தூக்கிகளை அவருக்குப் பிடிக்காது.


இலக்கியப்பரப்பில் ஓர் படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதானது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகின்றது? 

தகுதியானவர்களுக்குத் தகுதியானவர்கள் வழங்கினால் அதில் ஓர் மதிப்பு இருக்கின்றது. நீ எனக்குத் தா நான் உனக்குத் தருகின்றேன் என்பதை போல் நடந்தால் நகைப்பு வருகின்றது. நாற்றமெடுக்கின்றது. காசு கொடுத்து வாங்குகின்ற சுழலும் இப்போது நமக்குள் தலை தூக்கி வருகின்றது. இந்தச் சூழலுக்குள் நாம் தகுதியாக இருக்க விரும்பினால் தலைமறைவாக்கிக் கொள்வதுதான் சிறந்தது.

அண்மைக்காலமாக படைப்பாளிகள் விருதுகளை மறுதலித்தலும், அவர்கள் வாங்கிய விருதுகளை மீள்கையளிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஓர் ஆரோக்கியமான போக்காக உங்களுக்குத் தெரிகின்றதா?

பிறகென்ன! நல்ல படைப்பாளிகளுக்கு சூடு சுரணை வந்திருக்கின்றது. இவை எப்பொழுதோ வந்திருக்க வேண்டியது.

தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்து படைப்பாளிகளை தங்களுக்கு சமனாக வைத்துப் பார்பதில்லை என்றவோர் குற்றச்சாட்டு உண்டு. இதுபற்றி….? 

அவர்கள் யார் எம்மைச் சமமாக வைத்துப் பார்ப்பதற்கு? அவர்களும் நம்மைப் போன்றவர்களே! இங்குள்ள சிலருக்கு அவர்களில் உள்ள மயக்கம் இன்னும் குறையவில்லை. அவர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள். எங்கேயாவது நீங்கள் பேசும்பொழுது எங்களையும் முணுமுணுங்கள் என்று சொல்கின்றார்கள். அங்கிருக்கும் தாவரங்களோடு பேசுபவர்களும் இறயர்களும் அந்த வேலையை அதிகம் செய்கிறார்கள். அவர்களை பற்றி உலகம் நகைப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் அதற்குப் பழகி விட்டார்கள்.



ஒருவர் ஈழத்தில் இலக்கியவாதிகளே இல்லையென்று அடிக்கடி வாந்தி எடுக்கின்றார். இன்னொருவரோ இங்கிருக்கும் சில்லறைகளையே அள்ளிக் குலுக்கிக் கொண்டிருக்கின்றார். எல்லாமே தங்களைக் கட்டிக் காப்பாற்றிவைக்கும் நோக்கம்தான்.

இவர்கள் போனறவர்களை அங்கிருக்கும் நாணயஸ்தர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் உடனான தொடர்புகள் எப்படியாக இருந்தன? 

இருவரும் ஒரே ஊரில்ப் பிறந்தவர்கள். எனது ‘எட்டாவது நகரம்’ கவிதைத்தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரை பிரசித்தமானது. ‘முருகையன்’ போன்றவர்களின் குழப்பங்களுக்குப் பதில் சொன்னது அவரின் முன்னுரை. எனது கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார். இப்பொழுது அவர் எங்கள் ஊரில் இல்லை. ஓர் நிலா போனது போன்று கவலையாக இருக்கின்றது.

ஓர் விமர்சகனுக்கும் படைப்பாளிக்குமான உறவுநிலைகள் எப்படியாக இருக்கவேண்டும்?

இருவரும் தூரத்தூர இருந்து கொண்டு அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும். ஒருவரின் பணிக்குள் ஒருவர் மூக்கை நுழைக்கக் கூடாது. கடற்கரையிலும் சந்தையிலும் வேண்டுமென்றால் கைகுலுக்கிக் கொள்ளலாம்.

ஓர் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான தொடர்புகள் எந்தவிதத்தில் அமையவேண்டும்?

வாசகனுக்காகப் படைப்பாளி எழுதாமல் முதலில் தனக்காக எழுத வேண்டும். தனக்காக எழுதியது போல் வாசகனுக்கு அது இருந்தால், அவன் தானாகப் படைப்பாளியை நெருங்குவான். வாசகனை தான் நெருங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருபோதும் படைப்பாளி இயங்கக் கூடாது. இது சாப்பாட்டுக்கு கடைகளில் சாப்பிட வந்தவனுக்கு அங்கிருக்கும் பணியாளன் உணவைக் காலடியால் நகர்த்திக் கொண்டு வந்து வைப்பதைப் போன்றது.

அண்மைக்காலமாக ஓர் படைப்பு வெளிவரமுதலே அதுபற்றிய பிம்பங்கள் மிகைப்படுத்தி சமூகவலைத்தளங்களில் வருகின்றன. இப்படியான மிகைப்படுத்திய பிம்பங்களை ஆரோக்கியமான போக்காகக் கருதுகின்றீர்களா?

வெறும் ‘அலம்பல்’ போக்காகவே நான் இதைக் கருதுகின்றேன். சிலவற்றைக் கண்டு கொள்வதற்கு என்போன்றவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதற்கெல்லாம் செலவு செய்யும் நேரத்தில், நகம் வெட்டலாம், பல்லுத்துலக்கலாம், எம்மை நாம் சுத்தமாக்கலாம்.

வடக்கிலே ஊடகத்துறையின் வீச்சு அதிகமாக இருந்தாலும் வாசிப்புப் பழக்கம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர்எதிராக கிழக்கு மாகாணத்தில் வாசிப்பு பழக்கம் உச்சத்தில் இருக்கின்றது. இதுபற்றி …..?

வாசிப்புப் பழக்கம் உச்சமாக இருக்கின்றது என்பதை என்னால் ஏற்க முடியாது. சூரியன்தான் உச்சமாக இருக்கின்றது. ஒருசிலரை நீங்கள் கண்டிருக்கலாம் ஆனால் முழுமையாகச் சொல்ல முடியாது. இங்கு பெரிய பெரிய கடைகளும் சிகை அலங்கயிருப்பு நிலையங்களும் இருக்கின்றன. அவற்றில் இருப்பவர்கள் தினசரிப்பத்திரிகைகளை வாசித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களை அப்படிச் சொல்கின்றீர்களா?

துப்பாக்கிகள் பேசியபொழுதும் அதன்பின்னர் மௌனிக்கப்பட்ட பொழுதும், பேனைகளின் போக்குகள் எப்படியாக இருந்தன அல்லது இருக்கின்றன?

சிலநேரம் மூடிக்கிடக்கும். சிலநேரம் திறந்து கிடக்கும். இதைப் பேனைகள் கிடைக்கும் மேசையிடம்தான் வினவ வேண்டும். என்னை மேசையாக எண்ணுகின்றீர்களா?

நீங்கள் மாற்றுப்பால் திருமணங்களை அங்கீகரிக்கின்றீர்களா?

என்னைப்பார்த்து இப்படி ஓர் கேள்வியைக் கேட்டு விட்டீர்களே! உங்கள் முகத்தை முறிக்காமல், நீங்கள் கேட்டதற்காகச் சொல்வதானால்,

‘மாட்டுப்பால் திருமணங்களையும் அங்கீகரிக்கலாம், அவை பயனுள்ளவையாக இருந்தால், ‘புட்டிப்பால்’ திருமணங்களென்றாலும் பாதகமில்லை. ஒரு தாகத்துக்குத் தேனீர் தயாரித்துக் குடிக்கலாம்.

உங்களுக்கென்று ஆதர்சங்கள் இருந்திருக்கின்றார்களா?

இறைவன் அழகாக இந்த உலகம் என்ற கவிதையை எழுதியவன், ஆக அவனே எனது ஆதர்சம்.

சோலைக்கிளியின் இலக்கிய அரசியல்தான் என்ன?

ஊர் முகம் மாறி நகரமானாலும் இறக்கும் வரை கிராமத்தை என் மனதிற்குள் வைத்திருப்பது. என் நிலவின் பாலை சோற்றுக்குள் ஊற்றி வாழைப்பழம் போட்டுக் கரைத்துக் குடிப்பது. கவிதைகளால் வானத்தை அசைப்பது. அது உதிர்க்கும் நட்ச்த்திரங்களில் என் தலையைக் கொடுத்துக் குளிப்பது. எழுத்தால் என்னை இளைஞனாக்கி இந்த அண்ட சராசரத்தின் இயற்கையைக் காதலிப்பது. எதிலும் நிர்வாணமாக ஓடாது மானத்தோடு வாழ்வது என்று பலப் பல.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...