Skip to main content

‘நடு’வுக்கு இன்று வயது ஒன்று


நடு இணைய சிற்றிதழானது இன்று தனது ஒரு வயதை கடக்கின்றது. இந்த ஒரு வயதில் வரவிருக்கும் கிழக்கிலங்கை சிறப்பிதழுடன் இரண்டு சிறப்பிதழ்களையும் மூன்று இதழ்களையும் நடு வாசகர்களுக்காகப் பதியமிட்டிருக்கின்றோம்.

ஐந்து இதழ்களிலும் எம்முடன் தோளோடு தோள் நின்று பயணித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகள். நடுவானது மேலும் மேலும் வளர்ந்து விரீட்சமாக வளரவேண்டுமானால் படைப்பாளர்களது பங்களிப்பும் வாசகர்களது ஊக்கமும் எமக்கு அவசியமாகின்றது. இந்த ஒரு வருடத்தில் நடுவின் வளர்ச்சிபற்றி தீர்மானிக்க வாசகர்களாகிய உங்கள் கைகளிலேயே விடுகின்றோம். நடு பிறந்த பொழுது அது பற்றி வெளியாகிய கருத்துக்களை வாசகர்கள் கீழே வாசிக்கலாம் .நன்றி .

நடு குழுமம்

000000000000000000000000

“நடு” காலாண்டு இணைய இதழின் முதலாவது பதிப்பு தமிழ் இலக்கிய பரப்பில் தனது பிஞ்சுக்கால்களால் அடி எடுத்து வைத்திருக்கிறது. “தமிழ் இலக்கியத்தின் சிரியா” எனப்படும் பிரான்ஸிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த புதிய இதழை தோழர் கோமகன் நெறிப்படுத்துகிறார்.

இப்போது தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி தடக்கி விழுந்தால் இலக்கியவாதி யாராவது ஒருவரின் கைல்களில்தான் கிடக்கவேண்டியிருக்கிறது. தவண்டுபோனால் இலக்கிய இதழ்களின் மேல்தான் மீண்டும் வழுக்கிவிழவேண்டியிருக்கிறது. இப்படியான ஒருநிலையில், வெளிவரும் தொடர்ச்சியான இலக்கிய பிரதிகள் சாதரணங்களை கடந்து என்ன வித்தியாசத்தை இலக்கிய உலகில் திசைமாற்றம் செய்யப்போகின்றன என்பது பாமர வாசகனுக்கு இயல்பாக எழக்கூடிய ஒரு கேள்வி.

இந்த புதிய இதழ்கள் புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்துகிறதா? புதிய சாளரங்களின் ஊடாக வித்தியாசமான இலக்கிய தரிசனங்களை வழங்குகிறதா? படைப்பாளிகள் தெரிவில் சமவிகித்தில் களங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா? போன்ற கேள்விகள் எல்லாம் இங்கு தொக்கி நிற்கின்றன.

ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் படையெடுக்கும் புதிய பிரதிகளின் வருகை மகிழ்ச்சியை தருகிறது. மூச்சுவிடும் இடைவெளியில் வீங்கிக்கொண்டு வளரும் சமகால தொழில்நுட்ப உலகில் வாசிப்பு, இலக்கியம் என்பவை எல்லாம் சாத்தியமற்ற சாஸ்திரங்கள் என்ற முன்முடிவுகளை பிளந்துகொண்டு இந்த இலக்கிய வருகைகள் கட்டியம் கூறுகின்றன. அந்தப்பெருவெற்றி உளத்தூய்மையுடன் யாசிக்கப்படவேண்டியது. ஆனால், இந்த இதழ்களின் தொடர்ச்சியான வருகையும் முதலிலேயே குறிப்பிட்டது போன்ற வித்தியாசங்களும்தான் வாசகனுக்கும் இந்த பிரதிகளுக்கும் இடையிலான தூரத்தை குறைக்கும். அந்தவகையில், ஒவ்வொரு முற்றுப்புள்ளியுடனும் அந்த பதிவுகளுடன் கட்டிப்போடுகின்ற மாய வித்தையை அசகாயம் செய்கின்ற பிரதிகள் வெளிவரவேண்டும். அந்த கூர்மையான எழுத்துக்களை சிருஷ்டிப்பவர்களை இந்த இலக்கிய பிரதிகள் வெளிக்கொண்டுவரவேண்டும்.

“நடு” அந்தவகையில் சம்பிரதாயங்களை கடந்த சாதனைகளுக்கு தமிழ் இலக்கியத்துறையை திசைமாற்றம் செய்யும் என்று நம்பிக்கையை தரவேண்டும். அதன் வழி செல்லவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

நன்றி : ப.தெய்வீகன் (அவுஸ்திரேலியா )

000000000000000000000

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இணைய இதழ்களை நல்ல வடிவத்தோடும் காத்திரமான உள்ளடக்கத்தோடும் கொண்டுவருகிறார்கள். இப்போது வந்திருக்கும் “ நடு” இதழும் அப்படியான இதழாக வரப்போகிறது என்பதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. என்னிடம் முதல் இதழுக்கே எழுதச்சொன்னார் அதன் ஆசிரியர் கோமகன். பயணங்களில் கவனம் செலுத்தியதால் எழுத முடியாமல் போய்விட்டது. அடுத்த இதழுக்கு எழுதிவிட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிவிடும் – நடு-வைப்படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

பேராசிரியர் அ ராமசாமி ( இந்தியா )

0000000000000000000

“நடு” இணைய இலக்கிய சஞ்சிகையின் முதல் இதழ் வெளிவந்துள்ளது. காத்திரமான இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்திருக்கும் நடு இலக்கிய சூழலில் அதிக கவனிப்பை பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது. இவ் இதழில் எனது சிறுகதை ஒன்றும் வெளிவந்துள்ளது. அந்தவகையில் நடு ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள். இதழை வாசிக்க www. naduweb.net

நன்றி : Jiffry Hassan ( இலங்கை )

000000000000000000

இணையக்காலனியும் இதழியலும்

(நடு இதழை மேற்கொள் கொண்டு)

நடு என்ற இணைய இதழ் வெளியாகியுள்ளது .

எல்லோருடைய உழைப்பும் மகத்தானதாகவே இருக்கிறது.

இலத்திரனியல் உலகில் வசிக்கும் சமூகம் நிச்சயமற்றதும் அதிகாரத்தாலும் நாட்டு எல்லைச் சைபர் சட்டங்களாலும் வரையறைக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாவதுமாகும். எனினும் சைபர் உலகிற்குள் வசிக்கும் அல்லது வசிக்க ஆரம்பிக்கும் வாசக , எழுத்துச்செயற்பாட்டு உலகத்தின் மீதான வெளிப்பாட்டு வகி பங்கிற்கு இணைய எழுத்துக்கள் அவசியமானவையே.

இந்த இடத்தில் இணைய எழுத்துகளில் அதி நிச்சயம் அற்றவை பேஸ்புக் எழுத்துகள் . பேஸ் புக்கை ஒரு பரப்புரை நிலையமாகவே இலக்கிய காரர்கள் கையாள்கின்றனர். சர்வதேச இணைய டொமைன்களில் எழுதும் பழக்கத்தை தமிழில் – தமிழ் நாட்டில் சாரு , , எஸ், ரா , கருந்தேள் , சுரேஷ் கண்ணன் , போன்றவர்களும் , ஈழத்தில் ஷோபா , ஜெ.கே , சயந்தன் , ஆதி பார்த்தீபன் , அனோஜன் , போன்றோரும் எழுதுகின்றனர் . இதில் ரெகுலர் தன்மையென்பது ஒரு சிலருடையது மட்டுமே. எனினும் எழுதுகின்றனர். பெரும்பாலும் இவர்களில் எழுத்துகள் காலப்போக்கில் புத்தக வடிவிலும் வெளிவருகின்றன. இணைய நிச்சயமின்மையின் ஆபாயம் புத்தகவடிவம் பெறும் போது கடக்கப்படுகின்றது.

தமிழ் இலக்கியத்தின் வாசகப்பரப்பு என்பது ஆயிரங்களில் தான் இன்னுமும் கணக்கிட வேண்டியுள்ளது. எல்லாக்கலாங்களிலும் அவ்வாறு தானே. கிடக்கட்டும்.

சில புத்திஜீவிகள்சொல்லும் வாழ்க்கையை இணையத்தில் ஸ்க்ரோல் செய்து கடக்கும் ஓர் சமுதாயம் இணையத்திலேனும் வாசிக்கின்றது. இந்த ஆரோக்கியத்தனத்தை வியாக்கியானம் செய்ய புத்து ஜீவிகளுக்கு நேரமில்லை. பாவம் பேஸ்புக் பொதுசன அபிப்பிராயத்தை தொகுப்பதில் அந்த புத்திஜீவிக்கூட்டம் பிசியாக இருக்கிறது போகட்டும்.

இங்கே சைபர் வாசிப்புலகம் உருவான பின்னர்,வாசிப்பு உலகில் இதழ் களின் பங்களிப்பு சமகாலத்தில் அடைந்து வரும் முக்கியதுவம் கவனத்திற்குரியது. இணைய வாசக இதழ்களில் விகடன் குழுமம் தமிழில் உச்ச பட்ச வணிக இதழாக்கத்தை மேற்கொள்கிறது. சமீபத்தில் வெளியாக தொடங்கியிருக்கும் விகடனின் “தடம் ” இதழ் ஓரளவு வணிக புலத்தை விட்டு விலகும் தன்மையினை வழங்குகின்றது. ஒரு காலத்தில் நல்ல இதழ்களாக கருதப்பட்ட உயிர்மை , காலச்சுவடு போன்றன தங்களுடைய அப்டேட் இல்லாத தன்மையினால் குறித்த வாசகப்பரபோடு தேங்கி வேறு விதமான வணிக சுய துதி இலக்கிய வகைமைகளுக்குள் சென்று விட்டன. எனினும் கல்குதிரை , அம்ருதா , மணல் வீடு , காலம் , உயிர் எழுத்து போன்றவை முக்கியமான இலக்கிய அசைவுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றன. ஆனால் இவற்றின் இணைய வடிவம் வெளிவருவது வேண்டப்படும் ஒன்றாக இருக்கின்றது.

ஈழம் சார்ந்த இதழ்கள் என்று பார்க்கும் போது,
ஈழம் சார்ந்த இதழ் பரப்பில் பனுவல் , கலைமுகம் , ஜீவநதி , மகுடம் போன்றவற்றில் பனுவலைத்தவிர மிகுதி தங்களுடைய வாசகப்பரப்பை சடுதியாக இழந்துள்ளன. குறிப்பாக கலைமுகம் நிறுத்தப்படும் அறிகுறிகள் தெரிகிறது . ஈழத்து இலக்கிய பரப்பில் பெரும் அசைவைச்செய்த கலைமுகம் நிறுத்தப்படுவதற்கு வாசகர்களும் முக்கிய காரணம் . ஜீவநதி ஆசிரியர் பரணிதரன் என்று தலையங்கத்தின் கீழே போடுவதில் இருந்தே அது ஒரு பிரதிக்குள் வசிக்கும் நபர்களின் படைப்புலகம் சார்ந்ததென்றே கொள்ள வேண்டும். அது ஒரு வேஸ்ட் சஞ்சிகை . மகுடம் சற்று நுட்பமாக சிறப்பிதழ்களை வெளியிடுகின்றது அதனால் ஆவணமாக்கல் சார்ந்த வாசிப்பில் அதனை ஒரு முக்கிய இடத்தில் வைக்கலாம் . எனினும் கடந்த நாட்களில் அதில் இடம்பெற்ற ராகவன் -ஜேசுராசா மோதல்கள் அருவருப்பை தருபவைதான்.

பனுவல் தன்னுடைய அசைவியக்கம் சார்ந்து தொகுப்பு முயற்சிகளைகளைச் செய்துவருகின்றது. பனுவலில் அசைவியக்கம் என்பது குறித்த காலத்தின் அதி தேவைகளை பூர்த்தி செய்கின்றது என்பது மிகையன்று.

2012 க்குபிறகான ஈழத்தின் இதழ் வளர்ச்சியில் ஆக்காட்டி , புதிய சொல் என்பன தொடர்பான வாசிப்பும் விவாதங்களும் அடுதத நிலையை நோக்கி நகர்கின்றன. நவீன இலக்கிய பரிசோதனைகளை நிகழ்துவதிலும் , சமகால இதழ் வடிவம் , உள்ளடக்கம் சார்ந்த விடையங்களிலும் இவ்விரண்டு இதழ்களும் பேசப்படுதலுக்கும் வாசிக்கப்படுதலுக்கும் உட்பட்டுவருகின்றன. எனினும் ஆரம்ப கட்டத்திற்குரிய வெளிபாட்டு தடுமாறல்களுக்குள் இவை உட்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . எனினும் இறுதியாக வந்த ஆக்காட்டி 11 உம் , புதிய சொல்லும் முக்கியமான வடிவ உள்ளடக்கங்களைக்கொண்டவை .

இவற்றில் புதிய சொல் இணையத்திலும் சம நேரத்தில் வெளியாகின்றது . ஆக்காட்டியின் இணைய அப்டேட்டும் கிடைக்கின்றது .

இவை தவிர புதிதாக கிழக்கில் இருந்து மறுத்தோடி என்ற இதழும் வெளியாகவுள்ளது . மறுத்தோடியும் இணையத்தில் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று வெளியான நடு என்ற இலக்கிய சஞ்சிகை இணைய இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்திருக்கின்றது.
அதனுடைய எழுத்து தெரிவு ஒரளவு பழைய குழம்பாகவே தெரிகின்றது . இனிவரும் இதழ்களில் ஆசிரியர் குழு இதனை கவனித்தால் ந்ன்று , மற்றபடி வடிவமைப்பில் இதழ் நன்றாக இருக்கின்றது .

இணைய இதழ்களின் பரவலாக்கம் என்பது முக்கியமானது . குறிப்பாக புதிய இதழ்கள் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்துவருவது மிகவும் ஆரோக்கியமானது . புதிய இலக்கிய பரிசோதனைகள் . பிரதிக்குள் வசிக்காத ஆரோக்கியமான உரையாடல்கள் , இணைய எழுத்தின் அடுத்த கட்டத்தினை கண்டறியும் தேவையின் இடைவெளிகளை பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

புத்தி ஜீவிகள் சொல்வதுபோல் தொடுதிரையை ஸ்க்ரோல் செய்து வாழ்வினைக்கடக்க முடியாது . இணையம் நிச்சையமற்ற எழுத்து முறைதான் . ஆனால் இலத்திரனியல் காலனிக்குள் வசிக்கும் உயிர்களை மக்களை அப்படியே விட்டுவிட முடியாது தானே ?

http://www.naduweb.net (இதழை இங்கே வாசிக்கலாம் )

நன்றி : Pratheep Kunaradnam ( இலங்கை )

00000000000000000000000

பிரான்சிலிருந்து “நடு” என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகை அறிமுகமாகியிருக்கிறது. கோமகன் அண்ணாவைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இச்சஞ்சிகை வெற்றிபெறவேண்டும் என்று வாழ்த்துவதில் நிறைய சுயநலம் எனக்குண்டு.

கோமகன் அண்ணாவிடம் இறுக்கமான வரையறைகள் இருப்பதில்லை. இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தன்னைச்சுற்றி அவர் முட்கம்பி வேலியை அடைத்துக்கொள்வதில்லை. ஆனால் அப்படி இருப்போரோடு அவருக்கு “தனகும்” குணம் இருக்கிறது. அதுவேறு.

கோமகன் அண்ணாவின் கட்டுப்பாடற்ற அணுகுமுறை “நடு”வுக்கு வலுச்சேர்க்கலாம் என்று நம்புகிறேன். சரியோ தவறோ பரிசோதனைகளுக்கு அவர் அனுமதி கொடுப்பார் என்பது என் நம்பிக்கை. We can go nuts. ஆனால் இந்த அணுகுமுறையில் ஒரு சிக்கலும் உண்டு. எது பரிசோதனையில் தப்பிய எலி, எது செத்த எலி என்று கண்டுபிடிப்பது சிரமம். நடு குழுமம் அதை நேர்த்தியாகச் செய்யும் என்று நம்புவோம்.

“நடு” முதல் இதழில் செங்கை ஆழியான் பற்றி நான் எழுதிய கட்டுரையையும் பிரசுரித்திருக்கிறார். நன்றி.

கட்டுரையின் ஒரு பகுதி.

//செங்கை ஆழியானின் எழுத்துகள் ஜனரஞ்சகமானவை என்றொரு விமர்சனம் இருக்கிறது. அதற்கு அவர், “வாசிக்கப்படாத எழுத்துகளால் பயனில்லை” என்பார். அவருடைய நாவல்களில் அக எழுச்சிகள் இல்லை. அழகியல் மேலோட்டமாக இருக்கிறது என்று ஒரு விமர்சனமும் உண்டு. ஒரு குறிப்பிட்ட எழுத்தை அழகியல் இல்லை என்று விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒரு எழுத்தாளரிடம் அழகியல் இல்லை என்று சொல்வதற்கு குறைந்தது அவருடைய தொண்ணூறுவீதமான புத்தகங்களையேனும் வாசித்திருக்கவேண்டும். செங்கை ஆழியான் ஜனரஞ்சகமான எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்துகளில் அழகியல் இல்லை என்பது மிகவும் மேம்போக்கான முன்முடிபுகளுடன் கூடிய ஒரு விமர்சனம். மிக நாசூக்காக, இயல்பாக, எளிமையாகப் படிமங்களையும் அழகியல்களையும் பதிவுசெய்வதில் செங்கை ஆழியான் வல்லவர்.

வட துருவத்தின் குளிர் பருவத்தின்போது கூழைக்கடாப் பறவைகள் யாழ்ப்பாணத்தை அண்மித்திருக்கும் நெடுந்தீவுக்கு இடம்பெயர்வதுண்டு. பருவகாலம் மாறும்போது அவை திரும்பப் பறந்துவிடும். இதுகாலங்காலமாக பருவங்கள் மாறுகையில் இடம்பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. கூழைக்கடாக்கள் இல்லாமல் நெடுந்தீவு மண் முழுமையுறாது. ஆனாலும் அந்தக் கூழைக்கடாக்களை நெடுந்தீவு பனைவடலிகளில் பார்த்தால் ஏதோ சுற்றுலாவுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் பனை மரத்தில் ஏறி நிற்பதுபோலத் தோன்றும். என்னதான் நெடுந்தீவு மண்ணோடு உறவாக இருந்தாலும் கூழைக்கடாக்களுக்கு பனை வடலிகள் சொந்தமில்லை. இன்றைக்கு வாடைக்காற்று எழுதி நாற்பது வருடங்கள் ஆகின்றன. தமிழர்கள் கூழைக்கடாக்களைப்போல புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அந்தந்த நாடுகளோடு ஒன்றிப்போய்விட்டார்கள். ஆனாலும் பனைவடலியில் கூழைக்கடாபோலவே தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் ஒருவித ஒட்டாத தோற்றத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் விடுமுறைக்கு புகலிடம் திரும்பும்போது அங்கேயும் அவர்களை கூழைக்கடாக்கள்போலவே பார்க்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் என்ற கூழைக்கடாக்களுக்கு ஈற்றில் வடதுருவமும் சொந்தமில்லை. தென்துருவமும் சொந்தமில்லை. இன்றைக்கு வாடைக்காற்றை மீள் வாசிப்புச் செய்கையிலே இதுவெல்லாமே வந்துபோகிறது. இது காலத்தால் அழியாத அகவெழுச்சி இல்லையா? காதலியின் கன்னத்துச் சிவப்பு சுட்ட வெட்டிரும்பின் சிவப்பு நிறத்தை ஒத்ததாக இருந்தது என்பார். இரும்பு சூடாக இருக்கையில் சிவந்து அழகாக இருக்கும். தொட்டால் சுடும். நீருக்குள் வைத்தால் அந்த அழகு மறைந்துவிடும். அற்புதமான அழகியல் விரிகிறதல்லவா? ஒரு புளியமரத்தைச் சுற்றி நிகழும் சிறுகதை. காய்க்காத கூகைப்பலாவை படிமமாக்கி எழுதப்பட்ட கணவன், மனைவி, கள்ள உறவு என்று போகும் ஒரு கதை என்று செங்கை ஆழியான் இலக்கியத்தில் செய்யாத நுட்பங்கள் இல்லை. வெறுமனே இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு தெருவில் சும்மா கல் கிடக்கிறதே என்று தூக்கி வீசுபவர்களை என்ன சொல்வது? நாம் வாசிப்பினூடு ஒரு எழுத்தாளரைக் கடந்துபோனபின்னர் அந்த எழுத்தாளரை எள்ளி நகையாடுவதன் மூலமும், ‘இலக்கியவாதியே இல்லை’ என்று நிறுவ முயல்வதன் மூலமும் சாதிக்கமுனைவதுதான் என்ன?

செங்கை ஆழியானின் பலவீனம் என்று நான் கருதுவது அவர் சமூக நாவல்களில் பயன்படுத்துகின்ற கதைமூலம். அநேகமான சமூக நாவல்களில் அவருடைய கதைமூலம் ஒரே பாத்திரங்களையே சுற்றிவரும். ஒரு வயோதிபர், ஒரு காதல் ஜோடி, ஒரு இடதுசாரிச் சிந்தனையுள்ள இளையவர் அல்லது போராளி. ஒரு சண்டியர். இப்படி நாவலுக்கு நாவல் பரிச்சயமான பாத்திரங்கள் வெவ்வேறு பெயர்களில் செங்கை ஆழியானிடம் வந்துபோவதுண்டு. வரலாற்று நவீனங்கள்கூட இதில் தப்பியதில்லை. அதிலும் அந்த வயோதிபர் பாத்திரமாக செங்கை ஆழியானே தன் கருத்தைச் சொல்ல வருவதும் வாசிக்கும்போது தெரியும். பட்டறிவுத்தன்மை (Reflectivity) என்று சிவத்தம்பி குறிப்பிடும் விடயமும் இதுவே. சமயத்தில் புனைவின் அற்புதக்கணங்களைத் தொடாமலேயே கதையை முடித்துவிடுவதும் அவருடைய பலவீனம் என்றுங் கொள்ளலாம். செங்கை ஆழியான் தன்னுடைய மிகச்சிறந்த நாவலை எழுதாமலேயே இறந்துபோய்விட்டாரோ என்று சமயத்தில் எண்ணத்தோன்றும்.
//

முழுக் கட்டுரையையும் நடு இணைய சஞ்சிகையில் பார்க்கலாம். (இணைப்பு முதல் கொமெண்டில்)

நன்றி : ஜே கே படலை ( அவுஸ்திரேலியா )

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...