கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே,
“உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன?
‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிறுகதை. இதைநான் முன்னமே படித்திருந்தாலும் இங்கே ஏறுகளின் உணர்ச்சிகளை மிக அழகாக கற்பனை செய்திருக்கிறார்.
மாட்டுவண்டிச்சவாரி ஜல்லிக்கட்டு எல்லாவற்றையும் விட செயற்கை முறை சினைப்படுத்தல், லாடங்கட்டுதல், எல்லாவற்றிலும் எறிகணைச்சிதறல் பறந்தது. ஆனால் இவற்றில் சில இப்போது வழக்கொழிந்து வருகிறது என்பதால் கதை தனது காலத்தை கடந்து விட்டது.
டிலீப் டிடியே பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் காதலா காமமா அதில் பேசப்பட்டுள்ளது என்பது எப்போதும் எனக்குச் சந்தேகமாகவே உள்ளது.
‘பருப்பு’, ‘ஆக்காட்டி’ ரெண்டு சிறுகதைகளும் சமகாலத்தவை அவைபற்றிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு வெறாக இருக்கலாம். ஆனால் ‘சம்பவங்கள்’ என்னவோ ஒன்றுதான். ஏனைய இரு கதைகள் பற்றி நான் எனது பதிவை தருவதாயின். அதன் எழுத்துநடையில் எந்த மாறுதலுமின்றி கோமகனின் வழமையான நடையாக வே இருக்கிறது. சலிப்பின்று கடந்து போகமுடிகிறது. என்றாலும் அவை வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே தொகுப்பாக வருவதால் புதுமை குறைந்து போகிறது.
‘மாதுமை ‘ சிறுகதை ஒருபோதும் மனதைவிட்டகலாத கதை. ‘டைட்டானிக் அவலம்’ போல கணக்கில் அடக்காத மூழ்கிப்போன எத்தனையோ அகதிகளின் வரலாற்றின் ஒரு பகுதி. இருக்கிறத விட்டிட்டு பறக்கிறதைப்பிடிக்க முயலும் அப்பாவிகளின் அவலம். இதை அடுத்து நிற்கும் ‘சுந்தரிகள்’. வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டுப் பணபலத்தில் கொலோச்சுகிறார்கள். இதை எங்களாலும் மட்டுமல்ல எழுதுவதாலும் எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு லாவகமாக தானே மாட்டிக்கொண்டு தகவலைத் திரட்டினாரோ என்று சந்தேகம் வருமளவுக்கு பலே என்றுபாராட்டலாம். மொத்ததில் படித்த எனக்கே பரவசம் தரும் இந்த பொத்தகம் புதிதாக படிப்பவரை பரவசப்படுத்தும். பலவிடயங்களில் உடன்பாடில்லாவிட்டாலம் கூட………
தமிழ்க்கவி
கிளிநொச்சி-இலங்கை
25 ஆவணி 2018
பிற்குறிப்பு :
செம்மைப்படுத்தலுக்காக தொகுப்பை அனுப்பிய பொழுது தனது கருத்தையும் சேர்த்து தமிழ்க்கவி திருப்பி அனுப்பியிருந்தார்.
கோமகன்
Comments
Post a Comment