அரண்மனை அந்தப்புரத்தில் இளங்கோவை அவன் அன்னையார் ஆதித்த பிராட்டி அத்தையார் வீரமாதேவி, பாட்டியார் பெரிய குந்தவை இவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தங்களது ஆனந்தக் கண்ணீரால் குளிப்பாட்டினார்கள். அருள்மொழியின் தங்கை அம்மங்கையோ அவன் மீது தன் பரிகாசச் சொற்களைச் சரமாரியாகப் பொழியத் தொடங்கினாள்.
“ஒரே ஒரு போர்க்களத்துக்குச் சென்று ஒரே ஒரு விழுப்புண்ணோடு திரும்பியிருக்கிறார் இவர். இவரைப் போய் எல்லோரும் வீராதி வீரர், சூராதி சூரர் என்கிறார்கள். இவருக்குப் புகழ் தேடிக் கொள்ளவே தெரியவில்லை. சின்னஞ்சிறு விழுப்புண் தழும்புகள் ஐம்பது அறுபதாவது உடலில் இருக்கவேண்டாமா?’’
“நீ சற்று நேரம் சும்மா இருக்கமாட்டாயா?’’ என்று தமது மகளை அதட்டினார் வீரமாதேவி. “போங்களம்மா! கவசம் போட்டுக்கொள்ளாமல் இப்படியா போய்ப் பகைவன் கையில் அகப்பட்டுக் கொள்வது. ஒரு சாண் ஆழம், இரண்டு சாண் அகலத்துக்கு அவன் இவர் தோளைப் பிளந்து தள்ளியிருக்கிறானே! இதைப்போல் இரண்டாவது விழுப் புண்ணைத் தேடிக்கொண்டிருந்தால் இவர் கதிஎன்ன?’’
“உனக்குக் கவசம் போட்டுவிடுகிறேன். அதோடு சுனைக்குள் இறங்கி நீந்திச் செல்கிறாயா?’’ என்று கேட்டான் இளங்கோ.
“எனக்கு நீந்தத் தெரிந்தால் நான் மலையைக் கட்டிக் கொண்டு கடலில்கூடக் குதித்துவிடுவேன்.’’
இதற்குள் பாட்டியார் பெரிய குந்தவை குறுக்கிட்டு, “ஆமாம், போர்க்களத்துக்கு நீ இவளை அழைத்துக் கொண்டு போயிருக்கவேண்டும்; இவள் பேச்சைக் கேட்டு விட்டே பகைநாட்டு வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடியிருப்பார்கள்’’ என்றார். அம்மங்கையின் வாய் தானாக அடைத்துக்கொண்டது.
அங்கிருந்து இளங்கோ திரும்பியபோது, அருள்மொழி ஒரு கூடத்துக்குள்ளிருந்து வெளிப்பட்டாள்.
“நங்கையாரே! நீங்கள் நெற்றியில் இட்டுவிட்ட வீரத்திலகம் இன்னும் மறையாமல் என் தோளில் பதிந்திருக்கிறது பார்த்தீர்களா?’’ என்று கூறிச் சிரித்தான் இளங்கோ. “இனிமேல் என்றைக்குமே இது மறையாது’’ என்று தனது வலது தோளிலிருந்த செந்தழும்பைச் சுட்டிக்காட்டினான்.
ஏறிட்டு நோக்கிய அருள்மொழியின் விழிகளில் பனித்திரை படர்ந்தது.
“என்னுடைய விரலில் சிறு புண் ஏற்பட்டதாக நினைத்த அன்றைக்கு நீங்கள் என்ன பாடுபட்டீர்கள். எப்படி உங்களால் இந்த வேதனையைத் தாங்க முடிந்தது?’’
“நீங்கள்தானா நான்? நீங்கள் மலரைப் போன்றவர்கள், காற்றுகூட உங்கள்மீது கடுகி வீசக்கூடாது. நான் மலையைப் போன்ற முரடன், போர்க்களத்தின் சலசலப்பு என்னை என்ன செய்துவிடும்?’’
“நான் எவ்வளவோ சொல்லி அனுப்பியும் அதையெல்லாம் மறந்துவிட்டீர்களே!’’ என்றாள் அருள்மொழி.
“மறந்திருந்தால் நான் திரும்பி வந்திருக்கமுடியுமா? எனக்கும் சிறிது விவேகமிருக்கிறது, இளவரசி!’’
பெருமையோடு புன்னகை பூத்துவிட்டு அந்தப் புரத்துக்குள் நுழைந்து மறைந்தாள் அருள்மொழி. அவளது புன்னகை தென்றலாக மாறி அவன் தோளுக்குக் குளுமை தந்தது.
மூன்று நான்கு தினங்களாகவே ரோகிணி இளங்கோவின் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. அம்மங்கை தேவியுடன் சேர்ந்து கொண்டோ அல்லது அருள்மொழியுடன் கூடிக் கொண்டோ அவள் பொழுதைப் போக்கிக்
கொண்டிருந்தாள். அவர்களை விட்டுப் பிரிந்திருக்கும் வேளையில் அவளுடைய மாளிகை அவளுக்குப் புகலிடம் அளித்தது போலும்.
கமலாலயக் கரையில் ரோகிணி அவனை அந்தரத்தில் விட்டுச் சென்ற பிறகு அவள் நினைவு அவனுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியளிக்கவில்லை. அவளுடைய தந்தையார் மாமன்னரின் உறவை நாடி வந்துவிட்டு, பின்பு திடீரென்று மனம் மாறிவிட்டாரல்லவா? அது போலவே அவளும் செய்து விட்டாளோ என்று நினைத்தான்.
வீரமல்லன் வாயிலாகத் தன்னை விரும்பி அழைத்துவரச் சொன்னவள், ‘தன்னிடம் விரும்புகிறேன்’ என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் என்ன குறைந்துவிடும்? இதற்குப் பெயர் ராஜதந்திரமா? அல்லது சாகசமா?
மகிழ்ச்சியளிக்காத நினைவென்றாலும் அது என்னவோ அவன் மனத்தின் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டு தானிருந்தது. அந்த உறுத்தலோடு அவன் தன்னையுமறியாது மகிந்தரின் மாளிகையை நாடிச் சென்றான். முதன்முறையாக அவர்களுடைய நலத்தைக் கேட்டுவர வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு!
தோட்டத்துப் புறமாக இருந்த சாளரத்தின் அருகே உட்கார்ந்துகொண்டு திரைச்சீலையில் ஏதோ சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தாள் ரோகிணி. அவளறியாமல் மெல்லச் சென்று அதை எட்டிப் பார்த்தான். அவளுடைய தம்பி காசிபனின் உருவம் அரைகுறையாக அதில் வரையப்பட்டிருந்தது.
“உனக்குச் சித்திரம்கூட வரையத் தெரியுமா, ரோகிணி!’’
“வாருங்கள்’’ என்று அவசர அவசரமாக அருகிலிருந்த வண்ணமைக் கிண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவனை அமரச் சொன்னாள். திரைச் சீலையையும் நகர்த்தி வைத்தாள். தூரிகையை விட்டெறிந்தாள் “இந்த ஏழைகளின் நினைவு உங்களுக்கு மறந்து போகாமல் இருப்பது எங்கள் பாக்கியந்தான்!’’
“கப்பகல்லகம் அரண்மனையில் நீங்கள் வாழ்ந்த அளவுக்கு உங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியாவிட்டாலும், ஏதோ எங்களால் இயன்ற வரை செய்திருக்கிறோம். குறைகள் ஏதேனும் இருந்தால் சொல்; தந்தையாரிடம் கூறிக் கவனிக்கச் செய்கிறேன்.’’
“இந்த நாட்டின் அமைச்சர்தாம் உங்கள் தந்தையா!’’
“ஆமாம்.’’
வீரமல்லன் அவளிடம் கூறிய இதர உறவுமுறைகளைப் பற்றியும் இளங்கோவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் ரோகிணி. மணவினைத் தொடர்பு பற்றிய பேச்சை மட்டிலும் அவனிடம் அவள் எழுப்பவில்லை.
“இந்த மாளிகையில் எனக்கு ஒரே ஒரு குறை இருக்கிறது. அதை உங்களால் நீக்க முடிந்தால் சிறிது அமைதி கிடைக்கும்’’ என்றாள்.
திகைப்போடு, “குறையா? என்ன அது?’’ என்று கேட்டான்.
“ஒன்றுமில்லை; இந்த மாளிகையை மேற்பார்வை செய்வதற்கு உங்கள் நண்பன் ஒருவனை நியமித்திருக்கிறீர்களே, அவனுக்கு வேறு ஏதாவது வேலை கொடுத்தால் நன்றாயிருக்கும். அவனுடைய அளவுக்கு மீறிய உபசாரங்களையும் பணிவிடைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது.உபசரிப்பிற்கும் ஒரு வரம்பு வேண்டும் பாருங்கள்!’’
“வீரமல்லனையா சொல்கிறாய்?’’
“நான் அவனைக் குறை கூறவில்லை. கப்பலில் என்னுடைய தனிமையில் ஒருமுறை நீங்கள் குறுக்கிட்டபோது உங்களிடமே நான் எப்படி நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்த மட்டில் அவனுடைய குறுக்கீடு எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. நீங்களாகக் கேட்டதால் சொல்லுகிறேன்.’’
“நான் இப்போது குறுக்கிட்டதுகூடத் தவறுதானா?’’ என்றான் இளங்கோ.
“ஒருமுறை நான் உங்களுக்குத் தவறு செய்துவிட்டேன்; இனி எப்போதும் அப்படி நடக்காது. தயவு செய்து அதை மறந்து விடுங்கள்’’ என்று கனிவோடு கூறினாள் ரோகிணி. “ஆனால் வீரமல்லன் உங்களுக்கு நண்பனாக இருக்கலாம்; எனக்கு அவன் நண்பனல்ல!’’
இளங்கோ தன் கரங்களைப் பிசைந்து கொண்டான். குளத்தங்கரையில் வீரமல்லன் ரோகிணியைப் பற்றித் தன்னிடம் செய்த உபதேசம் அவன் நினைவுக்கு வந்தது. அவன் செய்த உபதேசத்தை அவனே மெய்யென்று நம்பியிருந்தால் எதற்காக ரோகிணியிடம் நெருங்கிப் பழக முற்படுகிறான்?
அவனை அவசியம் அங்கிருந்து மாற்றிவிடச் செய்கிறேன் என்று கூறக்கூடிய துணிவு இளங்கோவிடம் இல்லை. அவனை அங்கு நியமித்தவர் அவனுடைய தந்தையார் மதுராந்தக வேளார். அவரிடம் நேரில் நின்று பேசுவதற்கே இளங்கோ தயங்குவது வழக்கம். அவரிடம் இதைப் போய் எப்படிச் சொல்வது?
“என்ன யோசிக்கிறீர்கள்?’’
“இல்லை. ஒன்றுமில்லை’’ என்றான் இளங்கோ. இந்த விஷயத்தில் ஒன்றுமே அவனால் செய்யமுடியாது. ஆயினும் தன் ஆற்றாமையை அவளிடம் காட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை.
இந்தச் சமயத்தில் சாளரத்துக்கு வெளியே செடி மறைவுக்குப் பின்னால் இரண்டு குரல்கள் கேட்கவே, அவர்கள் இருவரும் எழுந்து சென்று எட்டிப் பார்த்தார்கள். ஒருவன் வீரமல்லன், மற்றொருவன் மல்லர் தலைவன் மாங்குடி மாறன்.
“என்ன மாங்குடியாரே. அநுமார் ராமனைத் தோளில் தூக்கிக்கொண்டு இலங்கையில் கூத்தாடினாராம்; நீங்கள் இளங்கோவைத் தூக்கிக்கொண்டு கடற்கரையில் ஆடிய கூத்து, அதைவிடப் பெரிதாக இருந்ததே!’’
“கொடும்பாளூர் இளவரசர் ராமரானால் அவருக்கு நான் அநுமாராவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தம்பி! ஈழத்துக்கு நான் போயிருந்தால் அநுமார் செய்ததைத்தான் செய்திருப்பேன். அவருடைய வீரத்தைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்கிறார்களே, நீ கேட்கவில்லையா?’’
“கேட்டேன், கேட்டேன். அவன் வாயாலேயே சொல்லக் கேட்டேன்!’’ என்று ஏளனமாய்க் கூறிவிட்டு விகாரமாகச் சிரித்தான் வீரமல்லன்.
“என்ன கேட்டாய்!’’ என்று பயங்கரமாய் உறுமினான் மல்லர் தலைவன்.
“நீ சிரிக்கும்படி அதில் என்ன இருந்தது?’’
“வீரத்தினால் அவன் மணிமுடியைக் கொண்டுவந்து விட்டதாக எல்லோருக்கும் எண்ணம். நடந்தது என்ன தெரியுமா? மகிந்தரின் பெண் ஒருத்தி இருக்கிறாளே, அவளை ஏமாற்றி அதை வஞ்சமாக எடுத்து வந்திருக்கிறான் அவன்.’’
“வீரமல்லா!’’ என்று கத்திக்கொண்டே அவன்மீது பாய்ந்து அவன் தோள்களைப் பற்றிக் குலுங்கினான் மாங்குடி மாறன். “இளவரசரைப் பற்றி நீ என்ன வார்த்தை சொல்லத் துணிந்தாய்? அவருடைய தோளை நீ பார்த்தாயா?’’ என்று கூறிக்கொண்டே இருகூறாய்க் கிழிக்க விரும்புகிறவன்போல் இருபுறமும் பற்றி இழுத்தான்.
செடிகளை விலக்கிக்கொண்டு அங்கு தாவி ஓடிச்சென்றான் இளங்கோ. இளங்கோவைக் கண்டவுடன் மாங்குடி மாறனின் மரணப்பிடி நழுவியது.
ஆனால் வீரமல்லனின் ஆத்திரம் அடங்கவில்லை. அது இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டெரிந்தது.
“இதோ வந்துவிட்டான். இவனையே கேட்டுப்பாரும் மாங்குடியாரே! வீரமாவது மண்ணாங்கட்டியாவது! மகிந்தர் இவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்காவிட்டால் இவன் இங்கு மீண்டிருக்க முடியுமா? அவருடைய மகளின் உதவி இல்லாவிட்டால் இவனை இன்றைக்கு ஊர் உலகம் வீரனென்று சொல்லுமா?’’
வீரமல்லனா இப்படிப் பேசுகிறான்? அவனுக்கு வெறிபிடித்து விட்டதா என்ன?
ரோகிணியைக் கடலில் தூக்கி எறிய நினைத்தபோது அவளை உற்றுப் பார்த்தானே, அதேபோல் இன்று வீரமல்லனைப் பார்த்தான் இளங்கோ. அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன, புருவங்கள் துடித்தன.
“இளவரசே! எனக்கு அனுமதி கொடுங்கள். இவனை மிதித்தே கொன்று விடுகிறேன். எந்தச் செடியின் நிழலில் நிற்கிறானோ அதையே வெட்டக்கூடிய மாபாதகன் இவன். மிதித்துத் துவைத்து இவனை எருவாக்கி இந்தத் தோட்டத்து மண்ணில் போட்டு உழுது விடுகிறேன், பிரபு!’’ மாங்குடிமல்லனின் மலைபோன்ற சரீரம் கோபத்தால் நடுங்கியது.
பொறாமை தூண்டிவிட்ட ஆத்திரம் வீரமல்லனிடம் மேலும் பற்றி எரியத் தொடங்கியது. “ரோகிணியால் நீ வீரனானாய் என்பது உண்மைதானே, இளங்கோ?’’ என்று கேட்டான.
இளங்கோவால் அதற்குப் பிறகும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பளீர் பளீரென்று தனது கை சளைக்குமட்டும் அவன் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான்.
வீரிட்டலறிக்கொண்டே அந்த இடத்துக்கு ரோகிணி ஓடி வந்திருக்காவிட்டால், வீரமல்லனின் நிலை எப்படி ஆகி இருக்குமோ, தெரியாது.
கன்றிக் கறுத்துப் போன முகத்தில் பதிந்திருந்த வீரமல்லனின் குரோதம் மிக்க கண்கள் இளங்கோவை எரித்து விடுவதுபோல் நோக்கின. அதைத் தவிர எந்தவிதமான எதிர்ப்பு உணர்ச்சியையும் அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ரோகிணி அங்கு நடந்ததைப் பார்த்து விட்டாள் என்று தெரிந்தவுடன் அவனுடைய வஞ்சம் அவனது நெஞ்சையே தின்றது.
“இளங்கோ...’’ என்று எதையோ சொல்வதற்கு வாய் திறந்தான்.
“இனிமேல் பெயர் சொல்லி அழைக்க உனக்கு உரிமையில்லை. நட்புரிமை கொண்டாடினாயே, அதை இந்தக் கணத்துடன் மறந்துவிடு. இனி நீ ஓர் ஆயிரவர் படைத்தலைவன்.’’
இளங்கோ அதற்குப்பின் அங்கு நில்லாமல், சட்டென்று திரும்பி அரண்மனைப் பக்கம் நடந்தான்.
“உன்னை உயிரோடு விட்டுவிட்டுப் போகிறாரே!’’ என்று மாங்குடி மாறன் பதற்றத்தோடு வீரமல்லனிடம் கூறிய சொல், இளங்கோவின் செவிகளில் விழாமல் இல்லை.
இந்தக் காட்சி முழுவதையும் மேல்மாடத்திலிருந்து ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார் மகிந்தர். நண்பர்களைப் பகைவர்களாக மாற்றிய அந்தக் காட்சி அவர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. தமது
கண்களை இடுக்கிக்கொண்டு அவர் மௌனப் புன்னகை புரியலானார்.
தொடரும்
Comments
Post a Comment