Skip to main content

வேங்கையின் மைந்தன்- புதினம் -பாகம் 2 -10

 

சோழ சாம்ராஜ்யத்தின் ஒன்பது மண்டலங்களிலும் வெற்றி விழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கிராமங்கள், கூற்றங்கள், நாடுகள், வளநாடுகள் இப்படித் தன்னகத்தே பல சிறிய பெரிய எல்லைகள் வகுத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மண்டலமும் விழாவில் முதன்மை பெறுவதற்காக முயன்று கொண்டிருந்தன. தென்பாண்டி மண்டலத்தில் மட்டும் ஒரு பக்கம் உற்சாகமும் மறுபக்கம் புகைச்சலும் காணப்பட்டன. 

தஞ்சை அரண்மனை ஆலோசனை மண்டபத்தில் மாமன்னர் பெரியதோர் ஆசனத்தில் சாய்ந்தவாறு வீற்றிருந்தார். அவர் அருகில் கொடும்பாளூர் பெரிய வேளார் பணிவோடு அமர்ந்து விழாச் செய்திகளை விவரிக்கத் தொடங்கினார். சாம்ராஜ்யம் முழுவதும் கோலாகலமாக வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்கான திட்டங்கள் உருப்பெற்றிருந்தன. 

“ஆமாம்! ஒருநாள் கூத்தாக இது போய்விடக்கூடாது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத எண்ணங்களை நாம் அந்த ஒரு நாளில் ஊன்றிவிட வேண்டும்’’ என்றார் மாமன்னர். 

“சக்கரவர்த்திகள் அளித்துள்ள செய்தியை ஒவ்வொரு கிராமத் தலைவருக்கும் அனுப்பச் செய்திருக்கிறேன். விழாவுக்கான திட்டங்களும் அவர்களை எட்டியிருக்கின்றன’’ என்றார் பெரிய வேளார். 

“இந்த விழா நம்முடைய மக்களின் தன்னம்பிக்கை விழாவாக இருக்கவேண்டும். நாம் எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெற்றுத் தீருவோம் என்ற துணிவு அவர்களுக்கு இதனால் ஏற்பட வேண்டும். சோர்வும், சோம்பலும், கோழைத்தனமும் இனி அணுவளவும் இந்தத் தமிழ் மண்ணில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. இது மக்களின் சக்தியை மக்களுக்கு 

உணர்த்தும் விழா. தெரிந்ததா, பெரிய வேளார் அவர்களே?’’ 

“பாண்டியர்கள் இப்போதே பதறத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றார் பெரிய வேளார். 

“பாண்டியர்கள் கிடக்கட்டும். வடக்கு எல்லையின் நிலைமை என்ன;நான் ஈழத்துக்குச் சென்றிருந்தபோது வடக்கு எல்லையில் பகைவர்கள் ஏதேதோ சிறிய தொல்லைகள் கொடுக்க முற்பட்டதாகக் கூறினீர்களே?’’ 

“பயங்காட்டி விளையாடுகிறார்கள்’’ என்று அலட்சியமாகச் சிரித்தார் பெரிய வேளார். “மாதண்ட நாயகர் அரையன் ராஜராஜனுக்கு அவர்களின் துரோக விளையாட்டுக்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்ற துடிப்பு. நான்தான் இப்போதைக்கு அமைதியாக இருக்கும்படி செய்திவிடுத்தேன். பாவம்! இதுவரையில் கால் வயிற்றுக் கஞ்சிகூடக் கிடைக்காமல் திண்டாடியவர்களுக்கு இப்போது தான் அரைவயிறு நிரம்பத்தொடங்கியிருக்கிறது. அதற்குள் அவர்களுக்குத் தினவு தாங்கவில்லை. செருக்கு மிகுதியால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.’’ 

“என்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டியதுதான்’’ என்றார் சக்கரவர்த்தி. “பகை சூழ்ந்த உலகில்தான் நாம் வாழ்கிறோம். சாவுக்கு அஞ்சுகிறவர்களுக்கு இங்கு வாழ்வில்லை. இதை நம்மவர்கள் மறந்துவிடவே கூடாது. நமது எதிர்காலப் புதுமலர்ச்சிக்கு நாட்டு மக்களின் மனத் திண்மையும் உழைப்புமே மூலாதாரங்கள்.’’ 

“தாங்கள் ஈழத்திலிருந்து கொண்டுவந்துள்ள மணிமுடி நமது பொற்காலத்தின் விடிவெள்ளி. இந்த ஒளி காட்டும் நம்பிக்கை வழியில் கட்டாயம் நம்மவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்’’ என்று பெருமையோடு கூறினார் பெரிய வேளார். 

“ஆமாம், காஞ்சியிலிருந்து ராஜாதிராஜன் எப்போது இங்கு திரும்புகிறான்? வந்தவுடன் அவனைப் பார்த்துவிட்டு நான் பழையாறைக்குப் புறப்படவேண்டும்’’ என்று கூறினார் சக்கரவர்த்தி. 

“இரண்டு மூன்று தினங்களில் வந்து சேரக்கூடுமென்று செய்தி வந்திருக்கிறது. முன்பே காஞ்சிமாநகரை விட்டுக் கிளம்பிவிட்டாராம். வெற்றி விழாவின்போது தாங்களும் இளவரசரோடு தலைநகரில் இருந்தால்...’’ என்று, பணிவோடு தஞ்சைமாநகரில் அவரைத் தங்கும்படி வேண்டுகோள் விடுத்தார் மதுராந்தக வேளார். 

“விழாவின்போது நான் இருக்க வேண்டிய இடம் பழையாறைதான்’’ என்றார் மாமன்னர் “பழையாறையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஐம்பதினாயிரம் போர் வீரர்களுக்கு மேல் ஈழத்திற்கு வந்திருந்தார்கள். ஈழப் பெரும் படையின் பிறப்பிடமே பழையாறை. அதற்கு வடக்கே இரண்டு மூன்று காதம் வரையிலிருந்து நாம் வீரர்களைப் பொறுக்கி எடுத்துச் சென்றிருக்கிறோம். பத்தாயிரம் வீரர்களுக்குமேல் ஈழ நாட்டில் உயிர் இழந்திருக்கிறார்கள். மேலும் பத்துப் பன்னிரண்டாயிரம் பேர் வரை படுகாயமுற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வெற்றிக்கு மூலகாரணமான வீரர்கள் குடியிருப்புக்கு நான் செல்வதுதானே முறை!’’ 

“சித்தம், சக்கரவர்த்திகளே’’ என்றார் பெரிய வேளார். “இராஜாதிராஜன் தஞ்சையில் இருக்கட்டும். நீங்கள் கொடும்பாளூருக்குச் சென்று வாருங்கள். காஞ்சியை மாதண்ட நாயகர் அரையன் ராஜராஜன் கவனித்துக் கொள்வார், மதுரைக்கு... மதுரைக்கு...’’ என்று பேச்சைக் கூட முடிக்காமல் தயங்கினார் இராஜேந்திரர். சிறுபொழுது அப்படியே யோசனையில் ஆழ்ந்திருந்தார். 

பணியாள் ஓடிவந்து வல்லவரையரும் ஈராயிரம் பல்லவரையரும் சக்கரவர்த்தியைக் காண வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். அவனிடம் அவர்களை அழைத்து வரச் சொல்லிவிட்டு, ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தார் மாமன்னர். அவர்கள் வந்தவுடன் ஈராயிரம் பல்லவரையரை உற்றுப் பார்த்தார். 

“பல்லவரையர் அவர்களே! பாண்டியர்கள் மூவரும் என்ன மறுமொழி கூறியிருக்கிறார்கள்?’’ 

“விழாவில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. அதை வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். மக்களது உற்சாகத்தைக் குலைப்பதற்கு மறைமுகமான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. பாண்டியர்களுக்கு உரிய முடியை நாம் கவர்ந்து கொண்டு வந்துவிட்டோமாம். சோழர்களுடைய வெற்றி விழாவில் பாண்டிய நாட்டு மக்கள் கலந்து கொள்வது தவறாகுமாம்.’’ 

“போகட்டும்! வேறு ஏதேனும் முக்கியமான செய்திகள்?’’ 

வெற்றி விழாவென்று சிறிய இளவரசன் சுந்தரசோழருக்கு மதுரையில் நாம் இளவரசுப் பட்டம் கட்டக் கூடும் என்று பாண்டியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஈழத்திலிருந்து கொண்டு வந்த முடியே இளவரசின் முடியாகப் போகிறதாம். மதுரை புது மாளிகையில் இந்த முடிசூட்டு விழா நடக்குமானால், அந்த மாளிகையைத் தகர்த்துவிட வேண்டுமென்பது அவர்கள் திட்டம். விழாவன்று ஏதேனும் இப்படி நிகழக் கூடுமென்று தெரிந்து,எச்சரிக்கையோடு படைகளையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறேன்.’’ 

“அவர்கள் ஓரளவு நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’’ என்றார் 

சக்கரவர்த்தி. இப்போது மதுரையில் இருக்கும் சுந்தரசோழனை விழாவன்று சுந்தரசோழ பாண்டியன் என்ற முறையில் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். சோழ, சேர, பாண்டியர்கள் அனைவருமே தமிழர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நம்முடைய பழைய வரலாற்றில், வடக்கே அசோகரது சாம்ராஜ்யம் பரவி வந்த காலத்தில் மூவேந்தர்களும் ஒரே வேந்தரின் கீழ் ஒன்றியிருந்து, தங்கள் ஒற்றுமையை அவருக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள். அசோகரது ஆட்சி இங்கு எட்டாமல், அவர் நம்முடன் நட்புறவு பூண்டதற்குக் காரணம் அந்த ஒற்றுமைதான். வடக்கு வாயிலில் நம்மை அழிக்கக் காத்து நிற்கும் மேலைச் சளுக்கப் பகைவரைப் பற்றிப் பாண்டிய நாட்டு மக்களிடம் கூறுங்கள். பகைவர்களோடு உறவாடித் தமிழ் இனத்துக்கு இழுக்குத் தேடுபவர்கள் தங்களைப் பாண்டியர் என்று கூறிக் கொள்வதைவிட சுந்தர சோழனுக்கு அந்தப் பெயர் மிகவும் பொருந்தும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.’’ 

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, “அன்று ஏதேனும் தகாத செயல்கள் நடந்தால்...?’’ என்று கேட்டார் ஈராயிரம் பல்லவரையர். 

“நடக்காது; நடக்கவும் விடக்கூடாது!’’ என்றார் மாமன்னர் கடுமையான குரலில். அதுவரையில் அமைதியோடிருந்த வல்லவரையர் ஈராயிரம் பல்லவரையரை நோக்கிக் கூறலானார்: 

“நமது கைக்கோளைப் படை வீரர்களில் பாதிப் பகுதியினரை அன்று பொது மக்களின் உடையில் மற்றவர்களுடன் கலந்து கொள்ளச் செய்யுங்கள். தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை களியாட்டங்களும் கூத்துக்களும் நடந்துவோம். பாண்டிய மன்னர்கள் மேலைச் சளுக்கர்களோடும் ஈழத்து அமைச்சரோடும் சேர்ந்து கொண்டு புரியும் சதிச் செயல்கள் அன்று அம்பலமாக்கப்பட வேண்டும். இனி சிறிய இளவரசர் சுந்தர சோழரே மக்களின் எதிர்காலப் பாண்டியர் என்பதை நாம் சூசகமாக அறிவித்து விடுவோம்.’’ 

“ஓராண்டு காலமாக அவர்கள் நமக்கு எதிராகப் பொய்க்கூற்றைப் பரப்பி வருகிறார்கள். அதை ஒரே நாளில் மாற்ற முடியுமா?’’ என்றார் பெரிய வேளார். 

“ஓராண்டுப் பொய்யை ஒரு நாள் உண்மை வெல்வதென்றால் கடினந்தான். ஆனால் உண்மைக்கு வலிமை அதிகம்; நாளடைவில் அது தானாகக் கிளைத்துத் தழைத்து நாட்டுப்புறங்கள் தோறும் பரவிவிடும்’’ என்று கூறினார் சக்கரவர்த்தி. 

பின்னர், எதிர்பாராத தாக்குதல் நிகழ்ந்தால் எப்படி நடந்து கொள்வதென்பதைக் கூறிவிட்டு, “ஆத்திர மூட்டக்கூடிய சிறு நிகழ்ச்சிகள் நடந்தால் பொறுமை இழக்க வேண்டாம். ஆனால் அவற்றுக்குப் பின்னால் அபாயம் இருந்தால் கவனிக்கத் தவற வேண்டாம்’’ என்றார். சிறிய இளவரசன் சுந்தரசோழனும் சேனாபதி கிருஷ்ணன் ராமனும் அப்போது மதுரையில் இருந்தார்கள். அவர்களோடு ஈராயிரம் பல்லவரையரும் தமது படைவீரர்களுடன் சேர்ந்து கொள்வதென்று ஏற்பாடாயிற்று. ஆலோசனை முடிந்தபின்பு அனைவரும் எழுந்து மண்டபத்துக்கு வெளியே நடந்தார்கள். தூரத்தில் ஒரு தூணின் ஓரமாக இளங்கோவும் அரண்மனை வைத்தியரும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பெரியவர்களைக் கண்டவுடன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவப் பார்த்தான் இளங்கோ. 

அவனுடைய தோள் பட்டையைக் கூர்ந்து நோக்கிய வல்லவரையர், “இளங்கோ! என்ன இது? திரும்பவும் ஏன் கட்டுப் போட்டிருக்கிறாய்?’’ என்றார். 

அதற்குள் பெரியவர்கள் அனைவரும் அவனுக்கு அருகில் வந்து விட்டார்கள். எல்லோருடைய கண்களும் அவன் மீது நிலைத்திருந்தன. 

“ஒன்றுமில்லை தாத்தா’’ என்றான் இளங்கோ. 

“ஒன்றுமில்லையாவது! இவருக்கு வைத்தியம் செய்வதை விடச் சும்மாயிருக்கலாம்’’ என்று கடிந்து கொண்டார் வைத்தியர். “முக்கால் பகுதிக்கு மேல் ஆறிப்போய்த் தழும்பாகிவிட்ட காயத்தை இவராகத் திருப்பிக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ சொல்லி வைத்திருந்தேன், கேட்கவில்லை. திரும்பவும் வாட்பயிற்சி செய்தாரோ, வேலெடுத்து வீசினாரோ, வில் வளைத்தாரோ தெரியாது. தழும்பெல்லாம் ரத்தம் கசிந்து வீங்கிக் கொண்டுவிட்டது.’’ 

“நீ என்ன சிறு குழந்தையா, இளங்கோ?’’ என்று செல்லமாய்க் கடிந்துகொண்டார் சக்கரவர்த்தி. 

“பாண்டியநாட்டுப் போர்க்களம் நினைவுக்கு வந்திருக்கும்; ஒரு கை போனாலும் பாதகமில்லை என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது’’ 

என்றார் பெரிய வேளார். 

“வைத்தியர் சொல்கிறபடி நடந்து வா, பேசாமல் என்னேடு பழையாறைக்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லி விட்டு நடந்தார் இராஜேந்திரர். 

பெரியவர்கள் சென்றவுடன் தனக்குள் மெல்ல நகைத்துக்கொண்டான் இளங்கோ. அடுத்தாற்போல் அவனுக்கே வருத்தமாகவும் இருந்தது. வீரமல்லனை அறைந்த அதிர்ச்சியில் தனக்கே இவ்வளவு வலியும் வேதனையும் ஏற்பட்டிருக்குமானால் பாவம், வீரமல்லனின் கதி என்ன ஆகியிருக்கும்? 


தொடரும் 

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...