Skip to main content

வேங்கையின் மைந்தன்-பாகம் 2 , 8. தந்திரம் வெல்லுமா?


வீரமல்லன் மதுரை மாநகரை விட்டுத் தஞ்சைத் தலைநகருக்குப் புறப்பட்ட அன்று பெரும்பிடுகு முத்தரையரின் மகள் திலகவதியிடம் சென்று விடைபெற்றுக்கொண்டு வந்ததோடல்லாமல், அவள் வாயிலாக அவள் தந்தைக்கும் கூறிவிட்டு வந்தான்.

அவன் அப்படிச் செய்ததற்குப் பல காரணங்கள் இருந்தன.

திடீரென்று அவன் மதுரையைவிட்டு மறைந்து போனால் திகலவதி வீணாகச் சந்தேகப்படுவாள். அவளுடைய சந்தேகம் அவள் தந்தைக்குப் பரவாமல் இருக்காது. வீரமல்லன் இதைச் சிறிதும் விரும்பவில்லை.

பெரும்பிடுகு முத்தரையர் சுந்தரபாண்டியரின் சேனாபதியாக இருந்தாலும் அவர் வீரமல்லனின் குலத்தைச் சேர்ந்தவர்; அவனும் ஒரு முத்தரையன் என்பதாலேயே அவனை எளிதில் நம்பியவர். அவருடைய நம்பிக்கை, சுந்தரபாண்டியரிடம் அவனுக்குப் பரிச்சயம் ஏற்படுத்தி வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதை நினைத்து வீரமல்லன் வியப்படைந்தான்.

முத்தரையரைப் பகைத்துக் கொள்ளவும் அவனுக்கு எண்ணமில்லை; தான் ஓர் ஒற்றன் என்று காட்டிக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை. மேலும் அவருக்கு ஓர் அழகான அசட்டுப் பெண் இருந்தாள். பெண்களுக்கு அறிவு தேவை என்று அப்போது வீரமல்லன் நினைக்கவில்லை. அவளிடம் அழகு இருந்தது; கண்கவரும் பேரழகுடன் அவள் அவனுக்குத் தோற்றம் அளித்தாள்.

தந்தையும் மகளும் சேர்ந்து அவன் வீரத்தைப் புகழ்ந்தார்கள்; வித்தையைப் பாராட்டினார்கள். சோழர்களால் அவன் அலட்சியப் படுத்தப்பட்டதாகக் கூறியவுடன், அவனிடம் அன்பு காட்டி ஆறுதல் அளித்தார்கள். அவர்களது வீட்டில் அவனுக்கு அறுசுவை விருந்தும், ஆர்வமிக்க உபசாரமும் கிடைத்தன. வளம் நிறைந்த ஓர் எதிர்கால வாழ்வுக்கே அவர்கள் வழிவகுத்துக் கொடுப்பார்கள் போல் தோன்றியது.

இவ்வளவுக்குப் பிறகும் வீரமல்லன் எப்படி அவர்களை மறக்க முடியும்? கடமை மறவாத சோழ நாட்டானாக இருந்தால் அது வேறு விஷயம். தனது நண்பன் இளங்கோவைப்போல் வாழமுடியவில்லையே என்று மனத்தில் குறைக்குழி தோண்டிக்கொண்டவன் அவன். அந்தக் குழிக்குள் பொறாமையின் வித்தை ஊன்றிக் கொண்டவன்.

சோழப் பேரரசின் செஞ்சோற்றுக் கடனை அவன் மறந்துவிட்டானா? நன்றி உணர்ச்சியை அவன் மென்று விட்டானா? அதிகார வெறியால் ஆடிச் சுழன்ற எத்தனை எத்தனையோ மனிதர்களை இந்த மண்ணுலகம்
பொறுமையோடு தாங்கி வந்திருக்கிறதே!

முத்தரையரின் வீட்டுக்குள் வீரமல்லன் நுழைந்தபோது, அவன் விரும்பியது போலவே அவர் வெளியில் சென்றிருந்தார். யாரோ தன்னைத் துரத்தி வருவது போன்ற பாவனையில் அவன் பரபரப்போடு சென்று வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தான்.

“திலகவதி! உன் தந்தையார் இருக்கிறாரா? அவசரமாக ஒரு செய்தி சொல்லிவிட்டுப் போக வந்தேன்.’’

“அவசரம் எதற்கு? இப்படி வந்து அமர்ந்து பேசுங்கள்’’ என்று ஆசனத்தைச் சுட்டிக் காட்டினாள் திலகவதி. மாலையில் அவனுடன் திரும்பியவர் மீண்டும் எங்கோ சென்றதாகக் கூறினாள்.

“விவரமாகச் சொல்வதற்கு இப்போது பொழுதில்லை. நான் மெய்யப்பரின் அங்காடியில் பணியாற்றுவதை எப்படியோ சோழ நாட்டு ஒற்றர்கள் கண்டுவிட்டார்கள். என்னால் மெய்யப்பருக்குத் தொல்லை வரும்போல் தெரிகிறது. நான் இனி மதுரையில் தங்குவது நல்லதல்ல. உடனடியாகத் தென்பாண்டி நாட்டுப்பக்கம் புறப்படுகிறேன். உன் தந்தையார் வந்தால் நான் விடைபெற்றுக் கொண்டதாகக் கூறிவிடு’’ என்றான் வீரமல்லன்.

இதைக் கேட்டவுடனேயே கண்கள் கலக்கமுற்றன திலகவதிக்கு.

“வீரர்களை எந்த விநாடியிலும் ஆபத்துச் சூழ்ந்து கொண்டிருக்கும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவார்கள். உங்கள் விஷயத்திலும் அது உண்மையாகி விட்டது. கனவில் தோன்றுவது போல் தோன்றிவிட்டு இப்போது மறையப் பார்க்கிறீர்களே.’’

“எனக்கு விடை கொடுத்து அனுப்பு திலகவதி!’’

“முடியாது! நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள். தந்தையார் வந்தவுடன் உங்களுடைய பாதுகாப்புக்கு அவரை ஏற்பாடு செய்யச் சொல்லுகிறேன். பகைவர்களுக்கு அஞ்சிக்கொண்டு நீங்கள் வேறெங்கும் போகவேண்டாம். நம்முடைய வீட்டுக்கடியில்கூட நிலவறைகளும் சுரங்கப் பாதைகளும் நிறைய இருக்கின்றன.’’

முத்தரையர் திரும்பி வருவதற்குள் திலகவதியிடமிருந்து எப்படியாவது தப்பிச் செல்லப் பார்த்தான் வீரமல்லன். திலகவதியோ அவனை விடுவதாகவே இல்லை. கடைசியில் தனக்கு அவளிடம் அளவற்ற அன்பும் பற்றுதலும் இருப்பதாகவும் அவளை மறக்கவே முடியாதென்றும், விரைவில் திரும்பி வந்துவிடுவதாகவும் கூறி மன்றாடினான்.

“திலகவதி! இப்போதுதான் நம்மவர்கள் போருக்குச் சித்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நான் இங்கிருப்பது பகைவர்களுக்குத் தெரிந்துவிட்டால் திடீரென்று என் பொருட்டுப் போர் தொடங்கினாலும் தொடங்கிவிடும். என்னால் உன் தந்தையாருக்கோ, உனக்கோ உடனடியாகத் துன்பம் வரக்கூடாதல்லவா? ஒற்றர்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு எப்படியும் சில மாதங்களில் திரும்பி வந்து விடுகிறேன். உன்னைக் காணாமல் என்னால் வெகு நாட்கள் பிரிந்திருக்க முடியுமா?’’

பிரியாவிடை கொடுத்து அனுப்பினாள் பேதைப் பெண். அவள் உள்ளத்தை உருக்கி வழியச் செய்துவிட்டு, வில்லினின்று விரைந்த அம்பென வெளியேறி வந்தான் வீரமல்லன். ‘சிறு துரும்பும் சமயத்தில் உதவி செய்யும்; அதேபோல் ஒரு நாளைக்கு இவர்களுடைய உதவியை நாட வேண்டியிருந்தாலும் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.

தஞ்சை அரண்மனையில் இருப்பது வீரமல்லனின் வேலை. மகிந்தரின் குடும்பத்தாருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் கவனிப்பதாகும்.

அரண்மனைக் கோட்டைக்குள் அரசமாளிகைக்குப் பின்புறம் இருந்த மாளிகைகளில் ஒன்றை மகிந்தருக்கு ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். அந்த மாளிகையின் மேற்பார்வைப் பொறுப்பு அப்போதைக்கு வீரமல்லனிடம்
ஒப்புவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவுக்குப் பழக்கமானவன் என்பதால் அவன் தந்தை மதுராந்தக வேளார் இந்த ஏற்பாட்டைத் தாமே செய்து வைத்திருந்தார்.

“தோல்வியுற்ற மன்னர் என்ற அலட்சியம் இருக்கக் கூடாது; விருந்தினர்போல் நடத்த வேண்டும்; அதே சமயம் அவருக்குச் சந்தேகம் ஏற்படாத வண்ணம் அவருடைய நடவடிக்கைகளையும் கவனித்துச் சொல்ல வேண்டும்’’ என்றார். “மதுரையில் உனக்கு ஒற்றனாக இருந்து பழக்கம் இருக்கிறதல்லவா? அந்த அநுபவத்தையும் பயன்படுத்திக் கொள்.’’

இதைக் கேட்ட வீரமல்லன் கொடும்பாளூர் வேளிர்கள் மிகவும் தந்திரசாலிகள் என்று எண்ணலானான். மதுரையில் அவன் ஒற்றனாக இருந்ததை அவர் நினைவூட்டிய போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. ‘கொடும்பாளூர் வேளிரைவிடச் சந்திரலேகை முத்தரையர்கள் தந்திரத்தில் சளைத்தவர்கள் அல்லர்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

மகிந்தரின் குடும்பம் மாளிகையில் குடியேறிய இரண்டு தினங்களுக்குப்பின் ஒருநாள் மாளிகைத் தோட்டத்தைப் பணியாட்கள் திருத்தி அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்புறக் கூடத்தில் நின்றவாறு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரோகிணி. பணியாட்களை மேற்பார்வையிடும் சாக்கில் அவர்களிடம் சிறுபொழுது நின்றுவிட்டு மெல்லக் கூடத்தை நோக்கி வந்தான் வீரமல்லன்.

“இளவரசி! திருவாரூரில் அன்றைக்கு இரவு நீங்கள் இட்ட பணியை நான் செய்யவில்லை என்று என்மேல் உங்களுக்குச் சினம் இருக்கும். ஆனால், உண்மையில் அவனைத் தேடிக்கொண்டுதான் போனேன்.’’

“மிகவும் நன்றி’’ என்று அலட்சியப் புன்னகை உதிர்த்தாள் ரோகிணி.

“ஆனால் நான் போய்ச் சொல்வதற்குள் அவனே உங்களிடம் வந்துவிட்டானென்று தெரிந்தது.’’

அவள் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

“நான் மறுத்துச் சொல்வதற்குக் காரணம் உங்களிடம் இருந்த அநுதாபம். மாமன்னர் எதை விரும்புவாரோ, அதை மட்டுமே நாங்கள் செய்யவேண்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் எங்களுக்குத்தான் ஆபத்து.’’

‘இவன் எதற்காக இங்கு வந்து உளறிக்கொண்டு நிற்கிறான்? மாமன்னருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று நினைத்தாள் ரோகிணி.

“மாமன்னருடைய சொந்த மைத்துனர்தாம் கொடும்பாளூர்ப் பெரிய வேளார் என்பதும், மைத்துனரின் மகன் இளங்கோ என்பதும் உங்களுக்குத் தெரியுமா, இளவரசி?’’

கண்களை அகலத் திறந்துகொண்டு அவனை வியப்போடு ஏறிட்டுப் பார்த்தாள் ரோகிணி.

“மகாராணி வீரமாதேவி இளங்கோவுக்குச் சொந்த அத்தையார் முறைவேண்டும். அவர்களது பெண் இளவரசி அருள்மொழி இருக்கிறார்களே, அவர் இளங்கோவுக்கு முறைப்பெண். காலங்காலமாகவே கொடும்பாளூருக்கும் தஞ்சைத் தலைநகருக்கும் மணவினைத் தொடர்பு உண்டு. அப்படியிருக்கும் போத தமது பெண் அருள்மொழியை இளங்கோவுக்குக் கொடுக்க வேண்டுமென்பது சக்கரவர்த்திகளின் நோக்கமாக இருக்கலாமல்லவா?’’

இதைக் கேட்டவுடன் காரணத்துடனோ, காரணமில்லாமலோ ரோகிணியின் முகம் சினத்தால் சிவந்தது.
 
“யாருக்கு யார் என்ன உறவுமுறை என்று நான் உன்னிடம் கேட்டேனா என்ன? யார் எப்படியிருந்தால் எனக்கு
என்ன? இதையெல்லாம் எதற்காக என்னிடம் வந்து கூறுகிறாய்?’’ என்று வெகுண்டு வினவினாள்.

“அதற்கில்லை, இளவரசி! நீங்களும் இளங்கோவும் சந்தித்து உரையாடுவது சக்கரவர்த்திகளுக்குத் தெரிந்தால், அதைத் தவறாக நினைத்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன். அதனால் உங்களுக்கும் தீங்கு நேரலாம். அதற்குக் காரணமாக இருந்த எனக்கும் கடுமையான தண்டனை கிடைக்கலாம். இதையெல்லாம் நன்றாக யோசித்துத்தான் முதலில் நான் மறுத்தேன். இல்லாவிட்டால் உங்களைப் போன்றவர்களின் சின்னஞ்சிறு வேண்டுகோளுக்கு நான் செவிசாய்க்காதிருந்திருப்பேனா?’’

ரோகிணி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். அவன் கூறிய செய்திகள் அவளுக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தன. அந்தச் செய்திகளால் அவள் மனம் எதற்காகக் கலக்கமுற வேண்டும் என்று அவளுக்கே விளங்கவில்லை.

‘ஆமாம். மாமன்னரின் கருத்து அதுதான் என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று அவனிடம் திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை ‘இவனிடம் நமக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?’ என்று பேசாதிருந்து விட்டாள்.

ரோகணத்திலிருந்தவரையில் அவளுக்கு இளங்கோவை கொடும்பாளூர் இளவரசன் என்ற முறையில் மட்டுமே தெரியும். ஒருவேளை, சக்கரவர்த்திகளுக்கு அவன் தூரத்து உறவினனாக இருக்கக்கூடும் என்ற அளவுக்கே நினைத்திருந்தாள். ஆனால் இவ்வளவு நெருக்கமான உறவினர்களா அவர்கள்? இளங்கோவின் தந்தையார் இந்த மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் அமைச்சர் போலிருக்கிறதே!

வீரமல்லன் கூறிய செய்திகளில் ஒன்று கூட அவளுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகற்கனவிலிருந்து விழித்துக் கொண்டவள் போல், தன்னையே பார்த்துக்கொண்டு நின்ற வீரமல்லனை நோக்கி, “நீ போகவில்லை? இன்னுமா இங்கு நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று வேதனையோடு கேட்டாள்.

“சிறிதேனும் நன்றி உணர்ச்சி கிடையாது இந்தப் பெண்ணுக்கு!’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வீரமல்லன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இந்த நிகழ்ச்சியால் வீரமல்லன் ஒன்றும் மனம் தளர்ந்து விடவில்லை. எப்படியாவது அவளுடைய அநுதாபத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பது அவன் திட்டம். அதற்காக அடிக்கடி அவளுடைய தந்தையார் மகிந்தரிடம் சென்றான். அவளுடைய கவனத்தைக் கவரும் அளவுக்கு அவருக்கு வசதிகள் செய்து கொடுத்தான். சமயம் நேர்ந்தபோது இருவரும் உரையாடிக்கொள்ளத் தவறவில்லை. ஈழநாட்டின் செழிப்பைப் பற்றித் தான் கேள்வியுற்றிருப்பதாகவும், தனக்கு புத்தபிரானின் மீது அளவற்ற பக்தியென்றும் அவரிடம் சொல்லிக் கொண்டான்.

நாளடைவில் ரோகிணியிடம் மகிந்தர் வீரமல்லனைப் பற்றிப் புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர்களுடைய தொடர்பு வளர்ந்து கொண்டு வந்தது. அந்த வளர்ச்சி ரோகிணியின் தனிமையில் வீரமல்லன் குறுக்கிடும் நிலைக்கு வந்தபோது தான் அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...