வைகை நதியில் தண்ணீர் ஓடவில்லை. செந்நீர் ஓடியது. வீரர்களின் கைகளும் கால்களும் சடலங்களும் ஆங்காங்கே நீருக்குள் மிதந்து சென்றன. கரைகளில் சில புரவிகள் ஒதுங்கிக் கிடக்க நீருக்குள் கரிய நிறப் பாறைகள் போன்று யானைகள் இரண்டு வீழ்ந்து கிடந்தன. பிணம் தின்னும் கழுகுகளுக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை. யானைகளின் மீதும் குதிரைகளின் மீதும் கூடிக்கொண்டு நிணவிருந்தைப் பகிர்ந்து கொண்டன.
அருவருப்பு நிறைந்த இந்தப் பயங்கரக் காட்சிகளைக் காணச் சகிக்காத மாலைச் சூரியன் மலைவாய்க்குள் விழுந்து விட்டான். தமிழ் இனத்துக்குள்ளே இருந்த இந்த ஒற்றுமைக் குலைவை அவன் காலங்காலமாகக் கண்டு வந்தவன். மூவேந்தர்களும் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொண்டு இரத்தம் சிந்திய சோகக் காட்சிகள் அவனுக்கு ஒன்றும் புதுமையானவையல்ல. வெறுப்பின் சின்னமான படுகளத்தை இருட்போர்வையால் மூடி மறைத்துவிட்டு அவன் அவ்விடத்தை விட்டு விலகிக் கொண்டான்.
கொடும்பாளூர் பெரியவேளார் வைகை நதிப்பெருக்கில் தமது உடைவாளையும் கை கால்களையும் கழுவிக் கொண்டு மணல் வெளியில் திரும்பி நடந்தார். நதிப் பெருக்கே இரத்தமாக மாறியிருந்ததால், கழுவிக்கொண்டது போதாமல் துணியால் கறைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கூப்பிடு தூரத்தில் தென்பட்ட பாசறையை நோக்கிச் சலிப்போடு நடந்தார். மின்மினிக் கூட்டம் காற்றில் இழைவதுபோல் தீவர்த்திகள் கூடாரங்களின் அருகில் இழைந்து கொண்டிருந்தன.
முதலில் தென்பட்ட பெரியதொரு கூடாரத்துக்குள் அவர் நுழைந்த போது, ஏற்கனவே அங்கு இளவரசன் இராஜாதிராஜன் சிலையென வீற்றிருப்பதைக் கண்டார். களைப்பும், சோர்வும், குரோதமும் அவன் முகத்தில் குடிகொண்டிருந்தன. இராஜேந்திரரின் சாயல் அவனுடைய உருவத்தின் ஒவ்வொரு அணுவிலுந் தெரிந்ததென்றாலும் அவன் கண்கள் கொடும்பாளூர்க் கண்கள் தாய் வழி வந்த கண்கள்; முரட்டுத்தனத்திலும்
அவன் அப்படித்தான்.
“நம்மவர்களை நாமே கொன்று குவிப்பதென்றால் அது வெறுப்பைத்தான் தருகிறது’’ என்று தம்முடைய உடைவாளை அருகில் கிடந்த ஓர் ஆசனத்தின் மீது எறிந்தார் பெரியவேளார்.
அவர் கூறியதைக் கேளாதவன்போல், “மாமா, தாங்கள் சுந்தரபாண்டியரை இன்றைய போரில் உயிருடன் விட்டு விட்டீர்கள். கிடைத்த வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டீர்கள்’’ என்றான் இராஜாதிராஜன்.
“இளவரசே! இன்றையப் பொழுதுக்கு இரண்டு பாண்டியர்களை வீழ்த்தியது போதாதா? என் பங்குக்கு மானாபரணனும் தங்கள் வீரத்துக்கு வீரகேரளனும் பலியாகியிருக்கிறார்கள். மானாபரணனின் தலை தரையில் உருண்டு விட்டது. வீரகேரளன் குடலைப் பறித்துக் கழுகுகளுக்கு வீசியிருக்கிறீர்கள். நாளைய போரில் சுந்தரபாண்டியரைப் பார்த்துக் கொள்ளலாம்.’’
“வீழ்ச்சி நிச்சயம் என்று தெரிந்த பிறகு சுந்தர பாண்டியர் போரிடுவார் என்று நம்புகிறீர்களா? புறமுதுகு காட்டிச் சென்றவரிடம் எனக்கு நம்பிக்கையில்லை.’’
“எல்லாம் நாளைக்குத் தெரிந்துவிடும்’’ என்றார் பெரிய வேளார்.
“ஒன்று அவர் சரணடைய வேண்டும்! அல்லது உயிர் துறக்க வேண்டும்.’’
“நாளைக்கு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாண்டியரின் வயது தங்களிடம் இரக்க உணர்ச்சியை எழுப்பியிருக்கிறது. அதனால்தான் விட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்.’’
“வயது கிடக்கட்டும், நிராயுதபாணியாகப் புறமுதுகு காட்டி ஓடியவரின் மேல் வேலெறிவது அழகல்லவே!
‘நாளைக்குச் சந்திப்போம்’ என்று கூக்குரலிட்டுக் கொண்டே குதிரையைத் திருப்பினார் அவர். மேலும் பொழுது
நன்றாக இருட்டிவிட்டது. இட்டியவுடன் போர்நிறுத்தம் என்ற நமது வழக்கத்தை மீற நான் விரும்பவில்லை.’’
“தந்தையாரும் தாங்களும் ஒன்றாகி வருகிறீர்கள்’’ என்று கூறி வருத்தத்துடன் சிரித்தான் இராஜாதிராஜன். “தந்தையாரோ பாண்டியர்கள் படுகளத்தில் வீழ்வதைப் பார்க்கவிரும்பாமல் தஞ்சையிலேயே தங்கி விட்டார்கள். தாங்களோ கருணைக்குப் புறம்பான இடத்தில் கருணை காட்டியிருக்கிறீர்கள்.’’
அன்றைக்கு மாலை மங்கிய நேரத்தில் சுந்தர பாண்டியர் புறமுதுகு காட்டி ஓடிவிட்டார். சிறிய மலைச் சாரலின் ஓரத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அவருடைய உடைவாள் பெரிய வேளாருடைய வாளுடன் மோதித் தரையில் விழுந்தது. பெரியவேளார் ஒரு கணம் பொறுத்தார். அதற்குள் பாண்டியரின் குதிரை பின்னால் திரும்பியது. காற்றெனப் பறந்து சென்று மலைச் சாரலுக்குள் மறைந்துவிட்டது.
பெரிய வேளாருக்குப் பின்புறம் வந்து கொண்டிருந்த வீரமல்லன், வேளார் தடுத்தும் கேளாமல் சுந்தரபாண்டியரை விரட்டிச் சென்றான். சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை.
“எவனோ ஒருவன் அவரைப் பின்தொடர்ந்துபோனதாகக் கூறினீர்களே!’’ என்று வீரமல்லனைப் பற்றி விசாரித்தான் இளவரசன்.
“அவன் ஒரு முட்டாள்!’’ என்று கொதிப்போடு குறிப்பிட்டார் பெரிய வேளார். “திறமையுள்ள இளைஞன் என்று சிறிதளவு இடம் கொடுத்து வைத்திருந்தேன். போர்க்களத்தில் என் கட்டளையை மீறும் அளவுக்கு அவனுக்கு வீரம் பிறந்துவிட்டது. அப்போதே அவனைக் களத்தில் இரு துண்டாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும். அந்த வேலையைப் பகைவர்கள் செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.’’
“புறமுதுகைக் கண்டவுடன் வீரனாக மாறிவிட்டான் போலும்!’’ என்று நகைத்தான் இளவரசன் இராஜாதிராஜன்.
“மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த பகைவர்கள் இதற்குள் அவனை வளைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியே ஒருவேளை அவன் திரும்பிவந்தால் அவனை நம்மிடம் உடனடியாக இழுத்து வரும்படியாகக் கட்டளை இட்டிருக்கிறேன்.’’
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பாசறையின் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் எழுந்து வெளியே சென்றனர்.
“வீரமல்லன்!...வீரமல்லன்’’ என்று வீரர்களில் ஒருவன் பெரிய வேளாரிடம் எதையோ சொல்ல வாயெடுத்தான. அவனுக்குப் பின்னால் ஐந்தாறு பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
“என்ன விஷயம்?’’
சொல்ல வந்த செய்தியைச் சொல்ல முடியாமல் வலது புறம் சுட்டிக்காட்டினான் அவன். வீரமல்லனின் குதிரை தன் முதுகின்மேல் ஒரு சடலத்தைத் தாங்கிக்கொண்டு திரும்பி வந்தது. குதிரையோடு அந்த உடலைச் சேர்த்து வைத்துக் கட்டியிருந்தார்கள் பகை வீரர்கள். குதிரை அருகில் வந்தவுடன் அதன் கடிவாளத்தைப் பற்றி இழுத்தார் பெரிய வேளார். அது சுமந்து வந்த உடலின் கழுத்தில் தலையில்லை. உடைகளையும் இடுப்பில் சொருகியிருந்த வளை எறியையும் அலட்சியமாகக் கவனித்துவிட்டு முகத்தைச் சுளித்தார். இயல்பாகவே கட்டளைகளை மீறுபவர்களை அவர் மன்னிப்பது கிடையாது. அதிலும் போர்க்களத்தில் தமது உத்தரவை மீறிச் சென்றவனிடம் அவருக்கு அணுவளவும் அநுதாபம் ஏற்படவில்லை.
“போர்க்களத்தில் என்னை மீறிச் சென்றவன் இவன். இவனுக்கு இந்தத் தண்டனை போதவே போதாது. பகைவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாமும் தண்டனை கொடுத்தாக வேண்டும்’’ என்றார்.
‘இறந்த பிறகும் தண்டனையா?’’ என்பதுபோல் இளவரசன் வியப்போடு அவரைப் பார்த்தான். அவர் தமக்கு எதிரில் நின்றவர்களை நோக்கி,
“வீரனுக்குச் செய்யவேண்டிய எந்த மரியாதையையும் செய்யாமல் இவனைக் கொண்டு போய் வைகை வெள்ளத்தில் தள்ளி விடுங்கள். மற்றவர்களும் இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று உறுமினார்.
குனிந்த தலைகளை நிமிர்த்தாமல் குதிரையின் பின்னால் நடந்தார்கள் வீரர்கள். நீருக்குள் அந்தச் சடலம் எடுத்தெறியப்படும் வரையில் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை. பெரிய வேளார் எப்போதுமே
தமது படைவீரர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர்.
கூட்டத்தோடு சென்ற மாங்குடி மாறன் மட்டிலும் அடுத்தவன் காதில்,
“இந்தப் பயல் வீரமல்லனுக்கு இது சரியான தண்டனைதான், யாருக்குமே இவன் அடங்குவது கிடையாது’’ என்றான் இரகசியமாக.
“கொடும்பாளூர் இளவரசருக்குத் தெரிந்தால் அவர் மிகவும் வருத்தப்படுவார். அவருடைய நண்பன் இவன். பாவம்! இவனுக்கு இந்தச் சாவு கிடைத்திருக்கக்கூடாது’’ என்றான் அடுத்தாற் போலிருந்தவன்.
மாங்குடி மாறனுக்கு வீரமல்லன் இறந்தபிறகும்கூட அவனிடம் இரக்கம் ஏற்படவில்லை. இளங்கோவிடம் எதிர்த்துப் பேசி அவனிடம் வீரமல்லன் அடிப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. அந்த வேலையை இளங்கோ தன்னிடம் விடாமல், அவனுடைய ஆறிய புண்ணைக் கிளறிவிட்டுக் கொண்டதற்காக மாங்குடி மாறன் வருத்தப்பட்டான்.
மறுநாள் போர்க்களத்தைச் சுந்தரபாண்டியரோ, அவருடைய ஆட்களோ எட்டிப் பார்க்கவே இல்லை. இளவரசன் இராஜாதிராஜன் தனது படைவீரர்களுடன் வெகு நேரம் வரையில் காத்திருந்தான். பிறகு அவனுடைய வீரர்களில் சிலர் மலைச்சாரலைக் கடந்து சென்று பாண்டியரின் பாசறை இருந்த இடத்தைக் கவனித்தார்கள். அது வெறும் பொட்டல் வெளியாய்த்தான் காட்சியளித்தது.
இரவோடு இரவாக அவர்கள் எந்தத் திசையில் மறைந்து சென்றார்களோ, தெரியவில்லை. மதுரையில் பாண்டியருடைய அரண்மனையும் மாளிகைகளும் வெற்றிடங்களாக வெறிச்சிட்டுக் கிடந்தன. பெரும்பிடுகு முத்தரையரின் பெரிய வீடும் பூட்டியிருந்தது.
“நாம் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் சுந்தர பாண்டியர் நம்மை ஏமாற்றிவிட்டார்’’ என்று கூறிக்கொண்டே பாசறைக்குத் திரும்பி வந்தான் இராஜாதிராஜன்.
இந்தச் செய்தியை ஏற்றுக்கொண்டு தூதுவர்கள் தஞ்சைக்குச் சென்றார்கள். அங்கிருந்து பழையாறைக்குப் பறந்தார்கள். பழையாறைக்குச் சென்வர்களில் மாங்குடி மாறனும் ஒருவன்.
இளங்கோ வீரமல்லனின் பிரிவைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான். அவன் மீதிருந்த வெறுப்பெல்லாம் இளங்கோவின் கண்ணீரில் கரைந்தது. இவ்வளவு காலமாக நண்பனாக இருந்தவனை இறுதிவரை அப்படியே நடத்தியிருக்கக் கூடாதா? மரணத்தறுவாயில் அவன் என்ன நினைத்திருப்பான்?
“என்னை மன்னித்துவிடு, வீரமல்லா! என்னை மன்னித்துவிடு!’’ என்று கதறி அழுதான் இளங்கோ.
தொடரும்
Comments
Post a Comment