Skip to main content

வேங்கையின் மைந்தன் புதினம் -பாகம் 2 -13


பழையாறை மாநகர் இதற்கு முன்பும் இவ்வளவு கூட்டத்தைக் கண்டதில்லை; இதற்குப் பிறகும் காணப் போவதில்லை. 

வடதளியான சிவன்கோயில் கீழ்வாசலுக்கு முன்னால் மக்கள் கடல் பொங்கி எழுந்து அலை மோதிக் கொண்டிருந்தது. கண் கவரும் முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியதொரு மேடையின்மீது நின்று மாமன்னர் முழங்கலானார். 

“என் அருமை மக்களே! ஈழத்துப்போரில் உயிர் துறந்த அத்தனை 

வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக! அவர்களது உற்றார் உறவினரின் கண்ணீரைத் துடைக்க என்னுடைய இருகரங்களும் போதாது. ஆனால் ஒன்றுமட்டும் கூறுகிறேன்; அவர்கள் என்னுள்ளே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதுவரையில் கண்ணீர் சிந்திய தாய்மார்கள் என்னைத் தங்களது மகனாக ஏற்றுக் கொண்டு, பெண்மணிகள் என்னைத் தமையனாக ஏற்றுக் கொண்டு, அவரவர்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்- கண்ணீர் விடுகிறவர்கள் இனிமேல் இந்த நாட்டில் வாழ முடியாது. 

“அவர்களுக்கு நான் வீரக்கல் நாட்டப் போவதில்லை. அவர்களின் நினைவாகத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு மாபெரும் கோயில் சோழபுரத்தில் எழுப்பப் போகிறேன். ஒரு நூற்றாண்டுக்காலமாகத் திரும்பாதிருந்த முடியை அவர்கள் நமக்குத் திருப்பித் தந்து வெற்றி அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றியால் கிடைத்த ஊக்கத்தால் இனி நாம் தொடர்ந்து ஒவ்வொரு போரிலும் வெற்றி பெற்றுத் தீருவோம்.’’ 

கரங்களைத் தட்டி மக்கள் எழுப்பிய ஒலிக்கு ஒரு விநாடி இடைவெளி கொடுத்துவிட்டு, மேலே தொடர்ந்தார் சக்கரவர்த்தி. 

“முதல் வெற்றியைத் தேடித் தந்த வீரர்களின் மத்தியில் விரைவில் நானே என் தலைநகரத்தை அமைத்துக் கொள்ளப் போகிறேன். சோழபுரம் விரைவில் நமது சாம்ராஜ்யத்தின் தலைநகரமாகும். காவேரிச் செழிப்பின் வளப்பத்தைவிட, என் வீரர்களை வளர்க்கும் கருவேலங்காட்டின் முட்புதரே எனக்குச் சிறந்த இடம்-தயங்காதீர்கள்! நாம் நினைத்தால் செய்ய முடியாத செயல் ஒன்றும் இல்லை. மாபெரும் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதன் மத்தியில் இமயம் போன்ற ஒரு கோயிலை எழுப்பி எல்லையில் கங்கையைப் போன்ற ஏரிவெட்டி நீர் நிரப்புவோம். சோழபுரத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாமும் புத்துயிர் பெறுவோம்.’’ 

மாமன்னரின் கண்கள் எதிரில் கூடியிருந்த பழையாறையின் நான்கு படை வீடுகளுக்குரிய வீரர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கின. 

“பழையாறையை என்னால் மறக்கமுடியுமா?’’ என்று அவர் தொடங்கியவுடன், நிமிர்ந்து நின்றார்கள் வீரர்கள். 

“நாலு படை வீரர்களுக்குரிய இந்த நகரத்துக்கு இன்றிலிருந்து முடிகொண்ட சோழபுரம் என்று பெயர். இந்த நகரத்துக்குத் தெற்கே நாம் வெட்டப் போகும் ஆற்றக்குப் பெயர் முடிகொண்ட பேராறு’’ என்றார். 

“முடிகொண்ட சோழப் பெருமகன் வாழ்க’’ என்று பல்லாயிரம் குரல்கள் ஒன்றாக எழுந்து விண்ணதிரச் செய்தன. 

“கடைசியாக ஒன்று சொல்கிறேன். மறந்துவிடாதீர்கள். ஒரு வேளை வடக்கிலிருந்து மேலைச்சளுக்கர்கள் நம்மைத் தாக்க முற்பட்டாலும் முற்படலாம். அப்படி ஏதும் நேர்ந்தால் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்மகனும் ஒவ்வொரு பெண்மணியும் பகைவர்களைப் பற்றி எரிக்கும் நெருப்பாக மாற வேண்டும். பணிந்து போவதைவிட அழிந்து போவது மேல்; சாவுக்கு அஞ்சியவர்களுக்கு இந் நாட்டில் வாழ்வு இல்லை.’’ 

மாமன்னரது வெற்றி விழாச் செய்தி செவிக்குச் செவி தாவி அந்த நகரத்தில் கூடியிருந்த மாந்தர் அனைவரது மனங்களிலும் நிரம்பியது. புதிதாக எழுப்பவிருக்கும் நகரத்தைப் பற்றிச் சிலர் பெருமை பேசினார்கள். எதிர்க்கத் துணிந்த மேலைச்சளுக்கரை ஏசினார்கள் பலர். விழா முடிந்தது. மேலும் சில தினங்கள் பழையாறையில் தங்கிவிட்டு, பிறகு தஞ்சைக்குத் திரும்பலாம் என்று நினைத்திருந்தார் இராஜேந்திரர். பல விஷயங்களை வல்லவரையருடன் பேசித் திட்டங்கள் வகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. பழையாறையின் சூழ்நிலையில் பல சிக்கல்களைத் தெளிவு படுத்திக்கொண்டு, தஞ்சைக்குச் சென்றவுடன் செயலில் இறங்க விரும்பினார். 

உள் நாட்டு ஆட்சியைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளைப் பெரிய வேளாரிடமும், படை எடுப்புக்கள், தற்காப்புத் தகவல் பற்றிய இரகசியங்களை வல்லவரையரிடமும் மாமன்னர் கலந்தாலோசிப்பது வழக்கம். இவற்றைத் தவிர,மற்ற எவருக்குமே தெரியாத பற்பல விஷயங்கள் அவர் மனத்துக்குள் மூடிக்கிடந்தன. தன்னுடைய வாழ்நாளுக்குள் அவர் செய்து முடிக்க நினைத்த நற்செயல்கள் அவை. 

விழா முடிந்த மறுநாளைக்கு மறுநாளே தஞ்சையிலிருந்து இளவரசன் இராஜாதிராஜன் அனுப்பிய தூதுவர்கள் இருவர் வந்து சேர்ந்தார்கள். மதுரையிலிருந்து கிடைத்த செய்தியை மாமன்னருக்கு அனுப்பியிருந்தான் இளவரசன். 

“விழா முடிந்த அன்று நள்ளிரவில் மதுரைப் புதிய மாளிகையின் உச்சியில் மூன்று மீன் கொடிகள் நாட்டப்பட்டு விட்டன. பாண்டியர் மூவரது இலச்சினைகளும் தனித் தனியே பொறிக்கப்பட்ட கொடிகள் அவை. விழாவின் குதூகலத்தில் வீரர்கள் பங்கு கொண்டிருந்த நேரத்தில் அது நடந்திருக்கிறது. மூன்று பாண்டியர்களுமே அப்போது மதுரையில் சுந்தர பாண்டியரின் அரண்மனையில் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களிடம் தூதுவர்களை அனுப்பிக் கொடிகளை அகற்றும்படிக் கூறியதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். பாண்டியர்களின் அனுமதியின்றி மதுரையில் புது மாளிகை எழுப்பியது தவறாம். மதுரை மக்கள் தங்களது மனக் கொதிப்பைக் 

காட்டுவதற்கு அப்படிச் செய்திருக்கலாமென்றும் பொறுப்பு தங்களுடையதல்லவென்றும், எப்படியிருந்தாலும் தங்கள் கொடிகளைத் தாங்களே அகற்ற முடியாதென்றும் கூறுகிறார்கள். கொடி நாட்டிவிட்டுத் தப்ப முயன்ற இருவரைச்சிறை செய்திருக்கிறது. ஒருவன் ரோகணத்தைச் சார்ந்தவன். மற்றொருவன் மேலைச்சளுக்கன். இருவரும் பாண்டித் தமிழர்களுமல்லர். அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை.’’ 

மதுரையிலிருந்து வந்த மேற்கண்ட செய்தியை அப்படியே சக்கரவர்த்திக்கு அனுப்பிவிட்டுக் கட்டளையை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தான் இராஜாதி ராஜன். கொடும்பாளூர்ப் படைகளோடு பெரியவேளார் அப்படியே புறப்பட்டு விட்டாராம். 

மாமன்னர் மாற்றோலை எழுதலானார். 

“ஏற்கனவே மதுரையிலிருந்து வரும் நமது படைகளும் கொடும்பாளூரிலிருந்து சென்றிருக்கும் படைகளும் போதும். எதற்கும் தஞ்சையிலிருந்து ஆயிரம் குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு உடனே செல். இனியும் பாண்டியர்களை விட்டு வைப்பது நன்மை பயக்காது.’’ 

வல்லவரையரிடம் காண்பித்துவிட்டு ஓலையைத் தூதுவர்களில் ஒருவரிடம் கொடுத்தார் சக்கரவர்த்தி. அவர்கள் சென்றவுடன், “நாமும் தஞ்சைக்குத் திரும்ப வேண்டியதுதான்’’ என்றார். 

தூதுவர்கள் செய்தி கொண்டு வந்த சமயத்தில் இளங்கோவும் அவர்களுக்கு அருகில் இருந்தான். மேல் மாடத்தில் இருந்தவாறு அருள்மொழியும் கூடத்தில் நடப்பதைக் கவனித்தாள். 

“ஈழத்திலிருந்து முடியோடு திரும்பிய பிறகாவது அவர்கள் அடங்குவார்கள் என்று நினைத்தோம். நினைத்ததற்கு மாறாக நடந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் அழிவுக்குத் தாங்களே அடிகோலிக் 

கொள்பவர்களை நாம் தடுத்தும் பலன் இல்லை’’ என்றார் சக்கரவர்த்தி. 

“தாத்தா தாத்தா!’’ என்று கொஞ்சுவதுபோல் அழைத்துக்கொண்டே வல்லவரையரிடம் நெருங்கி வந்தான் இளங்கோ. மேல் மாடத்திலிருந்து அருள்மொழிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள். 

“என்ன இளங்கோ! என்ன செய்தி’’ 

சிரிக்கும் கண்களால் வல்லவரையர் மாமன்னரைப் பார்த்தார். பாண்டிய நாட்டுப் போர்ச் செய்தியை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை; மதம் பிடித்த யானையை வேலெறிந்து கொல்வதைப் போல் நினைத்தார்கள் போலும்! 

“ஒன்றுமில்லை; நானும் சக்கரவர்த்திகளோடு தஞ்சைக்கு வந்து, அங்கிருந்து மதுரைக்கு-’’ 

“போர்க்களத்துக்கா?’’ 

மாமன்னர் வியப்போடு அவனிடம் கேட்டவுடன், விழுந்து விழுந்து சிரித்தார் வல்லவரையர். 

“நல்ல வேளை; உன்னை பெரிய வேளாருடன் கொடும்பாளூருக்கு அனுப்பாமற்போனது நல்லதாய்ப் போய்விட்டது.’’ 

“ஆமாம், கொடும்பாளூருக்குப் போய் இருந்தால் நீ இவ்வளவு தூரம் கேட்கும்படியா விட்டு வைத்திருப்பார் உன் தந்தை! தாமாகவே உன்னைப் போர்க்களத்துக்கு வரச் சொல்லியிருக்க மாட்டாரா?’’ என்றார் வந்தியத்தேவர். “தந்தையாருக்கு ஏற்ற மகன் தான் நீ.’’ 

“சிறிதுகூடக் கையில் வலி இல்லை. நேரடியாகக் களத்துக்குச் செல்லாமல் இளவரசருக்கு அருகிலாவது...’’ 

“உன்னை எனக்குத்தான் தெரியும் இளங்கோ! போர்க்களத்தின் வெறி உன்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பது எனக்கு ரோகணத்தில் புலப்பட்டு விட்டதே!’’ 

“சக்கரவர்த்திகளே!’’ மாமன்னரின் முகத்தைப் பார்த்தான் இளங்கோ. 

“நான் சொல்வதைக் கேள், இளங்கோ! அப்படியொன்றும் இது பெரிய யுத்த களமல்ல; இரண்டு நாளைக்கு எதிர்த்து நிற்பார்கள்; மூன்றாம் நாள் புதர்களுக்குள் மறைந்துகொண்டு வேலெறிவார்கள். இந்தப் போர் முடியும் வரையில் நீ பழையாறையில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உன் விழுப்புண்ணும் ஆறிவிடும். பிறகு இருக்கவே இருக்கிறது. 

மேலைச் சளுக்க நாடு! வீரனுக்குத்தானா இந்த நாட்டில் வேலை இல்லை?’’ 

சக்கரவர்த்தியின் சொற்கள் அவன் வாயை அடைத்து விட்டன. 

அரச குடும்பத்தாரைப் பழையாறையில் தங்கச் செய்து விட்டு, மாமன்னரும் வல்லவரையரும் ரதத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை வழியனுப்ப வந்த பெண்களின் கூட்டத்தோடு தானும் ஒருவனாக நிற்பதை நினைத்து மனம் புழுங்கினான் இளங்கோ. காயம்பட்ட வீரனுக்கும் பேதைப் பெண்களுக்கும் ஒரே தகுதிதானா? 

மாளிகைக்குள் ஓடிச்சென்று வைத்தியர் கட்டியிருந்த கட்டுக்களை கோபத்தோடு அவிழ்த்தெறியப் போனான் இளங்கோ. மென்கரமொன்று அவன் இடது கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தியது. 

“இளவரசே! என்ன இது? யாரிடம் கோபம் உங்களுக்கு?’’ 

அருள்மொழியின் கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவதென்று 

அவனுக்குத் தெரியவில்லை. “ஒன்றுமில்லை... ஒன்றுமில்லை...’’ என்று கூறிக்கொண்டே தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான். பொங்கிவரும் கண்ணீரை அருள்மொழி கண்டுவிடக் கூடாது என்ற தவிப்பு அவனுக்கு. 

தொடரும் 

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம