Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்-பயனில சொல்லாமை-The Not Speaking Profitless Words- Ne pas proférer de vaines paroles-191- 200





பல்லார் முனியப் பயன்இல 
சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 191

பலரும் கேட்டு வெறுக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.

எனது கருத்து:


சிலபேர் இருக்கினம் , தாங்கள் ஏதோ மெத்தப்படிச்ச அறிவாளியள் மாதிரி எல்லாரையும் பாத்து வெட்டிவிழுத்துவினம் . ஆனால் அவைக்குத் தெரியாது , அவையின்ரை எறிசொறிக் கதையளைக் கேக்கிறவை எவ்வளவு நாய்பேய்க் கடுப்பிலை இருப்பினம் எண்டு .

Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise.

Celui qui indispose plusieurs par des paroles inutiles, est méprisé de tous.

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது. 192

பயனில்லாத சொற்களைப் பலர் முன் சொல்லுதல் , நண்பரிடத்து வெறுக்கப்படும் செயல்களைச் செய்தலினும் தீயதாகும்.

எனது கருத்து:

ஐஞ்சுசதத்திற்கும் பிரையோசனமில்லாத கதையளை மற்றைவைக்கு முன்னால கதைக்கிறவையைப் பாத்து ஐய்யன் சொல்லிறார் , ஒரு நட்புக்கு செய்யிற துரோகத்தைவிட உங்கடை கதையள் டேஞ்சரான கதையள் எண்டு .

Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more.

Tenir devant plusieurs, des discours dont on ne peut tirer profit, est pire que se livrer à des actes indésirables vis-à-vis des amis.

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. 193

ஒருவன் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவன் நீதியில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

எனது கருத்து:


உங்களுக்கு முன்னால ஒருத்தர் சும்மா விழல் கதையள் கதைச்சு கொண்டு நிக்கிறார் எண்டால் , ஆள் ஒரு ஒழுங்கு முறையில்லாத ஆள் எண்ட முடிவுக்கு நீங்கள் வரலாம் பாருங்கோ .

Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains.

Développer des sujets dont on ne peut tirer profit, indique que l’orateur n’a pas la notion de la justice.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து. 194

பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடத்துச் சொல்லுவானாயின் அவனிடத்து நீதியோடு பொருந்தாதனவாகி நற்குணங்களினின்றும் அவனை நீங்கச் செய்யும்.

எனது கருத்து:

ஒருத்தன் தொடர்ந்தும் ஊத்தைக்கதையளையும் பயனில்லாத சொல்லுகளையும் கண்டவையோடையும் கதைச்சுக் கொண்டிருந்தால் அவனைச் சுத்தி கெட்ட குணங்களும் , கெட்ட கூட்டுகளும் தானாம் சேரும் .

Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good.

Les paroles inutiles font disparaître les bonnes qualités de l’orateur.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின். 195

நற்குணமுணமுடையார் பயனற்ற சொற்களைச் சொல்லுவாராயின், அதனால் அவரது மேன்மையும் நன்மதிப்பும் அவரை விட்டு நீங்கும்.

எனது கருத்து:

"படிசவனுக்கு ஏத்த மாதிரி கதைச்சுப் பழகு " எண்டு எங்கடை பெரிசுகள் எங்களை பேசுவினம் கண்டியளோ . ஒரு படிச்சவன் விழல் கதையள் கதைச்சால் அவனை ஒருத்தரும் மதிக்கமாட்டினம் .

Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.

Même les hommes de qualité perdent leur grandeur et leur grandeur et leur célébrité, par de vains propos.

பயன்இல்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல். 196

பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும் பல தரமும் சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க,மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

எனது கருத்து:

நெடுகலும் பிரையோசனமில்லாத வழவழா கொழகொழா கதையளைக்க் கதைச்சுக்கொண்டிருக்கிறவையை தெரு நாய் எண்டு சொல்லுறது தான் சரி எண்டு இந்தக்குறளில ஐயன் ரென்சானாகிப்போய் சொல்லியிருக்கிறார் .

Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity!

N’appelle pas homme celui qui repète d’inutiles discours ; appelle-le “grain sans substance” de l’humanité.

நயன்இல சொல்லினும் சொல்லுக; சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று. 197

சான்றோர் நீதியோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாராயினும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாராக .

எனது கருத்து:

படிச்சவன் பண்பானவன் அளாப்பிக் கதைக்கலாமாம் ஆனால் , விழல் கதையளை ஒருக்காலுமே கதைக்கக் கூடாதாம் எண்டு பாருங்கோ இதில ஐயன் ஒரு போடு போடிறார் .

Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word.

Que le Sage tienne même des propos qui ne sont pas justes. Il est bon qu’il ne dise pas d’inutiles paroles.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். 198

சிறந்த பயன்களை ஆராயும் அறிவுடையவர் , பெரிய பயன் தருதல் இல்லாத சொற்களைப் பேசவே மாட்டார்கள்.

எனது கருத்து:


"பெரிய விஞ்ஞானியள் மேதையள் எல்லாம் ஒருக்காலுமே பிரையோசனமில்லாத கதையள் கதைக்கமாட்டினம் " . எண்டு ஐயன் இதில சொன்னாலும் இப்ப அப்பிடியா நடக்குது ? காசுக்காக நரம்பிலாத நாக்கால எப்பிடியும் கதைக்கலாம் எண்டிறவங்களைத்தானே இப்ப பாக்கிறம்.

The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance.

Les savants qui ont la capacité d’étudier les matières d’une rare utilité, n’emploient pas de mots qui ne soient pas d’une utilité effective.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசுஅறு காட்சி யவர். 199

குற்றமற்ற அறிவினையுடையவர் பயனில்லாத வெறுஞ் சொற்களை மறந்துஞ் சொல்ல மாட்டார்.

எனது கருத்து:

ஒரு உண்மையான அறிவாளி படிச்சவன் எண்டால் தேவையில்லாத கதையள் கதைக்க மாட்டானாம். அவனாலை சனங்கள் எப்பவுமே பயனடைஞ்சு கொண்டிருக்குமாம்.

The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity.

Les sages innocents ne profèrent pas des paroles inutiles, même par oubli.

சொல்லுக சொல்லின் பயன்உடைய ; சொல்லற்க
சொல்லின் பயன்இலாச் சொல். 200

ஒருவன்தனக்கும் பிறர்க்கும் பயன்தரத்தக்க சொற்களையே பேசவேண்டும் , பயன்தராத சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .

எனது கருத்து:

எப்பவுமே நீங்கள் மற்றவையோடை கதைக்கிறபோது எப்பவும் பிரையோசனமான சொல்லுகள்தான் வெளியில வரவேணும் லூசுக் கதையள் வராமல் பாத்துக்கொள்ளுங்கோ.

If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word.

Que l’on tienne des discours utiles et que l’on s’abstienne de vains propos.

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...