Skip to main content

பொருட்பால்-அரசியல்-வலி அறிதல்-The Knowledge of Power-Discernement de la force-471-480


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல். 471

செயலின் வலிமையையும் , தன் வலிமையையும் , பகைவனின் வலிமையையும் , துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்யவேண்டும் .

என்கருத்து:

"எதுக்கும் நாலுவளத்தாலையும் யோசிச்சு செய்யுங்கோடாப்பா எண்டு இந்த பெரிசுகள் எப்பவும் சொல்லுவினம் ". அது இப்பத்தான் எனக்கு விழங்குது.

The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes. 

Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite.

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச் 
செல்வார்க்குச் செல்லாதது இல். 472

தன் சக்தியால் என்ன செய்யமுடியும் என்பதையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத பொருள் எதுவும் இல்லை.

என்கருத்து:

எண்ணிய காரியம் சிதறாது எண்டு சொல்லுவினம். ஆனால் ஒருத்தன் என்னதான் ஆள்ளணியள் துணையோடை பக்காவாய் ஒரு பிளானைப் போட்டு செய்தாலும் , அவனுக்குமேலை விதி எண்ட ஒண்டு இருக்கல்லோ ஐயன் ?இப்ப பெரிய பெரிய சர்வாதிகாரியளின்ரை முடிவுகளை பாத்தாலே தெரியுதே.

Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss.

II n'y a pas de succès impossible à ceux qui savent ce qu'ils peuvent faire, qui calculent pour cela leurs forces, qui mûrissent leur projet, y persistent et qui agissent seulement ensuite.

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முரிந்தார் பலர். 473

தனது வலியின் அளவை அறியாமல், மன எழுச்சியால் போரைத் தொடக்கி வினையை முடிக்க இயலாமல் அழிவடைந்த அரசர் பலர் ஆவர் .

என்கருத்து:

இதை பெரிசுகள் விசும்புக்கு வேட்டையாடுறது எண்டு சொல்லுவினம். தங்கடை தகுதிதராதரம் தெரியாமல் ஒரு அலுவலை தொடங்கி போட்டு தாங்கள் தோக்கப்போகினம் எண்டு தெரிஞ்சாலும் தோக்காதமாதிரி நடிப்பினம்.

Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.

Nombreux ont été ceux qui, sans se rendre très bien compte de leur capacité de chef, ont attaqué par présomption et qui ont été vaincus au milieu (de l'action).

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும். 474

அயல் வேந்தரோடு சமாதானம் செய்து கொள்ளாமல் தன் வலிமையையும் அறியாமல் தற்பெருமை கொள்ளும் அரசன் , விரைவில் அழிந்து விடுவான் .

என்கருத்து: 

இந்தக்குறளைப் பாக்க எனக்கு சதாமின்ரை ஞாபகம் வருகிது . ஏனெண்டால் தன்ரை ஒறிஜினல் பவறை தெரியாமல் மற்றவனோடை சேந்து நடக்கமால் , தன்னைபத்தி கெப்பராய் பப்படாக் கதையள் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவர். கடைசியிலை பங்கருக்குள்ளை சீவியம் நடத்தி தூங்கி சாகவேண்டி வந்திது. 

Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.

(Le Roi) qui sans vivre en bonne harmonie avec ses voisins et sans connaître ses propres forces, est seulement plein de lui-même pour encourir leur haine, consomme promptement sa ruine.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின். 475

மிக மென்மையான பொருளான மயில் இறகாக இருந்தாலும் வண்டியில் அளவுக்கு மேல் ஏற்றினால் ,வண்டியின் அச்சு முறிந்துவிடும்.

என்கருத்து:

என்னதான் ஒருத்தர் இலட்சிய பயணத்தில் முழு மூச்சாய் இருந்தாலும் ,அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சேருகின்ற வேலை பழுக்கள் கடைசியிலை அவரையே முடிச்சு போடும்.

With peacock feathers light, you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain.

L'essieu de la charrette, même chargée de plumes de paon, se brisa si le fardeau est plus lourd qu'il ne peut supporter.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் 
உயிர்க்குஉறுதி ஆகி விடும். 476

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அந்த அளவையும் கடந்து , மேலும் செல்ல முயல்வாராயின் அம்முயற்சி அவர் உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

என்கருத்து: 

இதைத்தான் பெரிசுகள் பப்பாவிலை ஏத்தி கவிண்டு கொட்டுண்ட கதை எண்டு சொல்லுவினம். தன்ரை ஏறுபட்டி தளநார் தெரியாமல் , ஓவர் பில்டப்பிலை போய் கடைசியிலை அட்ரஸ்சே தெரியாமல் போனவை கனபேர் கண்டியளோ. 

Who daring climbs, and would himself upraise 
Beyond the branch's tip, with life the forfeit pays.

L'effort fait par ceux qui sont montés sur la cime d'un arbre, pour monter encore plus haut, amène la fin de leur vie.

ஆற்றின் அளவுஅறிந்து ஈக; அப்பொருள் 
போற்றி வழங்கும் நெறி. 477

தமக்குள்ள வருவாயின் அளவை அறிந்து அதற்கேற்ப கொடுக்கவேண்டும். அங்கனம் ஈவது செல்வத்தைப் பாதுகாக்கும் வழியாகும் .

என்கருத்து:

ஆத்திலை போட்டாலும் அளவு அறிந்து போடவேணும் எண்டு ஒரு சொலவடை இருக்கு. இல்லாட்டில் இருக்கிற முதலும் இல்லாமல் போய் நடுறோட்டிலைதான் நிக்கவேணும். ஆனால் இப்ப வெறும் விலாசத்துக்கு காசுபணம் இல்லாட்டிலும் கடன் எடுத்தெண்டாலாவது தறுமம் செய்யிற கோஸ்ரியள்தான் இப்ப கூட .

With knowledge of the measure due, as virtue bids you give! That is the way to guard your wealth, and seemly live.

Que celui qui fait la charité, donne en connaissance du quantum de ses Biens: c'est le moyen de. les conserver et d'en user.

ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை 
போகுஆறு அகலாக் கடை. 478

ஒருவனுக்கு பொருள் வரும் வழியின் அளவு சிறியதாக இருந்தாலும், செலவு பெரிதாகத போது அதனால் அவனுக்கு கேடு உண்டாகாது.

என்கருத்து: 

இண்டையான் நிலமையில புலத்திலை பிச்சை எடுத்தாலும் தாயகத்திலை பண்ணையாராய் தங்களை காட்டிக் கொள்ளுறதிலை சில கோஸ்ரியளுக்கு அற்ப சந்தோசம் பாருங்கோ. ஆனால் இவையளைப் பாத்தியள் எண்டால் தங்கடை நாலைஞ்சு சந்ததியளுக்கும் கடனுகளை வைச்சுக் கொண்டு இருப்பினம். அப்பிடி இல்லாமல் விரலுக்கு ஏத்த வீக்கமாய் கட்டுச் செட்டாய் இருந்திட்டால் சேதாரம் குறைய கண்டியளோ . 

Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare.

Il n'y a pas de mal a ce que le canal alimentaire du budget soit étroit, pourvu que l'écluse des dépenses ne soit pas agrandie.

அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும். 479 

தன்வருவாயின் அளவை அறிந்து செய்து வாழாதவனுடைய வாழ்க்கை , இருப்பது போலவேயிருந்து இல்லாமல் ஒழிந்துவிடும் .

என்கருத்து: 

சிலபேர் காசுபணத்தை கண்டவுடனை இருந்த நிலமை தெரியாமல் தலைகீழாய் நிண்டு பெரிய பண்ணையாராய் இருப்பினம். இதுகளை பாக்கிற சனம் நிலமை தெரியாமல் இவையளை பாத்து வாயூறுங்கள். கொஞ்சக்காலத்துக்கு பிறகு இந்த பண்ணையாருகள் இருந்த இடம் தெரியாமல் போடுவினம் கண்டியளோ. 

Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be found.

La richesse d'un homme qui vit, en n'en connaissant pas le montant, semble bien exister, mais elle finit par ne plus exister et son apparence même disparait.

உளவரை தூக்காத, ஒப்புரவு ஆண்மை 
வளவரை வல்லைக் கெடும். 480

தன் செல்வத்தின் அளவை ஆராய்ந்து பாராமல் பிறர்க்கு உதவி செய்யும் தன்மையால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் அழிந்துவிடும் .

என்கருத்து:

கிட்டடியிலை ஒரு செய்தி பாத்தன். இந்தியா இலங்கைக்கு ஏராளமான கடனுதவியள் , வீடமைப்பு திட்டங்கள் செய்ததாம். குடிக்கிறது கஞ்சி கொப்பிளிக்கிறது பன்னீர் எண்ட கதையாய்  உதவி செய்த நாடு தன்ரை மக்களையே சரிவர பாக்கேலாமல் முழிபிதுங்குது. இதுக்குள்ளை பண்ணையார் வேலையள். இதாலை இந்தியாவின்ரை செல்வம் என்னம் குறைஞ்சு அழிஞ்சு போகும். இதைத் தான் ஐயனும் சொல்லிறார் .

Beneficence that measures not its bound of means, 
Will swiftly bring to nought the wealth on which it leans. 

La charité de celui qui ne calcule pas le montant de sa fortune amène promptement sa ruine. 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...