Skip to main content

வேங்கையின் மைந்தன் -பாகம் 2 - 02-பாசம் வளர்த்த பகை

 

ஆமாம்! வீரமல்லனின் கண்களைக் கவர்ந்த அழகு மோகினி மன்னர் மகிந்தரின் அருமைப் புதல்விதான்; ரோகணத்து இளவரசிதான்.

ரோகிணி எப்படி இங்கு வந்தாள்? ஈழநாட்டை விட்டு அவள் ஏன் சோழ வளநாட்டுக்கு வந்து சேர்ந்தாள்? கடல் கடந்து நாம் திரும்பவும் ஈழத்துக்குச் செல்லவேண்டும். காடுகளையும் மலைகளையும் கடந்து ரோகணத்துக்குள் நுழையவேண்டும். கப்பகல்லகம் அரண்மனையில், மாமன்னர் இராஜேந்திரரின் அன்புப் பிடியில் அகப்பட்டு, தன் தந்தைக்காகத் துடிதுடித்த ரோகிணியைக் காணவேண்டும்.

இதோ, அவள் நீதியின் சிகரமான இராஜேந்திர மாமன்னர் மீது சீறிவிழுகிறாள். உணர்ச்சி வயப்பட்ட சிறு புயலென அவரைச் சாடுகிறாள். அன்பும் கருணையும் கொண்ட அவர்மீது ஆத்திரச் சுடுசொல் வீசுகிறாள்.

“சக்கரவர்த்திகளே! இது அநீதி! அநீதி!’’ என்று குமுறினாள் ரோகிணி.

“முடியை என்னிடமே திருப்பிக் கொடுத்தீர்கள்; நாட்டைத் திருப்பிக் கொடுப்பதாய் வாக்களித்தீர்கள். இப்போது இரண்டையும் தாங்களே திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள். சொன்ன சொல் தவறுவது நியாயமா? நிர்க்கதியாக
வந்திருக்கும் என் தந்தையாரைச் சிறையிலிட்டுச் சோழ நாட்டுக்கு இழுத்துச் செல்வது தர்மமா சக்கரவர்த்திகளே! இது அநீதி!’’ என்று சீறினாள்.

“நீதி, நியாயம், தர்மம், எதையும் நான் மறந்துவிடவில்லை. மகளே!’’ என்று அமைதியோடு கூறினார் சக்கரவர்த்தி “உன் தந்தையார் திறந்த மனதோடு எங்களுடன் நட்புறவு பூண வருவார் என்று எதிர்பார்த்தோம். அவர்தான் அம்மா, சொன்னசொல் தவறிவிட்டார். நேற்று அவர் தூதுவனிடம் சொல்லி அனுப்பிய செய்திக்கும் இன்று அவர் நடந்து கொண்ட முறைக்கும் சிறிது கூடத் தொடர்பே இல்லை. நீயும்தானே எங்கள் பேச்சுவார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாய்? நீ விவரம் தெரிந்த பெண்; நன்றாக யோசித்துப் பார், ரோகிணி!’’ யோசித்துப் பார்க்காமல், “அவரை தாங்கள் இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’’ என்று வெடுக்கெனக் கேட்டாள் ரோகிணி.

மாமன்னர் வருத்தத்துடன் சிரித்தார். “அவரை நாங்கள் வேறொன்றும் செய்யச் சொல்லவில்லை. எங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகைத்துக் கொள்ள வேண்டாமென்றுதான் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சர் கீர்த்தி எங்கள்மீது வீணாகப் பகைமை பூண்டிருக்கிறார். அவருக்கு அடிமையாகி, எங்களுக்குத் தொல்லை தர வேண்டாமென்றோம். எங்கள் கூற்று நியாயமானதுதானே?’’

ரோகிணி யோசனை செய்தாள்.

“ரோகிணி! நீ வேண்டுமானால் உன் தந்தையிடம் சென்று முறையிட்டுப் பார். அவருடைய தலைவிதியை அவரே முடிவு செய்வதற்குச் சிறுபொழுது அவகாசம் தருகிறேன். போய் அவரைப் பார்த்துவிட்டு வா.’’

மகிந்தர் காவல் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள் ரோகிணி. வல்லவரையர் அவளை உள்ளே செல்வதற்கு அநுமதித்தார். வெளியில் நிற்பவர்களுக்குக் கேட்காதபடி தன் தந்தையிடம் மன்றாடிப் பார்த்தாள்
ரோகிணி.

மகிந்தர் அசைந்துகொடுக்கவில்லை. அவள் கூறியதைக் கேட்டுவிட்டு அவள் காதருகில் மெல்லப் பதிலளித்தார்.

“ரோகிணி! ஒன்று, நான் சோழர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டும். அல்லது அமைச்சர் கீர்த்தியைப் பகைத்துக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி எனக்குத் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது; கீர்த்தியைப் பகைத்துக் கொள்ளும் நிலையில் இப்போது நான் இல்லை. உன் தம்பி காசிபன் இப்போது அவரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். சோழர்களுடன் நட்புறவு பூண்டு ரோகணத்தின் ஆட்சியை நான் ஏற்றுக்கொண்டால், என் மகனையும் மகனுக்குப் பின்னால் நிற்கும் மந்திரியையும் மக்களையும்
பகைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நான் அவருக்குத் துரோகம் செய்துவிட்டதாக நினைத்து, காசிபனையே கொன்று வஞ்சம் தீர்த்தாலும் தீர்த்துக்கொண்டு விடுவார் கீர்த்தி.’’

“என்ன?’’ என்று அலறினாள் ரோகிணி.

“ஆமாம், உண்மைதான். இப்படி நான் சிறைப்பட்டு விட்டதால் என்மீது அவருக்கு அநுதாபம் ஏற்படும். இந்த அநுதாபத்தினால் என் மகனையே அவர் கட்டாயம் ஒரு நாள் சிம்மாசனத்தில் ஏற்றி விடுவார். எதையும் சாதிக்க வல்லவர் அவர். சோழர்களைப் பகைத்துக் கொண்டால் என் மகன் மன்னனாவான், எனக்கோ வயதாகிவிட்டது. நான் இனி எப்படியிருந்தால் என்ன?’’

இருதலைக்கொள்ளி எறும்பாக மகிந்தர் அகப்பட்டுக் கொண்டு தடுமாறுவதை ரோகிணி இப்போது புரிந்து கொண்டாள். மாமன்னர் இராஜேந்திரர் கூற்றிலும் நியாயம் இருந்தது. மகிந்தரின் முடிவிலும் தவறில்லையென அவளுக்குத் தோன்றியது.

தலையைக் கவிழ்த்துக்கொண்டே சக்கரவர்த்தியின் முன்னால் வந்து நின்றாள் ரோகிணி. குரல் தழுதழுக்கக் கூறினாள்; “அரசருடைய ராஜதந்திரவிஷயங்கள் எதுவும் எனக்கு விளங்கவில்லை. தாங்கள் என்ன செய்தாலும் சரி. ஆனால், நானும் என் தாயாரும் என் தந்தையார் இருக்குமிடத்தில்தான் இருப்போம். அவரை ரோகணத்தை விட்டு அழைத்துப் போவதானால் எங்களையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். நாட்டைத்தான் அவருக்குத் தர மறுத்து விட்டீர்கள்; வீட்டை மறுக்காதீர்கள்; அவர் குடும்பத்தை அவரிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.’’

“குடும்ப சுகம் என்பது எங்களைப்போல் நாடாளப் பிறந்தவர்களுக்குக் கிடையாது; ரோகிணி! நாடுதான் எங்கள் குடும்பம். உன் தந்தையாருக்கு நாடில்லை என்பதால் வீட்டைக் கேட்கிறாய். ஆனால், பெண்களை நாங்கள் எங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொண்டு போவதில்லை. அந்தப் பழி பாவம் எங்களுக்கு ஒருபோதும் வேண்டவே வேண்டாம். நீங்கள் இனி உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம். உற்றார் உறவினரிடம் நானே உங்களை அனுப்பி வைக்கிறேன். வேண்டிய செல்வத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.’’

ரோகிணி தன் தலையைத் தூக்கி அவரைப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் துடித்தன. “மகளே! என்று என்னை அழைக்கிறீர்களே, பாசத்தின் பொருள் தங்களுக்குத் தெரியுமா, சக்கரவர்த்தி?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“ரோகணத்துக்கு அதன் அரசரைக் கொடுக்காத தாங்கள் எனக்கு என் தந்தையைக் கொடுக்கக்கூடாதா? என் தாயாருக்கு அவர் கணவரைக் கொடுக்கக்கூடாதா? நாங்கள் இருவரும் என் தந்தையாரோடு தங்கள் நாட்டுக்கு வந்தால் அதனால் என்ன கெட்டுவிடும்; அத்தனை பெரிய பரந்த சோழ சாம்ராஜ்யத்தில் எங்கள் இருவருக்கும் மட்டுந்தானா இடமில்லாமல் போய்விட்டது? அல்லது தங்கள் மனத்தில்தான் இடமில்லையா?’’

இராஜேந்திரருக்கு அப்போது அவருடைய இளைய பெண் அம்மங்கை தேவியின் நினைவு வந்துவிட்டது. ரோகிணிக்கு ஒருபுறம் அருள்மொழியும் மறுபுறம் அம்மங்கையும் நின்று கொண்டு அவரிடம் ரோகிணிக்காகப் பரிந்து பேசி வாதாடுவதுபோல் தோன்றியது. அம்மங்கை தேவியும் இப்படித்தான்
ரோகிணிபோல் துடுக்காகப் பேசுவாள்.

“ரோகிணி! என்னை நீ வென்று விட்டாயம்மா, வென்று விட்டாய்!’’ என்று கனிவோடு கூறினார் சக்கரவர்த்தி. “சரி! நீங்களும் மகிந்தருடன் சோழ நாட்டுக்கு வருகிறீர்கள். உனக்கு மகிழ்ச்சிதானே?’’

ரோகிணியின் கண்கள் அழுதுகொண்டே சிரித்தன. அந்தக் கண்களாலேயே நன்றி கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

சோழப்பேரரசின் முதற் கப்பல் ஈழநாட்டின் துறை முகத்திலிருந்து தாயகம் நோக்கி நீரில் மிதந்த போது, கப்பலின் மேல்தளத்தின்மீது ரோகிணி நின்றுகொண்டிருந்தாள்.

மக்களின் ஆரவாரக்குரல் கடல் அலைகளின் பேரிரைச்சலுடன் ஒன்றிக் கரையத் தொடங்கியது. நீருக்குள் மரக்கலம் செல்லச் செல்ல ரோகிணியின் கண்கள் முத்துத்துளிகளை ஒவ்வொன்றாக உதிர்த்துக்கொண்டே வந்தன.

தொலை தூரத்தில் மங்கி மறைந்து கொண்டிருந்த ஈழத்தின் நிலப்பரப்பை ரோகிணி கண் இமைக்காது உற்றுப் பார்த்தாள். விநாடிக்கு விநாடி அவளுக்கும் அவளைப் பெற்றெடுத்த மண்ணுக்கும் இடைவெளி அகன்று கொண்டே வந்தது. தரையில் நின்று பசுமை உமிழ்ந்து கொண்டிருந்த தென்னஞ்சோலைகள் சிறிது சிறிதாகக் கறுத்துக்கொண்டே வந்து, வானத்தில் மிதந்து கார்முகிலுடன் கலந்தன.

ரோகிணியின் உள்ளத்தைப் போலவே அடிவானம் குமுறியது; கடல் அலைகள் கொந்தளித்தன. அவள் தனக்குள் புலம்பினாள். ‘ஈழத்து மலைகளே! கண்கவரும் காடுகளே! துள்ளிக் குதிக்கும் அருவிகளே! நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? மீண்டும் இந்தக் கண்களால் உங்களைக் காணும் பாக்கியம் கிடைக்குமா, கிடைக்காதா? என்னருமை ரோகணமே! என் தம்பி காசிபன் இப்போது எங்கே இருக்கிறான்? அவனை நீ எங்கே ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறாய்? நாங்கள் அவனைவிட்டுப் பிரிந்து போவது காசிபனுக்குத் தெரியுமா? தெரிந்தால் அவன் என்ன நினைப்பான், என்ன நினைப்பான்?’

ஈழநாட்டுக் கடற்கரை கரும்புள்ளியாக மாறி, அதுவும் அவள் கண்ணீர்த்துளியுடன் ஒன்றி பிறகு கடல் நீருக்குள் விழுந்தது... வெறும் சூனியத்தையே ஊடுருவிக் கொண்டு நின்றாள்.

அந்தச் சூனியத்துக்கப்பால் மறைந்துவிட்ட கடற்கரைச் சோலைக்குள்ளிருந்து அவளுடைய தம்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது அவளுக்குத் தெரியாது. காசிபனையும் அமைச்சர் கீர்த்தியையும் மரத்தின் இலைகள் நன்றாக மறைத்துக் கொண்டிருந்தன. நுனி மரத்தின் வலுவான கிளையொன்றில் அவர்கள் தொத்திக்கொண்டு நின்றார்கள். தொலைதூரத்தில் கடந்து செல்லும் கப்பலையே கண்களால் விழுங்கினார்கள்.

“காசிபா! இந்த அக்கிரமத்தை உன் கண்களாலேயே பார்த்துக் கொண்டாயல்லவா?’’ என்று கேட்டார் கீர்த்தி. காசிபன் பதிலளிக்கவில்லை. அவனுடைய சிறு விழிகள் சிவந்திருந்தன.

“வா, இறங்கிப் போகலாம்’’ என்று அவர் அவனை அழைத்தார். அதை அவன் செவிகளில் வாங்கிக் கொள்ளாமல், “கப்பல் இன்னும் கண்களைவிட்டு மறையவில்லை’’ என்றான்.

“கண்களைவிட்டு மறைந்தாலும் இந்தக் காட்சி உன் மனத்தை விட்டு மறையக்கூடாது! ஆமாம், நீ விளையாட்டுப் பிள்ளையல்ல; இந்த ஈழநாட்டின் இளவரசன்! மன்னரை மாத்திரமா அவர்கள் கட்டி இழுத்துக்கொண்டு போகிறார்கள்? இல்லை. உன் தாயாரையும் தமக்கையையும் கொண்டு போகிறார்கள். அங்கு போய் அவர்களை என்ன செய்வார்கள், தெரியுமா? பணிப்பெண்களாக, குற்றேவல் செய்யும் அடிமைகளாக, அந்தப்புரத்தின் நடைப்பிணங்களாக மாற்றுவார்கள்!’’

நாகப்பாம்பின் சீற்றம்போல் எழுந்தது காசிபனின் பெருமூச்சு. மரக்கிளையில் நின்றவாறே ஒரு சிறு கத்தியை எடுத்து அவனிடம் கொடுத்து, தமது வலக் கரத்தை அவன் முகத்துக்கு எதிரே நீட்டினார் அமைச்சர் கீர்த்தி.

“என்னுடைய கட்டை விரலின் மத்தியில் ஆழமாய்க் கீறி விடு!’’ என்றார்.

பயந்துகொண்டே தயங்கி நின்றான் காசிபன். ‘எதற்காக’ என்று கேட்பதுபோல் விழித்தான்.

“உம்! ஏன் தயங்குகிறாய்? நீ ஆண்பிள்ளைதானே? இரத்தத்தைக் கண்டால் உனக்குத் தலை சுற்றுமா-கீறிவிடு!’’

காசிபன் பற்களைக் கடித்துக் கொண்டே கீர்த்தியின் கட்டை விரலைக் கீறிவிட்டான். ‘குபுகுபு’வென்று செவ்விரத்தம் கொப்பளித்துச் சொரிந்தது.

“இதைத் தொட்டு உன் நெற்றியில் வைத்துக்கொள்!’’

மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அவர் கூறியபடியே செய்தான் காசிபன். அவனுடைய சின்னஞ்சிறு நெற்றி ரத்தச் சிவப்பாக மாறியது.

“சொல்; ‘சோழர்கள் என் ஜன்மப் பகைவர்கள்-’ மூன்று முறை சொல்.’’

“சோழர்கள் என் ஜன்மப் பகைவர்கள்! சோழர்கள் என் ஜன்மப்பகைவர்கள்! சோழர்கள் என் ஜன்மப் பகைவர்கள்!’’

அவனை அன்போடு தழுவி அணைத்துக்கொண்டே மரத்திலிருந்து இறங்கி வந்தார் கீர்த்தி. கீழே வந்தவுடன் 

“காசிபா! நீ உன் தந்தையைவிடவீரன், உன்னை வைத்துக்கொண்டு நான் இந்த உலகத்தையே வென்றுவிடுவேன்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...