Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல் வாய்மை-Veracity- La Véracité - 291- 300



வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல். 291

உண்மையென்று கூறப்படுவது எது என்றால், மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை தராத சொற்களைக் கூறுதலேயாகும்

எனது கருத்து:

மற்றவைக்கு ஒரெப்பனும் தீமை செயாத மாதிரி ஒரு சொல்லை சொல்லுறது தான் உண்மையான உண்மையாம் . இது இந்தக்காலத்தில நடக்கிற காரியமோ? மற்ற ஆக்களுக்கு தீமை வராத சொல்லை சொல்லிறது தான் உண்மையெண்டால் ஊமையாத்தான் இருக்கவேணும் .

You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free.

Qu’est ce que la véracité? C’est proférer des paroles qui ne puissent causer aucun mal.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த; புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 292

பொய்மைச் சொற்களும் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமாயின்,வாய்மைச் சொற்கள் நல்வழி பெறும்

எனது கருத்து:

எனக்கு இதில உடன்பாடில்லை . ஒருகதைக்கு ஆளாளுக்கு தான் சொல்லுற பொய்யால நன்மை வரும் எண்டு பொய்சொல்ல வெளிக்கிட்டால் என்ன செய்யிறது??

Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford.

S’il a pour effet de causer du bien sans le moindre mal, le vaut mensonge la vertu. 

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293

ஒருவன் தன்மனம் அறிந்த ஒன்றை பிறர் அறியார் என மறைத்து பொய் கூறுதல் கூடாது. அங்கனம் பொய் கூறுவாயின் அவன் மனமே அக்குற்றத்திற்குச் சாட்சியாய் இருந்து அவனை வருத்தும்.

எனது கருத்து:

இதெல்லாம் நடக்கிற காரியமாய் எனக்குத் தெரியேலை . நாக்கு கூசாமல் பொய் சொல்லுறவைக்குத் தான் இப்ப காலம் கண்டியளோ. ஆரும் தெரிஞ்சும் தெரியாமல் உண்மையை சொல்லி சீவிச்சால் , அவன் எடுக்கிற பட்ம் ஒண்டில் துரோகி இல்லாட்டி வாழத்தெரியாத சேமணைப்பயல் எண்டு சொல்லுவினம் .

Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.

Ne dites jamais un mensonge que votre conscience sait être un mensonge, car lorsque vous avez menti, votre conscience se constitue témoin de votre mensonge et vous fait souffrir.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். 294

ஒருவன் தன் மனதுக்கு நீதியாய் பொய் பேசாமல் ஒழுகுவானாயின், அவன் உலகில் வாழும் எல்லோராலும் நல்லவன் என்று போற்றப்படுவான்.

எனது கருத்து:

இண்டையான் திகதியில ஆர் பொய்புரட்டு சொல்லி சீவிக்கினமோ அவையளைத்தான் சனம் தூக்கி பிடிக்குது. ஆனானப்பட்ட தருமரே பொய் பேசாதவர். ஆனால் அவரே ஒருக்கா சண்டையில " ஒழிந்தான் அசுவத்தாமன் " எண்டு சொல்லித்தான் தன்ரை குரு துரோணரை அவர் அசந்த நேரம் பாத்து போட்டுத் தள்ளினவர். ஆனால் சனம் என்ன சொல்லுது தருமர் பொய்யே பேசாதவர் எண்டு .

True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind.

Celui qui se conduit sans mentir selon sa conscience, vit dans le cœur de tous les hommes.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. 295

ஒருவன் மனத்தோடு பொருந்தி, உண்மையயே பேசுவானாயின் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைக் காட்டிலும் சிறந்தவனாவான்.

எனது கருத்து:

ஆராவது மனசார மனச்சாட்சிப்படி உள்ளதை உள்ளபடி கதைச்சு சீவியம் நடத்திச்சினம் எண்டால் அவை தானதருமஞ் செய்யிறவையை விடவும் தவசீலர்களை விடவும் மேலானவை எண்டு ஐயன் சொன்னாலும், நான் இப்பிடிபட்ட ஆக்களை காணேலை .

greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined.

Celui qui dit la vérité selon sa conscience est le premier d’entre ceux qui joignent la charité à la pénitence.

பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை
எல்லா அறமும் தரும். 296

பொய்யாமை போலப் பெகழ் தருவது வேறு இல்லை அதில் தளராமல் உறுதியாய் இருப்பது ,ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

எனது கருத்து:

பொய் சொல்லாமல் இருக்கிறது நல்ல விசயம்தான். அப்பிடி இருக்கிறதே அவனை புகழ் எண்ட உச்சாணிக்கொம்பிலை கொண்டுபோய் ஏத்திவிடும். அவைனை அறியாமலே எல்லா புண்ணியங்களையும் அவனுக்கு சேத்துவிடும். ஆனால் , இப்பிடி எல்லாத்துக்கும் உதாரணமாய் இருந்த தருமனே பொய் சொல்லிப்போட்டார். அவருக்கு முன்னால நாங்கள் நாங்கள் எந்தளவுக்கு சரியாய் இருப்பம்?

No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously.

L n’y a pas de gloire égale à ne pas mentir. Ceci donne toutes les vertus, sans qu’on ait besoin de mortifier le corps.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297

பொய் கூறாமை என்னும் நன்மையையே ஒருவன் இடைவிடாமல் செய்து வருவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்ய வேண்டாம்.

எனது கருத்து:

நீங்கள் உங்கடை வாழ்க்கையில ஒண்டும் வெட்டி கிழிக்க வேண்டாம் . பொய் சொல்லாமல் இருந்தாலே வேறை ஒண்டும் செய்யத்தேவையில்லை . இந்த பொய் சொல்லுறதாலைதான் ஒருத்தனுக்கு வில்லங்கமும் பிடரியில வந்து ஒட்டிக்கொண்டிருக்கிது எண்டிறது என்ரை அபிப்பிராயம் .

If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone.

Si l’on a la maîtriser de ne pas mentir, il est bon de ne pas pratiquer, de ne pas pratiquer les autres vertus.

புறந்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும். 298

உடலின் புறத் தோல் நீரால் தூய்மை அடைகின்றது. அதேபோல அகத்தேயுள்ள மனம் வாய்மையால் தூய்மை அடைகின்றது.

எனது கருத்து:

நல்லாய் சவுக்காரம் போட்டு தேச்சு ஒரு நாளைக்கு ஒருதரமாவது குளிக்கிறம் , உடம்பிலை இருக்கிற ஊத்தை போறதுக்கு . ( சிலது குளிக்காமலே இருக்கிறது வேறை விசையம் ) . ஆனால் மனசிலை இருக்கிற ஊத்தையை உரஞ்சி கழுவ பொய்யே பேசாத உண்மை எண்ட சவுக்காரம் தேள்வை கண்டியளோ . ஆனால் இந்த சவுக்காரம் அவுட் ஒஃப் ஓடறாய் போய் கனகாலமாய் போச்சு பாருங்கோ .

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.

La purete du corps s’obtient par l’eau, la pureté du cœur se forme par la véracité. 

எல்லா விளக்கும் விளக்குஅல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299

அறிவு ஒழுக்கம் நிறைந்த பெரியவர்களுக்குப் புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; பொய் கூறாமல் உண்மை பேசுதலாகிய விளக்கே சிறந்த விளக்காகும்.

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் உலகத்தை கரைச்சு குடிச்சமாதிரி மற்றவைக்கு ஆலோசனையள் சொல்லுவினம் . சனமும் வாயைப் பிளந்து கொண்டு கேப்பினம் . ஆனால் கொஞ்சம் இவையளை வடிவாய் பாத்தால் தொட்டதுக்கெல்லாம் பொய் பேசிற ஆக்களாய் இருப்பினம் . இப்பிடி நல்லா படிச்ச பொய் பேசிற ஆக்கள் உண்மையில அறப் படிச்ச பல்லியள் . இவையள் பொய் பேசிறதாலை இவைளின்ரை படிப்புகள் , அந்தஸ்த்துகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையிலை வீண் . படிச்சாக்கள் ஒருக்காலும் பொய் கதைக்கக் கூடாது .

Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright.

Toute lumière qui chasse l’obscurité n’est pas lumière; pour les vertueux, est la seule lumière, la vérité qui jugule l’obscurité du coeur.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. 300

வாய்மையைவிட எந்த வகையாலும் சிறந்த வேறு ஒரு பொருளைக் காணமுடியாது .

எனது கருத்து:

உலகத்தில ஒருத்தன் எப்பிடிபட்ட நிலமையில இருந்தாலும் பொய் பேசாமல் இருக்கிறதைப் போல ஒரு மேலான தகுதி வேறை ஒண்டும் இல்லை எண்டது என்ரை அபிப்பிராயம்.

Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare.

D’après mes investigations personnelles, il n’y a rien de plus grand que la vérité.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம