Skip to main content

மனமே மலர்க - பாகம் 10.





பிரார்த்தனை என்பது என்ன ?

இந்த இடத்தில் கடவுள் என்ற விஷயத்துக்கு நான் போகவில்லை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்மையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதுதான் பிரார்த்தனையின் சாரம். வார்த்தைகளிலோ, உருவ வர்ணனைகளிலோ, சத்தங்களிலோ மட்டும் பிரார்த்தனை இல்லை முக்கியமாக உணர்வதில்தான் இருக்கிறது. சம்பிரதாய சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல், அதற்குள் போய்ச் சிக்கிக் கொள்வது அல்லது பிரார்த்தனை. இந்த இடத்தில் வருத்தமான ஒரு விஷயத்தை நான் சொல்லவேண்டும் -

சமீபத்தில் நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, வித்தியாசமான ஒரு சுப்ரபாதத்தைக் கேட்டேன்.

கௌசல்யா சுப்ரஜா... அலமேலு பால் பொங்குது. காஸை நிறுத்துடி... ராம பூர்வா... சந்த்யா... கோபு... ஃபேன் ஏன் வீணா

சுத்திட்டு இருக்குது... ப்ரவர்த்ததே... உத்திஷ்ட்ட....

இதை நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை.... பிரார்த்தனை என்பது மட்டுமல்ல, காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுதல்... மாவிலை கட்டுதல்... ஆராதனை செய்தல் போன்ற ஆன்மீகமான விஷயங்களையும் இப்போது அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலே வெறும் சம்பிரதாயங்களாகவே பலர் செய்து வருகிறோம். நான் சொல்வது எல்லா சமுதாயத்தினருக்கும், இனத்தருக்கும் மதத்தினருக்கும் பொருந்தும்.

வேதம், உபநிஷத்துகள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த ஞானம் கொண்ட சாமியார் ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் தனது சீடர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, பூனை ஒன்று சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த சாமியாரின் கவனம் சிதறவில்லை. ஆனால், சீடர்கள் சிலரின் கவனம் சிதறியது. ஆகவே பூனையைப் பிடித்துப் பக்கத்திலிருந்த தூணில் கட்டும்படி சாமியார் சொல்ல, பூனையும் தூணில் கட்டப்பட்டது. அடுத்த நாள், அதற்கும் அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம் எடுக்கும்போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்துவிட்டார். சீடர் ஒருவர் அந்த ஆசிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர்சீடர்களுக்கு பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது.

சில மாதங்களில் அந்தப் பூனையும் இறந்துவிட்டது. அடுத்த நாள் பாடம் எடுப்பதற்காக வந்த அந்தச் சாமியார், பாடம் எடுக்கும்போது தூணிலே ஒரு பூனைகட்டப்பட வேண்டும் என்று தெரியாதா ? உடனே போய் ஒரு புதிய பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

சிலபேர் கிருஷ்ண பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள் கிருஷ்ணன் என்பது யார் ? மகிழ்ச்சி, உவகை, ஆனந்தம், கொண்டாட்டம் என்று எல்லாம் சேர்ந்தவன்தானே கிருஷ்ணன். ஆனால், கிருஷ்ண பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், உம்மென்ற முகத்துடன் சதா சோகமாக இருப்பதை நீங்களும் கூட பார்த்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அன்பும் அரவணைப்பும் போய், பக்தி என்பதே முரட்டுத்தனமாக மாறிவிட்டது.

உணர்ச்சிகளை மறந்து விட்டு வெற்று வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால்தான் மதத்தின் பெயரால் இப்போது கலவரங்கள் நடக்கின்றன . இப்படிச் சொல்வதால் நமது முன்னோர்கள் எற்படுத்தி வைத்த சம்பிரதாயங்களை மதிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. அதற்கு எதிராகச் செயல்படுங்கள் என்று தூண்டவில்லை. செய்வது எதுவாக இருந்தாலும் அர்த்தத்தை உணர்ந்து, உணர்ச்சிகளை அனுபவித்து முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள்.

சிலர் என்னிடம் வந்து, என் வீட்டில் தனி பூஜை அறை இல்லை பக்கத்தில் டமார் டமார் என்று சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற்சாலை இருக்கிறது. சதா குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றன. மனைவி நை நை என்று நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அதனால் பிரார்த்தனை செய்ய என்னால் முடியவில்லை என்று சொல்கிறார்கள்.

பிரார்த்தனை செய்யவோ, தியானம் செய்யவோ அமைதி நமது உடம்புக்கு வெளியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதி நமக்கு உள்ளே இருந்தால், மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லாமல்கூட பிரார்த்தனை செய்ய முடியும்.

எப்படி ?

அது ஒரு பொட்டல் வெளி பிரதேசம். வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அங்கே முருகப்பெருமானுக்கு கோயில் கட்டும் பனி நடந்து கொண்டிருந்தது. உச்சி வெயிலில் செங்கற்களைச் சுமந்துசென்று கொண்டிருந்தார்கள்.

ஒருவனை அழைத்து, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? என்று கேட்டார். அதற்கு அவன், பார்த்தால் தெரியவில்லையா ? கல் சுமந்து கொண்டிருக்கிறேன் என்றான். இதே கேள்வியை பக்கத்திலிருந்த இன்னொருவனிடமும் கேட்டார் சாமியார்.

அதற்கு இரண்டாமவன், நான் என் குடும்பத்துக்கான உணவைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.

சாமியார் இன்னொருவரிடமும், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? என்ற அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மூன்றாமவன், நான் தெய்வத்துக்குக் கோயில் கட்டும் புண்ணிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.

நம் எல்லோருக்குமே கோயில்கட்டும் வேலை கிடைத்து விடாது. ஆனால் செய்யும் வேலை எதுவானாலும் கோயில் கட்டும் வேலையைப் போல முழு ஈடுபாட்டுடன் லயித்து செய்தால் அதுவே சிறந்த பிரார்த்தனைதான்.

00000000000000000000000000000000000000

பொய்

நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வதுதான்.பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மைதான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.

ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன. உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது. பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய். இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர்,வயது என்ற பேதம் இல்லை.

பொய் என்பது ஒரு ருசி. அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது. பொய்யை மெய்யில்இருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம். அது பொய் என்ற விபரம் தெரிந்ததும், நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.

நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன. பொய்யை உண்டாக்கவும், உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம், தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம். பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும்போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது. பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம் இன்றிப் போகுமோ?

அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன. வரலாறு பதிவில் உள்ள பொய்கள், மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள், வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள், அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன. பொய்யைத் தவிர்ப்பது இயலாது. ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில்தான் இருக்கிறது. பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்.

00000000000000000000000000000000

அது நிபத்தனைக் காதல் !

ஹைதராபாத்தில் பன்னாட்டு வங்கி ஒன்றில் பெரிய பதவியிலிருக்கும் இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்தார் -

சுவாமி ! நான் ஓர் இந்து. வேறு மதத்தை சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை இருக்கிறது ! காதலிலும் சரி, கல்யாண வாழ்க்கையிலும் சரி... மதம் எங்களுக்கு முட்டுக்கட்டையாகக் குறுக்கே வந்தது இல்லை ! ஆனால், என் மனைவி நெற்றியில் சிவப்புப் பொட்டு வைத்துக்கொண்டால், பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள் என்று சமீபகாலமாக எனக்குப் படுகிறது ! என் மனைவியிடம் இந்த ஆசையைச் சொன்னேன்.அவளோ உங்களின் மத வழக்கத்தை என் மேல் திணிக்காதீர்கள் ! என்கிறாள். சுவாமி, சத்தியமாகச் சொல்கிறேன். பொட்டு என்பதை நான் மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கவில்லை ! இந்த பொட்டு பற்றி எங்களுக்குள் தினம் தினம் நடக்கிற விவாதங்கள் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருகிறது ! கோபத்தில் நிலையிழந்து நேற்று நான் அவளைப் பார்த்து உன் குடும்பத்தைப் பற்றித் தெரியாதா ? என்று வாய்தவறிச் சொல்லி விட்டேன். உடனே அவள் ஒரு கத்தியால் விரலைக் கீறி வழிந்த ரத்தத்தால் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு... இப்போது உங்களுக்குத் திருப்திதானே என்று ஆங்காரமாகக் கேட்டாள். நான் என் மனைவியை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்.

நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன். நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் இருவருமே ஆரம்பத்திலிருந்தே ஒருவரையொருவர் காதலித்ததாகச் சொல்வது பொய் ! இருவருமே நான் சொன்னதைக் கடுமையாக மறுத்தார்கள்.

கணவனைப் பார்த்து நான் சொன்னேன் - இந்த பெண்ணைக் காதலித்த நாளிலிருந்து நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களையும் இந்தப் பெண் ஒப்புக் கொண்டாள் ! அதனால்தான் இவளை நீங்கள் காதலித்தீர்கள். சொன்னதை ஒப்புக் கொண்டதால் வருகிற பிணைப்புக்குப் பெயர், காதல் இல்லை ! அது நிபந்தனைக் காதல் ! இப்போது பொட்டு விஷயத்தில் நீங்கள் சொல்லும் நிபந்தனைகளை உங்கள் மனைவி கேட்கவில்லை. அதனால், உங்களுக்கு காதல் போய்விட்டது.

உங்கள் காதலை வேறு கோணத்திலிருந்து பார்க்கலாம்.

நீங்கள் சொல்லும் விஷயங்களைக் கேள்வியே கேட்காமல் உங்கள் மனைவி ஏற்றுக் கொள்வாள் என்று அவர் மீது இத்தனை நாளும் நீங்கள் அபிப்பிராயம் வைத்திருந்தீர்கள் ! உங்கள் மனைவியும் உங்கள் அபிப்பிராயத்திலிருந்து கொஞ்சமும் விலகாமல் இருந்தாள் ! ஆக... நீங்கள் உங்கள் மனைவியைக் காதலித்தீர்கள் என்பதை விட, உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருந்த அபிப்பிராயத்தைக் காதலித்தீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

வாழ்க்கை என்பது ஓர் இசைக் கருவி மாதிரி ! சம்பிரதாயம், உறவு... இந்த இரண்டும் இதிலே இருக்கும் இரண்டு அம்சங்கள் ! சம்பிரதாயத்தை அடக்கியும், உறவைத் தூக்கலாகவும் வாசித்துப் பாருங்கள் ! இசை அற்புதமானதாக இருக்கும் !

தம்பதி அதன்பின் பொட்டு விஷயத்தில் மோதியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். சுவாமி ! என் காதலி என்னை ஏமாற்றிவிட்டாள் ! என்று சமீபத்தில் இன்னோர் இளைஞர் வந்தார். அவரிடமும், இதே கருத்தைத்தான் சொன்னேன்-

காதலி உன்னை ஏமாற்றவில்லை ! ஒட்டாண்டியானாலும், ஒடிந்து போனாலும் அவள் உன்னைத் தொடர்ந்து காதலிப்பாள் என்று நீ நம்பினாய் ! நீ வியாபாரத்தில் நொடித்துப்

போனதும், அவள் மீது நீயாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை!

சரி, கணவன் - மனைவி இருவரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ என்னதான் வழி ?

இதற்கு முதல் தேவை, Unconditional Love. பொட்டு வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி.. . வேலைக்குப் போனாலும் சரி. .. போகாவிட்டாலும் சரி, சுவையாகச் சமைத்தாலும் சரி, சமைக்கவே இல்லை என்றாலும் சரி.. . கணவன் தன் மனைவியைக் காதலிக்க வேண்டும். இதே நிபந்தனையற்ற காதலை மனைவியும் தன் கணவனிடம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது, உங்கள் கணவனிடம் (அல்லது மனைவியிடம்) என்ன இல்லை என்று பார்க்காதீர்கள். பணம் இல்லாமல் இருக்கலாம்.. . பரிவு இருக்கிறதா, ஓகே ! அதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள் ! குடும்பம் என்னும் மலரிலிருந்து தேன் என்னும் இனிமையை அப்போதுதான் பெற முடியும் !

மிக முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன். கோபம், கழிவிரக்கம், குற்ற உணர்வு போன்ற பல உணர்ச்சிகள் நமது நரம்புகளில் ஆங்காங்கே அடைபட்டு, சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளியே வரத் திணறிக் கொண்டிருக்கின்றன ! இதற்கு Energy clots என்று பெயர். வெடிகுண்டுத் திரியில் நெருப்புப் பட்டால், அது எப்படி உடனே வெடிக்குமோ அதேபோலத்தான் சில வார்த்தைகள் பட்டால், வெடிக்கச் செய்யுமோ அதைத் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் !

தத்தக்கா பித்தக்கா என்று நடக்கும் சின்னக் குழந்தை தடுக்கிவிழுந்தால் - அப்பா, அம்மா யாருமே அருகில் இல்லையென்றால் தன்பாட்டுக்கு எழுந்து போய்விடும்.

அதுவே, அப்பா, அம்மா எதிரில் தடுக்கி விழுந்து விட்டால், ஓவென்று அழுது குழந்தை ஊரையே கூட்டிவிடும். வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டவர்களுக்கும்

குழந்தையின் இந்தக் குணநலன் உண்டு.

என்னைக் கவனி, என்னைக் கவனி என்றுதான் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனைப் பார்த்து மௌனமாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள் ! அவர்களுக்குத் தேவை, கவனிப்பு... Attention கணவன்மார்களே, இதைப் புரிந்துகொண்டு கவனிப்பு என்னும் ஜன்னலை தாராளமாகவே உங்களின் மனைவிக்காகத் திறந்து வைத்திருங்கள்.

0000000000000000000000000000000000

கிணற்றுத்தவளை

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம். வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே, அந்த எண்ணம் தான் தவறானது.

கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காரணம், விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது. எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை. ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும். நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும். இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.

கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது. ஏனெனில் கிணற்றில் அலை இல்லை , புயல் இல்லை, ஆபத்துக்கள் இல்லை. பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம். உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது. அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை. யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது.

0000000000000000000000000000000

கர்வம் கூடாது...

ஒரு ஊரில், ஒரு பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊர்க்காரர்கள் விசேஷங்களுக்கு தான் செல்லாமல், தனது செருப்பை மட்டும் அனுப்பி வைப்பாராம். தனது செருப்பு வந்தால், தான் வந்ததுக்குச் சமானம் என்பது அவரது நிலைப்பாடு. அந்த அளவுக்குக் கர்வம். அவர் இறந்தபோது, ஊரார் எவரும் அவரின் வீட்டில் இல்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதற்கு அடையாளமாக, அவரின் வீட்டைச் சுற்றி, ஊரில் உள்ளவர்களின் செருப்புக்களே கிடந்தன ! தான-தருமங்கள் செய்யும் பலரில், ஒரு சிலர் மட்டும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வார்கள். அது கர்வத்தின் வெளிப்பாடு. கோயில்களில் வெளிச்சத்துக்காக உபயமாக வழங்குகிற டியூப்லைட்டுகளில் கூட தங்களின் பெயர்களை எழுதி, புகழுக்கு வெளிச்சம் தேடிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். எல்லை மீறாத கர்வம், எவருக்கும் எரிச்சலைத் தராது.

தீமை பயக்கும் கர்வத்தைக் கொண்டுள்ள மனம், பிறரை மதிக்காது . அவர்களின் வெற்றிகளை அலட்சியப்படுத்தும், மட்டம் தட்டிப் பேசும் , சகிப்புத்தன்மை என்பது மருந்துக்கும் இருக்காது , கூட்டு முயற்சியில் கைகோக்காமல், விலகியே இருக்கும்; எங்கும் , எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி அலட்டிக்கொள்ளும். ஒரு மனிதனின் அனைத்து துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம் , கர்வம்தான் !

குருஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன் மனதுக்குள், அவன் பெற்ற வெற்றி உற்சாகத்தை தர... அடுத்த கணம், அதுவே கர்வமாக உருவெடுக்கிறது. எத்தனை பாணங்களை எய்தோம்; எத்தனை எதிரிகளை வென்றோம் ! இதோ.... இன்று தன்னிகரில்லாத வீரனாக நிற்கிறோம் ! என்று இறுமாப்புடன் யோசித்தவன், தேரில் இருந்து இறங்க முனைந்தான் . கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவவேண்டும் என்பது மரபு. கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்றான்.

அவனது மனஓட்டத்தை அறியாமல் இருப்பாரா ஸ்ரீகிருஷ்ணர் ?! மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இத்தனைக் காலம் தேரினைச் செலுத்தி, களைப்பாகிவிட்டேன் நீயே இறங்கிக்கொள்ளேன் என்றார். அர்ஜுனனும் சம்மதித்தான். ஆனால் கர்வம் மட்டும் இறங்கினபாடில்லை. வெற்றி மமதையுடன் கீழே இறங்க... அவனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும் கீழே இறங்கினார் அவ்வளவுதான்.. தேர் குபீரென்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்துபோனது. அதிர்ந்துபோனான் அர்ஜுனன். மெல்லப் புன்னகைத்தார் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனா ! உனக்கு நினைவிருக்கிறதா ? போரில் உன் மீது கர்ணன் நாகாஸ்திரத்தை எய்தபோது, உடனே தேரை கீழே அழுத்தினேன்; உன் தலை தப்பியது. அந்த பாணத்தின் பாதிப்பை, கொடியில் இருந்த அனுமன் இதுவரை ஏற்றிருந்தான். இப்போது தேரை விட்டு நான் இறங்கியதும், அனுமனும் இறங்கிவிட்டான். அஸ்திரம் தனது வேலையைக் காட்டிவிட்டது. இதோ, தேர் சாம்பலாகிப் போனது ! என்றார். எரிந்து சாம்பலானது தேர் மட்டுமா ? அர்ஜுனனின் கர்வமும்தான் ! ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான்.

மற்றவர்கள் அனைவரும் தான் என்ற அகந்தையோடு இருக்கிறார்கள். நான் அவர்களைப் போல அல்லாமல், தன்னடக்கத்தோடு இருக்கிறேன் என்று ஒருவன் தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்துக் கொள்கிறான் என்றால் அவனும் கர்வம் பிடித்தவன் தான்.

00000000000000000000000000000

அவர்களுக்கு அது ஹாரர்ஸ்கோப்

நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது.வீட்டிலிருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன், வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் இப்படிச் செய்தாலும் இருட்டைச் சுற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் இருட்டை வெளியேற்ற முடியாது.

ஒளி இல்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால், இருட்டு ஓடிவிடும். பயமும் இருட்டு மாதிரிதான். அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால், பயம் மறைந்துவிடும்.

புரியவில்லை என்றால், அன்பின் ஒருவகையான, காதலை எடுத்துக் கொள்ளுங்கள் காதல் எப்படி மலர்கிறது...? ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது இன்னொருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கிறது ?

ஒரு பெண்ணின்மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வராவிட்டால், அங்கே காதல் என்ற அன்பு கிடையாது .

சுஃபி இலக்கியத்தில் வரும் முல்லா நஸ்ருமீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால், இந்த தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக்கூடும்.

முல்லா நஸ்ருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து, மறுகரைக்கு முல்லா நஸ்ருதீனும் அவரது இளம்மனைவியும், உறவினர்களோடு படகில் போய்க் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று புயல் அடித்தது. நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது. மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரண பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், முல்லா மட்டும் பயமேதும் இல்லாமல் இருந்தார்.

இதைப் பார்த்த புது மணப்பெண், "உங்களுக்கு பயமாகஇல்லையா?" என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நஸ்ருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார். மனைவியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை அப்போது முல்லா நஸ்ருதீன் தன் மனைவியைப் பார்த்து, கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா ? என்று கேட்டார்.

அதற்கு அவரது மனைவி, "கத்தி வேண்டுமானால் அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால், அதைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என் கணவர். அதனால் நான் பயப்படவில்லை..." என்றாள்.

"அதேபோலத்தான் எனக்கும். இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால், இதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் அன்புமயமானவர். அதனால் எனக்குப் பயம் இல்லை" என்றாராம் முல்லா நஸ்ருதீன்.

முல்லா நஸ்ருதீனுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் அன்பு இருந்தது. அல்லாஹ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால், படகில் பயணித்த மற்றவர்களைப்போல முல்லா நஸ்ருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார். இதே உண்மையை நம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகிறது என்றால், நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். நான் கடவுளுக்குப் பயந்தவன்.. என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இது அபத்தமானது. கடவுளிடம் நாம் செலுத்த வேண்டியது அன்புதானே தவிர, பயம் இல்லை. நமது உபநிஷத்துக்கள் சொல்லும் மிகப்பெரிய விஷயமே, பயம் இல்லாமல் இருங்கள் என்பதுதான்... என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு, எனக்கு மரணம் எப்போது வரும் ..? என்று தெரிந்துகொள்ள ஜோசியர் மாற்றி ஜோசியராகப் போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரர்ஸ்கோப் (ஜாதகம்) என்பது ஹாரர்ஸ்கோப். இம்மாதிரி நபர்கள், வாழும்போது என்ன செய்யலாம் என்பதைவிட, எந்த நேரம் இறந்துவிடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குவலைந்து கொண்டிருப்பார்கள்.

மரண பயம் பற்றி தாகூர் சொல்லும்போது,

"நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.. . நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும் அதனால் நம்பிக்கையோடு இரு..."

என்கிறார்.

பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும். எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுங்கள்... தவறில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சி தான் பாழாகும். பணம் திருடுபோகாமல் இருக்க, அதை எங்கே, எப்படி வைப்பது... மீறி திருட்டுப் போனால் இன்ஷூரன்ஸ் மூலம் எப்படி பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தமில்லை. பரீட்சையில் ஃபெயிலானால்.. என்று விபரீதமாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை நீங்களே பலவீனமாக்கிக்கொள்கிற அந்த நேரத்தைப் பரீட்சையில் எப்படி பாஸாவது என்பது பற்றிச் சிந்திப்பதில் செலவிடுங்கள்.



March 27, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...