அந்தக்கிராமத்தில் அதிகாலைவேளையிலும் சூரியன் உக்கிரமூர்த்தியாக இருந்தான் .அருகே இருந்த கோவில் மணி ஓசை காலை ஆறு மணி என்பதை ஆறுமுகம் வாத்தியருக்கு உணர்த்தியது .அருகே படுத்திருந்த மனோரஞ்சிததை சிறிதுநேரம் உற்றுப்பார்த்தபொழுது அவரை அறியாது அவர்கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை , உள்ளே செல் என்று அவரால் சொல்ல முடியாது இருந்தது . ஏனெனில் சிறிது நேரத்திற்கு முதலே தனது ஏக்கப்பார்வையுடன் ஆறுமுக வாத்தியாரின் மடியில் அவளது மூச்சு அடங்கியிருந்தது. அவளது இழப்பால் ஒருகணம் தடுமாறிப் பெருங்குரலெடுத்துக் குளறினார் ஆறுமுகவாத்தியார் . உள்ளே படுத்திருந்த சுகுணா கலவரத்துடன் ஓடிவந்தாள் .
ஆறுமுகம் வாத்தியார் தன்னுடன் படிப்பித்த மனோரஞ்சித்தை பலத்த எதிர்ப்பகளுக்கு மத்தியிலேயே காதலித்து கலியாணம் செய்திருந்தார் . அவர்கள் இருவருமே , வாத்தியார்கள் என்றால் என்ன எனபதற்கு எடுத்துக்காட்டாகவே அந்த கிராமத்துக் கல்லூரியில் படிப்பித்தார்கள் . அவர்களிடையே கனித்த காதலின் விளைச்சலாக சுகுணாவும் , ரமணனும் , குணம் என்ற குட்டியும் அந்த வீட்டிலே தவழ்ந்து விளையாடினார்கள் .
அப்பொழுது அந்தவீடு அமைதியாக இருந்தது ஒரு சிலமணி நேரங்களே . ரமணனும் குட்டியும் செய்கின்ற கூத்துகளால் வீடே இரண்டுபட்டது . சுகுணா அமைதியானவள் ஆனாலும் தம்பிகளுடன் ஒத்துப்போதலையே அவளது தாய் மனோரஞ்சிதம் சுகுணாவிற்கு ஊட்டி வளர்த்தாள் . அதனால் தம்பிகளுக்கு அக்காவின்மேல் பயம் இல்லாது போய் , தாங்கள் என்ன செய்தாலும் அக்கா ஒன்றும் சொல்லமாட்டா என்ற நிலமைக்குக் கொண்டு வந்தது மனோரஞ்சிதத்தின் வளர்ப்பு . ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு விடயத்தில் கஞ்சத்தனத்தைக் காட்டவில்லை .
ஆறுமுகம் வாத்தியார் தனது மனைவி மனோரஞ்சிதத்தை அவளுடன் பிறந்தவர்களுடன் பழக அனுமதித்ததில்லை. அவளும் அதை விரும்பியதில்லை . இவர்களது மனம்போலவே அவர்கள் அந்தக் கிராமத்தில் முக்கியபுள்ளிகள் ஒரு சிலர்களில் ஒருவர்களாகி விட்டார்கள் . பிள்ளைகள் மூவருமே படிப்பில் சிகரத்தை தொட்டார்கள் . ரமணன் அதிசிறந்த பெறுபேறுகளுடன் பேராதனை பல்கலைகளகத்தில் மருத்துவபீடத்திற்குத் தெரிவானான் . சுகுணா ஏ லெவலை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் . குட்டி உயர்தரம் படித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இலங்கை என்ற நாட்டை இரண்டு சனிகள் பிடித்து ஆட்டியது . தெற்கில் பல அனாகரீக தர்மபாலக்கள் பௌத்தசிங்களம் என்ற சனியை வளர்க்க , வடக்குகிழக்கிலே யாழ்ப்பாணியம் சுதந்திரத்மிழீழம் என்ற சனியை 35 பிரிவுகளாகப் பிரித்து வளர்த்தெடுத்தது . இந்த அலையிலே அள்ளுப்பட்ட இளைஞர்களை அடக்குவதே தனது முழுநேரத்தொழிலாக மாற்றிக்கொண்டது இலங்கை . இந்தச்சனிகளை ஓட்டுவதற்கு பல சாத்திரப்பூசாரிகளையும் இலங்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டது .
சாத்திரப்பூசரிகளும் பௌத்தசிங்களமும் செய்த குளறுபடிகளால் தமிழர்தாயகம் ரத்தக்களறியானது . இதனால் மேலும் ஆவேசமான இளைஞர்களை சுதந்திரத்தமிழீழம் என்ற கோட்பாடு சுலபமாகவே தனது பிடியினுள் கொண்டுவந்தது . இதில் ரமணனும் குட்டியும் அள்ளுப்பட்டதை ஆறுமுகம் வாத்தியாருக்கு நம்பகமானவர்கள் உறுதிப்படுத்தினார்கள் . தங்களுக்கு எது வந்தாலும் பறவாயில்லை தனது வாரிசுகள் அழிந்துவிடக்கூடாது என்று ரமணனையும் குட்டியையும் தனது சொத்துபத்துக்களை ஈடு வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார் ஆறுமுகம் வாத்தியார் . ரமணன் லண்டனுக்கும் குட்டி பிரான்சுக்கும் பயணமானார்கள் . மறுதலையாக சுதந்திரதமிழீழம் என்ற கோட்பாட்டில் இரண்டு தலைகள் வெளிநாட்டிற்குப் பிய்த்தெறியப்பட்டன . இதற்கான விளைச்சலை அறியாது சுதந்திரத்தமிழீழமும் தன்பாட்டிற்கு வீறுகொண்டெழுந்தது .
மகன்களை அனுப்பிய கையுடனேயே ‘ பிள்ளைகள் வெளியில் ‘ என்ற தகுதியுடன் மனோரஞ்சிதத்தின் அண்ணை தனது மகனுக்கு சுகுணாவை பெண்கேட்டு ஆறுமுகம் வாத்தியாரின் வீட்டில் படியேறினார் . அன்றைய போர் சூழ்நிலையில் ஒருவரையொருவர் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இருந்ததாலும் ஆறுமுகம் வாத்தியார் தனது பிடிவாதத்தை தளர்த்தினார் . சுகுணாவும் தனது மச்சானைக் கலியாணம் செய்வதில் பூரணசம்மதத்துடனே இருந்தாள் . ஆனால் சுகுணாவின் கலியாணவீட்டிலோ விதி வேறுவிதமாக விளையாடியது . அவளது கலியாணவீடு முடிந்து அருகே இருந்த பிள்ளையாரிடம் ஆசீர்வாதம் வாங்க ஊர்வலமாகச் சென்றபொழுது , மேலே எழுந்த புக்காரா என்ற அரையண்டம் பிடித்த பறவை தனது முட்டையைத் துப்பிவிட சுகுணாவின் மச்சான் இரத்தக்குழம்பானான் . சுகுணாவும் மயிரிழையில் காயங்களுடன் தப்பினாள் . மனோரஞ்சிதமோ இடுப்பிற்கு கீழே இயங்கமுடியாத அளவு முட்டைச்சிதறலினால் பாதிக்கப்பட்டாள் . ஒருநாள் மணக்கோலத்தைக் கண்ட சுகுணா அதன்பின் யாருடனுமே பேசவில்லை . இவைகளையெல்லாம் தனது இருபிள்ளைகளுக்கு ஆறுமுகவாத்தியார் கண்ணீருடன் எழுத , குட்டியே தனது பெயருக்கு ஏற்றவாறு அவர்களை அரவணைத்தான் . ரமணனோ தனக்கு இதில் சம்பந்தம் இல்லாமல் போல இருந்தது ஆறுமுகவாத்தியாருக்கு மிகவும் வேதனையாவே இருந்தது .
000000000000000000000
இரவு வேலை முடிந்து நடுநிசியில் வீடு வந்த குட்டிக்கு , அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு அவனது தூக்கத்திற்கு உலை வந்தது .
"குட்டி நான் ஐயா பேசிறன் " .
"என்ன ஐயா இந்த நேரத்திலை "??
"எடே மோனை ………. உங்கடை கொம்மா எல்லாரையும் விட்டிட்டு போயிட்டா . இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் என்ரைமடியிலை உயிர் போனது . கொண்ணையோடை கதைச்சு ரெண்டுபேரும் கொள்ளி வைக்க வாங்கோ " .
என்று சொல்லி ஆறுமுகம்வாத்தியாரின் தொடர்பு அறுந்தது . குட்டிக்கு அவனது அம்மாவின் இறப்புச்செய்தி அவனை வெகுவாகவே உலுப்பியிருந்தது . தனது அம்மாவிற்கு கொள்ளி வைக்கவேண்டிய தான் பிரான்சில் இருந்த தனது சூழ்நிலைக் கைதி நிலையினை , குட்டியின் மனம் குத்திக் கிளறி வடியும் ரத்ததை ருசி பார்த்தது . அவனது கண்களில் கண்ணீர் பெருகியது.குட்டியினருகே அவனது மனைவி மைதிலியும் பிள்ளைகளும் செய்தி தெரியாது நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள் . குட்டி மெதுவாக அறையில் இருந்து வெளிவந்து தனது கணணியினை உயிர்ப்பித்து தனது வங்கிக் கணக்கினுள் நுழைந்தான் . அவனது வங்கிக்கணக்கு என்றுமே சைபருக்கு கூடி இருந்ததில்லை . அவனது சேமிப்புக்கணக்கில் இருந்த 1500 யூறோக்களை நடைமுறைக்கணக்குக்கு மாற்றி விட்டு வெஸ்ரேர்ன் யூனியன் ஊடாக காசு போகவேண்டிய வழிமுறைகளை தெரிவித்தான் . ஐயாவுக்கும் காசு அனுப்பிய விபரத்தை போன் மூலம் தெரிவித்தபொழுது அதிகாலை 3 மணியாகியிருந்தது . அவனது கண்கள் நித்திரையின்மையால் செவ்வரியோடியிருந்தன .
மனைவியையும் பிள்ளைகளினது நித்திரையைக் குழப்பாது லைற்றுக்களை அணைத்துவிட்டு கையில் றெமிமாட்டின் கிளாசுடனும் , சிகரட் பெட்டியுடனும் வீட்டின் பல்க்கணிக்கு வந்தான் . பல்க்கணியின் முன்னே உள்ள பூங்காவில் உள்ள ஃபைன் மரத்து இலைகள் மெல்லிதாக வீசிய தென்றலுக்கு சலசலத்தன . பூரணை நிலவு மேலே எழும்பி அவனைக் குளிர முயன்றது . றெமிமாட்டின் அவனது தொண்டையினுள் எரிச்சலுடன் இறங்கியது அவன் மனதைப்போலவே . அவன் சிகறட்டைப் பற்ற வைத்து அதன் புகையை ஆழ இழுத்து வெளியே ஊதினான் . அவனது அம்மா அவன் மனதில் மின்னி மின்னி மறைந்தா . போனகிழமை தன்னுடன் அன்பொழுகக் கதைத்த அம்மா இன்று இல்லை என்பதை அவனது மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தது . அவனால் வந்த கேவலை அடக்கமுடியவில்லை .
வீட்டில் ரமணன் அண்ணைக்கும் , சுகுணா அக்காவிற்கும் கடைக்குட்டியாகப் பிறந்தவனுக்கு அன்பிலே குறைச்சல்கள் எதுவுமே இல்லையெண்டாலும் முன்னுரிமை விடயத்தில் அவனது அண்ணைக்கும் அக்காவுக்குமே முதலிடம் கொடுக்கப்பட்டது . இந்தப் பாகுபாடு அவன் வளர்ந்தபின்பு அவனை மிகவும் பாதித்தது என்னவோ உண்மைதான் . அவனுடன் பிறந்தவர்கள் அவனை ஓர் சிறுபிள்ளையாகவே அவனைப்பார்த்தனர் . அவர்களது பார்வையானது அவன் மைதிலியை திருமணம் செய்து இருபிள்ளைகளுக்குத் தந்தையானபோதும் தொடர்ந்தது . ஆனால் வீட்டைப்பார்க்கின்ற விடயத்தில் மட்டும் அவனையே ஏனையோர் முன்னுக்கு விட்டிருந்தனர் . அவனது கண்களால் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது . வெறுமையாக இருந்த றெமிமாட்டின் கிளாஸ் மீண்டும் தன்னை சுவை என்று அவனைப்பார்த்து சிரித்தது . அவனது விரல்களில் புகைந்த சிகரெட் அணைவதற்குத் தயாராக இருந்தது .
ஆறுமுகம் வாத்தியார் முன்விறாந்தையில் பித்துப்பிடித்தவர் போல இருந்தார் .உள்ளே அழுதுகொண்டிருந்த சுகுணாவை ஆறுதல்படுத்த அவருக்கு வழிவகைகள் தெரியவில்லை . விடையம் அறிந்து அயலவர்கள் உறவினர்கள் அங்கே திரளத் தொடங்கிவிட்டார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணையே எல்லா அலுவலுகளையும் செய்து கொண்டிருந்தார் . அப்பொழுது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த வொயிற்ஹவுஸ் காறர்கள் மனோரஞ்சிதத்தை எம்பாம் செய்ய வந்திருந்தனர் . ஆறுமுகவாத்தியாரின் மனதில் பலவிதமான யோசனைகள் தொடர் ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தன . குட்டி அனுப்பிய காசை சிறிது நேரத்திற்கு முதலே எடுத்துக்கொண்டு வந்திருந்தார் . ஆனால் தனது பிள்ளைகள் செத்தவீட்டிற்கு வருவார்களா என்ப தே அவரது சிந்தனையோட்டமாக இருந்தது . துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கொஞ்சம் விடுப்பு அறிவதிலும் ஆர்வம் காட்டினார்கள் . அவர் இருவரில் ஒருவராவது கட்டாயம் வருவார்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தார் . தன்னுடன் படிப்பித்த ஆசிரிய நண்பர்களுக்கு பிள்ளைகள் கட்டாயம் வருவார்கள் என்றே சொல்லி இருந்தார் . வீடு துக்கம் விசாரிக்க வந்தவர்களால் நிரம்பி வழிந்தது . பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள் . பட்டியில் கட்டி இருந்த நந்தினியும் வெள்ளைச்சியும் கண்ணில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தன . சுகுணாவின் செல்லமான விக்ரறோ சாப்பிடாது ஆறுமுகவாத்தியாருக்கு அருகில் கண்ணீருடன் வாலைச் சுறுட்டியவாறு படுத்துக்கிடந்தது . விக்ரர் இடைக்கிடை தொலைபேசியை பார்பதும் விடுவதுமாக ஆறுமுவாத்தியாரின் மனதை பிழிய வைத்தது .
0000000000000000000000
அவன் வீட்டுக்கடிகாரம் காலை 4 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது . அது கோடை காலமாகையால் விடிவதற்கான ஆயுத்தங்கள் அப்பொழுதே இருந்து ஆயத்தமாகிவிட்டன . தூரத்தே வானத்தில் செம்மை கோடுகிழிக்க ஆரம்பித்தது . இருளுக்கும் வெளிச்சத்திற்கும் கலவை விகிதத்தில் குளப்பங்கள் தொடங்கத் தொடங்கின . இவைகளினூடே குருவிகளும் தங்கள் வேலையில் கண்ணாக இருந்தன . குட்டியால் அந்த நாளின் கருக்கட்டலுக்கான வேளையை ரசிக்கமுடியவில்லை . மைதிலி வேலைக்குச் செல்ல எழுந்துவிட்டிருந்தாள் . பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்கு தயார் படுத்தவேண்டிய மைதிலிக்கு குட்டி சொன்ன அம்மாவின் இறப்பு செய்தி அவளை நிலைகுலையவைத்தது .
"இப்ப காசுக்கு என்ன செய்யிறது " ??
என்று அழுகையுடன் கேட்ட மைதிலிக்கு அவன் தான் செய்தவைகளைச் சொன்னான் .
"லண்டன் ரமணன் அண்ணைக்கு சொன்னியளோ" ??
என்று கேட்ட மைதிலிக்கு குட்டியினது நம்பிக்கையீனச் சிரிப்பே பதிலாகியது .
லண்டனுக்குப் போயிருந்த அவனது அண்ணை ரமணன் , படித்து முடித்து டொக்ரராகி அவனுடன் படித்த ஓர் ஐரிஷ் பெண்ணை கலியிணம் செய்தது , இறந்த அம்மா உட்பட யாருக்குமே தெரியாத விடையம் . ரமணனும் தனது விடையங்களை யாருக்குமே தெரியாது நகர்த்தி வீட்டாருடன் ஓர் தனித்தீவாகவே இருந்துகொண்டான் . தனது திருமணத்திற்கு பாரிசில் இருக்கும் இந்த தம்பியை அழைத்திருந்தான் . அத்துடன் ரமணனது தொடர்புகள் படிப்படியாக குட்டி யுடன் குறைந்து கொண்டே போனது . ஆனாலும் விட்டகுறை தொட்டகுறையாக அவ்வப்பொழுது அவனது ஐரிஷ் அண்ணி மெயில் போடுவாள் .
தாங்கள் இருவரும் ஒரே வயிற்றில் ஒருவயது இடைவெளியில் பிறந்திருந்தாலும் , இருவரின் குணாம்சங்களும் இயற்கையின் பார்வையில் மேற்கும் கிழக்காகவும் இருந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை . அவன் , தனக்கும் ரமணனுக்குமான சிறுபிள்ளைக் காலங்களை நினைத்து அடிக்கடி மனதை ஆறுதல்படுத்த முனைந்தாலும் , காலம் என்ற பக்கச்சார்பற்ர சுற்றுப்பாதை அவனைப்பார்த்து இனம்புரியாத சிரிப்பொன்றைச் செய்யவே செய்தது .
மைதிலியின் வற்புறுத்தலுக்காக ரமணனின் தொலைபேசி இலக்கத்தை ஒற்றினான் அவன் . ரமணன் ஒருசில நிமிட இடைவெளியில் கிடைத்தான் .
"என்னடாப்பா எப்பிடி இருக்கிறாய் ?? மைதிலி பிள்ளையள் எப்பிடி சுகமாய் இருக்கினமே "??
என்ற ரமணனை இடைவெட்டி ," உனக்கு விசையம் தெரியுமே ?? எங்கடை அம்மா எங்களை விட்டு போட்டா ".
என்று விசும்பலுடன் சொல்லிமுடித்தான் அவன் .
"என்னது…… எப்ப நடந்தது" ??
"இண்டைக்கு விடிய ஐயா போன் பண்ணினவர் . எங்கள் ரெண்டுபேரிலை ஒராளையாவது வரட்டாம் . உன்னோடை கதைச்சு போட்டு தனக்கு போன்பண்ணச் சொன்னவர்" .
"என்னாலை எடுத்த உடனை போகேலாதடாப்பா . இண்டையிலை இருந்து மூண்டு நாளைக்கு பத்து முக்கியமான ஒப்பிரேசனுகள் செய்யவேணும் . நாலைஞ்சு மாசத்துக்கு முதலே இதுகளுக்கு நான் திகதி குடுத்தது மாத்தேலாது . உன்ரை விசாவோடை நீயும் அங்கை போகேலாது . நான் ஐயாவோடை கதைக்கிறன் . அவரையே எல்லாத்தையும் செய்ய சொல்லிவிடு ".
என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான் ரமணன் . ரமணனின் பதில் ஓரளவுக்கு அவன் எதிர்பாத்திருந்தாலும் , அம்மாவின் சாவில் இதைக் கொஞ்சங்கூட அவன் எதிர்பார்க்கவில்லை . ரமணனினுடைய மாற்றத்தை குட்டியால் தாங்கமுடியவில்லை . ஒருவேளை ரமணனின் டொக்ரர் தொழிலில் மரணங்கள் சர்வசாதாரணமானவையோ ??? என்று அவன் மனம் பலவாறாக எண்ணி அவனது மனச்சாட்சியுடன் மல்யுத்தம் செய்தது.
குட்டி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஐயாவுக்கு போன் பண்ணினான்
"சொல்லு தம்பி ".
"ஐயா நான் அண்ணையோடை கதைச்சனான் . தன்னாலை இப்ப வர ஏலாதாம் . என்ரை நிலமையை எப்பிடி ஐயா சொல்லிறது ?? நான் அகதியாய் போனன் . என்னப்பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைக்கேலாமல் கிடக்கு ".
என்று பெரும் அழுகையுடன் சொல்லி முடித்த குட்டிக்கு , ஆறுமுகம் வாத்தியார் ரெலிபோனை அடித்துவைக்கும் ஒலியே அவனக்கு நாரசமாய் ஒலித்தது . அப்பாவின் செய்கையை அவனால் தாங்கமுடியவில்லை . அவன் பிள்ளைகளுக்கு முன்னால் அழுவதை தவிர்த்து ரொயிலெற்றினுள் போய் இருந்து அழுதான் . மைதிலி அழுகையினாடாக பிள்ளைகளை பள்ளிக்கூடம் செல்லத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள் . அவனுக்கும் ஒர் இடமாற்றம் தேவைப்பட்டதால் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதாக மைதிலியிடம் சொல்லி விட்டு பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு இறங்கினான் .
குட்டி வெளியில் வந்தபொழுது அவனுடைய றெமிமார்ட்டின் தலையிடிக்கு குளிர்ந்த காற்று இதமாகவே இருந்தது . அவனது கைகளில் பிள்ளைகளின் பிஞ்சுக் கைகள் நுளைந்திருந்தன . அவனது மனமோ தனது பிள்ளைகளை மனிதர்களாக வளர்கவேண்டும் என எண்ணிக்கொண்டது . அவன் பிள்ளைகளை விட்டு வீடு திரும்பிய பொழுது மைதிலி தனது வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தாள் . தனக்கு ஒன்று என்றால் துடிக்கும் அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது . சிந்தனை ஓட்டங்களால் அல்லாடிய குட்டியை மைதிலியின் குரல் கலைத்தது ,
"இண்டைக்கு வேலைக்கு போகவேண்டாம் . வீட்டிலை நில்லுங்கோ . நான் வேலைக்கு போறன்".
என்று சொன்னவளை இடை நிறுத்தினான் குட்டி ,
"இல்லை நான் போகவேணும் . இங்கை என்னாலை தனிய இருக்கேலாது அம்மாவின்ரை ஞாபகம்தான் வரும் . அதோடை வன்னியிலை அந்த சரட்டியாலை நாங்கள் பொறுப்பெடுத்த பிள்ளையள் மூண்டுக்கும் வாறமாசம் காசு அனுப்பவேணும் . அதுகளும் பாவங்கள் தானே ?? நீங்கள்தானே இந்த சரட்டியைபத்தி சொல்லி அந்தப்பிள்ளையளை பொறுப்பெடுத்தம் . அந்தப்பிள்ளையள் பட்ட வேதனையோடை ஒப்பிடேக்கை எனக்கு வந்தது கால்தூசிக்கு பெறுமானம் . எங்கடை பிள்ளையளுக்கு நாங்கள் இருக்கிறம் . அதுகளுக்கு ஆர் இருக்கினம் ?? என்னை குளப்பாதையுங்கோ மைதிலி , பின்னேரம் ஆறுதலாய் கதைப்பம் " என்றான் அந்த ஈரமனிதன் . மைதிலி அவனைப் பேசவிட்டு அவனது மனப்பாரத்தை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் .
0000000000000000000000
ஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம் வந்து யார்கொள்ளி வைப்பது ?? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .
"அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் "
என்னபிள்ளை விசர்கதை கதைக்கிறாய் ??
"நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ள எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா "
சுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .
எல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .
September 17, 2013
Comments
Post a Comment