Skip to main content

மனமே மலர்க - பாகம் 16.





மனிதன் எத்தனை வகை!

மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

1.Introverts: 

மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது.

2.Extroverts: 

எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts: 

மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தைல புத்தி: 

ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத புத்தி: 

நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி: 

விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண் புத்தி: 

எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

000000000000000000000000000000000000

நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி

அவன் ஒரு அரசன். தான் என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச் சென்றபோது, காட்டிலே ஒரு துறவியைச் சந்தித்தான். கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி.

"நான் பல நாடுகளை வென்று, என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால், என் கஜானா நிரம்பி வழிகிறது. அந்தப்புரம் எங்கும் நான் கவர்ந்து வந்த மாற்று தேசத்து அழகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்?" அரசன் கேட்டான்.

தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக 'நான் செத்தால் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்...' என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

நான் எத்தனை பெரிய அரசன்.. . என்னையே அவமானப்படுத்துகிறாயா? என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல், துறவியைக் கொல்வதற்காக இடுப்பிலே இருந்த கத்தியை உருவினான்.

"அட மூடனே! நான் என்றால் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை.... நான் என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்..." என்று துறவி விளக்கினார்.

நம்மைவிடப் படிப்பிலோ, பதவியிலோ, செல்வத்திலோ குறைவானவன் என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒருவர் ஒரு விவாதத்தின் போது நாம் சொல்லும் கருத்துக்கு ஆமாம்.. . சாமி போடாமல் மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ள நம் ஈகோ இடம் கொடுப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற ஈகோஉடையவர்கள், நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்... நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்... என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் இவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால், எனக்கு மரியாதை கொடு... என்று மற்றவர்களிடம் மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள். மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் இவர்களுக்குக் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறி போய் விடுகிறது. சந்தோஷம் தொலைந்து விடுகிறது.

நமது வேதங்கள் ஆண்டவனை ஆனந்தம் என்று குறிப்பிடும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'Ediging God Out' என்பதன் சுருக்கம்தான் Ego.. அதாவது, நம்மைவிட்டு ஆண்டவன்... அதாவது ஆனந்தம் வெளியேறும் நிலைதான் ஈகோ!

கடவுளே, நான் என்ற அகங்காரத்தை இதோ உனக்கு எதிரே உடைத்து விடுகிறேன்.. என்று நமக்கு நாமே உணர்த்தத்தான் தேங்காயை ஒரு அடையாளப் பொருளாகக் கோயிலிலே உடைக்கிறோம்.

தேங்காயின் கடுமையான ஓடு உடையும் போது எப்படிச் சுவையான இளநீர் வெளிப்படுகிறதோ. அதே மாதிரி நமது அகங்காரம் என்ற ஈகோ உடையும்போது சந்தோஷம் வெளிப்படும்.

அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து எடுபடவில்லை. நீங்கள் ஈகோ இல்லாதவராக இருந்தால். இதுபற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்... உங்களின் கருத்தை மற்றவர்கள் பாராட்டினாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும் சரி, கண்டு கொள்ளாவிட்டாலும் சரி இதனால் பாதிக்கப் படாமல் இருப்பீர்கள்.

கவிர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

ஒரு முறை படகில் ஏறி, யமுனை நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர். அது இரவு நேரம். படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார்.

ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை... பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்தது தான் தாமதம்.. . நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது.

இதைப் பார்த்ததும் தாகூருக்கு கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்...?

ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ, அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை அது மறைத்து விடும்.

0000000000000000000000000000000000

தோல்வி மனப்பாங்கு

பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?

நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.

தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும் அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.

தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது. தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.

தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

0000000000000000000000000000000000

கைகளைக் குவித்து... கண்களை மூடி...

குறைவாகப் பேச வேண்டும், அதிகமாகக் கேட்க வேண்டும், என்பதற்காகத்தான் ஆண்டவன் நமக்கு ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். ஆனால், நம்மில் பலருக்கு உலகிலேயே இனிமையான ஓசை நம் சொந்தக் குரல்தான். அதனால்தான் பலர், தாங்கள் பேசும் வார்த்தையில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

மேலைநாட்டுச் சித்தாந்தத்திலும் சரி, நமது முன்னோர்கள் சொன்ன முக்கிய தத்துவத்துவங்களிலும் சரி... கேட்பது என்பதற்காக நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்றவர் பேசுவதை நாம் கேட்க வேண்டும் என்றால், முதலில் நாம் பேசுவதை நிறுத்த வேண்டும். ஆனால், நமக்குத்தான் அது பிடிக்காதே.

பெண்மணி ஒருத்தி கைகளைக் குவித்து கண்களை மூடி மேரி மாதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். அதைப் பிரார்த்தனை என்று கூடச் சொல்ல முடியாது, எனக்கு அது வேண்டும்... எனக்கு இது வேண்டும்... கடவுளிடம் விண்ணப்பப் பட்டியல் படிப்பது மாதிரி இருந்தது அவளின் நீண்ட பிரார்த்தனை.

புகழ் பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்செலோ, அவளைக் கேலி செய்வதற்காக மறைவிலே நின்று கொண்டு, பிதா குமாரனான யேசு பேசுகிறேன்... பக்தையே, உனது பக்தியை மெச்சினோம் உனக்கு என்ன வேண்டும்...? என்று கேட்க - அந்தப் பெண்மணி., சும்மா இருங்கள் ஜீசஸ் நான் உங்கள் தாயிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என்றாளாம்.

அதாவது, பேசுவதில் ஒருவருக்கு ஆர்வம் வந்துவிட்டால் எதற்குப் பேசுகிறோம் என்ற நோக்கம் கூடப் பின்னால் தள்ளப் பட்டுவிடுகிறது, பேசுவதால் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சிக்காகவே பலர் முடிவில்லாமல் பேசுகிறார்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு, அடுத்தவர் பேசும் பேச்சைக் கேட்டாலும், அதைச் சரியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அதைவிட முக்கியமானதாக இருக்கிறது.

புத்தர் ஒரு சமயம் தன் சீடர் ஒருவருக்கு, தினமும் தூங்குவதற்கு முன் உன் கடமையைச் செய்ய மறக்காதே... என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்திலே புதரிலே மறைந்திருந்த ஒரு திருடனும் இதைக் கேட்கிறான்.அவன் பரம்பரைத் திருடன். புத்தர் சொன்னதைக் கேட்டுவிட்டு, "என் கடமை திருடுவது. தினமும் திருடிவிட்டுத்தான் தூங்க வேண்டும்" என்று அந்தத் திருடன் அர்த்தம் எடுத்துக் கொண்டானாம்.

பைபிளில் Silly Christ என்று ஒரு சொற்றொடர் உண்டு, 'Silly' என்பதற்கு இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தம் வேறு.

ஆனால் பைபிள் காலத்தில் 'Silly' என்றால், சூதுவாது தரியாத Innocent என்று அர்த்தம். அந்தக் காலத்து அர்த்தத்தில் புனையப்பட்ட இந்தச் சொற்றொடரை இந்தக் காலத்து அர்த்தத்தில் புரிந்து கொண்டால் எந்த அளவுக்கு மனவருத்தம் உண்டாகும் பாருங்கள்.

அர்த்தம் புரியாமல் தப்பாக எடுத்துக் கொள்வது ஒருவகை என்றால், பல சமயம் நாம் திறந்த மனதுடன் பிறர் சொல்லும் கருத்துக்களை கவனிப்பதில்லை பேசுகிறவர் யார்...? அவர் இப்படிப் பேசுவதன் உள் நோக்கம் என்ன...? இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் அவர் இந்தக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும்...? என்பதைத் தீர யோசித்து, அது நமது நன்மைக்காகத்தான் சொல்லப்படுகிறது என்று புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூடப் பலருக்கு இருப்பதில்லை.

காது கொடுத்துக் கேட்பதன் முக்கியத்துவம் பற்றி மேலைநாட்டு அறிஞர்கள் சமீப காலமாகத்தான் அதிகம் வலியுறுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் இந்து மதத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

விநாயகக் கடவுளின் காதுகளை அகலமாகக் காட்டியிருப்பதற்கான காரணம், மற்றவர் பேசுகிற வார்த்தைகளை உன்னிப்பாக கவனமாகக் கேட்க வேண்டும் என்பதுதான்.

சரி இதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கலாம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்...? என்ன குணநலன்களோடு இருக்க வேண்டும்...? என்பதை விநாயகரின் ஒவ்வொரு அங்கமும் சொல்லுவதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்...

விநாயகரின் பெரிய வயிற்றுக்கும் அர்த்தம் உண்டு. உலகில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை மனிதன் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் அவன் ஏற்று ஜீரணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விநாயகரின் பெரிய வயிறு ஒரு குறியீடு.

மனிதன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான குறியீடுதான் விநாயகரின் துதிக்கை. பிரம்மாண்டமான பருத்த துதிக்கையால், தரையில் இருக்கிற சின்னஞ்சிறு ஊசியையும் எடுத்து விட முடியும் அதே சமயம், ஒரு பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கி விட முடியும்.

மனிதன் தன் விருப்பு வெறுப்புகளை உடைத்தெறிந்தால்தான், அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைச் சொல்வதுதான் விநாயகரின் உடைந்த தந்தம். ஆசைகளை வெட்டியெறியச் சொல்வதற்குத்தான் விநாயகரின் கையில் சின்னக் கோடாரி.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விடாமல் மூளைக்கு அனுப்பி வையுங்கள். எது சரியான கருத்து? எது தவறான கருத்து? என்பதை உங்கள் அறிவே முடிவு செய்யட்டும்.

நான், விநாயகரிலிருந்து மைக்கேல் ஏஞ்செலோ, புத்தா என்று எல்லோரையும் துணைக்கு அழைத்துக் கூறிய கருத்துக்களை, வள்ளுவன் ஒன்றே முக்கால் வரிகளில் சொல்லிவிட்டார்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

00000000000000000000000000000000000

விமரிசனத்தை எதிர்கொள்ள...

நமக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் செய்யும் விமரிசனத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.நம் வாழ்வில் மகிழ்ச்சியோ துயரமோ,இந்த விமரிசனத்தை எதிர் கொள்வதைப் பொறுத்துத்தான் அமைகின்றன.மற்றவர்கள் செய்யும் விமரிசனத்தை மூன்று வழிகளில் எதிர் கொள்ளலாம்.

உணர்ச்சி வழி:

உணர்ச்சி வயப்பட்டு மனம் கொந்தளிப்பது,அதுவும் மற்றவர்கள் விமரிசனம் செய்வதைக் கேட்டு மனம் பதறுவது இயற்கை.அதனால் சினத்துடன் நமது மறுதலிப்பைப் புலப்படுத்துவது மிக எளிது.ஆனால் உணர்ச்சி வசப்படுவது நமக்கு நாமே நஞ்சு ஊட்டிக் கொள்வது போலாகும்.முதலில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது.விமரிசனங்களை முன்னரே எதிர் பார்த்தால் வரும் துன்பம் இலேசாக இருக்கும்.நம் மனதை அடிக்கடல் போல அமைதியாக வைத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நம்மை விமரிசிப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பப் பழகிக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு வழி:

உண்மையான விமரிசகர்கள் நம்மை சிந்திக்கவைக்கிறார்கள்.அது நல்லதுதானே.விமரிசனத்தின் உண்மையைக் காண வேண்டுமே தவிர நம்மை விமரிசித்தாரே என்று ஆத்திரம் கொள்ளக் கூடாது.அப்படி அறியும்போது விமரிசனத்தில் உண்மை இருந்தால் ஒப்புக் கொண்டு விடுவது நல்லது.அது விமரிசகர்களின் வாயையும் அடைத்துவிடும்.விமரிசிப்பவர்கள் நல்லவர் அல்லாதவராய் இருந்தால் அந்த விமரிசனத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் கூறி நம் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது.விமரிசகரை ஆய்வதோடு மட்டுமல்லாது ஒருவரின் விமரிசனத்தை நம் காதுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறவர் அதற்குக் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறாரா என்பதையும் ஆராய வேண்டும்.அவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

செய்முறை வழி:

கருணை,பழிவாங்கும் உணர்வைவிட ஆற்றல் மிக்கது.பழிவாங்கும் செயலுக்குப் பணியாதவன் அன்பிற்குப் பணிந்து விடுவான்.கடுமையான விமரிசகர்களைக் கூட கனிவுடன் அனைத்தும்,இணைத்தும் சென்று வெற்றி காண வேண்டும்.

00000000000000000000000000000000

பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும். பழிச் சொல்லோ, அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. அது முடிந்த போன விசயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழி சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள்? பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்தி குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள்? இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா?. இந்தச் சிறிய விசயங்களில் நேரத்தையும். வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனேனில் மனிதனின் வாழ்வு மிகவும் சுருங்கியது. இன்றிருப்போர் நாளை இல்லை. இந்த தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் பூரணமாக மனத்தை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப் பெற்றொம் ஒன்றைச் செய்தோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது. பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய, ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள். புகழ் மனிதனுக்கு தேவையா?

உலகப் புகழ்ப் பெருமையை விரும்பாதீர்கள். மானசீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இது தான் முக்கிய காரணமாகும். பிறர் உங்களை கமதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த ம்ற்றவர் பெர்ம்பாலும் முட்டால் ஜனங்களே. இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மஹா புருஷர்கள் பிறரின் அங்கீகரிப்பை, சமூக மரியாதையை எதிர்பார்த்தவர்களல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

மற்றவர்களது மதிப்பிற்காக நாம் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள் வேண்டும்? அதற்குப் பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகாங்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்த்து. முயல வேண்டியது



August 30, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...