குரைக்காதே!
நாய் ஒன்று தன இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது. கடவுள் தன வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு. எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு. அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது. எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.
இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்! எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள். மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை. எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய் ,
''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது. எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,''
என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன. மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன. அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.அதற்கு ஒரே அதிசயம். எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை. அதற்கு தெரிந்து விட்டது,தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று. அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது. எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.
அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது. அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது. அவ்வளவுதான்.அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன. இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி, இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம் என்று; மற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி, குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது,எப்போதும்போலக் குரைக்கலாம்என்று.
00000000000000000000000000000
நிலையானது
எப்போது ஒரு மனிதனுக்கு 'நிச்சயமான இறப்பு'பற்றிய உணர்வு பிரக்ஞையாக மேலே எழும்புகிறதோ,அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச உணர்வு குறைகிறது.வேறு விதமாகச் சொன்னால்,நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் காரணமாகிறது.நாம் எப்போது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ,அப்போது நாம் தொடர்ந்து இறப்பை மறக்கவே முயல்கிறோம்.ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும் இறக்க மாட்டார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.
அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.
முதன் முதலில் நம்மை நாமே சார்ந்து எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் துக்கமே ஏற்படுகிறது.விரக்தி மேலிடுகிறது.ஆனால் நம் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்,மெல்ல மெல்ல ஆனந்தம் நம்மிடையே மலருகிறது.அதற்கு மாறாக அடுத்தவரை முதலில் நீங்கள் சார்ந்து நின்றால் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தோன்றலாம்.ஆனால் முடிவில் நீங்கள் துக்கத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும்.
00000000000000000000000000000000
மனத்தின் குணம்
அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.நிறைய கவிதைகள் புனைந்துள்ளார்.நிலாக் கவிதைகள் அவருடைய சிறந்த படைப்பு .நிலவைப் பல வகையில் வர்ணித்து எழுதிய கவிதைகள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.
அவர் ஒருநாள் தன நண்பர்களுடன் ஒரு காட்டிற்கு பொழுது போக்க சென்றார். காட்டில் அவருக்கு வழி தவறிவிட்டது. தேடிப்பார்த்தும் நண்பர்களைக் காண முடியவில்லை. காட்டில் மனம் போன போக்கில் அவர் நடந்தார். அவருக்கு மிகுந்த களைப்பு ஆகி விட்டது. கடுமையாய் பசியும் எடுக்க ஆரம்பித்தது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவும் வந்துவிட்டது. அவர் ஒரு மரத்தில் ஏறி சாய்ந்து கொண்டார். அப்போது ஆகாயத்தில் பூரண நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
வழக்கமாக நிலவைப் பார்த்தவுடன் அவருக்கு ஏற்படும் பிரமிப்பு இன்று அவருக்கு ஏற்படவில்லை. வயிறறுப் பசி ஒன்றுதான் அவர் நினைவில் இருந்தது. வேறு வழியில்லாமல் மீண்டும் அவர் நிலவைப் பார்த்தபோது அந்த நிலவு அவருக்கு ஒரு ரொட்டித் துண்டுபோலக் காட்சி அளித்தது. அதை நினைத்தவுடன் அவருக்கு சிரிப்பு வந்தது. நிலவு பற்றி அழகிய பல கருத்துக்களை எழுதிய தனக்கு இன்று நிலவு ஒரு ரொட்டித் துண்டு போலத் தோன்றுகிறதே என்று நினைத்தார். ஆம்,பசி வந்தவனுக்குக் காணும் பொருள் யாவும் உணவுப் பொருளாய்க் காட்சி அளிப்பதில் வியப்பேதுமில்லையே!
உண்மையில் எந்தப் பொருளையும் நாம் அதன் உண்மைத் தன்மையில் பார்ப்பதில்லை. நம் மனம் அதை எப்படி உருவகிக்கிறதோ அப்படித்தான் பார்க்கிறோம். மனதின் விந்தை இது.
0000000000000000000000000000
தனித்தன்மை.
முனிவர் ஒருவர் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென பாதையில் குப்புறப் படுத்து, அந்த நிலையிலேயே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது அந்த வழியே ஒரு குடிகாரன் வந்தான். கீழே கிடந்த முனிவரைப் பார்த்து,
''இவனும் நம்மை மாதிரி பெரிய குடிகாரன் போலிருக்கிறது இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான்.அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''
என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.அவன் அவரைப் பாரத்தவுடன்,
''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் படுத்துக் கிடக்கிறான்,பாவம்,''
என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் முனிவர் ஒருவர் அங்கு வந்தார்.அவர்,
''இவரும் நம்மைப் போல ஒரு முனிவராகத்தான் இருக்க வேண்டும்.தியானத்தில் இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''
என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.
ஆக ஒவ்வொரு மனிதரும் அவரவர் தனித்தன்மையில் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். நாம்தான் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றி கற்பனைகள் செய்து கொண்டு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். உறவுகள் சீர்கெடுவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
000000000000000000000000000000000000
புதியதை தேர்ந்தெடு.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் , மெல்ல மெல்ல அது பழக்கமாகி நிலை பெற்று விடுகிறது. அது நிலை பெற்ற பிறகு உங்களால் மாற முடிவதில்லை. மாறினால், புதிதாகக் கற்க வேண்டும், புதுப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும். இப்போது உள்ள நிலையில் பிரச்சினை எதுவும் இல்லை, எப்போது எந்த மாதிரியான பிரச்சினை வரும், அதற்கு விடை என்ன என்பது நமக்கு நன்கு தெரியும். ஒரு பாதுகாப்புக்குள் பத்திரமாக இருப்பதுபோல இது இருக்கிறது. பழைய முறைகளில் வாழ்வது கதகதப்பானது. ஆனால் சுதந்திரப்பூ அங்கு மலராது. புதிய வானமும் திறக்காது. எதுவும் அசையாத புதைகுழி போலக் கிடக்க வேண்டியதுதான்.
புதியது அச்சம் தரக் கூடியது என்றாலும் புதியதையே தேர்ந்தெடு. உன் அச்சங்களை விடு. உன் சின்னச் சின்ன சௌகரியங்களை விட்டுத் தள்ளு. இவற்றை விலையாகக் கொடுத்துத்தான் நீ பெரிய மகிழ்வையும் எல்லையற்ற பரவசத்திற்கான வாய்ப்புகளையும் பெற முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இழப்பு ஏற்படும். ஆனால் முடிவில் நீ நஷ்டம் அடைய மாட்டாய்.
எருமைகளைப் பாருங்கள். பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது, இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு எதையாவது புசித்திருக்குமா? ஒரு எருமை புத்தராக முடியாது. இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன. மனிதனோ புதியவை தேடுபவனாக இருக்கிறான். புதுமை நமது பகை அல்ல என்பதை ஒரு முறை கற்றுக் கொண்டால் அச்சம் பறந்தோடிவிடும்.
அனுபவம் இரண்டே வகைதான்
அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம்.
யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள். கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமெரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.
கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்
இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், 'கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..' என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம்,. வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு இதை வைத்தே அவர் பெரி ய பணக்காரராகி விட்டார்.
ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறhர். அடுத்தவரோ, தனக்கிருந்த பிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறhர். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.
இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்-
அது ஷூ தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தனது கம்பெனியின் ஷூக்களுக்கு குறிப்பிட்ட ஓர் ஆப்பிரிக்க நாட்டில் எவ்வளவு 'டிமாண்ட்' இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கம்பெனி முதலாளி அந்த நாட்டுக்கு ஒரு மேனேஜரை அனுப்பினார். போன வேகத்திலேயே தனது நாட்டுக்குப் பறந்து வந்த மானேஜர், 'அந்த நாட்டில் நாம் ஷூக்களையே விற்க முடியாது..' என்று ரிப்போர்ட் கொடுத்தார். 'ஏன்..?' என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை*'
முதலாளி, 'முடியாது' என்ற வார்த்தையை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் ரகம் கிடையாது.அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு இன்னொரு மானேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மானேஜர் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடி வந்து சொன்னார்- 'நமது கம்பெனியின் ஷூக்களுக்கு அங்கே மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது '
'எப்படி..?' என்று அவரிடம் முதலாளி கேட்டார் அதற்கு இரண்டாவது மானேஜர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை'
இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம் இதுதான், ஒவ்வொரு மனிதனும் அலுவலகம், வியாபாரம், வீடு என்று வகைவகையான சந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகின்றான் ஆனால். என்னைப் பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும்.
ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது - சிறப்பான அனுபவம். எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்.
மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டு விடவில்லை. ஏற்க்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் 'பல்ப்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள்.. அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது* இல்லையா..?' என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள,; அதற்கு எடிசன் சொன்னார் -
'முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது..? ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேனே'
0000000000000000000000000000000
மனதின் நிலை.
மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும். ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும். நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்துவிடும். இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது. ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது. நடு நிலையில் நிற்பதே தியானம்.
இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது. அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது. தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது. கனவைத் தருகிறது. மிகவும் வசீகரமாக இருக்கிறது. நீங்கள் அந்தக் கோடிக்குப் போய்விட்டால் , நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.
மனம் முரண்பாடுகள் நிறைந்தது. மனம் முழுமையாக இருக்க முடியாது. யாரையாவது நீங்கள் நேசிக்கும்போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள். நேசித்தல் முழுமையாக இல்லை. உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம். நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.
மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும். எதிரானதற்குச் செல்லாதீர்கள். மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள். இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.
0000000000000000000000000000000000
பொய் சொல்லக்கூடாது
நமது பால்ய காலத்தை! 'பொய் சொல்லக்கூடாது... திருடக்கூடாது... கஷ்டம் வந்தால் மூட்டை தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை...' என்று எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
ஆனால், இன்று..? அந்த அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள மெள்ள நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டில் போன் மணி அடித்தால், 'அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு' என்று குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுத் தருகிறோம்.
'ஏன் லேட்..?' என்று மனைவி கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு பொய் எப்போதும் தயாராக இருக்கிறது.
தெரிந்தே ஒரு பொய்யை மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, தெரியுமா..?
இதோ, இந்தக் கதையைப் படியுங்கள்.
ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி, ''என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா..?'' என்று முல்லாவிடம் கேட்டார்.
''அடடா... உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக் கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம்... உங்கள் பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்!'' என்று சொல்லி, தான் இரவலாக வாங்கிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையையும் கொடுத்தார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.
அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, ''போன தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக் கொடுங்களேன்!'' என்று கேட்க... அவரும் 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை கிடைக்கும்' என்று சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப்பெரிய பானையைத் தூக்கி முல்லாவிடம் கொடுத்தார். ஒரு வாரம் ஆயிற்று. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான் இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
''அதை ஏன் கேக்கறீங்க..? நேத்து உங்க பானை செத்துப்போச்சு!'' என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு மகா எரிச்சலாகி விட்டது! ''என்னை என்ன மடையன்னு நினைச்சியா..? பானை எப்படிச் செத்துப்போகும்..?'' என்றார் கோபமாக.
'பானை குட்டி போட முடியும்னு உன்னால் நம்பமுடியுது. பானை செத்துட்டதுனு சொன்னா நம்பமுடியலையா..?'' என்று திருப்பிக் கேட்டார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரர் வந்த சுவடே தெரியாமல் நடையைக் கட்டினார்.
இப்போது புரிகிறதா..? பொய் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு - பொய் என்று தெரிந்தும் அதை நம்புவது!
சரி, நாம் பொய் சொல்லும்படியான அவசியம் ஏற்படாதிருக்க என்ன வழி..?
இல்லை, முடியாது போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டால், ஏறக்குறைய ஐம்பது சதவிகிதப் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியமே ஏற்படாது. ஆபீஸில் உடன் வேலை செய்பவர் மோட்டார்சைக்கிளை இரவலாகக் கேட்கிறார். 'ஸாரி... என் மோட்டார் சைக்கிளை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை' என்று நேரடியாகச் சொல்லிவிட்டால் எதிராளியின் முகம் வாடிப்போகுமே என்று பயந்து, 'இல்லைப்பா... பெட்ரோல் இல்லை, பிரேக் பிடிக்கலை...' என்று வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறோம். எதிராளியின் முகம் வாடிப் போய்விடக்கூடாது என்பதற்காக, நாம் பொய்யன் என்ற பட்டத்தைச் சுமப்பது எந்த விதத்தில் சரி..?
பொய் சொல்லக்கூடாது என்றால்... மனைவி, தாய், தந்தை, குடும்பத் தினர், நண்பர்கள் இவர்களிடம் எல்லாம் பொய் சொல்லலாமா..? அப்படியே பொய் சொன்னாலும், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்..?
ஒரு சின்னக் கதை... ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒருவார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர்தான் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாசஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்பவேண்டிய தருணம் வந்தது.
அப்போது ஒரு மாணவன், ''க்ளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கேயே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும்... பரீட்சை நேரத்துக்குக் கல்லூரிக்குப் போய்விடலாம்...'' என்றான்.
'அதுவும் சரிதான்' என்று மாணவர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாகக் கழித்துவிட்டு, இரவு தாமதமாகத் தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண்விழித்தார்கள். 'சரி, புரொபசரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்று நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.
புரொபசர் முன் நல்ல பிள்ளைகள் மாதிரி வந்து நின்றவர்கள், ''சார்... நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நேராகப் பரீட்சை எழுதக் கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் கிளம்பினோம். வழியில் கார் பஞ்ச்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும்...'' என்று பொய்யை மெய்மாதிரி உருகிச் சொன்னார்கள்.
பேராசிரியரும் ஒப்புக்கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்கார்ந்தார்கள்.
முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதிவிட்டு, அந்தக் கேள்விக்கான மார்க் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தைத் திருப்பினார்கள். 95 மார்க் என்ற குறிப்புடன் காணப்பட்ட அடுத்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது.
அந்தக் கேள்வி - 'உங்கள் காரில் பங்சரானது எந்த டயர்..?'பங்சர் என்று பொய் சொன்னார்களே தவிர... இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இன்ன டயர்தான் பங்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்றுபோல் பதில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!
பொய் என்பது தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல... அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல, வாழ்ந்து முடிந்த பிறகும்கூடப் பலன் கொடுக்கும்.
00000000000000000000000000000
சொர்க்கம்
ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,
'நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''
ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரே வியப்பு. ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,
''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை. எனக்கு எப்படி சொர்க்கம்...?''
அவர்கள் சொன்னார்கள்,
''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய். அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம். இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது. இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம். பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள். உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய். அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''
மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான். இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது. ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.
00000000000000000000000000000000
யார் குற்றவாளி ?
பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு. கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பபவர்களுக்கும் உண்டு .
சரி.. தூங்கவும் இல்லை ,கனவும் காணவில்லை அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா ? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception உறவினர்கள் , நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள, தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்ககும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் தான் Perception .
நிர்வாக இயல் வொர்க் - ஷாப்களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்ன சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ரோமானிய முறைப்படி ஒன்பது என்பதை IX என்று எழுதுவோம் இல்லையா ? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும் கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.
விடை இதுதான்:
IX என்பது ரோமானிய முறைப்படி ஒன்பது சரி. இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக் கொண்டு இரண்டாம் முறை பாருங்கள் I மற்றும் Xஎன்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா ? அதன் முன்னால் s என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள்.
ஆகா.. ஒன்பது ஆறாகிவிட்டது .
ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும் ஏன்.. S என்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால் அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக இருக்கிறதோ அதே மாதிரிதான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த நமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.
இந்தக் கதையைப் பாருங்கள்............
அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கர காடு . அங்கே ஒரு விறகு வெட்டி . அவனுக்கு ஒரு மனைவி . அவள் ரொம்பவும் அழகானவளும் ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை . மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க் கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றhட வேலை. காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக்கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மெள்ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.
அன்று அமாவாசை. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்து விட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடூரமாக அடித்து உதைத்துக் கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவனிடம் பட்ட அவஸ்தைகள் போதும் என்று மனைவி அந்த நட்ட நடு இரவில் வீட்டை விட்டு வெளியே வருகிறள். அப்போது அவள் மனதில் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைக்காரனிடம் போய் விடலாம் என்று ஆற்றைக் கடக்க பரிசல் வேண்டும் விறகு வெட்டியின் மனைவி பரிசல்காரனைப் போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை.
பரிசல் இல்லை என்றால் என்ன ? இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்ஞஎன்று இவள் நினைக்கிறள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர் சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது என்றhலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் மரப்பாலம் நோக்கி நடக்கிறhள் .
அடுத்த நாள் காலை புலியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாக மரப்பாலத்தின் அருகே அவள் உடல்.
இந்தக் கதையை உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித்தனியே கேட்டுப் பாருங்கள்.
நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான் என்பர் ஒருவர். இன்னொருவர் ஒழுக்கம் கெட்ட விறகு வெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் என்பார். மூன்றாமவர், உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன் என்பார் விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக்கடைக்காரன் தான் குற்றவாளி என்றும் யாராவது சொல்லக் கூடும் ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள் ? ஏனென்றால் எல்லோருக்கும் ஒவ்வொரு Perception.
நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரசமரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தொய்யலாம். இலைகள் தொய்யலாம் அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற போதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.
அதுபோல் எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perceptionஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து. உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில் அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான் பார்த்ததன் உண்மை உங்களுக்கு புரியும்.
000000000000000000000000000000000
புனிதன்
மனிதர்கள் தங்களை அறிவாளிகள் போல உணர்ந்து கொள்ள வைக்கும் கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் பதில் பெறுவதற்காக கேள்விகள் கேட்பதில்லை. மாறாகத் தமது அறிவைக் காட்டிக் கொள்ளவே கேட்கிறார்கள் .ஒரு அறிவார்ந்த கேள்வியைக் கேட்கும்போது நீங்கள் பிரமாதமாக உணருவீர்கள்.
யாருமே மனந்திறந்து தான் யாரெனக் காட்டிக் கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக விஷயங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை மறைத்தாக வேண்டும். யாருமே தாம் வெறுத்து ஒதுக்கப்படுவதை விரும்புவதில்லை. மேலும் புகழ்ந்துரைக்கப்பட விசயங்களும் உள்ளன. இவற்றை நீங்கள் காட்டிக் கொண்டாக வேண்டும். இவை உங்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை.
சமுதாயம் புகழ்ந்துரைக்கும் விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றால் இருப்பதுபோல் பாவனை செய்கிறீர்கள். இந்த பாவனை செய்பவர் சில சமயங்களில் உண்மையான நபரைவிட உண்மையாகத் தோற்றமளிப்பது சாத்தியமே. ஏனெனில் நிஜ மனிதர் ஒத்திகை பார்ப்பதில்லை. பாவனை செய்பவரோ , செய்து பழகுகிறார். தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொள்கிறார். உள்ளே அவர்கள் எதிர்மறையான மனிதர்களே. கிரிமினல் குற்றவாளிகள் புனிதர்கள் ஆகிறார்கள் . நீங்கள் புனிதர்களிடம் எதிர்பார்க்கும் மதிப்பீடுகளை, ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும். உங்களுக்குள் ஓர் ஆயிரக்கணக்கான குற்றம் சார்ந்த குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருப்பது பற்றி யாருக்குக் கவலை? மக்கள் உங்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். யாரும் உள்ளுக்குள்ளே ஆழத்தில் குதிப்பதில்லை.
புனிதனாக இருப்பது போல நடிக்கும் ஒருவனால் அதை விரும்பி ரசிக்க முடியாது. ஏனெனில் அவனது இயல்பு அதற்கு எதிராக இருக்கும். அவன் தன்னுள்ளே ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பான். எனவே அவனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதைப் பார்க்க முடியாது. அவன் எப்போதும் சோகமாகவே இருப்பான்.
000000000000000000000000000000000000
குற்றம் கண்டுபிடித்தல்
குடும்பம், மனைவி, மக்கள் என்பதன் அருமையெல்லாம் நம்மில் பலருக்குத் தெரியாது. எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் பல குடும்பங்களைச் சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறது. இதோ, இந்தக் கற்பனைக் கதையைப் பாருங்கள்.
அவர்கள் இருவரும் வயதானவர்கள். நாற்பது வருடத் தாம்பத்தியம் நடத்தியவர்கள். மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அவர். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார்.
அந்தக் கடைசிக் காலத்திலா வது மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், உறவினர் ஒருவர் சொன்னார்... ''உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா? கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தைக் கையாடல் செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று சொல்லி, உன்னைப் பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள். பிறகு பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை வங்கிக் கடனாக வாங்கி ஒரு ஷோரூம் ஆரம்பித்தாய். அதில் பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த பிஸினஸ#ம் கைவிட்டுப் போனது. உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள்கூட அந்த நேரத்தில் விலகிப் போனார்கள். அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள்.
பிறகு கெட்ட சகவாசங்கள், தீய பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு இருந்தது உன் மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?'' என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர். அதற்குக் கணவர் சொன்னார்: ''எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில் இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான் நான் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்...''
இன்னொரு வகை தம்பதிகளும் இருக்கிறார்கள்.
கார் வாங்க வேண்டும். அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று சதா அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த அலைச்சல் காரணமாக, கணவன் - மனைவி இரண்டு பேருக்கும் வீட்டில் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காது. அப்படியே பேசினாலும் 'உன் பி.எஃப்-ல் எத்தனை பணம் இருக்கிறது? உனக்கு பாங்க்கில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்?' என்று ஏதோ கம்பெனி ஆடிட்டர்கள் மாதிரிதான் பேசிகொள்வார்கள்.
'அன்பு, அந்நியோன்யம், குழந்தைகள் - இதற்கெல்லாம் எப்போது நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டால்... 'கார், அபார்ட்மெண்ட் பதவி உயர்வு எல்லாம் வாங்கிய பிறகு' என்று சொல்வார்கள்.
வெற்றியையும் செல்வத்தையும் வாழ்க்கையில் தேட வேண்டியதுதான். தப்பு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், எதை விலையாகக் கொடுத்து இதையெல்லாம் வாங்கப் போகிறோம் என்பதை நாம் கணக்கிட வேண்டியது அவசியம் இல்லையா?
மும்பைவாசிகள் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது, பணிக் காலத்தில் தங்களின் ஆரோக்கியம் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து, ஐம்பது வயது வரை அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். அதன்பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவழிப்பார்களாம் அது ஒரு கிராமம்... அங்கே ஒரு வீடு. அந்த வீட்டுக்கு ஒரு நாள் மூன்று பெரியவர்கள் வந்தார்கள். நீண்ட நேரம் பயணம் செய்த களைப்பு அவர்களிடம் தெரிந்தது.
இவர்களைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணி, 'உள்ளே வாருங்கள்... என் கணவர் வந்துவிடுவார் உணவருந்தலாம்...' என்று அழைத்தாள்.
'ஆண்மக்கள் இல்லாத வீட்டில் நாங்கள் உணவருந்த மாட்டோம். அதனால் உன் கணவன் வீடு திரும்பும் வரை, இங்கேயே காத்திருக்கிறோம்...' என்று அவர்கள் திண்ணையிலேயே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.
வயல்வேலைக்குப் போயிருந்த கணவன் மாலையில் வீடு திரும்பினான். உடனே அவனது மனைவி, திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று, 'என் கணவர் வந்துவிட்டார். இப்போது எங்கள் வீட்டுக்குள் வர உங்களுக்கு தடையில்லையே?' என்று கேட்க... அவர்கள், 'தடையில்லை... ஆனால், ஒரு நிபந்தனை. எங்களில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்கு வரமுடியும்' என்றனர்.
அந்தப் பெண்மணி காரணம் புரியாமல் விழிக்க... அவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்த பெரியவர், 'என் பெயர் அன்பு. இவன் பெயர் வெற்றி. அவன் பெயர் செல்வம். எங்களில் ஒருவரைத்தான் வீட்டுக்குள் அழைக்க முடியும். அதனால் யாரை அழைப்பது என்று நீயே தேர்ந்தெடுத்துக்கொள்...' என்று சொல்ல, 'வந்திருப்பவர்கள் வழிப் போக்கர்கள் அல்ல... செல்வம், வெற்றி, அன்பு என்ற மூன்றுக்கும் அதிபதியாக இருக்கும் தேவர்கள்!' என்பது அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது.
பூரிப்போடு வீட்டுக்குள் ஓடிய பெண்மணி, விஷயத்தைக் கணவனிடம் சொன்னாள். கணவனுக்கு பரவசமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. 'வாழ்க்கையில் வெற்றிதான் முக்கியம். அதனால் அவரை நம் வீட்டுக்கு அழைக்கலாம்' என்று யோசனை சொன்னான். அதற்கு இவள், 'வெற்றி வந்தால் மட்டும் என்ன பயன்? செல்வம்தானே முக்கியம். அதனால் செல்வத்தை அழைத்து வரலாம்' என்று பரபரத்தாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட அவர்களின் மருமகள் சொன்னாள்... 'வெற்றியையும் செல்வத்தையும்விட அன்பு இருந்தால்தான் கணவன், மனைவி, குழந்தை, மாமா, அத்தை என்று நாமெல்லாரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க முடியும். அதனால், அன்புதான் எல்லா வற்றுக்கும் அடிப்படை...' என்று சொல்ல, அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
உடனே அந்த வீட்டின் தலைவி வீட்டுக்கு வெளியே சென்று, 'உங்களில் அன்பு யாரோ, அவர் உள்ளே வரலாம்...' என்று சொல்ல, அன்பு என்ற பெரியவர் வீட்டின் உள்ளே சென்றார். அன்பைத் தொடர்ந்து வெற்றி, செல்வம் என்ற மற்ற இரண்டு பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம்! பிறகு அவர்கள் சொன்னார்கள் - 'நீங்கள் வெற்றியையோ, செல்வத்தையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வீட்டின் வெளியி லேயே தங்கிவிட்டிருப்போம். ஆனால், அன்பை நீங்கள் அழைத்ததால்தான், நாங்கள் இருவரும் உங்கள் வீட்டுக்குள் வந்தோம். காரணம், அன்பு எங்கு சென்றாலும் அதைப் பின்பற்றி, அதன் பின்னாலேயே செல்ல வேண்டும் என்பதுதான் ஆண்டவன் எங்களுக்கு இட்ட கட்டளை!'
00000000000000000000000000000000
உதாசீனம்
ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான். பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள். அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான். அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான். யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள். அவன் மனைவியிடம் சொன்னான்,
''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்க சரியான இடம்,''என்றான்.
மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.
அவன் சொன்னான்,
''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே? அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள். ''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.
00000000000000000000000000000000000
ஏற்பும் எதிர் விளைவும்
ஒன்றை ஏற்றல்(response) என்பது அனுபவ உணர்வு. ஏற்றலுக்கும் எதிர் விளைவுக்கும்(reaction) இடையே பெரிய வேறுபாடு உண்டு. ஒருவர் நம்மைத் திட்டினால்,பதிலுக்கு அவரைத் திட்ட வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும்போது அது வேறு விதமாக அமையும். ஒருவர் நம்மைத் திட்டும்போது,
''பாவம்,இவர் இவ்வாறு திட்ட என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லையே,''
என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது ஏற்பு.அவர் திட்டியதற்கு நாம் செயல்படவில்லை. உணர்வுபூர்ணமான நேர்விளைவு இது. பட்டனைத் தட்டியவுடன் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. சுற்றலாமா வேண்டாமா என்று யோசிப்பதில்லை. மறுபடியும் அழுத்தினால் மின்விசிறி நிற்கிறது. அது போலவே நாம் திட்டப்படும்போது-பட்டன் அழுத்தப் படுகிறது. உடனே கோபம் வருகிறது.
ஒருவர் நம்மைப் பாராட்டுகிறார் பட்டன் அழுத்தப் படுகிறது. கோபம் நீங்குகிறது. ஆகவே நாம் ஒரு தனி மனிதனா அல்லது இயந்திரமா? நம் நடத்தை இயந்திரத்தனமாய் இருக்கிறது. ஏற்பு என்பது உணர்வின் அடையாளம். சிலுவையில் அறையப்படும்போது இயேசு ,
''கர்த்தரே,இவர்கள் தாம் செய்வது என்னவென அறியாதவர்கள்.இவர்களை மன்னியும்.''என்றார். இது உணர்வுப் பூர்வமான பதில்.இதுதான் ஏற்பு.
February 26, 2013
Comments
Post a Comment