கண்ணுக்கு தெரியாத வேலி
நம்மில் பலர் பெரும்பாலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வோரு மாதமும், ஒவ்வோரு வருடமும் ஒரு குறுகிய வட்டதுக்குள்ளேயே நமது ஒட்டம் நின்று விடுகிறது.
ஏன் நாம் மாற்றத்தை விரும்புவதில்லை?
ஏன் நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்தி புதிதாக நாம் ஏதுவும் முயற்சிப்பதில்லை?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான்… அதுதான் கண்ணுக்கு தெரியாத வேலி ,
கூண்டுக்குள் இருக்கும் கிளியை பாருங்கள். நாள் கணக்கில் அது கூண்டுக்குள்ளேயே இருந்து பழகி விடுகிறது. பின்னர் அதை கூண்டுக்கு வெளியே விட்டாலும் சிறிது நேரம் உலாவி விட்டு திரும்ப கூண்டுக்கே திரும்பி விடும்.
ஆட்டு மந்தையை பாருங்கள். மந்தையை சுற்றி வேலி போடப்பட்டிருக்கும். ஆடுகளை அந்த வேலிக்குள்ளேயே மேய்த்து பழக்குவார்கள். ஆடுகளும் அந்த வேலிக்குள்ளேயே மேய்ந்து பழகிவிடும். பின் அங்கு வேலி இல்லையென்றாலும் அது குறிப்பட்ட தூரத்தை தாண்டிச் செல்லாது.
நாமும் அப்படித்தான். நாம் வளர வளர தவறான எண்ணங்களும், அவநம்பிக்கையும் கூடவே வளர்கிறது. நாமும் அதை நம்ப ஆரம்பித்து விடுகிறோம். நமது வட்டத்தை சுருக்கிக் கொள்கிறோம். வழக்கத்தை மாற்றி, மீறி புதுமையாக எதையாவது செய்தால் உலகம் பழிக்குமோ என்று அஞ்சுகிறோம். கண்ணுக்கு தெரியாத வேலியை நமக்கு நாமே போட்டுக் கொள்கிறோம். அதை உண்மையான வேலி என்று நம்பி விடுகிறோம்.
நமது வேலையிலும் வாழ்க்கையிலும் ஒரு சவால் விடும் சூழ்நிலை வரும்போது இந்த வேலியின் பயத்தினால் அதை எதிர்க்கொள்ளாமல் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறோம். கானல் நீரை உண்மை என்று நம்புவதைப் போல இந்த கற்பனை வேலியை உண்மை என்று நம்பி நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம்.
வேலியை எதிர்கொள்ள தயாராகுங்கள். அதற்கு சவால் விடுங்கள். இனிமேல் சவாலான சமயங்களை எதிர்கொள்ளும் போது, அதை பார்த்து ஒதுங்காமல் உங்கள் மனததையும் எண்ணத்தையும் ஒருங்கிணைத்து அதை எதிர்க்கொள்ளுங்கள்.
ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் எதை பார்த்து நீங்கள் ஓதுங்குகிறீர்களோ அது உங்களை விடாமல் எதிர்கொள்ளும்அதையே நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்கள் கையில் வெற்றி நிச்சயம்!!
0000000000000000000000000000000
திருடன்
பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இதுதான் நமக்குள் இருக்கும் திருடன். அந்தத் திருடனோடு நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை. வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்.
புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது. ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர். குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள். காமவயப்பட்டவரே பாலுறவைக் கண்டித்துப் பேசுவர். நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும். ''ஒருவன், 'திருடன்,திருடன்,விடாதே பிடி,'என்று கத்தினால், அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்'' என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்.
நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும்போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம். நமக்குள் ஏற்படும் போராட்டமே இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது. நமக்குள் முரண்பாடு தோன்றாதபோது, போராட்டம் இல்லாதபோது இன்னொருவர் மீது பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று விடுகிறது. மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது.
000000000000000000000000000000000
உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல.
நாம் சில வேளையில் வெற்றி பெறுகின்றோம். சில சமயங்களில் தோல்வி அடைகின்றோம். இவை இரண்டும் நிந்தரமானாது அல்ல. இரவும், பகலும் போல இவை இரண்டும் மாறி மாறித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வந்து போகிறது. வெற்றி கிடைத்தால் மிகவும் பூரிப்பு அடைகின்றோம். தோல்வி அடைந்தால் மிகவும் துவண்டு போய் விடுகின்றோம். எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்க என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் உலகம் அறிய ஒரு மா மனிதராக திகழ்ந்தார்.
நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.
ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான். தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள்.
தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும். உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும். தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல.
ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக வெற்றி அடைகின்றார்கள். எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.
0000000000000000000000000000000000
அல்வா துண்டு யாருக்கு ?
போய்யா ! ஒரே போர் அடிக்குது.. . என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் !
அதுவும் பள்ளி, கல்லூரிகள் எல்லாம் விடுமுறையில் இருக்கிற நேரத்தில் வீட்டுல உட்கார்ந்துகிட்டு பயங்கர போரடிக்குது... என்ற வார்த்தைகளை எந்த வீட்டுக்குப் போனாலும் பஞ்சமே இல்லாமல் கேட்கலாம் !
சரி.. . போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்.. .? சுருக்கமாகச் சொன்னால் வெறுமனே உட்கார்ந்து கிடப்பது, தூக்கம் வராதபோதும் படுத்திருப்பது போன்ற செயல்களை - நம் மனதுக்குப் பிடிக்காத செயல்களை.. . வேறு வழி தெரியாமல் செய்யும்போதுதான் நமக்கு போரடிக்கிறது !
நம் மனதுக்குப் பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்துச் செய்தாலும் நமக்கு போரடிக்காது ! ஆனால், இந்த விஷயத்தில் நம்மில் பலருக்கு விளங்குவதில்லை ! நாம் விருப்பப்பட்டுச் செய்வதற்கென்றே சில வேலைகள் காத்திருந்தால்கூட, அதை நாம் தள்ளிப்போடுகிறோம் !
உன் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் இருந்தால், அதைச் செய்வதற்கு நேரத்தைத் தள்ளிப்போடாதே. .. என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு !
வெள்ளைக்காரன், அரேபின், இந்தியன் இந்த மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகச் சின்ன அல்வா துண்டு அது !
அதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு, இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கும் அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு.. . என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவை பகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சற்றி உட்காருகிறார்கள்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான். நேற்றிரவு என் கனவிலே கடவுள் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார்.. . என்றான்.
அடுத்து, அரேபியன் தான் கண்ட கனவைச் சொன்னான் - நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்.. . கடைசியாக இந்தியன் பேச ஆரம்பித்தான். நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை ! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாளே.. . எதிரிலேயே இவ்வளவு இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே.. . முதலில் தூக்கத்தை விட்டொழி ! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு ! என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா ? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன். என்று சொன்னான். மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க. . . உள்ளே அல்வாவைக் காணோம் !
இந்த கதை சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறதோ, அந்த வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது, அந்த வேலையை நாம் தள்ளிப்போடவே கூடாது ! இந்த வாக்கியத்தைக் கொஞ்சம் இப்படியும் திருத்திச் சொல்லலாம். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதைச் சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். போரடிக்கிறது என்ற வார்த்தை உங்கள் அகராதியிலிருந்து தானாகவே மறைந்துவிடும் !
உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றால் நீச்சல் கற்றுப் பாருங்கள், படகில் போனதில்லை என்றால், படகில் போய்ப் பாருங்கள் ! அல்லது ஏதாவது இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ! உங்களுக்குத் தெரியாத தெலுங்கு, மலையாளம் போன்ற புதுமொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் ! இதெல்லாம் கஷ்டம் என்றால், குறைந்தபட்சம் நீங்கள் பல ஆண்டுகளாகச் சந்திக்காத ஒரு பழைய நண்பரையாவது போய்ச் சந்தியுங்கள் !
ஜென் மதத் துறவி ஒருவர் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் கவிழ்ந்த தலைகளுடன் நிற்கும் சீடர்கள், குருவே.. . நீங்கள் எங்களுக்கு உபதேசிக்கும் கடைசி போதனை என்ன.. .? என்று கேட்கிறார்கள். ஜென் துறவி இவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், எனக்கு ஒரு துண்டு இனிப்பு கொண்டு வாருங்கள்.. . என்று கேட்கிறார்.
இனிப்பு வருகிறது ! அந்தக் கடைசி தருணத்திலும் ஜென் துறவி அந்த இனிப்பை, ஒரு குழந்தையைப் போலப் பார்த்து ரசிக்கிறார். பிறகு, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து ருசித்துத் தாளம் போட்டுக் கொண்டே சாப்பிட்டுவிட்டு இறந்துவிடுகிறார் ! இனிப்பு சாப்பிடுவது என்ற ஒரு சாதாரண காரியத்தைச் செய்யும்போதுகூட, அதை முழு ஈடுபாட்டோடு ரசித்து, ருசித்துச் செய்ய வேண்டும் என்பதே ஜென் துறவி, தன் சீடர்களுக்குச் சொல்லாமல் சொன்ன கடைசி போதனை !
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்கும் என்பதில்லை ! செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக்கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு -
ஒன்று - தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது Intimate life !
அடுத்தது, குடும்பம்.
மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை !
நான்காவது சமூக வாழ்க்கை !
ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளையுமே வாழ்ந்தாக வேண்டும்.
வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை என்று மூன்று அறைகளையும் அற்புதமாக அலங்கரித்து சுத்தமாக வைத்துவிட்டு, டாய்லெட் இருக்கும் அறையை மட்டும் சுத்தம் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் ? டாய்லெட்டின் வாடை வீட்டின் மற்ற அறைகளுக்கும் பரவி விடும் இல்லையா.. .? அதே மாதிரி நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி.. . மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
000000000000000000000000000000
தந்திர மனது
நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார். என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார். என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே இருக்கலாம். நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார். அவருக்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.
'இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது? இந்த மனம் எவ்வளவு தந்திரமானது! இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான். ஞானி சாரஹா,
'' நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.
சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள். எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள். இது மிகவும் தந்திரமானது. மிக மோசமாக ஏமாற்றக் கூடியது. உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும். நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும். இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.
0000000000000000000000000000
உடம்பைச் சுற்றி ஒரு கவசம் !
உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் நடந்திருக்கும். மனது கனமாகிவிடும் நிமிடங்களில் எல்லாம் இந்தச் சந்தோஷ நிமிடங்களைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பாருங்கள் ! காயங்களை மறந்து, மகிழ்ச்சியான நினைவுகளில் நீந்த ஆரம்பிப்பீர்கள் ! இந்த யுக்திக்கு சூப்பர் இம்போஸிஸ் டெக்னிக் என்று பெயர்.
இது எப்படிச் சாத்தியம் .. ? என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும் ! எனக்குத் தெரிந்த செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் சொன்ன உண்மை நிகழ்ச்சி இது.
அன்று, அந்தப் பெண்ணுக்குப் பிறந்த நாள் ! காலையில் கண்விழித்த அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளது அறை கலர் கலர் பலூன்களாலும் வண்ண வண்ண ஜிகினா காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது ! இரவோடு இரவாக, அந்தப் பெண்ணின் கணவன்தான் தன் மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இத்தனை விஷயங்களையும் சந்தடியே இல்லாமல் சிரத்தை எடுத்து செய்திருக்கிறான் ! இதை அறிந்தபோது அவளுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. கணவனை ஆரத்தழுவி, தனது அன்பைக் காட்டுகிறாள் !
பிறகு, தன் அறையைவிட்டு வெளியே வருகிறாள். பல நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் இவளது பெற்றோர், தங்கள் மகளின் பிறந்த நாளன்று ஓர் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகத் திடுதிப்பென்று வந்திறங்கி, இவளைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கிறார்கள் ! இவளுடைய ஏழு வயதுக் குழந்தைகூடத் தன்னுடைய தந்தையின் உதவியோடு வாங்கிய ஒரு சின்னப் பரிசைக் கொடுத்து, இந்த பெண்ணை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்துவிடுகிறது !
குளித்து முடித்து, தன் கணவன் எடுத்துத் தந்த பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, அவள் தன் குடும்பத்தோடு கோயிலுக்குப் போகிறாள். அங்கே விளக்கிலிருந்த எண்ணெய் கொஞ்சம் இவளுடைய பட்டுப்புடவையில் பட்டுக் கறை உண்டாக்கிவிடுகிறது.
அவ்வளவுதான். .. விடிந்ததிலிருந்து தனக்கு நேர்ந்த சந்தோஷமான நிகழ்ச்சிகளின் நினைவுகள் மொத்தமும் இந்தப் பெண்ணின் சிந்தனையிலிருந்த விலகிப் போய்ப் புடவையில் எண்ணெய்க் கறை படிந்ததால் உண்டாக துக்கம் மட்டுமே பூதாகாரமாக இவளின் சிந்தனையைச் சிறைப் பிடித்துக் கொள்கிறது ! பிறகு, இவளின் கணவன் இவளை ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். சினிமாவுக்கு அழைத்துப் போகிறான். பரிசுப் பொருட்கள் வாங்கித் தருகிறான். ஆனால், அவள் பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டதை நினைத்தே, அன்று முழுதும் அவள் வேதனைப்படுகிறாள்.
இப்படிச் சந்தோஷமான நினைவுகள் மீது துயரம் தரும் சிந்தனைகளை சூப்பர் இம்போஸ் செய்ய முடிகிற நம்மால், இதைத் தலைகீழாகச் செய்ய முடியாதா என்ன ..? முடியும்.
வார்த்தைகளால் மனதைக் காயப்படுத்துபவர்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அப்படிக் காயப்படுகிறவர்கள் யார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். Low Energy level உடையவர்கள்தான் அடுத்தவரின் வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும் சுலபத்தில் காயப்பட்டுப் போகிறார்கள் !
எந்த ஒருவரின் energy level உச்சத்தில் இருந்து அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் உங்களை நோக்கி யார் எத்தனை கூர்மையான வார்த்தைகளை வீசியிருந்தாலும், அவை உங்களைப் பாதித்தே இருக்காது. இதுதான் உண்மை ! ஆகவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையுமே காதலி நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்ன நிமிடங்களாக நினைத்து உற்சாகமாக அமைத்து கொண்டால், நம் உடம்பைச் சுற்றி உருவாகும் Energy field ஒரு கவசம் மாதிரி இருந்து, பிறரின் வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தாமல் காப்பாற்றும்.
சரி.. . உடம்பைச் சுற்றி Energy field என்று கூட ஒன்று உண்டா என்ன ? இதென்ன கலாட்டா.. .? என்று சிலர் சந்தேகப்படலாம். இந்தச் சந்தேகம், கிர்லான் என்ற ரஷ்யக் கலைஞர் கண்டுபிடித்த காமிராவின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது.
00000000000000000000000000000000
ஒரே சொடக்கில் உற்சாக ஊற்று !
எனர்ஜி ஃபீல்டைப் பலப்படுத்தி, எப்போதும் உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் வைத்திருப்பது எப்படி ?
திருஷ்டி - சிருஷ்டி வாதா என்று நமது வேதங்களில் சொல்லப்படுகிறது. திருஷ்டி என்றால் பார்வை. சிருஷ்டி என்றால் உருவாகுதல் அல்லது உருவாக்குதல் ! நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே நாம் உருவாகிறோம் என்பது இதற்கு அர்த்தம். குறிப்பாகச் சொல்வதானால், நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ, நாளடைவில் அப்படி ஆகிவிடுகிறோம். நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள். அந்த நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே இருப்பீர்கள். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத தத்துவம் போலத் தோன்றுகிறதா ? சந்தேகம் இருந்தால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.
இரவு நன்கு தூங்கி, விடியற்காலையில் எழுந்த இளைஞன் ஒருவன், உடற்பயிற்சி செய்துவிட்டுப் பிறகு குளித்து டிரஸ் செய்து ஆபீஸ் கிளம்புகிறான்.
அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வந்து, என்ன தம்பி டல்லா இருக்கீங்க ? உடம்பு சுகம் இல்லையா ? என்று கரிசனத்தோடு கேட்கிறார். தெருமுனையில் அவன் நண்பன் எதிர்ப்படுகிறான். அவனும் என்னடா ஆச்சு உனக்கு ? முகம் இத்தனை சோர்வா இருக்கே ? உண்மையான அன்போடுதான் கேட்கிறான். ஆபீஸில் நுழைகிறான் இளைஞன். இவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், என்ன சார் ஜுரமா ? கண் எல்லாம் உள்ளே அடங்கிப் போய்க் கிடக்குது. ஆபீஸுக்கு லீவினா போன் பண்ணியே சொல்லியிருக்கலாமே ? என்கிறாள் அக்கறையோடு ! வீட்டைவிட்டுக் கிளம்பும் போது இளைஞன் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி, உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லை என்று நம்பி, ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலே போய்ப் படுத்துக் கொள்கிறான். இது கற்பனைக் கதை அல்ல ! ஒர் ஆராய்ச்சிக்காக, அந்த இளைஞனிடம் சொல்லாமல் நடத்திப் பார்க்கப்பட்ட உண்மைச் சம்பவம் !
நமது எண்ணம், நமது உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது ! சில சமயம் நமது உடம்பே கூட எண்ணங்களைப் பாதிப்பது உண்டு.
டென்ஷனாக இருக்கும்போது, நகம் கடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, சாதாரணமான மனநிலையில் இருக்கும்போது நகம் கடித்தால்கூட, மனதில் டென்ஷன் வந்து புகுந்துவிடும். சோர்வாக இருக்கம்போதெல்லாம் கன்னத்திலோ நெற்றியிலோ கைவைத்து உட்காரும் மானரிசம் உடையவர்களுக்கு, எதேச்சையாகக் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தால்கூட சோர்வு தானாக வந்து ஆட்கொண்டு விடும். அவ்வளவு ஏன் ? சலவை செய்த சட்டை, பாண்ட் மாட்டிக் கொண்டாலே, வெளியில் கிளம்புகிற உற்சாகம் மனதுக்குள் வந்துவிடுகிறது இல்லையா ? சொடக்குப் போடும் நேரத்தில் உற்சாகத்தை நம் மனதுக்குள் ஊற்றெடுக்க வைக்க முடியும்.
தீ மிதித் திருவிழாவை நீங்கள் அனைவருமே பார்த்திருக்கக் கூடும் ! தீ மிதிக்கும் பக்தர்கள் யாரும் அதில் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லை. என்றாலும், தீ மிதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் வந்தவுடன், அவர்களுக்குத் தேர்ந்த ஒரு வீரனின் உற்சாகமும் வேகமும் எப்படி வருகிறது ? மனதிலிருந்தான் ! நாம் இங்கே விவாதித்த கருத்துக்கள் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். இருந்தாலும், நம்மை நாமே தேற்றிக்கொள்ள முடியாமல் பல சமயங்களில் சோர்ந்துவிடுகிறோம். கவலையில் மூழ்கி விடுகிறோம்.
இது ஏன் ? மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட நம்முடைய கருத்து (point of view) ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் நம்மில் பலர் குறியாக இருக்கிறோம்.
பெங்களூரில் பெரிய பணக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். அவருக்கு நகரின் மையப்பகுதியில் மாளிகை போல ஒரு பங்களா. அது அவரது பரம்பரைச் சொத்து ! பங்களாவை ஒட்டியிருக்கும் ஒரு சின்ன அவுட் ஹவுஸை விற்றால்கூட, ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். அதில் அவர் நிறைய வசதிகள் செய்துகொள்ள முடியும். ஆனால் அவருடைய point of view என்னவென்றால், பரம்பரைச் சொத்து எதையும் விற்கக்கூடாது.
சரி.. . அதனால் இப்போது என்ன ? கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் இருந்து வேறு வருமானம் இல்லாததால், சொத்து வரி கட்டவும், டெலிபோன் பில் கட்டவும், எலெக்ட்ரிக் பில் கட்டவுமே அவர் இன்று திண்டாடிக் கொண்டிருக்கிறார், பாவம் ! தனது point of view ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தற்கொலை வரை போகிறவர்கள்கூட இருக்கிறார்கள்.
நமது கருத்துகளைவிட, நமது சந்தோஷம்தான் முக்கியம் என்ற நினைப்பு நமக்கு வர வேண்டும். நியாயமான வழிமுறைகளில் சந்தோஷமும் நிம்மதியும் நம்மை எப்படித் தேடி வந்தால் என்ன ? என்று பழக்கிக் கொள்ள வேண்டும். இந்த மனநிலை கைவந்துவிட்டால், அப்புறம் பாருங்கள்.. . பஞ்சம் இல்லாமல் உற்சாகம் பீறிடம் !
July 13, 2013
Comments
Post a Comment