பேசத்தெரிந்து கொள்ளுங்கள்.
உரையாடல் ஒரு கலை. இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை. அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :
*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் , தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. கேட்பவர்க்கும் போர்.
*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள். நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள். நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள். எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.
*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள். 'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது. அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.
*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள். அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.
*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள். அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும். அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள். உரையாடல் இனிமையாய் அமையும்.
*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள். இது பண்பாடு மட்டும் அல்ல, அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.
*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள். எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.
*தாக்காதீர்கள். கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள். கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும். ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
0000000000000000000000000000
குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு....
ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார். அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,
”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம். ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம். அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.
என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்! நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது! எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.
000000000000000000000000000000000000
அசரீரி.. . அதிசயம் !
பிரச்னைகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், நாமே வலியப் போய் இழுத்துப்போட்டுக்கொள்ளும் பிரச்னைகளும் உண்டு ! இந்த வகை பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் மூலகாரணம் - பேராசை !
ஜென் மதத்தில் இது சம்பந்தமாக ஒரு கதை உண்டு.
அது ஒரு கிராமம். ஒரு நாள் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்களில் பலர், என் பிரச்னைகள் எல்லாம் ஒழிய வேண்டும் ! நான் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும் ! இது மட்டும் நிறைவேறினால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என்றெல்லாம் துறவியிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட துறவி, அடுத்த நாள் அந்தக் கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார்.
நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. ஆம், உங்களின் எல்லாப் பிரச்னைகளையும் ஒரு கற்பனையான கோணிப்பையில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிடுங்கள். பிறகு, அதே கற்பனைக் கோணிப் பையில் வீடு, நகை, உணவு என்று எதை ஆசைப்பட்டாலும் அதில் போட்டு வீட்டுக்குக் கொண்டுவருவதற்காக கற்பனை செய்யுங்கள் ! உங்கள் கற்பனை பலிக்கும்!
இந்த அசரீரி உண்மையா ? இல்லையா ? என்பதைப் பற்றி ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம். என்றாலும், அசரீரியான குரல் அவர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கியது. அது சொன்னபடி செய்து, எல்லாம் தொலைந்து, நாம் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால் நன்மைதானே. அசரீரி வாக்குப் பொய்த்துப் போனாலும் நஷ்டம் ஏதும் இல்லையே ! அதனால் அசரீரி சொன்னபடியே செய்துதான் பார்ப்போம் ! என்று அடுத்த நாள் நண்பகல், ஊர்மக்கள் தங்களின் பிரச்னைகளை மூட்டைக்கட்டிக் கொண்டுபோய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிட்டு பங்களா, வைர நெக்லக்ஸ், கார் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்துப் பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள் !
திரும்பியவர்கள் அச்சரியத்தில் மூழ்கித் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்துவிட்டது ! கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடிவீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு, மாடிவீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை ! ஆனால், அந்தச் சந்தோஷம் கொஞ்சம் நேரம்தான் !
தங்களைவிட அடுத்த வீட்டுக்காரன் அதிக சந்தோஷமாக இருப்பது போல் ஒவ்வொருவருக்குமே தோன்றியது. ஏன் என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த கணம் கவலை மீண்டும் அவர்களின் காலை வந்து கட்டிக்கொண்டுவிட்டது.
ஐயையோ, நாம் ஒற்றை வடம் தங்க செயின் கேட்டோம். அதுதான் கிடைத்தது. ஆனால், அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடம் செயின் கேட்டு வாங்கிவிட்டாளே ! நாம் வீடுதான் கேட்டோம். ஆனால், எதிர் வீட்டுக்காரன் சலவைக்கல் பதித்த பங்களா வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட்டானே.. . நாமும் அதுபோலக் கேட்டிருக்கலாமே ! நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று சந்தர்ப்பம் கிடைத்தும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று கவலைப்பட்டவாறே மீண்டும் அந்தத் துறவியைச் சந்தித்துப் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். மறுபடி அந்த ஊரை விரக்தி ஆக்கிரமித்தது.
பிரச்னைகள் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் இதுதான்.
பிரச்னைகளை சந்தோஷத்தோடு முடிச்சுப்போட்டு பார்க்காதீர்கள் ! பிரச்னைகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும்.. . பிரச்னைகள் ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டும். நான் சந்தோஷமாக இருப்பேன் ! என்று ஒவ்வொருவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். இப்படிச் சொல்வதால், பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன என்றே சிந்திக்காதீர்கள் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விடவா ஒருவருக்குப் பிரச்னை இருந்துவிட முடியும் ! கர்ப்பத்தில் உருவானதில் இருந்தே கிருஷ்ணரைக் கொல்வதற்காக அவர் மாமா கம்சன் காத்திருக்கவில்லையா ? யுத்தகளத்தில் எந்த அர்ஜுனனுக்காக அவர் தேரோட்டிக்கொண்டு போனாரோ அவனே, ஐயையோ.. . நான் சண்டை போட மாட்டேன் என்று வில்லையும் அம்பையும் தூக்கியெறிந்து கடைசி நேரத்தில் தலைவலி கொடுக்க வில்லையா ? குருஷேத்திரப் போர்க்களத்தில் தினம் ஒரு பிரச்னை ! அதையெல்லாம் சமாளிக்கும் போதும் கிருஷ்ணரின் முகத்தை விட்டுச் சந்தோஷப் புன்னகை ஒரு கணம் கூட விலகவில்லையே !
கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லியிருப்பதும் இதையேதான் ! சுகம், துக்கம் இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கக் கற்றுக்கொள் ! இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து சரியான பாடம் கற்றுக்கொண்டால் தெளிவு பிறக்கும். அந்த தெளிவு ஆனந்தத்தைக் கொடுக்கும் !
00000000000000000000000000000000000
சுதந்திர மலர்
எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான். அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.
ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் , அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் , ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது. அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.
நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான். பிறகு , நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்? அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர். இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
கணவன், மனைவியிடமும் மனைவி, கணவனிடமும் தோற்றுப் போகத் தயாராக இருந்தால் அங்கே குடும்பம் ஜெயிக்கிறது . ஞாபக மறதி நடந்த நல்ல விஷயகளில் மிதந்து கொண்டிருப்பதற்காக "ஞாபக"த்தையும், நடந்த கெட்ட விஷயங்களில் மூழ்கி விடாமல் இருப்பதற்காக "மறதி"யையும் ஆண்டவன் நமக்குத் தந்திருக்கின்றான்.
பல நேரங்களில் பேச்சு சாதிப்பதை விட மௌனம் அதிகம் சாதிக்கும் . சில நேரங்களில்பேச்சு காயப்படுத்திவிடவும் கூடும் ... முடிந்தவரை பிறர் மீதான கோபங்களில் மௌனம் காத்து மகிழ்ச்சி சேர்க்க முயலலாமே.
000000000000000000000000000000000000
கைசன் கொள்கை' தெரியுமா?
செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் நாடுகளின் மக்கள், தங்கள் நாடுகளை உயர்த்த எந்த விதமான கொள்கைகளைக் கையாண்டார்கள் என்பது பற்றி சொல்லட்டுமா?
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாட்டினரிடம் ஒரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்று அவர்கள் நிர்ணயித்ததால். அந்த இலக்கை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக பாடுபடுவார்கள். அந்த ஒரு ஏக்கர் நிலம் செழிப்பானதோ இல்லையோ, அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ரசாயன உரத்தைப் பயன்படுத்தியாவது ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிளை அவர்கள் விளைவித்துவிடுவர்கள். அவர்களின் இந்த Result Oriented Management என்று பெயர்.
செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் ஜப்பானியர்களின் அணுகுமுறை வேறுவிதமானது. இவர்கள் அமெரிக்கர்களைப் போல் ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்க மாட்டார்கள். 'ஆப்பிளை என்ன மாதிரியான நிலத்தில் பயிரிட வேண்டும் எத்தனை நாளைக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும் ' என்ற எண்ணிக்கையில் குறியாக இல்லாமல், அதை அடையும் வழி முறையில் முழுக்கவனத்தையும் செலுத்துவர்கள். இந்த அணுகுமுறைக்கு Process Oriented Management என்று பெயர்.
ஒரு ஏக்கரில் அமெரிக்கர்களைவிட ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளின் எண்ணிக்கை சில சமயம் குறைவாகக் கூட இருந்தது. ஆனால், ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளில்தான் சுவை கூடுதல் இருக்கும். ஜப்பானியர்கள் இந்த அணுகுமுறை 'பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்' என்ற நமது கீதையின் சாரம்தானே.
ஜப்பானியர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இன்னொரு கொள்கை - 'கைசன்'. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?.
மேலும் மேலும் சிறப்பு. அதாவது, 'ஒரு வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்த முறை இந்த வேலையை இதைவிடச் சிறப்பாக செய்ய வேண்டும்' என்பதுதான் அந்தக் கொள்கை.
நாம் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வணக்கம் சொல்லிக் கொள்வதுபோல் ஜப்பானியர்கள் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி' என்று கூறிக் கொள்வார்கள். ஜப்பானியர்களுக்கு வெற்றி என்பது இலக்கு அல்ல. ஒவ்வொரு கணத்தையும் பொழுதுபோக்காக நினைக்காமல் வெற்றி என்ற நோக்கிலேயே பார்க்கிறரர்கள். ஜப்பானியர்களுக்கு வாழ்க்கை என்பதே வெற்றிதான்.
வெற்றியைப் பற்றி பேசும்போது இதையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு பேர் சண்டைபோட்டால் ஒரு வெற்றி பெறுவார்... இன்னொருவர் தோல்வி அடையத்தான் செய்வார். இருவருமே வெற்றியடைய முடியுமா?
முடியும் அதற்கு Win Win Method என்று பெயர்.
கம்பெனியில் ஒரு பிரச்னை... இரண்டு நிர்வாகிகள் இது பற்றி விவாதிக்கிறார்கள். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அடுத்தவர் இவரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை வைத்திருக்கிறரர். இருவரும் விவாதம் செய்கிறார்கள். இந்த விவாதத்தில் ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்க வேண்டும்.
ஆனால், இந்த இருவருமே, 'உன்னுடைய கருத்து சரியா?' என்று பார்க்காமல், இந்த நேரத்துக்கு எந்தக் கருத்து சரி என்று கருத்தின் தன்மையை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்போது, பிரச்னைக்குச் சரியான தீர்வைக்கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவருமே வெற்றி அடைந்ததைப் போல சந்தோஷப்படுவார்கள். இதுதான் Win Win Method.
மேலை நாட்டினரின் இந்த யுக்தியை இப்போது நம் நாட்டிலிலுள்ள நிர்வாகிகள் கூடத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும்போது பயன்படுத்துகிறரர்கள்.
இதையெல்லாம் படித்து விட்டு 'வெற்றி மீது எனக்கு ஆசை இருக்கிறது. எனக்குத் திறமையும் இருக்கிறது. ஆனால் உடன் வேலை செய்பவர்கள்தான் என்னை அமுக்கி வைக்கிறரர்கள், முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்' என்று யார் சொன்னாலும் அதை நம்புவது சிரமமாக இருக்கும். ஏனென்றால், வெற்றிப்படிகளில் ஏற விரும்புவது யாராக இருந்தாலும் அவர்களைக் குப்புறத் தள்ளிக் குழி தோண்டி மண்ணுக்கு அடியில் புதைத்தாலும் அவர்கள் மரமாக மீண்டும் முளைத்துக் கொண்டு மேலே வருவது நிச்சயம்.
தீப்பந்தத்தைப் பூமியை நோக்கிக் கவிழ்த்தாலும், தீயின் ஜுவாலை வானத்தை நோக்கித்தான் இருக்கும்.
ஒரு மரம், சிறந்த மரமா, இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பழங்களை வைத்துதான் மரம் சிறந்ததா இல்லையா? என்று ஊரார் தீர்மானிப்பார்கள்.
அதேபோல்தான், நீங்கள் சாதிக்கப் பிறந்தவரா இல்லையா என்பதை உங்களைக் கேட்டு இந்த உலகம் தெரிந்து கொள்ளாது. உங்களின் சாதனையை வைத்துதான் உலகம் உங்களை எடை போடும்.
00000000000000000000000000000000
மகிழ்ச்சி
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது.
கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.
வலி தரும் நினைவுகளை நீக்குவது எப்படி?கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார்.
ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும்.
உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.
அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம்.
அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி.
வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே.
சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே.
உங்கள் வேதனைகளிலிருந்து மீள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.
இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
பயிற்சியை ஆரம்பிப்போமா?
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள்.
இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள்.
காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.
இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.
தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.
நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும்.
வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும்.
August 10, 2013
Comments
Post a Comment