பஸ்சின் வேகம் குறைந்ததால் வடிவாக முகமாலை படைமுகாம் கண்முன்னே விரிந்தது. வீதியின் ஆரம்பத்தில் பலமான மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட காவலரண்களுடன் கூடிய மந்திகளும், அதனைத் தொடர்ந்த மேலதிகாரிகளின் குடியிருப்புகளும், பின்பு வந்த படைத்தளத்தின் கம்பீரமும், அடிவயிற்ரை சில்லிடச் செய்தது. இந்தப் படைமுகாம் யாழ்ப்பாணத்திற்கு நுளையும் முதலாவது முன்னரங்கக் காவலரண் பகுதியாகும். இந்தபடைமுகாமை பற்றிப் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இதில் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை அமெரிக்காவின் குவான்ட்தமொனோ ( QUANTAMONO )சித்திரவதைக்கூடத்திற்கு இணையான இந்தப் படைமுகாமில் , இரவில் பலபெண்களின் அலறல் சத்தம் பலரது நித்திரையைக் கலைத்தது. மறுநாள் அடையாளம் காணப்படாத உடலங்கள் படைமுகாமைச் சுற்றிய சுற்றாடலில் கிடைக்கும். பஸ்சினுள் திரும்பி மற்றயவர்களின் முகத்தைப் பார்த்தேன் ஒருவரது முகத்திலும் எந்தவித சலனத்தையும் காணமுடியவில்லை. எல்லோரும் தங்களது அலுவல்களில் இருந்தார்கள். இவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டதோ? எனக்குத்தான் இதெல்லாம் புதிதாக இருந்து அலப்பல் பண்ணுகின்றனோ? பஸ் முகாமைக் கடந்து வேகமெடுத்தது. வீதியின் இருமருங்கிலும் கற்பிழந்த தென்னைகளிடையே எமது பாரம்பரிய கல்வீடுகள் வரத்தொடங்கின. பல வீடுகள் குரோட்டன்கள், கமுகு மரங்கள், மயில்க்கொன்றை மரங்கள், அலரி மரங்கள், என்று செளிப்பாகவும், சிலவீடுகள் பாழடைந்த நிலையிலும் காணப்பட்டன. அனேகமாக இந்த வீடுகளில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த முகாமில் வாடுகின்றார்களோ??????? நினைவுகளால் மனது கனத்தது. நேரம் 11 மணியை கடந்து இருந்தது. பஸ் உசன், மிருசுவில் என்று சிறிய ஊர்களைக் கடந்து கொண்டிருந்து. பலர் அதில் ஏறி இறங்கினார்கள். களைத்த மனதிற்கு பஸ்சனுள் ஒலித்த பாடல்கள் இதமாக இருந்தன. நித்திரையின்மையால் கண்கள் கள்ளுக் குடித்த மாதிரி சிவத்து போயிருந்தன. போட்டிருந்த உடுப்பு வியர்வையினால் தோய்ந்து மணக்கத்தொடங்கியது. "என்னம் எவ்வளவு நேரம் ஓட்டம்?" என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன் "இன்னும் ஒரு மணித்தியால ஓட்டத்தில பரித்தித்துறை". எனது முகத்தில் சந்தோசம் குடிகொண்டது. படிக்கின்ற காலத்தில் அங்கு போனதிற்குப் பிறகு எனக்கும் பரித்தித்துறைக்குமான தொடர்புகள் விடுபட்டுபோய்விட்டது. பஸ் கொடிகாமம் பஸ்நிலையத்தில் தன்னை நிலைநிறுத்தியது . கொண்டக்ரர் தேத்தண்ணி குடிக்கப் போனார். எனக்கும் கீழே இறங்கவேண்டும் போல இருந்தது,
மனைவியைக் கள்ளப்பார்வை பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவா என்னை முறைத்துப்பார்த்தா. நான் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐன்னலினூடாக வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.
கொடிகாமம் பஸ்நிலையத்தில் பெரியமாற்ரங்களை காணமுடியவில்லை. கொடிகாமம் சந்தை பரபரப்பாகக் காணப்ட்டது. முதன்முதலாக நீண்டகாலத்திற்குப்பிறகு தட்டிவானை இங்கு கண்டேன். பழமை மாறாது அப்படியே நின்றது அதன்பின் தட்டியில் வாழைக்குலைகளும், பினாட்டு கடகங்ளும் , புழுக்கொடியல் கடகங்களும்,
ஏறிக்கொண்டிருந்தன. நான் மிகவும் ஆவலாகப் பார்த்தேன். வந்த கொண்டக்ரரிடம் அண்ணை இந்ததட்டிவான் எந்தரூட்டிலை இப்பபோகுது என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.என்னை ஒரு பார்வை பார்த்தார் கொண்டக்ரர். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. "இப்ப இதெல்லாம் குறைவு தான் தம்பி, இங்கை இருந்து மருதங்கேணி, ஆளியவளைக்குப் போகும். கேள்வியைப் பார்த்தால் இப்பவே ஏறிப்போகப்போறீர் போல கிடக்கு". நான் சிரித்தேன். மனைவி முறைத்துப் பார்த்தா
"கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு வாறியளே?"
"ஏன் பிள்ளை தெரியாததைத் தானே அவரிட்டைக் கேட்டனான்".
பஸ் கொடிகாம் பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டு பரித்தித்துறை நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பியது. அந்தப் பாதை மிகவும் ஒடுக்கமாக இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் நின்று தான் விலத்த வேண்டியிருந்தது. நேரம் 11.30 ஆகியிருந்தது. பஸ் வேகமெடுத்தது. இரண்டுபக்கமும் ஏழ்மையும் பணமும் (ஓலைக்குடிசைகளும் கல்வீடுகளும்) மாறிமாறி வந்து கொண்டிருந்தன. பலவீடுகளில் கப்பிக் கிணறுகள் எட்டிப்பார்த்தன. சில வீடுகளில் ஆர்பிக்கோ பிளாஸ்ரிக் தண்ணீர்தொட்டிகளின் கூடிய கிணறுகளும் எட்டிப்பார்த்தன. அனேகமாக அவைகள் யூரோக்கள் அல்லது டொலர்களின் ஆதிக்கம் பெற்றவையாக இருக்கவேண்டும். ஆனால் என்னால் ஆடுகாலும் துலாவுடன் கூடிய கிணறுகளை காணாதது வேதனையாக இருந்தது. சில வேளைகளில் அதுவும் பங்கர்சென்றிக்குப் போய்விட்டதோ? இருந்தால் போல ஒரு வெளி வரத்தொடங்கியது. அதன் ஆரம்பத்தில் கவலரண் போட்டு மந்திகள் குந்தியிருந்தன. இது என்ன என்று மனைவியிடம் கேட்டேன். இது தான் முள்ளிவெளி என்றா. முள்ளிவெளி கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருந்து. முடிவிலும் மந்திகள் குந்தியிருந்தன, இலவு காத்த கிளிகளாக இதுகளின் வாழ்க்கையும் போகின்றது. வீதியின் இரண்டு பக்கமும் பனைகளும் வீடுகளும் தோட்டங்களுமாக மாறிமாறி வந்தன. பஸ் வேகமாக முன்னேறி நெல்லியடி பஸ்நிலையத்தில் வந்து நின்றது. அருகே பரித்தித்துறை வீதி நெளிந்தது. நெல்லியடி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த நெல்லியடிக்கும் எமக்கும் ஒரு பெரியகதையே உள்ளது.இதே நெல்லியடியில்தான் சிங்கம் திக்கிமுக்காடி அலறியது, ஒருவனின் காற்றோடு கலப்பால். சிங்கம் மட்டுமாஅலறியது? சுற்றுப்பட்டிகளும் தான். ஆம்....... முதல் கரும்புலியான மில்லர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்த இருந்த கூட்டுப்படை இராணுவ தளத்தை அழிக்க காற்றுடன் கலந்த இடம் நெல்லியடி . நாங்கள் எங்களையும் ஆயுதமாக்குவோம் என்றதும் இந்த இடத்தில் தான். நேரம் 12 மணியாகியிருந்து பஸ் பரித்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. காதைப்பிளக்கும் மிகையொலிகோர்ண்களால் நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன். இப்போழுது பஸ்சிற்குள் பத்துப்பேரே இருந்தோம். மனைவியின் முகத்தல் மகிழ்சி. மந்திகைசந்தியைக் கடந்து கொண்டிருந்தது பஸ். ஒடுக்கமாக வந்த வீதி பரித்தித்துறை வருவதை எனக்கு உணர்த்தியது. இரண்டு பக்கமும் இருந்த கட்டிடங்களும் வீடுகள் சிலவும் செல்அடியில் சிதிலமாகக் கிடந்தன. பஸ் முதலாம் கட்டைச்சந்தியை தாண்டியது.
"இதில இருந்தும் எங்கட வீட்டக்குப் போகலாம்" என்று மனைவி எனது பிராக்கைக் கலைத்தா.
"அப்ப இதில இறங்குவம்" என்று எழும்பினேன்.
"இல்லை, பஸ்நிலையத்தில் இறங்குவம்".
"சரி".
வேகமெடுத்த பஸ் பஸ்டிப்போவை கடந்து, சிறிதுதூரம் ஓடி பரித்தித்துறை பஸ்நிலையத்தில் நின்றது.
July 21, 2011
தொடரும்
Comments
Post a Comment