Skip to main content

நிலவு குளிர்சியாக இல்லை




வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது.

ஜானவி ஊரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் இளைப்பாறிய அதிபர். அவளது கணவரோ பிரபல கண்வைத்திய நிபுணராக இருந்து பத்து வருடங்களுக்கு முதல் காலமாகிவிட்டார். கணவரின் இழப்பை ஜானவியால் ஜீரணிக்க முடியவில்லை. கணவர் உயிருடன் இருந்தபொழுதே தனது ஒரே மகளான மைதிலியை பிரான்சில் இருந்த அவர்களது நண்பர் ஒருவரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டாள் ஜானவி. தனது கணவர் ஆரம்பித்த வயது முதிர்ந்தோர் இல்லத்தைப் பொறுப்பெடுத்து நடத்திக் கொண்டிருந்தாலும், கடந்த மூன்று வருடங்களாக மகள் மைதிலி தன்னிடம் வந்து இருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மைதிலியோ, தனது பிள்ளைகளைப் பார்பதற்கும் அம்மாவால் வரும் வயது முதிர்ந்தோருக்கான உதவித்தொகை எல்லாவற்றையும் மனதில் வைத்தே அம்மாவை வற்புறுத்திக் கொண்டிருந்தது அந்த அப்பாவி அம்மா ஜானவிக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அடிக்குமேல் அடி அடிக்க அம்மியும் நகரும் என்பது போல மைதிலி வெளிநாட்டு வாழ்வின் மகத்துவங்களையும் சொல்லி ஜானவியின் மனதை வென்று விட்டாள்.

ஜானவியை மருந்து போடுவதற்கும், பகல் சாப்பாடு சாப்பிடுவதற்கும் விமானப்பணிப்பெண் மெதுவாகத் தட்டி எழுப்பினாள். ஜானவியின் நுனிநாக்கு ஆங்கிலம் அப்பொழுது நன்றாகவே கைகொடுத்தது. ஜானவி பகல் சாப்பாட்டை முடித்துவிட்டுப் புதினம் பார்க்கும் ஆவலில் தனது இருக்கையின் ஜன்னலை மெதுவாகத் திறந்தாள். அங்கே சூரியவெளிச்சம் அவள் கண்களைக் கூசியது. வெண்முகில் கூட்டங்கள் திட்டுத்திட்டாகப் பரவி இருந்தன. அதனூடே விமானம் ஊடறுத்துத் தன் இலக்கு நோக்கி வரைந்தது, அவள் மனதைப் போலவே. விமானம் பாரிசில் தரைதட்ட இன்னும் ஒருமணித்தியாலங்களே இருந்தன. அவளின் மனம் பலவாறு மறுகியது. அவளிற்குப் பேரப்பிள்ளைகள் பிறந்தது செவிவழிச் செய்தியே.தனது குடும்பத்தின் பெயர்சொல்ல வந்த வாரிசுகளை காண அவள் மனம் ஆலாய் பறந்தது. விமானம் தனது அகலக் கால்களைப் பரப்பி ஓடுபாதையில் வழுக்கி ஓடி நின்றது. அப்பொழுது மாலை வேளையாகையால் விமானநிலையமும் அதன் சுற்றுப்புறம் எங்கும் வெத்திலை துப்பியிருந்தது .

ஜானவி தனது குடிவரவு அலுவல்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அதிக நேரம் அவள் இருந்தமையால் கால்கள் வீங்கி நடப்தற்கு அவள் சிரமப்பட்டாள். எல்லோரும் தனக்காக அங்கு கூடியிருப்பார்கள் என்றே அவள் எதிர்பார்த்தாள் ஜானவி. தனது மருமகன் மட்டும் அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்திருப்பதை ஜானவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வழமையான விசாரிப்புகளுடன், மைதிலியின் வீடு அருகே இருந்ததால் அவளை ரெறியினிலேயே மருமகன் அழைத்துச் சென்றார். பத்துநிமிட பயணத்தின்பின் அவர்கள் அவர்களது குடியிருப்புத்தொகுதியை அடைந்தார்கள். ஜானவி வரும்பொழுது எல்லாவற்றையுமே அவதானித்துக்கொண்டுதான் வந்தாள். கிராமத்தில் இருந்த ஜானவிக்கு நீண்ட நெடிய அடுக்குமாடிகளின் தொகுப்பு பிரமிப்பை ஏற்படுத்தின சுற்றாடல்கள் ஆள்நடமாட்டமற்று மிகவும் அமைதியாக இருந்தன. அது அவளிற்கு நெருடலாகவே இருந்தன. மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பற்றி மருமகனிடம் கேட்க ஜானவிக்குக் கூச்சமாக இருந்தது. அவள் வீட்டில் நுளையும்பொழுது வீட்டில் யாருமே இருக்கவில்லை. அவளது கூச்சத்தை தீர்க்குமுகமாக மைதிலி வேலைக்குப் போனதையும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதையும் மருமகன் கூறிக்கொண்டிருந்தார்.

ஜானவிக்கு தான் வளர்த்த பிள்ளையும் பேரப்பிள்ளைகளும் தன்னை பார்க்க விமானநிலயத்திற்கு வராதது பெரிய எமாற்றமாகவே இருந்தது. சிறிது நேரத்தின் பின்பு மைதிலியும் பேரப்பிள்ளைகளும் வீட்டினுள் நுளைந்தார்கள். மைதிலி தாயைக் கண்டவுடன் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதாள். பத்துவருடப் பிரிவின் ஆற்றாமை அதில் தெரிந்தது. பேரப்பிள்ளைகள் மைதிலியின் பின்பு முழுசிக்கொண்டு நின்றார்கள். மைதிலி அவர்களை ஜானவிக்கு அறிமுகப்படுத்தினாள். அவர்கள் பிரெஞ்சிலேயே ஜானவியுடன் கதைத்தார்கள். பேரப்பிள்ளைகள் தமிழ் கதைக்க முடியாமல் கஸ்ரப்படுவதை பார்க்க ஜானவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னிடம் படித்தவர்களெல்லாம் பல உயர் பதவிகளில் இருக்கும்பொழுது தனது பேரப்பிள்ளைகளுக்கு தாய்மொழி தெரியவில்லை. என்பது ஆற்றமுடியாமல் இருந்தது மைதிலி பிள்ளைகளைக் கவனிக்காது எந்தநேரமும் வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்தது ஜானவிக்கு ஒருவித எரிச்சலையே கொடுத்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஜானவி வந்து ஒருமாதத்திற்கு மேலான நிலையில், ஜானவிக்கு மைதிலியின் வாழ்க்கை முறை அறவே பிடிக்கவில்லை. ஓரிருநாட்கள் ஜானவியை கோயிலுக்குக் கூட்டிச் சென்றாள் மைதிலி. அப்பொழுது ஜானவிக்கு வெளியில் இடங்களை பார்த்தது சிறிது சந்தோசமாக இருந்தது. தனதுமகள் இப்படி மாறுவாள் என்று ஜானவியால் நம்ப முடியாமல் இருந்தது. அவளும் கணவரும் வேலை செய்தும் மைதிலியை எந்தவித குறையுமில்லாமலேயே வளர்த்தெடுத்தார்கள். ஆனால் தனது பேரப்பிள்ளைகள் அன்புக்காக ஏங்கி தன்னிச்சையாக வளருவது அவளுக்கு மனச்சங்கடமாகவே இருந்தது. மொத்தத்தில் அவளுக்கு பிரான்ஸ் வாழ்க்கை மனச்சங்கடமாகவே இருந்தது. அவளது எதிர்பார்புகள் எதுவுமே நிறைவேறவில்லை. அவளது மனமோ ஊரிற்குப் போக ஏங்கியது. ஒரு அங்கு பிரச்சனைகள் இருந்தாலும் அன்பும் அரவணைப்பும் அங்கு நிறையவே இருந்தது. ஊரின் போலித்தனமல்லாத வாழ்க்கைக்கு ஜானவியின் மனம் நிறையவே ஏங்கியது. தான் இங்கு வர எடுத்தமுடிவு பிழையோ என்று ஜானவி நிறையவே யோசித்தாள். அவள் தீவிரமாக யோசித்து ஒருமுடிவுக்கு வந்திருந்தாள். தனது ஏயார்லைன்ஸ்சுக்கு போன் பண்ணி தனது ரிக்கற்ரை மீள்பதிவு செய்தாள் ஜானவி. தனது முடிவை மைதிலிக்கு சொன்னப்பொழுது அதிர்ச்சியுடன் அவளை வினோதமாகப் பார்த்தாள். மைதிலியின் திட்டம் தவிடுபொடியாகியது அப்பாவி ஜானவிக்கு தெரியவாய்ப்பில்லைத்தான் .






April 12, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...