மங்கிய வெளிச்சத்தில் எனது கண்கள் நீர் நிறைந்து பளபளத்தது. என்நிலை உணர்ந்த என்னுடன் கலந்தவள் எனது கையை எடுத் ஆதரவாக இறுகப் பற்றிக்கொண்டாள். நான் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டேன். நேரம் இரவு 11 30 ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது இரயிலின் காவலர் எல்லா ஜன்னல்களையும் பூட்டிக் கொண்டு வந்தார் , திருடர்கள் பயமாம். எனக்கு வெளியே புதினம் பார்கின்ற வேலையும் போய்விட்டது யாழ்தேவி கொழும்பை நோக்கி விரைந்தது. எமது பெட்டியில் எல்லோருமே நித்திரைக்குப் போய் விட்டார்கள். எனது மனைவியும் எனது தோளில் சாய்ந்து நித்திரைக்குத் தன்னைக் கடன் கொடுத்திருந்தாள். எனக்கும் நித்திரைக்கும் பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது. என் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.
சிறுவயதில் அம்மா என்னை ஒரு இறைபக்கதனாக வளர்த்தாலும் , இன்று அந்தக் கடவுளே எனக்கு முதல் எதிரியாக இருந்த வினோதத்தை என்னவென்று சொல்ல ??? விபரம் அறியாவயதில் என்னை என் மண்ணிலிருந்து பிய்த்து எடுத்த அந்தக்கடவுள் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. புழுதி தோயத்தோய ஓடிவிளையாடிய குச்சொழுங்கையும் , கேணியடியும் , சகோதரங்களுக்கும் , நான் நேசித்த வீட்டிற்கும் , நான் அன்னியதேசத்து சுற்றுலாப்பயணி. எல்லாக் கழுகுகளும் எங்களைத் தின்ன கண்ணை மூடிக்கொண்டு தானே இந்தக்கடவுள் இருந்தான். சிலநேரம் அவனும் அகதியாகப் போய்விட்டானோ ??? ஒரு குழந்தைப்பிள்ளை பாலுக்கு அழ , தனது மனைவியை அனுப்பி அந்தக்குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டினவனுக்கு , எமது குழந்தைகள் உயிர்பிச்சை கேட்டு அழுதபோது இந்தக் கடவுளுக்கு என்னவேலை இருந்தது ????? பலத்த மனப்போராடத்திலேயே நித்திரையைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன்.
யாழ்தேவி என்னைத் தாலாட்டியபடியே விரைந்து கொண்டிருந்தது. என்னுடன் அம்மா கனவில் கலராக வந்துகொண்டிருந்தா. அம்மா என்னைக் கூப்பிடுவது காதில் கேட்டது. நான் திடுக்கிட்டு விழித்தேன்.யாழ்தேவி அலங்கமலங்க நின்றுகொண்டிருந்தது. இரயிலில் ஒரே இருட்டாகவும் வியர்வையாகவும் இருந்தது. எமது பெட்டிக் காவலர் சிறிய ரோச்லையிற்றால் வெளிச்சத்தை எம்மீது அடித்துப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இரெயில் மாகோ சந்திக்கு அருகே கொழும்பிலிருந்து வரும் இரெயிலுக்காகக் காத்திருந்தது. பெட்டியில் எழுந்த வெக்கையை போக்க மின்விசிறிகள் போராடித் தோற்றன. நான் சூனா அறைக்குள் இருந்தது போல் உணர்ந்தேன். உடம்பு நான் வேலை செய்யாமல் வியர்த்து ஊத்தியது. மனைவி தந்த சிறிய துவாயும் மணக்கத்தொடங்கியது. நான் நேரத்தைப்பார்த்தேன் , அதிகாலை 1 மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. எதிர்பக்கத்தில் இருந்து வந்த புகையிரதம் எங்களைக் கடந்ததும் , எமது இரயில் நகர்ந்து வேகமெடுத்தது. நான் மீண்டும் நித்திரைக்குப் போராட்டத்தைத் தொடங்கினேன். நித்திரையால் என்னைத் தத்து எடுக்க முடியவில்லை. என்னுள் நினைவுகளே எங்கும் அலை பாய்ந்து என்னைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது.
என்னையும் , எங்களையும் புரட்டிப்போட்ட விதியின்மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. மனைவி உறங்கியதால் நான் மீண்டும் தனித்தேன். தனிமையின் மறுபதிப்புதான் நானோ ?????எனக்கு சிகரட் பத்தவேண்டும் போல் தோன்றியது. நான் மெதுவாக மனைவியின் கைகளை விலத்தி விட்டு எழுந்து கழிப்பறைக்குள் நுளைந்து கொண்டே , கழிப்பறை ஜன்னலைத் திறந்து வைத்தேன். என் முகத்தில் இதமான குளிர் காத்து ஜன்னலின் ஊடாக வந்து மோதியது. நான் சிகரட்டை எடுத்து அதன் முனையைச் சிவப்பாக்கினேன். அதுவும் என் மனம் போன்று சிவப்பானது. நான் ஆழமாகப் புகையை இழுத்து விட்டேன். என் மனவெக்கையும் புகையுடன் கலந்து வெளியேறியது. நான் நேரத்தைப் பார்த்த பொழுது காலை 5 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வானத்தில் இருட்டிற்கும் சூரியனுக்கும் ஏற்பட்ட ரணகளத்தால் , சிவப்புப் பூச்சு அரும்பத் தொடங்கியிருந்தது. நான் நன்றாகக் குளிர்ந்த தண்ணியால் முகத்தைக் கழுவினேன்.எனது களைப்பு குளிர்ந்த நீரால் என்னிடம் விடைபெற்றது. நான் மீண்டும் எனது இருக்கையில் வந்து இருந்து கொண்டே , எமது இருக்கையின் ஜன்னல்களைத் திறந்து விட்டேன்.
நாங்கள் இப்பொழுது கம்பகா ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது ஓரளவு வெளிச்சம் பரவியிருந்தது. நான் அந்தக் காலை வேளையை ரசிக்கத் தொடங்கினேன் . கிராமங்களுக்கே உரிய அழகும் , பசுமை படர்ந்த வயல்வெளிகளும் அங்கே கொட்டிக் கிடந்தன. வயல்களில் சிங்கள விவசாயிகள் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். இவர்கள் உண்மையில் அடிப்படையில் அப்பாவிகளாக இருந்தாலும் , பௌத்தம் சிங்களம் என்ற தம்பதிகளுக்குப் பிறந்த புதிய பரம்பரையினர். இவர்களது அன்றாடப் பிரைச்சனைகள் யாவுமே இந்த அம்மா அப்பாவால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தன. அந்தப் பசுமை படர்ந்த வயல்வெளிகளில் லயித்த எனக்கு , தமிழனாகப் பிறந்த ஒரே கரணத்திற்காக எனது மண்ணும் , விவசாயமும் , மனிதவாழ்வும் வறண்ட பாலைவனமாகியதைத் தாங்க முடியவில்லை . மனதில் இனம்புரியாத வலி ஊடுருவிப் பரவியது.
யாழ்தேவி இப்பொழுது மருதானையில் தரித்து நின்றது . பலர் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள் . காலை நேரம் 7 மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது . எங்கள் பெட்டியில் இருந்தவர்கள் தாங்கள் கோட்டைப் புகையிரத நிலையத்தில் இறங்க இப்பவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள் . எனக்கு அவர்களின் பரபரப்பு சிரிப்பைத் தந்தது . கொழும்பு நகரின் ஊடாக யாழ்தேவி ஊர்ந்தது . சிறிது நேரத்தில் யாழ்தேவி கோட்டைப் புகையிரத நிலையத்தில் தன்னை மட்டுப்படுத்தியது . பயணிகள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு இறங்கினார்கள் . அந்தப் புகையிரத நிலையம் பலவித இரைச்சல்களால் சந்தைக்கடையாக மாறியிருந்தது. நாம் இருவரும் நிதானமாக இரயிலை விட்டு இறங்கினோம். நான் ஆசையுடன் யாழ்தேவியைத் தடவிக்கொடுத்தேன். நாங்கள் இறங்கியதும் எமது பயணப்பொதிகளைக் கண்ட பாரம் தூக்குபவர்கள் எங்களை மொய்துக்கொண்டார்கள். எனது மனைவியோ அவர்களுடன் சிங்களத்தில் கதைத்துக்கொண்டே முன்னோக்கி முன்னேறினா. நான் அவாவிற்குப்பின்னாலே எனது பயணப்பொதிகளைச் சுமந்தவாறே புகையிரத நிலயத்தின்வெளியே சென்றேன்.
தொடரும்
Comments
Post a Comment