எல்லோரும் ஒழுங்கையில் இறங்கினார்கள். நான் சிறிது தாமதித்தேன் என்னைப் பாரத்த மனைவி ,
" என்ன " ? என்பது போலப் பார்த்தா .
" நீங்கள் போங்கோ நான் வாறன் "?
" ஏன் " ?
" நீங்கள் போங்கோ எண்டுறன் " .
கலங்கிய கண்களுடன் கடுமையாக எனது வாயில் இருந்து வார்த்தைகள் துப்பின . எனது மனவலிகளுக்காக மனைவியுடன் கடுமையாக நடக்கின்றேனோ ? எனது நிலையைக் குறிப்பால் உணர்ந்த மனைவி ,
" நிண்டு மினைக்கெடாமல் கெதீல வாங்கோ" என்றவாறே , வீட்டை நோக்கித் தங்கைச்சி பிள்ளைகளுன் நடக்கத் தொடங்கினா . தனித்து விடப்பட்ட என்னுள் ஊழிப் பிரளயமே நடந்தது. எனது 25 வருடத்து ஏக்கம் என்னை அறியாமல் கண்ணால் பெருக்கெடுத்து ஓடியது . காலை வேளையாகையால் வீதி ஓரளவு பரபரத்துக் காணப்பட்டது . சிறுவயதில் ஓடி ஆடி பல கதைகள் பேசி, புழுதி மண் தோய நடந்த ஒழுங்கையும் அதன் வாசலும் என்னை அன்னியனாகவே வெறித்துப் பார்த்தன. என்னை யரும் அடையாளம் காணுகின்றார்களா ? என்ற ஏக்கத்துடன் இருபக்கமும் திரும்பிப் பார்த்தேன் . யாருமே என்னை அடையாளம் காணவில்லை நான் உடைந்து நொறுங்கிப்போனேன் ஒரு பாடலில் ஓளவையார் இப்படிப் பாடுவார் " கொடிதிலும் கொடிது அன்பிலாப் பெண்டில் இட்ட உணவு " என்று என்னைக் கேட்டால் , " கொடிதிலும் கொடிது பிறந்து வழர்ந்து தவள்ந்து விளையாடிய இடத்தில் யாரும் அடையாளம் காணாது அன்னியனாகப் பே முழி முழிப்பது தான் ". அம்மாவின் நினைவு வேறு வந்து தொலைத்தது . எப்படி அம்மா இல்லாத வீட்டைப் பார்க்கப் போகின்றேன் ? என்னுடன் தானே அம்மா இட்டமாக இருந்தா . கண்ணால் வந்த வெள்ளத்தால் மனது இலேசாக இருந்தது . தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தேன் . வீட்டு வாசலில் எனது வரவை எதிர்பார்த்து எனது கடைசித் தங்கைச்சி தனது பிள்ளையுடன் நின்றிருந்தாள் . என்னைக் கண்டதும் தங்கைச்சி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள். குழந்தையோ மலங்க மலங்க முழித்தது. நான் அவளின் முகத்தை நேரடியாகப் பார்க்கத் தையிரியம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கைகால் முகம் கழுவிக் கொள்ளப் போய்விட்டேன் . மனைவி தங்கைச்சியைத் தேற்ரிக்கொண்டிருந்தா . கைகால் கழுவப் போன நான் கிணத்தைக் கண்டதும் , வந்த புழுகத்தால் வாழியால் அள்ளிக் குளிக்கத் தொடங்கினேன் . குளிர்ந்த நீர் கொதித்த மனதிற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது . கிணற்றினுள் இரண்டு சோடி தங்கமீன்கள் ஓடித்திரிந்தன . சிறுவனாக இருந்தபொழுது அண்ணைக்குத் தெரியாமல் நண்பனுக்கு கொடுப்பதற்காக மீன்பிடித்தபொழுது வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தது , எனக்குள் சிரித்துக் கொண்டேன் . குளித்து முடிந்தபின் சாமி அறைக்குள் உள்ளட்டேன் . அம்மாவும் அப்பாவும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அம்மாவை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . அம்மா நல்ல வடிவு. சாவித்திரி மாதிரி இருப்பா . நான் படுத்து எழும்பிய பெரிய கட்டில் என்னுடன் பல கதைகள் கதைத்தது . தங்கைச்சி சீனி போடாமல் தேத்தண்ணி கொண்டுவந்து தந்தாள் . அவளுடன் வந்த குழந்தை அவளுக்குப் பின்னால் நின்று எட்டிப் பாத்தது . அவளிற்கும் கலியாணம் நடந்தது எனக்குச் செய்தியாகத் தான் வந்தது . அவளின் கணவர் ஏகத்துக்கம் வெக்கப்பட்டார் . அண்ணை வெளியில் போயிருந்தபடியால் , எங்கள் பிள்ளையார் கோயலடிக்கு தங்கைச்சியின் பிள்ளையுடன் போனேன் . ஒழுங்கையால் மருமகளுடன் நடப்பது மனதிற்கு இதமாக இருந்தது . மருமகள் மழலையில் ஏதேதோ கதைத்துக்கொண்டு என்னுடன் தளிர்நடையில் வந்ததால் எனது நடைவேகம் குறைந்தது . நான் மழைகாலத்தில் நீச்சலடித்து விழையாடிய கோயில் கேணி என்னைப் பாத்துச் சிரித்தது. கேணியடியும் காலத்தின் கோலத்தால் ஓரளவு வயதாகி இருந்தது . கேணியின் அருகே இருந்த சம்புப்புல் தரவை பரந்து விரிந்திருந்தது . தூரத்தே கைதடிப் பாலம் தெரிந்தது. இந்தத் தரவையால் சிறிது தூரம் நடந்து போனால் கோப்பாய்க் கடல் ( உப்பங்களி ) வரும். கோடைகாலத்தில் உப்பு எடுக்கப் போவோம். இதில் மாரிகாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணி நிக்கும். கைதடிப்பாலம் தான் எங்கட நீச்சல் இடம். இந்தப் பாலத்தடீல கண் சிவக்கச் சிவக்க நீந்திப்போட்டு , அப்படியே கைதடிச் சந்திக்குப் போய் மலையாளத்தான்ரை கடைல போய் மாசால் தோசையும் பிளேன் ரீயும் குடிக்கிறது அப்ப எங்களுக்கு உலகமகா திறில். தூரத்தே மாடுகள் புல்லு மேய்ந்து கொண்டிருந்தன . பக்கத்தே நின்ற இலுப்பை மரத்தில் அணில்களும் , குருவிகளும் , சத்தத்தில் போட்டி போட்டன . கோயிலில் பூசை முடிந்து , கோயில் வளாகம் அமைதியாக இருந்தது . கண்ணை மூடிப் பிள்ளையாரைக் கும்பிட்டேன் . என்னைப் பார்த்து மருமகளும் கும்பிடுவது போல் பாவனை செய்தாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . நானும் , தங்கைச்சியும் சிறுவயதில பஞ்சாமிர்தம் வாங்க இதில நிண்டு சண்டைபிடிச்சது ஞாபகம் வந்தது . ஐய்யரும் கூட கும்பிடிற பிள்ளையளுக்குக் கனக்க பஞ்ஞாமிர்தம் குடுப்பர் . தங்கைச்சியும் இதைசாட்டிக் கொஞ்சம் கூடக் கும்பிடுவள் .
கோயிலை விட்டு வெளியேறி வந்து கேணிக் கட்டில் வந்து அமர்ந்தேன் . பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்பைக்கற்ரினுள் இருந்து ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ர வைத்தேன் . சோழகம் வரவதற்கு அறிகுறியாக காத்து உரப்பாக வீசியது . சிறு வயதில் பட்டம் விடுவதும் எங்கடை பிரதான பொழுது போக்கு . எட்டுமூலை , கொக்கு , வட்டம் , சதுரம் , எண்டு அண்ணை விதம்விமாகக் பட்டம் கட்டுவார். நாங்கள் அவருக்கு உதவியளர்கள் மட்டுமே . மட்டுத்தாள் பேப்பராலைதான் பட்டத்தை ஒட்டுவம் . பின்னேரத்தில விண் பூட்டி , அதின்ர சத்தத்தோட பட்டங்கள் இந்த தரவைவேல அணிவகுக்கும் . இதுக்குள்ள மற்றவ எங்கடை பட்டங்களை அறுக்கவும் வருவினம் . அதில எங்களுக்கை அடிபாடும் வரும் . நாங்கள் அண்ணைக்குப் பின்னால நிண்டு கொண்டு காய்கூய் எண்டு சத்தம் போடுவம் . நேரம் 11 ஐத் தாண்டி இருந்தது . ஒழுங்கையால் ஒரு நடுத்தர வயது பெண்ணும் இரு இழம் பெண்களும் கேணியடியை நோக்கி வந்தார்கள் . கிட்ட வர அவர்களை உற்றுப்பார்த்தேன் . எங்கையோ பாத்தமாதிரி இருக்கே ? அவர்கள் கிட்ட வர எனது பார்வையால் , அவர்களது நடை தயங்கியது . எனக்குப் பொறி தட்டியது அவளேதான் சின்ன வயதில் எனக்கு கடிதம் தந்தவள் . எனது நண்பனின் தங்கைச்சி பாமினி. ஒரு புன்சிரிப்புடன்,
" நீங்கள் குமரன்ர தங்கைச்சி பாமினி தானே ?"
"ஓம் ".
"நீங்கள்.................. "?
எண்டு இழுத்தாள்.
" என்னைத் தெரியேலையோ ? வடிவாய் யோசியுங்கோ . "ஓ.......... லோசினயக்கான்ர மகன் கண்ணன் தானே". "என்ரகடவுளே எப்ப பிரான்ஸ்சால வந்தனிங்கள் " ?
" இண்டைக்கு தான் இங்கை வந்தனான் ".
" எப்பிடி பாமினி சுகங்கள் "?
" ஏதோ இருக்கிறம் ".
" நீங்கள் வன்னீல இருந்ததாய் தங்கைச்சி சொன்னாள் ".
" ஓ........... இப்பதான் அல்லோலகல்லோப்பட்டு இங்கை வந்தம் ".
" இப்ப அம்மம்மான்ர காணிக்குள்ள இருக்கறம்".
அவளின் முகம் மாறி இருந்தது,
" குமரன் என்ன செய்யிறான்"?
" உங்களுக்குத் தெரியாதே ? அவர் மாவீரனா போட்டார் , புதுக்குடியிரப்புச் சண்ண்டைல நடந்தது ".
"என்ன...........?"
அவளின் கண்கள் குளமாகின.
" அப்ப உங்கடை அவர் "?
" இடப்பெயர்வில எங்கை எண்டேதெரியாது , என்ர பிள்ளையழும் நானும் தப்பனது அருந்தப்பு. இதால அம்மா மனம் பேதலிச்சுப் போனா "
" பாமினி அங்கத்தையான் நிலமையை சொல்லேலுமே"?
" இல்லைக் கண்ணன் நான் மறக்கப் பாக்கிறன்". அவளின் குரல் கரகரத்தது,
"நீங்கள போய் சாப்பிடுங்கோ வெய்யிலுக்கை நிக்கவேண்டாம்". கனத்த மனதுடன் வீட்டுக்கு மருமகளுடன் வீட்டை வந்தேன். அண்ணை வேலையால் வந்திருந்தார் . என்னைக் கண்டதும் கண்கலங்கயபடியே கட்டிப்பிடித்தார் .எல்லோரும் சாப்பட மேசையில் இருந்தோம் . தங்கைச்சி சமைத்த சாப்பாட்டைப் பார்த்து அதிர்ந்து விட்டேன் .
தொடரும்
Comments
Post a Comment