01 புத்தி
தனக்கு புத்தி
நுறு என்றது மீன் –
பிடித்துக் கோர்த்தேன்
ஈர்க்கில் .
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை –
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை .
எனக்குப் புத்தி
ஒன்றே என்றது தவளை
எட்டிப் பிடித்தேன்-
பிடிக்குத் தப்பி
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை –
“நூறு புத்தரே !
கோர்த்தாரே !
ஆயிரம் புத்தரே !
மல்லாத்தாரே!
கல்லேத்தாரே !
ஒரு புத்தரே !
தத்தாரே!
பித்தாரே !
நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ??
000000000000000000000000000000000
02. E=mc2
ஒற்றைக் குருட்டு
வெண்விழிப் பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
‘எங்கே?’
என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்தியத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
‘இங்கே’ என்றான் சிவன்.
‘அசடு’ என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.
ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன –
காலமே வெளி!
இன்று கண்டது
நேற்றையது,
இன்றைக்கு நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.
விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.
அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!
மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை!
1945
ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.
இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.
பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை.
0000000000000000000000000000000000
03 வகுப்பறை
இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்
வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி
0000000000000000000000000000000000000000
04 வண்ணத்துப் பூச்சியும் கடலும்*
சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களiலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.
நன்றி : பிரமிள்
0000000000000000000000000000000000000000
05 வீரர்கள் துயிலும் நிலம்
பேய்க் கூச்சல் வீசி எழும்
காற்றில் ஒடிந்து விழும்
காவோலைச் சத்தத்தில்
குயில்
மிரண்டு அலறும்
மேற்கே பனந்தோப்பு
கோடையிலே மணலோடும்
மார்கழியில் நீரோடும்
ஓடும் ஒரு வெள்ளவாய்க்கால்
தெற்கே திசை நீள
கிழக்கெல்லை பொன்னிப்புலம்
நிலமற்றோர், “நிறம் குறைந்தோர்”
புறந்தள்ளப்பட்டோரின் குடியிருப்பு
செம்மண் தரையும் வயலும் வடக்கே
இவை நடுவே
மருதத்தின் சஞ்சலத்தின் மீது
விரிகிறது ஒரு இடுகாடு
வீரர்கள் துயிலும் நிலம்
இந்த நிலத்தில்தான் நூற்றுக்கணக்கானோர்
தூங்குகிறார்
புன்சிரிப்பும் புத்துயிர்ப்பும்
முகத்துக்கு மெருகேற்ற
நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள்
நினைவை நெருடுகிற நண்பர் பலர், உறவினர்கள்
நானறியா இளைஞர்கள்
கணப்பொழுது நெஞ்செரியும்
நெஞ்சில்
எழுகின்ற நினைவெரியும்
நினைவில் உயிர் பரவும் கதை எரியும்
இந்த நிலத்திலதான் தூங்குகிறார் என்னவர்கள்
நெடுந்தூரம் சென்று நிரை கவர்ந்தோர்
காற்றோடும் கடலோடும் புகையோடும் போனவர்கள்
போனவர்கள் போக
மீந்து கிடந்த உடலங்கள் கொண்டுவந்து
இட்டுப் புதைத்து எடுத்த நடுகல்லின்
எட்டுப்புறமும் உறைந்திருக்கும்
உம் ஆத்மா என்கிறார்கள்
வீரச்சாவடைந்தோர் சொர்க்கத்தைச் சேர்வார்கள்
என்ற பழங்கதையைத் தமிழர்கள் நம்பார்
ஆண்டுக்கொருமுறை உற்றமும் சுற்றமும்
ஆட்சியும்
உங்களை நினைவு கொள்ள வருவார்கள்
அம்மாவின் கண்ணீர்
கல்லறையின் மேற்படிந்த
புழுதியைக் கழுவிய பிற்பாடு
நடுகற்கள் வளருமிந்த
இடுகாட்டு நெடு நிலத்தில்
பூச்சொரிவார்
விளக்கேற்றித் துயருறுவார்
வீரம் விளைந்த கதை விம்மி விம்மிச் சொல்லி
நெஞ்சு நெகிழ்வார்கள்
எதை நினைத்தோம்?
எதை மறந்தோம்?
நம்பாதே வார்த்தைகளை முற்றாக
வீரர்களுள்
மாற்ரானின் படைவலியைச் சிதைத்தவர்கள் உள்ளார்கள்
அப்பாவி மக்களது சிரமரிந்து முலையரிந்து
குருதி முகம் நனைய இரவிரவாய் முகம் துடைத்து
வழி மாற்றி மொழி மாற்றி விழி மாற்றி
வெற்றியோடு மீண்டவரும் உள்ளார்கள்
மாவீரம் தியாகத்தின் மறுபக்கம் இது
இவையெல்லாம்
காதோடு காதாக வாய்மொழியில் வாழுகின்ற சத்தியங்கள்
இலட்சியத்தின் தாகத்தில் மட்டுமே
தங்கியிருப்பதில்லை மேன்மை
வெற்று வார்த்தைப் பந்தலிலே
உம் நினைவைச் சோடித்து
தெருத்தெருவாய்ப் பாடி வைத்த
யுத்தப் பரணியெல்லாம்
செத்த வீட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய்
நாலாம் நாள் உதிர்கிறது
ஞாபகமும் தொலைகிறது
சங்கிலியனின் உடைவாளில் படிந்த
குழந்தைகளின் இரத்தத்தில்
என் கனவு கரைகிறது
ராஜ ராஜ சோழன் துவம்சம் செய்த
கர்ப்பிணிப் பெண்களின் அவல விழிகளில்
வரலாறு தற்கொலை செய்கிறது
தஞ்சைப்பெரிய கோவிலின் கீழ்ப் புதையுண்ட
எலும்புக்கூடுகளின் துயரில்
என் கவிதை நனைகிறது
வரலாற்றில் வீரர்கள் இல்லை
நம்பாதே வார்த்தைகளை முற்றாக
நம்பாதே வார்த்தைகளை
காலத்தின் சன்னிதியில் மாசகற்றிய வீரத்தின்
கதை சொல்லக் காத்திருக்கிறேன்
இருப்பையும் இறப்பையும் இழப்பையும்
அப்போது பாடுவேன்.
நன்றி : கவிஞர் சேரன்
(சரி நிகர், 1994, மாவீரர் நாளுக்காக எழுதியது)
0000000000000000000000000000000000000000000
06 ‘நான்’
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!
யாரோ நான்? – ஓ! ஓ! –
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!
நன்றி : பிரமிள்
00000000000000000000000000000000000000
07 பார்வை
நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.
வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடை யாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.
போகப் போக
வியப்பும் விசாரமும்
தளரத் தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.
இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியைக்
கணித நோக்கால்
கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிதைவைக்
கண்டான்.
கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து
ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.
நன்றி : பிரமிள்
பதிவிட்டவர்; குவளைக் கண்ணன்
நன்றி; http://www.kalachuva…e-92/page34.asp
February 23, 2014
Comments
Post a Comment