Skip to main content

நெருடியநெருஞ்சி -29





" என்ன யோசினை " ? என்னை இடைவெட்டனாள் மனைவி . " பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே " ? கலகலவென்று மனைவி சிரித்தாள் . " நீங்கள் வரவர நல்லாத்தான் பகிடி விடுறியள் ". நான் நடையைக் குறைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தேன் . "கண்ணன்!!! வடிவாய் யோசியுங்கோ .நாங்கள் கற்பனையில வேணுமெண்டால் இங்கை இருக்கலாம். நடைமுறையிலை சரிப்பட்டு வராது .ஏனெண்டால் நீங்கள் இங்கையிருந்து வெளிக்கிட்டுக் கனகாலம் . உங்களுக்கு இங்கத்தையான் நடைமுறை சரியா விழங்கேல. ஒருபக்கம் இருந்தால் , எழும்பினால் வெள்ளைவான் கடத்தல் , கப்பம் எண்டு சனங்களை ஒரு நிரந்தரபயத்திலை வைச்சிருக்கிறான் . மற்றப்பக்கத்தால எங்கடை இருப்பு உடைஞ்சு சுக்குநூறாப் போச்சுது . யாழ்ப்பாணத்தில நேரை எல்லாம் பாத்தனிங்கள் தானே ?? பிள்ளைப்பெத்தால் கூட ஆமியிட்டைச் சொல்லிப்போட்டுத்தான் பெறவேணும் . இங்கையிருந்து நித்தம்நித்தம் மனசாலையும் , உடம்பாலையும் சாகிறதை விட பிறான்சிலை கோப்பை கழுவினாலும் சுதந்திரமாய் நாங்கள் இருக்கலாந்தானே ?? " அப்ப இங்கை இருக்கிறவை மனுசரில்லையோ ??" எனது மனவெக்கை நெருப்புத்துண்டுகளாக வார்த்தைகளை வாயால்த் துப்பியது .எனது கை சிகரட்டைத் தேடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டது . மனைவி அதை சட்டைசெய்யாமல் எனது மனதை மாற்றும் முயற்சியிலேயே குறியாக இருந்தாள் . ஒருவகையில பாத்தால் அப்பிடித்தான் . இல்லாட்டி எப்பவோ எங்கடை சுதந்திரம் எங்களுக்கு கிடைச்சிருக்கும் . எங்களுக்கும் என்ன வயித்துவலியே ? குளிருக்கையும் ,பனிக்கையும் எங்களைவிட மூளையிலையும் , படிப்பிலையும் குறைஞ்ச வெள்ளையளோட வேலை செய்து ஆருக்கோ வருமானவரி கட்டிறதுக்கு " .

மனைவியின் குரல் உடைந்து கமறியது . நாங்கள் இருவரும் கதைத்தவாறே மச்சாள் வீட்டை அடைந்தோம் . மச்சாள் என்னைக் கலங்கிய கண்களுடன் வரவேற்றா . நான் அவாவைப் பிரிந்தபொழுது சிறுபிள்ளைகளாக இருந்த மச்சாளின் பிள்ளைகள் எனக்குப் புதினமாகவும் , அவர்களுக்கு நான் புதினமாகவும் இருந்தேன் . பல குடும்பக்கதைகளைக் கதைத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் பிரியமனமின்றி மச்சாளிடம் விடைபெற்றேன் . நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது வனானா லீவ்ஸ் ( BANANA LEEVES ) இல் இரவுச் சாப்பாட்டை முடிக்க உள்ளே நுளைந்தோம் . மங்கிய வெளிச்சமும் , மெதுவான புல்லாங்குழல் இசையும் ஒருவித மோகன நிலையை எனக்கு ஊட்டியது . நாங்கள் கேட்ட சாப்பாடுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம் . நானோ புல்லாங்குழலில் சொக்கியிருந்தேன் . நாங்கள் வந்த சாப்பாட்டை மெதுவாக ரசித்து , ருசித்துச் சாப்பிட்டோம் . நாங்கள் அங்கிருந்து வெளியேற ஒன்பது மணியாகியிருந்தது . நாங்கள் வீட்டை நோக்கி முன்னேறி சில நிமிடங்களில் அடைந்த பொழுது ,மனைவியின் நண்பி பல்க்கணியில் எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தா .நான் உடைகளை மாற்றிக் கொண்டு பல்க்கணிக்கு சிகரட்டுடன் வந்தேன் . ஏனோ என்மனம் பெரியக்காவைச் சுற்றியே வட்டமிட்டது .நான் சிறுவயதிலேயே அக்காவுடன் கூடிய ஒட்டுதல் இருந்ததால் வந்தவினையிது .எனது கைத்தொலைபேசியால் அக்காவின் எண்களை ஒற்றினேன் . மறுமுனையில் அக்காவின் குரல் ஒலித்தது . " அக்கா நித்திரையா போனியே ?" "இல்லையடா .இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சனான் "." சரி அக்கா நான் என்ன்னங் கொஞ்சநேரத்தில வெளிக்கிடப்போறன் ." "சரியடா நீ ஒண்டுக்கும் யோசியாமல் போட்டுவா . வறவரியமும் கட்டாயம் வா என்ன ?"






தொடரும் 



Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...