Skip to main content

நெருடிய நெருஞ்சி-24






கடற்கரையின் கூதல் காற்று அந்த பஸ்ராண்டை நிரவியிருந்தது . சுற்றியிருந்த தேநீர்கடைகளில் இருந்து சுட்ட வடையின் வாசமும் , சீர்காழியின் பக்திப் பாடலுமாகக் கலந்து வந்தன . பஸ் வெளிக்கிடுவதற்கு நேரமிருந்ததால் நானும் மச்சானும் தேநீர்கடைக்குள் உள்ளட்டோம் . எங்களைக் கண்டதும் கடைப் பெடியன் எமது வழமையான இஞ்சித் தேத்தண்ணியையும் , கடலை வடையையும் கொண்டு வைத்தான் . வடையில் சூடு ஆறாது மொறுமொறுப்பாக இருந்தது . எதிரே இருந்த மீன் சந்தைக்கு மீன்கள் முனையிலிருந்து வரத்தொடங்கியிருந்தன . அவற்றைக் கும்பி கும்பியாகக் குவித்து வைத்திருந்தனர் . சிறிது சிறிதாக அந்த இடம் அமைதியை இழந்தது . நாங்கள் இருவரும் தேத்தண்ணியைக் குடித்து விட்டு ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு பஸ்சை நோக்கி நடையைக் கட்டினோம் . தூரத்தே மாமா மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்தார் . நாங்கள் பஸ்சை அண்மித்தபொழுது ஓரளவு பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது . நான் மாமவிடம் சொல்லி விட்டு பஸ்சினுள் ஏறி அமர்ந்து கொண்டேன் .பஸ் சாரதி தனது இருக்கையில் ஏறி இருந்து கொண்டு இறுதியாக கோர்ணை அடித்து பஸ்சைக் கிளப்பினார் . மாமாவும் மச்சானும் எங்களை விட்டு மெதுவாக மறைந்தார்கள். மனைவியின் கண்கள் கலங்கியிருந்தன . நான் எதுவும் பேசாது ஜன்னாலால் எனது பார்வையைத் திருப்பினேன். பஸ் பருத்தித்துறை வீதியினூடாக வேகமெடுத்து , பருத்தித்துறைக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தது . எனது கண்கள் இவைகளை இனி எப்போது காண்போம் என்ற ஏக்கத்துடன் வழயில் கண்ட மதில்கள் , வேலிகள் , மரஞ் செடி கொடிகளுடன் , மௌனக் கதை பேசியது . இப்பொழுது பஸசினுள் 80 களின் பாடல்களை பஸ் சாரதி ஒலிக்க விட்டார் . மனைவி இயல்பு நிலைக்குத் திரும்பி என்னுடன் கதைக்கத் தொடங்கினா . மனைவியின் தங்கை குடும்பம் மூன்று நாட்கள் கழித்துக் கொழும்பில் இணைவதாக ஏற்பாடு செய்திருந்தோம் . அதனால் மாமா , மாமி , அன்ரிக்கு எமது பிரிவு பெரிதாக தோற்ற வாய்பில்லை என்று மனைவியை ஆறுதல் படுத்தினேன் . பஸ் இப்பொழுது மந்திகைச் சந்தியைக் கடந்து , நெல்லியடி பஸ்ராண்டை நெருங்கிக் கொண்டிருந்தது . பஸ்சும் தன்னை முக்கால்வாசிப் பயணிகளால் நிறைத்திருந்தது .அதில் பாடசாலை மாணவர்களும் , அலுவலகம் போவோருமே நிறைத்திருந்தனர் .நான் அவர்களை வேடிக்கை பார்கத் தொடங்கினேன் . படாசாலை மணவர்களுக்கு இடையே நடந்த குசுகுசுப்புகள் சுவாரசியமாக இருந்தன . இதற்கு எதிர்பாட்டுகள் எதிர்பக்கத்திலும் வந்துதான் கொண்டிருந்தன . எனக்கு அவர்களின் நடவடிக்கைகள் எனது பள்ளிக்காலத்திற்குக் கொண்டு சென்றன. 80களில் நான் கா பொ தா சாதாரணம் படித்துக்கொண்டிருந்த காலமது , கூடவே வெடிவாலும் முளைத்திருந்தது . எனது இயல்பான இலக்கிய ரசனையும் , நகைச்சுவை உணர்வும் , குண்டு றாகினிக்கு என்னால் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது . ஆரம்பத்தில் நான் லெவல் காட்டினாலும் , என்னைச்சுற்றியிருந்த கூட்டுகளின் உசுப்பலினால் நானும் குண்டு றாகினியிடம் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டேன் . பின்பு அவளே எனக்குப் பேரழகியாக எனது கண்களுக்குத் தெரிந்தாள் . நானும் அவளுக்கு லெவல் காட்ட , கா .பொ . தா . சாதாரண பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற்று , கல்லூரியிலேயே முதல் ஆளாக வந்தேன் . இதனால் குண்டு றாகினியும் தன்ர லெவலை மற்றப் பெட்டையளுக்குக் காட்ட என்னுடன் கூட ஒட்டினாள். எங்கடை சரித்திரம் இப்பிடியே ஓடிக்கொண்டிருக்க , ஒரு நாள் மாலைப்பொழுதில் , தனது அப்பாவிற்கு இடமாற்றம் கிடைத்தால் தாங்கள் வவுனியாவிற்கு இடம் மாறப்போவதாகக் குண்டு றாகினி எனக்கு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள் . அவள் போட்ட குண்டால் என் மனம் குண்டும் குளியுமாகப் போனது . எனக்கு விசர்பிடிக்காத குறை . நான் பின்பு அவளைக் கணவில்லை . காலம் என்னுள் பலமாற்றங்களைத் தந்து . ஆனாலும் , அவளின் நினைவு மனதில் ஓரிடத்தில் பசுமையாகவே ஒட்டியிருந்தது . எனது நண்பனுடன் பேச்சுவாக்கில் அவளின் கதை வந்தபொழுது , அவள் இன்று நாவலர் பாடசாலையின் அதிபராக இருப்பது தெரிய வந்தது . எனது மனம் ஏனோ குண்டு றாகினியை சந்திக்க மறுத்தது.அவள் எனது தங்கைச்சியின் நண்பியாக இருந்ததும் ஒரு காரணமோ தெரியாது . நான் என்னையறியாமல் சிரித்துக் கொண்டேன் . எனது மனைவி என்னை வினோதமாகப் பார்த்தா .

" என்ன நீங்களே சிரிக்கிறியள் . சொன்னால் என்ன குறைஞ்சு போவியளே ?"

" இல்லை குண்டு றாகினியை நினைச்சன் , என்ர சேட்டையளையும் நினைச்சன் , சிரிப்பாய் வந்திது ".

" உங்களுக்கு வேறை வேலையில்லை ".

என்னை முழுமையாகத் தெரிந்த மனைவி . எதையும் எதிர்மறையாக எடுக்காதவா . பஸ் இப்பொழுது குடிமனைகளைக் கடந்து முள்ளி வெளியனூடாகச் சீறிப் பாய்ந்தது.முள்ளிவெளி ஒன்றிரண்டு செல் அடிபட்ட பனைமரங்களுடன் தலைவாரி கோலமாக இருந்தது . ஒடுக்கமான வீதியில் இருமருங்கும் கிடுகுவேலிகளும் கல்லு மதில்களும் போட்டிபோட்டுக் கொண்டு ஓடி மறைந்தன . பஸ் முள்ளிவெளியைக் கடந்து வறணியூடாக ஊடறுத்துப் பாய்ந்தது . நான் சுவாரசியமாக இருபக்கமும் புண்ணாக்குத் தண்ணி குடிக்கும் கண்டுக்குட்டி போல பார்த்துக் கொண்டு வந்தேன் . ஓரிடத்தில் பஸ் நின்றபொழுது எதிரே ஓர் பெரிய கோயில் வளாகமும்,அதனை ஒட்டிய உயர்ந்த தேர்முட்டியும் ,ராஜகோபுரமும் , வானைமுட்டி நின்றன. அந்த ராஜகோபுரத்தை ஒட்டி ஓர் ஆலமரம் விழுதுகளால் அகலப் பரப்பி நின்று குளிர்சியாக நின்றது . அதன் கீழ் பக்தர்களின் பொங்கல் பானைகள் அணிவகுத்து நின்று பொங்கிப் பிரவாகிக்கத் தயாராக இருந்தன . அவைகளின் பின்னே ஒரு சிறு கூட்டம் பசியுடன் காத்திருந்தது . அந்த மக்கள் கூட்டதைக் கண்டபொழுது என்மனம் அழுதது . அதில் பக்தகோடிகள் பஸ்சில் ஏறினார்கள் . என்னால் அது எந்த இடம் என்று மட்டுக்கட்ட முடியவில்லை . ஆவல் மேலிட எனது தகவல் களஞ்சியத்தை தட்டி எழுப்பினேன் . எனது தோளில் படுத்து இருந்தவாறே , என்ன எனபது போலப் பார்த்தா .

" இது எந்த இடம் இதால நாங்கள் வரேக்கை வரேலையே ".

கையை எடுத்துக் கும்பிட்டவாறே ,

"இது தான் சுட்டிபுரம் கண்ணைகை அம்மன் கோயில்.இது எங்கடை குடும்பக் கோயில் எங்கடை பாட்டா எங்களை சின்னனிலை கூட்டியருவர் . ஒவ்வருவரிசமும் இங்கை பொங்க வருவம் .எனக்குப் பாட்டா தும்பு முட்டாசும் ,தோடம்பழ இனிப்பும், வாங்கித்தருவர் என்ன ரேஸ்ற் அப்பா சாய்......... நாங்கள் இப்ப வறணீக்கால சுத்துப்பாதைல போறம்."

தகவல்களஞ்சியமும் தனது பங்கிற்கு தொடங்கிவிட்டா என்று உள்ளுக்குள் நான் சிரித்ததின் விளைவு , எனது உதட்டில் பளீரென ஓர் குறுநகை ஒளிர்விட்டது . ஆனால் , எனக்கு இங்கு நடந்த சீர்காழியின் இன்னிசைக் கச்சேரி தான் ஞாபகம் வந்தது . அப்போது சீர்காழியின் இன்னிசைக் கச்சேரியை ஒலியிழை நாடாவில் தான் கேட்டிருக்கின்றேன் . அந்தக் கச்சேரியும் , கே பி சுந்தராம்பாளின் , இன்னிசைக் கச்சேரிக்குமே அதிக அளவு சனம் தோட்டம் துரவெல்லாம் பரந்து விரிந்து இரவிரவாக கண்முழித்து பார்த்து ரசித்தார்கள் . அப்படிப்பட்ட எங்கள் சனத்திற்கு இந்தியா செய்த துரோகத்தனத்தை நினைக்க என்மனம் உலைகளமாகியது .

பஸ் கொடிகாமம் பஸ்ராண்டில் தன்னை நிலை நிறுத்தியது .கொடிகாமத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டறைவர் தேத்தண்ணி குடிக்கப்போய்விட்டார் . அருகே இருந்த சந்தை காய்கறி வாங்க வந்தவர்களால் திமிலோகப்பட்டது . பலவழிகளாலும் வந்த வானொலி சத்தங்கள் காதைப் பிளந்தன . எனக்குத் தலை இடிக்கத் தொடங்கியது . சந்தைக்கு அருகே தட்டிவான் ஒன்று நின்று கொண்டிருந்தது . அதன் தட்டியில் வாழைக்குலைகளும் , ஒடியல் , புழுக்கொடியல் , பினாட்டுக் கடகங்களும் , ஆரோகணித்து இருந்தன . அந்த தட்டி வானில் கொஞ்ச அப்புமாரும் , ஆச்சிமாருமே இருந்தார்கள் . நான் அதில் இளசுகளை காணவில்லை .சிலவேளைகளில் , தட்டிவானில் போவது கௌவுரவக் குறைச்சலாக அவர்கள் நினைத்தார்களோ தெரியாது . இரண்டு ஆச்சிமார்கள் தங்கள் கொட்டப் பெட்டியில் இருந்து காசை எடுத்து தட்டிவான் பெடியனிடம் ரிக்கற் வாங்கிக் கொண்டிருந்தார்கள் .அவர்களிடம் நகரத்து வாசனைகளைக் காணமுடியவில்லை . கிராமத்தின் மண்வாசம் அவர்களிடம் அப்படியே ஒட்டியிருந்தது . அவர்களது வாஞ்சையான வெகுளியான பேச்சுக்கள் எனது மனதைக் கொள்ளை கொண்டன . உதட்டிலே சிரிப்பையும் அதன் பின்னால் கொடும் விசத்தையும் கொண்ட மக்களிடையே பழகிய எனக்கு , உண்மையில் அந்த சாம்பல் மண் மக்கள் வேற்றுக்கிரக வாசிகளாகவே எனக்குத் தெரிந்தார்கள் . எமது பஸ் சாரதி தேத்தண்ணியைக் குடித்து விட்டு வந்து தனது இருக்கையில் இருந்து நெட்டி முறித்தர் . நடத்துனர் வந்து விசில் அடிக்க தனது இலக்கை நோக்கி பஸ் மூசியது . சாவகச்சேரியில் போகும்பொழுது புகையிரதப்பாதையும் கூட வந்து என்னிடம் நலம் விசாரித்தது . ஒன்றின் பின் ஒன்றாக மனது முட்டிய வலியுடன் எனது மண்ணை இழந்து கொண்டிருந்தேன் .

பஸ் இப்பொழுது முகமாலை படைத்தளத்தை நெருங்குவதற்கு அறிகுறியாகத் தனது வேகத்தைக் குறைத்து ஊர்ந்தது . எனக்கு முகம் இறுகி வெறுப்பு மண்டியது . பஸ்சினுள் வந்த சிங்கபாகுக்கள் படைத்தளத்தில் இறங்கப் , புதியவர்கள் ஏறிக்கொண்டார் கள் ஆனையிறவுப் படைத்தளத்திற்குச் செல்ல . பஸ் மீண்டும் தனது குணத்தைக் காட்டியது . நேரம் காலை 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்து . சூரியன் செம்ஞ்சள் பூசி நிலம் நன்றாக வெளுத்து இருந்தது . தூரத்தே ஆனையிறவுப் பாலத்தின் தொடக்கத்தில் மந்திகள் வழமை போல் காவல் கோபுரத்திலும் பாதுகாப்பு அணிலும் குந்திக் கொண்டிருந்தன . பாலத்தின் இருபக்கமும் நாரைகள் தங்கள் வேலையில் கண்ணுங் கருத்துமாக இருந்தன . கோடையின் கடுமையால் நீர் வற்றி அங்காங்கே திட்டாக நின்றது . வெள்ளை நிறத்தில் எமது உப்பு சூரிய ஒளியில் மின்னியது . அதன் பின்னால் உள்ள குருதி தோய்ந்த சரித்திரம் பலருக்கு வேப்பங்காயாக இருப்பது வேடிக்கையாக இருந்தது . பலகளங்களை குறைந்த வளங்களுடன் அகலக்கால் பரப்பி சூறாவளியாக வலம் வந்த வேங்கைகளின் அனல்மூச்சு என் நெஞ்சினுள்ப் பாரமாக இறங்கியது.ஆனையிறவு உப்புவெளியின் சேற்று மணம் மூக்கை துளைத்தது.சூரிய வெளிச்சத்தால் எஞ்சியிருந்த தண்ணி தங்கத்தாம்பாளமாகத் தகதகத்தது . பஸ் வேகத்தை கூட்டிப் பரந்தனை நோக்கி விரைந்தது . சிறிது நேரத்தில் சாப்பிட்டிற்கு முன்பு இறங்கிய இடத்தில் தன்னை நிலைப்படுத்தியது . நான் பம் பண்ண கீழே இறங்கினேன் . ஏனோ தெரியவில்லை இன்று பம்பிங்ஸ்ரேசன் துப்பரவாக இருந்தது . நான் எனது அலுவலை முடித்து விட்டு கைகால் கழுவினேன். காலில் இருந்த புளுதி வெளியேறி கழிவு நீர் ஓடையில் கலந்தது . நான் முகம் கைகால் கழுவியதால் புத்துணர்வு பெற்றேன் . நான் பஸ்சினுள் நுளைந்தபொழுது பஸ் வெறுமையாக இருந்தது . மனைவி தனது தங்கைச்சி செய்து குடுத்திருந்த உப்புமா பார்சலை அவிட்டா . அது வாழை இலையில் சுற்றி இருந்ததால் அதன் வாசம் பஸ் எங்கும் பரவியது . அன்பானசமையலால் வந்த உப்புமாவும் சம்பலும் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது . மனைவியிடம் தண்ணிப்போத்தலை வாங்கிக் குடித்தேன் . எனக்கு உறைப்பு என்று காட்டுவதற்காக நான் நடிப்பது அவாவிற்குத் தெரிந்திருந்தாலும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா . நான் சாப்பிட்டு முடிந்தவுடன் சிகரட் பெட்டியை எடுத்துக்கொண்டு , நான் முன்பு தேத்தண்ணி கடித்த கடையை நோக்கி நடையைக் கட்டினேன்.அங்கு காலை வேளையாகையால் கடை பரபரப்பாக இருந்தது . என்னைக் கண்ட அந்த அண்ணை ,

"வாங்கோ தம்பி நானும் உங்களை பாத்துக் கனகாலம்".

என்று வெள்ளைச் சிரிப்புடன் என்னை வரவேற்றார்.

"நீங்கள் எப்படியண்ணை இப்ப இருக்கிறியள் ?"

என்றேன்.

"ஏதோ இருக்கிறன் தம்பி . மனிசிக்காறி இப்ப கொஞ்சம் சுகமாகி கொண்டு வாறா தம்பி ".

என்று முகத்தில் உற்சாகம் பொங்கிப் பிராவிகிக்கச் சொன்னார் .

"சந்தோசம் அண்ணை எனக்கு ஒரு தேத்தண்ணி தாங்கோ".

நான் தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு கடைவாசலுக்கு வந்தேன்.சுடுகின்ற தேத்தண்ணியை மெதுவாக உறுஞ்சியபடியே , எனது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது ,நான் முன்பு சந்தித்த அக்கா கண்ணில் எத்துப்படுகின்றாவா என்று . ஏனோ எனது மனம் அவாவையே சுற்றி வட்டமிட்டது . கடவுளே அந்த அக்காவை எனக்குக் காட்டு என்று உள்ளர மனம் வேண்டியது . எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை . அந்த அக்கா தனது மகனுடன் கையில் கூடையுடன் பக்கத்துக் கடையில் இருந்து வந்து கொண்டிருந்தா . என்மனம் மகழ்சியால்த் துள்ளியது . நான் அவாவைக் கூப்பிட்டேன் . நின்று என்னை உற்றுப்பார்த்த அவா , என்னிடம் ஓடி வராத குறையாக என்னிடம் வந்த அவா ,

" தம்பி எப்பிடி இருக்கிறியள் ? என்ர கடவுளே என்னால நம்பேலாமல் கிடக்கு ".

நான் வாயில் ஒரு புன்னகையை தவளவிட்டேன் . ஏனோ தெரியவில்லை கையில் புகைந்த சிகரட் என்னையறியாமல் பின்னால் போனது .

"அக்கா உங்களோட ஒரு விசையம் கதைக்க வேணும்".

"என்ன தம்பி "?

"உங்களுக்கு நிவாரண நிதி வந்திட்டுதே"?

"ஓம் தம்பி , உங்களை கண்டாப் பிறகு வந்துது .இவர் இப்ப பள்ளிக்கூடம் போறார் . ஒருநேரச்சாப்பாடு தன்னும் சாப்பிடிறம்".

என்று சிரித்தவாறே வெள்ளேந்தியாக எனக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தா அந்த அக்கா . எனது கை தன்னிச்சையாக மாற்றாமல் வைத்திருந்த நூறு யூரோக்களைப் பொக்கற்றினுள் சரிபார்த்தது .

"அக்கா நாங்கள் கொழும்புக்கு போறம் . எங்களிட்டை பெரிய காசு இல்லை . இதை வைச்சு உங்கடை மகனை படிக்க வையங்கோ".

என்று தயாராக வத்திருந்த யூறோவைக் கொடுத்தேன் .

"என்ன விளையாடுறியளே தம்பி ? எங்கை உங்கடை மனிசி ? நான் பாக்கவேணும் ".

என்று சூடாக அந்த அக்கா என்னிடம் கேட்டா . என்னடா இது வில்லண்டத்தை விலைக்கு வாங்கீட்டமோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே , எனது மனவியிடம் அந்த அக்காவைக் கூட்டிக் கொண்டு போனேன் . என்மனைவி செய்த சமாதானத்தால் ஒருவாறு சகஜநிலைக்குத் திரும்பிய அவா ,

"சரி தம்பி இவ்வளவு சொல்லுறியள் , தாங்கோ .ஆனா , உங்களுக்கு திருப்பி தருவன் ."

"உங்கடை பேர் என்ன தம்பி "?

நான் எனது பேரைச் சொன்னேன் .அவா எனது மனைவியைப் பாத்து ,

"உங்கடை மனுசன் பேருக்கேத்த ஆள் தான் "

என்றா,சிரித்தவாறே .

நான் அவாவிடம் விடைபெற்றுக் கொண்டு பறப்படத்தயாரான பஸ்சினுள் ஏறினேன் . நேரம் 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . ஊழித்தாண்டவமாடிய அந்தக் கந்கபூமிகள் என் அழுகையினூடாக விடைபெற்றுக் கொண்டிருந்தன . பஸ் கிளிநொச்சி , மாங்குளம் ,என்று எகிறிப் பாய்ந்து ஓமந்தை சோதனைச் சாவடியில் தன்னை மட்டுநிறுத்தியது .







November 13, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...