Skip to main content

குட்டி பாபர்.


                                                               


1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறுவயதுக் குளப்படியும் கற்பனைகளுமே அதிகம்.தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு படுத்துக் கொண்டான் . அறைக்குள் அக்கா தும்புக்கட்டையால் கூட்டும் சத்தம் மெதுவாகக் கேட்டது . இவா வந்துட்டா இனிக் கஸ்ரம் தான் என எண்ணியவாறே கள்ளக் குணத்துடன் நித்திரை மாதிரி நடித்தான் வர்ணன் . அக்கா சொல்லி வைத்தால் போல டேய் வர்ணன் எழும்படா நான் கட்டில் விரிக்கவேணும் எண்டு எழுப்பினா.வர்ணன் முறுகிக் கொண்டே படுத்திருந்தான் . அக்கா அம்மாவைக் கூப்படும் சத்தம் வடிவாகவே கேட்டது . வர்ணனுக்கு . அம்மா எது சொன்னாலும் உடனடியாகவே வர்ணன் செய்வான் ஏனேனில் அம்மாவின் கதை அப்படி . அம்மா பால் தேத்தண்ணியுன் வந்து ராசா வர்ணன் என்ரை குட்டான் எல்லே எழும்படி . இண்டைக்கு பிள்ளைக்கு தலைமயிர் வெட்ட குட்டி பாபர் எல்லோ வாறார் . எழும்புங்கோ குஞ்சு . வர்ணன் படக்கன்று எழுந்து தேத்தண்ணியை வாங்கியபடியே எனக்கு மயிர் வெட்டவேண்டாம் அம்மா என்று அழத்தொடங்கினான் . அம்மா வர்ணனின் தலையைத் தடவியவாறே ஏன் குட்டான் அழுவான் . இங்கை பாரடி என்ரை பிள்ளையின்ரை தலை , மயிராலை காடு பத்திப் போய் கிடக்கு . பேந்து பிள்ளைக்கு சிரங்கல்லே பிடிச்சுப்போடும் என்று வர்ணனைச் சமாதானப் படுத்தினா . வர்ணன் அழுகையை நிப்பாட்டுற மாதிரி தெரியவில்லை . அக்கா பொறுமை இழந்து வர்ணனது குண்டியில் இரண்டு அடி வைத்து இழுத்துக் கொண்டு போய் கிணத்தடியில் உமிக்கரியால் வர்ணனுக்குப் பல்லு மினுக்கப்பண்ணினா . அவனது அழுகை மட்டும் கூடியதே ஒழியக் குறையவில்லை . தூரத்தில் குட்டி பாபர் சைக்கிளில் வருவது வர்ணனுக்குத் தெரிந்தது . அழுது கொண்டிருந்த வர்ணனைக் கண்ட குட்டி பாபர் சைக்களை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து என்ரை ராசா மோனை ஏன் அழுவான் இங்கைபாருங்கோ பிள்ளைக்கு என்ன கொண்டு வந்தனான் எண்டு சொல்லியவாறே வர்ணன் கைநிறைய தோடம்பழ இனிப்புகளைத் திணித்தார் . தோடம்பழ இனிப்பைக் கண்ட வர்ணனின் அழுகை மெதுவாக நாறல் மீனைக் கண்ட பூனை போலக்குறைய தொடங்கியது . மாமரத்துக்குக் கீழே குட்டி பாபருக்குப் பக்கத்தில் அக்கா கதிரை ஒன்றைக் கொண்டு வந்து வைத்தா . குட்டி பாபர் பக்கத்தில் நின்ற முள்முருங்கையில் தோல்வாரைக் கட்டிவிட்டு கத்தியை சரக்சரக் என்று தீட்டத் தொடங்கினார் . சூரிய ஒளியில் கத்தி பளீரென்று மினுங்கி வர்ணனைப் பயமுறுத்தியது . குட்டி பாபர் சிரிச்சு சிரிச்சு வர்ணனுடன் கதைத்தவாறே வர்ணனைத் தூக்கிக் கதிரையில் வைத்தார் . வர்ணனது தலைக்கு குட்டிபாபர் தண்ணியைத் தெளித்து ஆதரவாக அவனது தலையைத் தடவி விட்டவாறே கதையைத் தொடர்ந்தார் . அவனுக்குப் பிடித்த மாயாவி , ரின்ரின் கதையெல்லாம் குட்டி பாபரின் வாயிலிருந்து அபிநயத்துடன் வந்தன . வர்ணன் அழுகையை மறந்து கனநேரமாகி விட்டிருந்தது . அவர் வாய் இடைவிடாது ஏதாவது ஒரு கதையை இயற்றி இயற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது . வர்ணன் அவரது கதைகளில் சொக்கிப்போய் ஆடாது அசையாது இருந்தான் . சிறுபிள்ளைகளுக்கு அவர்கள் வழியில்போய் மயிர்வெட்டும் வித்தை தெரிந்தவர் குட்டிபாபர் . வர்ணனது தலையைத் தண்ணியால் தடவிய பின்பு பல்லுக் கத்திரிக்கோலால் வேகமாக வெட்டத் தொடங்கினார் .சிறிது நேர்தில் வர்ணனது தலை அழகாகவும் நேர்த்தியாகவும் வந்தது . நெற்றியில் ஒரு சிறிய மயிரைக் கொத்தாக விட்டு சுறுட்டியிருந்தார் குட்டிபாபர் . இறுதியாகத் தீட்டிய சவரக்கத்தியை மீண்டும் தீட்டியவாறே வர்ணனின் தலையைக் குனிய வைத்து வெட்டிய தலையை சீர் செய்யத்தொடங்கினர் குட்டிபாபர் . ஐயா தம்பி தலையை ஆட்டக் கூடாது என்ன , கொஞ்சநேரம் பொறுங்கோடி . வர்ணனுக்கு பிடரியில் கத்தி பட ஒரே கூச்சமாக்க் கூசியது . ஐய்யோ கூசுது குட்டி பாபர் இது வேண்டாம் . கொஞ்சம் பொறுங்கோ ராசா வர்ணனின் கூச்சத்தை உணர்ந்து விரைவாகச் சீர் செய்தார் குட்டி பாபர் . அவனது கையில் மீண்டும் தோடம்பழ இனிப்பை வைத்துவிட்டு அவனது தலையில் அம்மா காச்சிய கருவேப்பலை எண்ணையை கொஞ்சம் வைத்து சூடு பறக்கத் தேய்த்து வர்ணனின் தலையை மசாஜ் செய்யத்தொடங்கினார் குட்டிபாபர் . குட்டிபாபரின் மசாஜ்சுக்காகவே அவரின் சலூனில் சனம் அலைமோதும் . பெரியவர்களுக்கு ஒருமாதிரியும் , சின்னப் பிள்ளைகளுக்கு ஒருமாதிரியும் மசாஜ் செய்வதில் குட்டிபாபர் விண்ணன் . தலையை மசாஜ் செய்து இறுதியில் தலையை இரண்டு பக்கமும் ஆட்டி கழுத்து நெட்டி முறிக்கும் பொழுது வாடிக்கையாளர்கள் சொக்கிப் போய்விடுவார்கள் . இது குட்டிபாபரின் தொழில் ரகசியம் . நிலத்தில் வர்ணனைச் சுற்றி தலைமயிர்கள் கொட்டிக்கிடந்தன . குட்டிபாபர் வைச்ச எண்ணையால் வர்ணனுக்கு கண்கள் எரிந்தன . அக்கா வர்ணனை கிணத்தடிக்கு தோய வாக்கக் கூட்டிக் கொண்டு போனா . குட்டிபாபர் தனது சீப்புகள் கத்திரிக்கோல்களைத் துப்பரவு செய்து தனது பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார் .

அம்மா நல்ல தடிச்ச பாலில் போட்ட தேத்தண்ணியைக் கொண்டு வந்து குட்டிபாபரிடம் கொடுத்தவாறே , சின்ராசா எவ்வளவு தம்பிக்குக் காசு ? ஐய்யோ........ வேண்டாம் அம்மா தம்பி நான் பாக்க வளர்றவர் . அவற்ரை முப்பத்தொண்டுக்கே நான் தான் மொட்டை அடிச்சனான் . அவருக்கு காசு வங்கமாட்டன் அம்மா . நீ சரிவரமாட்டாய் நில்லு வாறன் என்று உள்ளே போய் கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் , அதோடை நூறு ரூபாயும் கொண்டு வந்து குட்டிபாபரிடம் குடுத்தா . இதுகளை உன்ரை மனிசீட்டை குடு சின்ராசு . அம்மா ஒருபோதும் குட்டிபாபரை வித்தியாசப்படுத்திப் பார்பதில்லை . வீட்டில் ஒருவராகவே பாப்பா . மிச்சம் சந்தோசம் அம்மா , நீங்கள் உங்கடை அம்மா மாதிரியே இருக்கிறியள் என்று கண்கலங்கியவாறே வாங்கிக் கொண்டார் . உண்மையில் வீட்டில அரிசி இல்லாமல் குட்டிபாபர் சாப்பிடாதது வர்ணனின் அம்மாக்குத் தெரிய நியாயமில்லைத்தான் . வர்ணன் நன்றாகத் தோஞ்சு ரல்க்கம் பவுடரும் அப்பிக்கொண்டு வெக்கத்துடன் அம்மாவிடம் சாப்பிட ஓடிவந்தான்.

000000000000000000000000000000

1979 வர்ணனுக்கு பதினைஞ்சு வயசாகி முறுக்கிக் கொண்டு திரிந்தான் . அவன் அடிக்கடி கண்ணாடியில் அவனைப் பாத்து அரும்பு மீசையையும் , நெற்ரியில் குட்டிபாபர் வைத்த சுருள்முடியைப் பாத்து சந்தோசப்பட்டுக் கொண்டான் . அவன் வயசு அப்படி.... அவனது தலையில் இப்பொழுது கொஞ்சம் கூடுதலாகவே மயிர் வளர்ந்திருந்தது . இன்று எப்படியாவது குட்டி பாபரிடம் போகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் . நல்ல உடுப்புகளாகத் தெரிவு செய்து போட்டுக் கொண்டு தனது றலி சைக்கிளை எடுக்கும் பொழது அம்மாவின் குரல் தடை செயதது.

எங்கையப்பு போறிங்கள் ?

"நான் குட்டிப்பாபரிட்டை போட்டு வாறன் அம்மா.ஏன் அப்பு போன மாசம் தானே வெட்டினிங்கள்".

"இல்லை அம்மா மயிர் வளந்துட்டுது உங்களுக்குத் தெரியாது."

சரி இந்தாகோ காசு, வரேக்கை அம்மாக்கு வெத்திலையும் பொயிலையும் வாங்கியாங்கோ."

என்னம்மா இதை விடமாட்டியளோ ? என்ரை கூட்டுகளல்லாம் நக்கல் எல்லே அடக்கினம்."

"அவையை விடுங்கோ நீங்கள் வாங்கியாங்கோ."

என்று முடிவாகவே அம்மா சொன்னா.அரைமனத்துடன் காசை வாங்கிக் கொண்டான் வர்ணன் . அனது றலி சைக்கிள் கோப்பாய் சந்தியை நோக்கிப் பறந்தது . இடையில் குண்டு றாகினி வீட்டடியில் சைக்கிளால் எம்பி எட்டிப் பார்த்தான் இருக்கின்றாளா என்று.அவளின் அசுமாத்தத்தைக் காணவில்லை . சிறிது நேரத்தில் குட்டிபாபரின் சலூனை வர்ணனின் சைக்கிள் வந்தடைந்தது அவன் உள்ளே எட்டிப் பாரத்தான் அவரது அண்ணைதான் நின்றிருந்தார்.வர்ணன் குட்டி பாபரைக் கேட்டன் அவர் மணியங்கடையில் தேத்தண்ணி குடிக்கப் போய்விட்டதாகப் பதில் வந்தது.

"சரி நான் பேந்து வாறன்" என்றான்.

"ஏன் எங்களிட்டை மயிர் வெட்ட மாட்டியளோ தம்பி"?

"இல்லை நான் குட்டி பாபரிட்டைத்தான் வெட்டுவன்".

வர்ணன் அம்மாவிற்கு வெத்திலை வாங்க கடைக்குப் போனான்.அவன் திரும்பிய பொழுது குட்டிபாபர் சலூனுக்கு வந்துவிட்டிருந்தார்.

"எனக்கு மயிர் வெட்டவேணும் குட்டிபாபர்".

"எப்பிடி தம்பி வெட்டிறது?"

"எனக்கு ஷக்கி கட் வெட்டி விடுங்கோ".

குண்டு றாகிணி நேற்று தன்ரை நண்பிக்கு சொல்லிக் கொண்டு வந்தவள் தனக்கு இந்த வெட்டு ஸ்ரைல் தான் பிடிக்கும் எண்டு.எப்பிடியும் இண்டைக்கு ஆளுக்கு முன்னாலை போய் லெவல் காட்டவேணும் என்றுதான் அவன் குட்டிபாபரிடம் வந்திருக்கின்றான் .இதெல்லாம் அப்பாவி அம்மாவுக்குத் தெரியாது.குட்டி பாபர் வளக்கம் போலவே ஊர்புதினம் எல்லாம் அவனுக்கு விளப்பமாய் சொல்லி ஷக்கி கட் வெட்டி விட்டார்.அவன் குண்டு றாகினி வீட்டைக் கடக்கும் பொழுது சொல்லி வைத்தால் போல் வீட்டு வாசலில் ஆட்டுக்கு பிலா இலை ஊசியால் குத்திக் கொண்டிருந்தாள்.அவன் சைக்கிளின் வேகத்தை மெதுவாக்கி அவள் வீட்டு வாசலில் நிப்பாட்டினான்.இன்று பார்த்து குண்டு றாகினி அவனுக்கு வடிவாகத் தெரிந்தாள்.அவன் வேணுமென்று,

"உங்கடை லொஜிக் நோட்ஸ்ஐ தாறியளே?எழுதிப்போட்டுத் தாறன்". என்றான். அவளும் கொண்டு வந்து வெட்கத்துடன் கொடுத்தாள் . ஒருவகையில் அந்தவயதில் குண்டுறாகினியை லுக்குவதற்கு குட்டிபாபரும் விதம் விதமாகமயிர் வெட்டி அவனுக்கு உதவி செய்தார்.இதுவும் அவனிற்கு குட்டிபாபர் என்றால் உயிர். 

00000000000000000000000000000000

2011 வர்ணன் பல வருடங்கள் வெளிநாட்டில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்டு நேற்று இரவு தான் கோப்பாய்க்குத் திரும்பியிருந்தான் . இதமான இளம்வயதுக் காலைக் காட்சிகள் அவனை நித்திரையால் எழுப்பின . இந்தமுறை அக்காவிற்குப் பதிலாகக் கடைசித் தங்கைச்சி வீட்டு ஆட்ச்சிப் பொறுப்பை எடுத்திருந்தாள் . அவன் எழுந்து விரைவாகக் குளித்து வெளிக்கிட்டுத் தனது றலி சைக்கிளைத் தேடினான்.காலத்தின் கோலத்தால் அது கறள்கட்டிப் போய் பின் விறாந்தையில் கிடந்தது.அனுக்கு பெரிய அந்தரமாகிப் போய் விட்டது . தங்கைச்சயைப் பேசியவாறு அவளது சைக்கிளை எடுத்துக் கொண்டு கூட்டுகளைச் சந்திக்க ஆவலாக கோப்பாய் சந்திக்கு விரைந்தான்.அங்கு அவனுக்குப் பல அதிர்சிகள் வரிசை கட்டி நின்றன.சந்தி ஆலமரம் செல்விழுந்த பள்ளத்துடன் குழியாகக் கிடந்தது.வர்ணன் ஆவலுடன் கைதடிப் பக்கம் சைக்கிளைத் திருப்பி குட்டிபாபரின் சலூனைத் தேடினான். செல்லின் அகோரத் தாக்குதலால் அங்கு இடிந்த கட்டிடமும் மண்மேடுமே கிடந்தன. குட்டிபாபருக்கு என்ன நடந்தது என யோசித்தவாறே மணியம் ரீக்கடையினில் உள்ளட்டான்.அங்கு மணியத்தார் மிகவும் வயது போய் ஒரு வாங்கில் இருந்தார்.அவரது மகன் தான் கடையை நடத்தனார். போண்டாவையும் ரீயையும் வாங்கியவாறே குட்டிபாபரைப் பற்றிக் கேட்டான்.உமக்குத் தெரிய ஞாயமில்லைத்தான். இந்தியன் ஆமி அடிச்ச செல்லுகளில இந்த ஆலமரம் போச்சுது, என்ரை கடையும் சேதாரம். அங்கால குட்டி பாபர் சலூனிலை வேலை செய்யேக்கை செல்லுகள் விழுந்து கடை தரைமட்டம்.கடைசீல அவற்றை உடம்புகூட எடுக்கேலாமல் போச்சுது.வர்ணனுக்கு தலை சுற்றியது. குட்டிபாபர் உயிரோடை இல்லையா? எதற்கும் அழாத அவன் முதன்முறையாக கண்கள் குளமாகச் சைக்கிளை வீடு நோக்கித் திருப்பினான்.





April 11, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...