ஆசை
ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை. ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை. கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம், வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும். தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்.
ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள். காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது. அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.
நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா? அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம் அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும். சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும். இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள். சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.
0000000000000000000000000000&
அடக்குதல்
நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும். அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது. சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான். ஒருவன் பேராசை கொள்கிறான். இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள். மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும். இரண்டுமே எலிப்பொறி போலத்தான். மிக்க ஈடுபாடும் அடக்குதலும் இயந்திரத்தனமானது.
நீங்கள்பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது. அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது. மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும் ஈடுபட்டாலும், முடிவு ஒன்றுதான்.
முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள். பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள். எதையும் தவிர்க்காதீர்கள். அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள். அன்புடன் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள். அப்போதுதான் ஒரு நாள் அவற்றைக் கடந்து செல்ல முடியும்.
0000000000000000000000000000
பற்று
இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சாப்பாட்டில் ஆர்வம் உண்டு அடிக்கடி சமையல் அறைக்கு சென்று மனைவி சாரதாதேவியாரிடம் என்ன சமையல் என்று விசாரிப்பார்.ஒரு நாள் அன்னையார் அவரிடம்,''நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்?யார் யாரெல்லாமோ உங்களைப் பார்க்க வருகிறார்கள்.நீங்கள் அடிக்கடி சமையல் அறைக்கு வருவதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?''என்று கேட்டார்.பரமஹம்சர் சிரித்துக் கொண்டே சொன்னார், ''நான் எல்லாப் பற்றுக்களையும் எப்போதோ உதறி விட்டேன்.இருந்தாலும் என்னைப் பூமியுடன் இணைக்க ஒரு பந்தம் தேவை.எல்லாக் கயிற்றையும் அவிழ்த்து விட்டால் படகு ஆற்றோடு போய்விடும்.அதைக் கரையுடன் கட்டி வைக்க ஒரு கயிறு தேவை.என் கயிறு இதுதான் என் பணி முடிந்தவுடன் இந்தக் கயிற்றையும் அவிழ்த்து விடுவேன்.என்றைக்கு நான் சமையல் அறைக்கு வந்து இப்படி விசாரிக்கவில்லையோ அன்றிலிருந்து மூன்றாவது நாள் நான் இந்த உலகை விட்டுப் போய் விடுவேன் என்று பொருள், ''என்றார். அதேபோல் ஒருநாள் அவர் சமையல் அறைக்கு வராததைக் கண்டு அன்னையார் வந்து பார்த்தபோது அவர் கண் மூடிப் படுத்திருந்தார்.அடுத்த மூன்றாம் நாள் அவர் உயிர் பிரிந்தது.
000000000000000000000000000000
நஷ்டம் என்ன?
சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் . பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள். அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்.
000000000000000000000000000000
தன்னம்பிக்கை
ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து,''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.ஊரின் பெரும் பணக்காரர்,''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.படைத்தலைவர் ஒருவர்,''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன்.ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.நிலச்சுவான்தார் எழுந்து,''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப்போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை.எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது.''என்றார்.அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்,''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.''அது எப்படி உன்னால் முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.அவள் பணிவுடன் சொன்னாள்,''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன்.அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள் தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார். மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.
0000000000000000000000000
காரிருள்
குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார்,''இரவு முடிந்து பொழுது புலர்கிறது.அந்த நேரத்தில் எந்த நொடியில் பொழுது புலர்ந்து விட்டது என்பதை அறிவாய்?'' ஒரு சீடன் சொன்னான்,''தொலைவில் நிற்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து அது குதிரையா,கழுதையா என்று அறிய முடியும்போது விடிந்து விட்டது என்று பொருள்.''குரு தவறான பதில் என்றார்.இன்னொரு சீடன் சொன்னான், ''இங்கிருந்தே தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தை ஆல மரமா அரச மரமா என்று சொல்ல முடியும் என்றால் விடிந்து விட்டது என்று அர்த்தம்.''அதற்கும் குரு மறுப்பாகத் தலை அசைத்தார்.பதில் சொல்லத் தெரியாத சீடர்கள் சரியான விடையைக் கூறும்படி வேண்டினர்.குரு சொன்னார்,''எந்த ஒரு மனிதனைக் கண்டாலும் இவன் எனது சகோதரன் என்றும்,எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும்,எப்போது நீ அறிகிறாயோ, அப்போது தான் உண்மையாகப் பொழுது புலர்ந்து உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள்.அதுவரை உச்சி வெயில் கூடக் காரிருளே.''
000000000000000000000000000000
வாத்தும் குதிரையும்.
வாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன்.உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும்.எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன.அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும்.என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும்.என்னிடம் ஒரு பறவை,ஒரு மீன்,ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன.''
குதிரை சொன்னது,''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை.உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது.சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும்.உன்னால் நீரில் நீந்த முடியும்.ஆனால் உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது.உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள்!என் அங்கங்கள் எவ்வளவு கன கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன!என்னுடைய வலிமையை நீ அறிவாயா?என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்?மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன்.அதில் எனக்கு மகிழ்ச்சியே!''
000000000000000000000000000000000000
பணத்தின் கவர்ச்சி.
ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ் காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம். அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன் மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.எதிர்காலத்தை விட்டுவிடு.அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.
000000000000000000000000000
வருங்காலம்
உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.
000000000000000000000
கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு 'பகிர்ந்து கொள்ளுதல்'என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.
0000000000000000000000
நம்பிக்கை
துறவி ஒருவர் தினமும் யாருக்காவது உணவு அளித்துவிட்டுத்தான் உணவு அருந்துவார்.ஒருநாள் யாருமே வரவில்லை.சற்று தூரம் நடந்து சென்று வந்தால், யாராவது தென்படுவார்கள் என்று கருதி நடந்தார்.அப்போது ஒருவர் எதிர்ப்படவே அவரை சாப்பிட அழைத்து வந்தார்.உணவு அருந்தும் முன் அவர் பிரார்த்தனையில் அமர்ந்தார்.வந்தவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர் ஏன் பிரார்த்தனை செய்யவில்லை என்று கேட்டபோது அவர் ,''நான் தீவிர நாத்திகன். எனக்கு இந்த மாதிரி மூடத்தனங்களில் நம்பிக்கை இல்லை,'' என்றார்.துறவிக்குக் கோபம் வந்துவிட்டது.''உனக்கு உணவு அளிக்க முடியாது.வெளியே போ'' என்றார்.வந்தவர் ,''நானாக ஒன்றும் உணவு கேட்டு வரவில்லை.நீங்களே அழைத்து வந்துவிட்டு இப்போது வெளியே போகச் சொல்கிறீர்கள்.ஆனால் உணவுக்காக என் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.''என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.துறவியும் உணவு உண்ணாது பாதி மயக்கத்தில் படுத்து உறங்கினார்.அப்போது கனவில் இறைவன் வந்தார்.அவர் ,''அவன் என் மீது நம்பிக்கை இல்லாதவன்.ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவனுக்கு நான் விடாது உணவு அளித்து வந்தேன்.ஒரே ஒரு நாள் உன்னிடம் அனுப்பியதில்,நீ அவனை பட்டினியாய் அனுப்பி விட்டாயே? இப்போது நான் அவனுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார். அலறி அடித்துக் கொண்டு எழுந்த துறவி வேகமாக சென்று அந்த நாத்திகனை சாப்பிட அழைத்தார்.திடீர் மாற்றத்திற்கு அவன் காரணம் கேட்டபோது துறவி சொன்னார்,''ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று சொல்லத் தைரியம் தேவையில்லை.ஆனால் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லத்தான் மிகுந்த மன உறுதியும் வைராக்கியமும் தேவை.எனவே நீங்கள் என்னை விட உயர்ந்தவர்.உங்களுக்கு உணவு அளிப்பது எனக்கு பெருமை தரும் செயலாகும்.''
00000000000000000000000000000
ஏடாகூடம்
புகழ்பெற்ற ஜென் குரு ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம்.அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான்.மிகத் திறமைசாலி.அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன.குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே!நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும்.சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப் பேசினார்.அப்போது குரு,''''அப்படியா,அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே!அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.குறை சொன்னவர்,புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம்.குரு இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே,அவனைப் பற்றி அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி அவரையே கேட்டனர்.
குரு சொன்னார்,''நான் அவனைப் புகழவும் இல்லை,இகழவும் இல்லை.எந்த மனிதனையும் எடை போட நாம் யார்?ஒருவனை நல்லவன் என்றோ,தீயவன் என்றோ கூற உங்களிடமோ,என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ,மறுப்பதோ என் வேலை அல்ல.அவன் நல்லவனும் இல்லை,கெட்டவனும் இல்லை.அவன் அவனாகவே இருக்கிறான்.அவன் அவனே!அவன் செயலை அவன் செய்கிறான்.உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்,''
00000000000000000000000000000
பயன்
ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்கியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது.
சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள்.
ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.
0000000000000000000000000
ஞானி அமைச்சர்
சீன தத்துவ ஞானி லா வோ த்சுவினால் கவரப்பட்ட அந்த நாட்டு மன்னன் அவரை அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் தனது நாடு சிறப்படையும் என்று கருதினான்.அருகில் இருந்த ஒரு அமைச்சர், ''மன்னா,ஞானிகளை வணங்கலாம்.அன்றாட வாழ்க்கையில் அவர்களை இணைத்துக் கொள்வது சரியாக வராது,''என்றார்.அதைப் பொருட்படுத்தாத மன்னன் ஞானியிடன் சென்று தலைமை அமைச்சர் பொறுப்பேற்குமாறு வேண்டினான்.ஞானி சொன்னார்,''ஆட்சி பற்றிய உனது கண்ணோட்டம் வேறு,எனது கருத்துக்கள் வேறு.அதனால் உன் முடிவு சரி வராது,'' என்றார். மன்னன் மீண்டும் வலியுறுத்தவே ஞானியும் தலைமை அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் நாளே ஒரு வழக்கு விசாரணைக்கு ஞானியிடம் வந்தது.திருடன் ஒருவன் அவ்வூரில் புகழ்பெற்ற ஒரு பணக்காரனின் வீட்டில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்தான்.விசாரணையில் திருடனும் தான் செய்த திருட்டை ஒப்புக்கொண்டான்.
ஞானி,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை ''என்று தீர்ப்பளித்தார்.மன்னர் உட்பட அனைவரும் இத்தீர்ப்பு கேட்டு திடுக்கிட்டனர்.தான் செய்த தவறு என்ன என்று பணக்காரன் கேட்டதற்கு,''அவன் வறுமை காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் என்ற பெயரில் பணத்தைக் குவித்து அவனைத் திருடும் படி நீ தூண்டினாய்..நியாயமாய் உனக்கு அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''என்றார் ஞானி.தண்டனை பெற்றவன் மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று எனக்கு ஏற்பட்ட நிலை,நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.உங்கள் கஜானாவில் உள்ள சொத்துக்கள் ஏழைகளிடம் சுரண்டப்பட்டது என்று கூறு உங்களையும் சிறையில் அடைக்கலாம்.''என்றான்.குழப்பம் அடைந்த மன்னன் ஞானியிடமிருந்த பதவியை பறித்தான்.
குற்றம் நடைபெறக் காரணமான சூழ்நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் தண்டனைகள் அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. மேலும் தந்திரமான குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலை தான் ஏற்படும்.
000000000000000000000000
என்ன செய்ய?
பிறர் ஒவ்வொருவரும்,'இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',நீ மட்டும் எப்படி நின்று விடுவது?போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா? அப்படித் தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்? பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது?வீடல்லவே!சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய்.உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்.அதனால் ஆகப் போவதென்ன?உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது. மற்றவர்களை நேசியுங்கள்;மதியுங்கள்.மற்றவர்களை விட மேலானவராகவோ,உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள்.மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
00000000000000000000000
இறந்தபிறகு...
சீடன் ஒருவன் தனது குரு கன்பூசியசிடம் ,''இறந்த பிறகு என்ன நடக்கும்?''என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப் போய் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப் பற்றி சிந்தனை செய்து கொள்ளலாம்.இப்போது அதைப் பற்றிக் கவலைப்படாதே.''என்றார்.இந்த மாதிரிதான் அநேகம் பேர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாமும் அப்போது சிந்தனை செய்து கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.யாராவது இறக்கும்போது மற்றவர்கள் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டு,''ஐயோ,மனிதர்களெல்லாம் கடைசியில் கல்லறையைத்தான் சந்திக்க வேண்டுமா?'' என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் தானா?''நான் பிறக்கும்போது நான் எந்தக் கவலையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான துன்பங்களை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே இருந்தேன்.ஏன்,அப்போது,'நான்' என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப் போல இறக்கும்போதும்,அதே உணர்வுடன் தான் இருப்பேன்,''என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் துன்பம் ஏது?
00000000000000000000000000000
யசோதரை
புத்தர் ஞானம் அடைந்தபின் பல ஊர்களுக்கும் சென்று வருகையில் ஒரு நாள் தனது சொந்த ஊரைக் கடந்து செல்ல வேண்டி வந்தது.நடு இரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்ததால் தன் மீது தனது மனைவி யசோதரை கோபமாய் இருப்பார் என்பதனை நினைவில் கொண்டு,தனது மனைவியை சந்திக்க சென்றார்.சந்தித்தபோது யசோதரை மிகுந்த கோபத்துடன்தான் இருந்தார்.அவர் புத்தரிடம் சொன்னார்,
''நீங்கள் இந்த உலகத்தைத் துறந்ததைப் பற்றி எனக்கு கோபம் இல்லை.அப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு இருப்பது தெரிந்திருந்தால் நான் அதற்குத் தடையாக இருந்திருக்க மாட்டேன்.ஆனால் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை.அதுதான் எனக்கு வருத்தம்.ஒன்றும் கூறாமல் நட்ட நடு ராத்திரியில் நீங்கள் பிரிந்து சென்றது எனக்கு எவ்வளவு வேதனை அளித்தது தெரியுமா?நான் வீர குலத்துப்பெண்.தனது கணவன் போருக்கு சென்றால்,அவரை மாலை அணிவித்து வழியனுப்பும் குலத்தை சேர்ந்தவள்.அவ்வாறு அனுப்பும்போது கூட கண்ணீர் விட்டால் தனது கணவரின் வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணக் கூடியவள்.நீங்கள் தைரியமாக உலகத்தைத் துறக்கப் போவதாக என்னிடம் கூறி சென்றிருந்தால் நான் பெருமை அடைந்திருப்பேன்.என்னுடைய பெருமையையும்.அமைதியையும் குலைத்து விட்டீர்கள்.நீங்கள் என்னை முழுமையாக நேசித்திருந்தால் நானும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பியிருப்பேன்.எனவே என் கோபம் உங்கள் துறவரத்துக்கல்ல,என்னிடம் சொல்லாமல் போனதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.''
புத்தர்,''நீ சொன்னது சரிதான்.நான் அதற்காக மன்னிப்புக் கேட்கவே இப்போது வந்துள்ளேன்.என்னை மன்னித்துவிடு.முழுமையான அன்பு என்றால் என்ன என்பதை இப்போது அறிந்து இங்கு வந்திருக்கிறேன்.இவ்வளவு தாமதமாக இங்கு வந்ததற்குக் காரணம் ,உன் கோபம் படிப்படியாகக் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.''
பின் யசோதரை தனது கணவராகிய புத்தரிடம் சிட்சை பெற்றுக் கொண்டார்.
000000000000000000000000000000
புரட்சி
சில எண்ணங்களும்,பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள்,சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.மக்கள்,எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள். கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும்போதுதான் உண்மையான புரட்சி ஏற்படும். இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல்,பொருளாதாரம்,மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி.
0000000000000000000000000000000000000
சமூகம்
தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.உங்களை எப்போதும் அடிமைத் தனத்திலும்,பேராசையிலும்,திருப்தி அற்ற நிலையிலும், போட்டியிடும் நிலையிலும்,அன்பற்றும்,எப்போதும் கோபத்துடனும், வெறுப்போடும், ,ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.உங்களுடைய அறிவுக் கூர்மை அழிக்கப் படுகின்றது.அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது.
நீங்கள் உங்களைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும்,அலுப்பாகவும்,இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?ஏன் இந்த மரங்களைப் போலப் புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்.முயற்சிக்கிறான் அதனால்தான் இவ்வளவு சோகம்,சோர்வு,துன்பம் எல்லாம்.
ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான் அடுத்தவன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.ஏன்,கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.அவன் இங்கே,இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. கடவுள்,ஆத்மா,சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.
00000000000000000000000000000000
தவமாய் தவமிருந்து....
முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும் மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது. எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.அந்தோ பரிதாபம்!அவரால் நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில் அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.
நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.
00000000000000000000000000000000
அழகும் கொடூரமும்
ஓவியர் ஒருவர்,உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும் ,ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார்.முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை.திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார்.கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார்.மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.பின்,கொடூர முகத்தையும் வரைந்து,இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார்.கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது.அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்!ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை.அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை.ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது.அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது.சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார்.வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.ஏன்?அவன் வேறு யாருமில்லை.அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ,அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.
0000000000000000000000000000000000
மனிதன் மட்டும் சிரிப்பதேன்?
உலகில் உள்ள உயிர் வாழ் இனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்கிறான்.எந்த விலங்கோ பறவையோ சிரிப்பதில்லை.அதே போல 'எனக்கு போரடிக்கிறது' என்று சொல்லக் கூடியதும் மனிதன் மட்டுமே.வேறு எந்த இனத்திற்கும் போரடிப்பது என்றால் என்னவென்று தெரியாது.எனவே இந்த இரண்டுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது .எனவே அவனால் சிந்திக்க முடிகிறது.அவன் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.இதனால் நாகரீகமும் அறிவு வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகளினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றிற்கிடையே இடைவெளி ஏற்படும்போது மனிதன் வெறுமையை உணர்கிறான்.அதன் பிரதிபலிப்புதான் போரடிப்பது. போரடிப்பதற்கு மருந்துதான் சிரிப்பு.இந்த சிரிப்பு மட்டும் இல்லையென்றால் மனிதனுக்கு எப்போதும் நோய்தான்.விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ இந்த சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை.அவை வாழ்வை அப்படியே எதிர் கொள்கின்றன.அதனால் அவற்றிற்கு சிரிப்பிற்கான அவசியம் இல்லை.ஆதிவாசிகள் மற்றும் பூர்வ குடி மக்களிடையே அதிகம் சிரிப்பு கிடையாது.அவர்கள் வசதிக் குறைவுடன் இருக்கலாம்.ஆனால் அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கிடையாது.அதனால் அவர்கள் எப்போதும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள்.உலகிலேயே அதி புத்திசாலிகள் என்று யூத இனத்தை சேர்ந்தவர்களை சொல்வார்கள். நோபல் பரிசு வாங்கியவர்களில் அதிகம் பேர் யூத இனத்தை சேர்ந்தவர்களே. அவர்களிடையே தான் நகைச்சுவை கதைகளும் துணுக்குகளும் அதிகம் .இருக்கின்றன.அவர்களுக்குத்தான் அதிகம் போரடிக்கவும் செய்யும்.
0000000000000000000000000000000000
சிரிக்கும் புத்தர்கள்
சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தார்கள்.அவர்கள் எங்கும் சேர்ந்தே செல்வார்கள்.ஒரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் மையப் பகுதியில் நின்று கொண்டு மூவரும் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பிப்பார்கள்.உடனே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து விடும்.சிறிது நேரத்தில் அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர்கள் எந்த விதமான புத்திமதிகளோ ஆலோசனைகளோ சொல்வது இல்லை.அது ஏன்?சிரிப்பைத்தவிர அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வந்த இடம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மக்கள் அவர்களை மிக நேசித்து 'சிரிக்கும் புத்தர்கள்' (LAUGHING BUDHDHAS)என்று அழைத்தார்கள்.ஒரு கிராமத்துக்கு சென்ற போது அவர்களில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இப்போது மீதி இரண்டு பேரும் கண்டிப்பாக அழுவார்கள் என்று எண்ணி மக்கள் சென்றபோது அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் அதிசயமாய் வாய் திறந்து,''அவன் மரணத்தில் எங்களை வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாங்கள் சிரிக்கிறோம்,''என்றார்.பின் இறந்த புத்தரை அப்படியே சிதைக்குக் கொண்டு போனார்கள்.பிணத்தைக் குளிப்பாட்டவில்லை.புதுத் துணிகள் மாற்றவில்லை.ஏன் என்று மக்கள் கேட்டதற்கு அந்த ஞானி சொன்னார்,''அவன் இறக்கும் முன்னே, தான் தூய்மையாகவே இருப்பதாகவும் அதனால் இறந்தபின் தன்னை எந்த மாற்றமும் செய்யாது அப்படியே சிதையில் எரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்'' என்றார்.சீதை மூட்டப்பட்டது.திடீரென இறந்த உடலிலிருந்து வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது,அவர் ஏன் ஆடை மாற்ற வேண்டாம் என்று சொன்னார் என்று.தான் இறந்த பின்னும் மக்கள் கவலையின்றி சிரிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது ஆடையின் உள்ளே வெடிகளை ஒளித்து வைத்திருக்கிறார். அது கடைசி வரை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.சிரிப்பையே போதனையாக தந்த அவர்களை இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள். தற்போது அவர்கள் பொம்மைகளை வீட்டில் வைப்பது வளம் தரும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.
0000000000000000000000000000000000000
மனிதர்கள்
மனிதர்கள் மகிழ்ச்சியை அது இல்லாத இடத்தில் தேடுகிறார்கள்.அவர்கள் பாலைவனங்களில் தண்ணீரைத் தேடுகிறார்கள்.ஏமாற்றம் வரும் போது, தோல்வி வரும்போது,துயரம் வரும்போது அவர்கள் வாழ்க்கை மீது கோபம் கொள்கிறார்கள்.தங்கள் மீது கோபம் கொள்வதில்லை.வாழ்க்கை என்ன செய்யும்?அது எப்போதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.நீங்கள்தான் அதைத் தவறான வழியில் தேட முற்பட்டு விடுகிறீர்கள்.
மனிதர்கள் எல்லோருமே தனது நல்ல பக்கத்தை மட்டுமே உலகிற்குக் காட்டுகிறார்கள்.இதயம் முழுவதும் கண்ணீரால் நிரம்பி இருக்கலாம்.ஆனால் மனிதர்கள் புன்னகை செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறுதான் நாம் ஒரு பொய்யான சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.நாம் உருவாக்கியுள்ள இந்த முழு சமுதாயமும் ஒரு நாடகம்தான்.யாரும் தனது சொந்த இதயத்தைத் திறப்பதில்லை.
ஒருமுறை வந்தபின் உங்களை ஒருபோதும் நீங்கிச் செல்லாத திருப்திதான் உண்மையான திருப்தி.வந்துகொண்டும்,திரும்பப் போய்க் கொண்டும் இருக்கும் திருப்தி உண்மையான திருப்தி இல்லை.அது இரண்டு துயரங்களின் இடையே உள்ள இடைவெளி.
May 07, 2014
Comments
Post a Comment