Skip to main content

நெருடிய நெருஞ்சி-10






பஸ்சிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள். எனக்கு ராங் முட்டிக் கடுத்தது. கொண்டக்ரரை நோக்கி

"அண்ணை எங்கை பம்பிங் ஸ்ரேசன்"?

"வாரும் நானும் அங்கைதான் போறன்".

நான் விரைவாக அவரைப் பின்தொடர்ந்தேன்.மூச்சைநிப்பாட்டிக் கொண்டு காலச்சட்டை சிப்பை அவசரமாக இழுத்தேன். பம்பிங் ஸ்ரேசனில் அவ்வளவு வெடுக்கு. ராங் குறையத் தொடங்கியது ஆனால் நேரம் எடுத்தது, அவ்வளவு கனம். வெளியே வந்து மூச்சை விட்டேன். பக்கத்தில் இருந்த தண்ணித் தொட்டியில் கைகால்களை அலம்பினேன். காலில் இருந்து ஊத்தை கருப்பாகப் போனது. ஆனாலும் எனது புளுதிமண்ணல்லவா, தண்ணீர் படும்பொழுது மணத்தது. கொண்டக்ரரும் தன்னுடைய அலுவலை முடித்து வட்டு வந்தார். அவரது கை சீப்பால் தலைஇழுத்தது. எனக்கு அருவருப்பாக இருந்தது. இவை கைகழுவ மாட்டினமோ?

"தம்பி நீங்கள் எங்கை சாப்பிடப் போறியள்"?

"எனக்கு அக்கா வீட்டை இருந்து சாப்பாடு கட்டித்தந்தவா".

"அப்ப நீர் குடுத்து வைச்சாள் தான்".

"நான் இங்கை கடைல பாக்கிறன் நீர் போய் சாப்பிடும்".

நான் பஸ்சை நோக்கி விரைந்தேன். பஸ் ஆட்கள் இல்லாது வெளிப்பாக இருந்தது. மனைவி இடியப்பப் பாசலை அவிழ்த்தா. வாழை இலையின் மணம் மூக்கைத் துளைத்தது. நான் பலகாலமாக அனுபவிக்காத வாழையிலை மணம். அந்தமணத்துடனே இடியப்பத்துடன் சம்பலை சேர்த்துச் சாப்பிட்டேன். அதில் அக்காவின் அன்பு தெரிந்தது. எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. எனது மனைவி உறைப்பால் அவதிப்படுகின்றேன் எனநினைத்து தண்ணிப் போத்தலைத் தந்தா. அவாவின் மனதை நோகப்பண்ணக்கூடாது என நினைத்து தண்ணீரைவாங்கிக் குடித்தேன். சாப்பிட்டு முடிந்ததும் சிகரட்டை எடுத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினேன் சிகரட்டை பற்றவைத்து புகையை ஆழமாக இழுத்தேன் உறைத்த நாக்கிற்கு இதமாக சிகரட் இருந்தது. சுற்றாடலை நோட்டமிட்டேன் அந்த இடத்தில் 6-7 கடைகளே காணப்பட்டன. அவைகளில் ஒருவிதசோகம் காணப்பட்டது. ஒரு ரீக்கடையில் போய்நின்று எட்டிப் பார்த்தேன். ரீ குடிக்கவேணும் போல் இருந்தது. ரீக்கு சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டேன் சிவர்களில் பல ஓட்டைகள் இருந்தது. கடையை நடத்தியவர் நடுத்தரவயதாக இருந்தார்.

"அண்ணை கனகாலமாய் கடைவைச்சிருக்கிறியளோ"?

"ஓம் தம்பி, ஆனால் நாலஞ்சுவரியமா ஒண்டுஞ் செய்யேலாமல் போச்சுது. செல்அடில கூரை எல்லாம் பிஞ்சுபோச்சு இப்பதான் நிவாரணநிதிலை திறந்தனான்"

"நிவாரணநிதி உடன தந்திட்டாங்களோ"?

என்னை ஆளமாகப்பார்த்தார்,

"அண்ணை குறைநினைக்காதையுங்கோ நான் வெளிநாட்டிலை இருந்து கனகாலத்துக்குப் பிறகு இங்கை வாறன்"

"எவ்வளவுகாலம்"?

"25 வரியம்".

"என்ரடவுளே!!!!! நான் ஆரோடையும் கனக்க கதைக்கிறேல தம்பி நீர் வெளிநாடு எண்டபடியால் உம்மை நம்பிறன்".

ஆ!!! என்ன சொன்னான் எல்லாம் உடன கிடைக்குதே எங்களுக்கு ரெண்டு பக்கமும் இடிதம்பி இப்பதான் ஒருமாரிநிமிர்றம். என்ர ரெண்டு பெடியளும் மாவீரராய் போட்டாங்கள், பெடிச்சியும் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது மனிசிக்காறிக்கு இதால கொஞ்சம் மண்டகுழம்பிப் போச்சு. இப்ப வைத்தியம் பாக்கிறன், எல்லாம் முறிகண்டியான் பாப்பான் எண்ட துணிவிலை இருக்கிறன்.எனக்கு மனசு வலித்தது.

"எவ்வளவு ஆண்ணை நான் தரவேணும்"?

"ரீ 15 ரூபாய் தாரும்".

பொக்கற்றுக்குள் கையை விட்டேன் நூறு ரூபா வந்தது.

"அண்ணை இதை வைச்சிருங்கோ".

"நில்லும் மிச்சம் தாறன்".

"இல்லை மிச்சத்தையும் வைச்சிருங்கோ".

"இல்லைதம்பி உழைச்சு வாறது தான் நிக்கும். நீர் மிச்சத்தை கொண்டுபோம்".

" சரி மிச்சத்துக்கு ஏதாவது வடை றோல்ஸ் தாங்கோ" "அப்பிடி எண்டால் தாறன்".

விரைவாக பாசல் கட்டித் தந்தார். பாசலை வாங்கிக் கொண்டு கடை வாசலை விட்டு வெளியேறினேன்.சிறிது தூரம் சென்றிருப்பேன், தம்பி என்று ஒரு குரல் என்னை நிறுத்தியது.அங்கே ஒரு நடுத்தரவயதுள்ள பெண்ணும் ஒரு சிறுவனும் நின்றிருந்தார்கள்.

"தம்பி நாங்கள் கிளிநொச்சில இருந்து இடம்பெயர்ந்தனாங்கள்.இங்கை உமையாள் புரத்திலை இருக்கறம், என்னம் நிவாரண நிதி கிடைக்கேல தம்பி. சொல்ல வெக்கமாய் இருக்கு, நேற்றேல இருந்து நானும் பிள்ளையும் என்னம் சாப்பிடேல".

பஸ் வெளிக்கிடுவதற்கு ஆயுத்தமாக கோர்ண் அடித்தது. மனைவி பரபரப்பது தெரிந்தது. கையில இருந்த பாசலை அந்தப்பெண்ணிடம் கொடுத்தேன்.

" இதை சாப்பிடுங்கோ அக்கா எனக்கு பஸ்வெளிக்கிடப்போகுது".

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள். எனக்கு வியர்வையுடன் கண்ணீரும் வந்து கண் எரிந்தது.சிறிய துவாயால் முகத்தை இறுக்கமாய் துடைத்தபடி பஸ்சை நோக்கி விரைந்தேன். நான் பஸ்சுக்குள் ஏறியதும் கொண்டக்ரர் விசில் அடித்துக் கொண்டே, "

என்னதம்பி இங்கை மனிசிக்காறி இருக்கறா நீர் கேர்ல் பிரண்ட் பிடிச்சிட்டீர் போல கிடக்கு".

"அதல்லாம் யூறொப்பில நோமல் அண்ணை" என்றேன் சிரித்தவாறே,

"பாத்துதம்பி அவா ரிக்கற் எடுத்தது பரித்தித்துறைக்கு இடம் தெரியாம விளையாடாதையும்".

"தெரிஞ்சு தானே அண்ணை விழுந்தனான்"

எல்லோரும் சிரித்தார்கள். பஸ் மீண்டும் ஏ9 பாதையில் வேகமெடுத்தது." உங்களுக்கெல்லே சொன்னான் ஒரத்தரோடையும் கதைக்கவேண்டாம் எண்டு".

எனக்கு தெரிந்தது அவா எதை மனதில் வைச்சுக் கதைக்கிறா என்று.

"பிள்ளை எங்களுக்கு கடவுள் என்ன குறை வைச்சார், ஒரு யூறோவும் வராது அந்த மனிசின்ர ஒருநேரச்சாப்பாடு கிடைச்சுதே பாவம் அந்த மனிசியப்பா".

"இங்கை உங்களுக்கு இங்கத்தையான் நிலமை தெரியாது பாத்து நடங்கோ".

நேரம் 10மணியை நெருங்கியது. தூரத்தே கடல்நீர் ஏரி தெரிந்தது. அது ஆனையிறவு வருவதைக் கட்டியங் கூறியது.





July 07, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...