Skip to main content

மனமே மலர்க - பாகம் 09.




ஒரு கிராமத்தில் வசித்த 17 வயது இளைஞன் மகாகெட்டவன். வயதுக்கு மீறிய பேச்சு,நடத்தை... அவனைப் பார்த்தால் இளம்பெண்கள் நடுங்கி ஓடுவார்கள். இருந்தாலும், அவர்களை விரட்டிச் சென்று துன்புறுத்துவான். ஒருமுறை, ஒரு முனிவர் அவ்வூருக்கு வந்தார்.

இளைஞன் வசித்த தெருவுக்குள் சென்றார். ஊர் மக்கள் அவரை மறித்து, சுவாமி! அங்கே போகாதீர்கள். அங்கே ஒரு துஷ்டன் வசிக்கிறான். அவனைக் கண்டு பயந்து, அந்தத் தெருவையே காலி செய்துவிட்டு வேறு தெருக்களில் நாங்கள் குடியிருக்கிறோம். நான் வேறு தெரு வழியாக சுற்றி செல்வதானால், நேரம் அதிகமாகும். என்னிடம் என்ன இருக்கிறது! இம்சை செய்ய, நான் அவ்வழியிலேயே போகிறேன், என்று சொல்லிவிட்டு நடந்தார். இளைஞன் அவரை

மறித்தான். யோவ், சாமி! ஊருக்குப்புதுசா! இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தம். நீர்சு ற்றிச்செல்லும், என்று சொல்லி கையை ஓங்கினான்.

தம்பி! ஒன்றே ஒன்று கேட்பேன். நீ பதிலளித்து விட்டால் நீ சொன்னபடி செய்கிறேன், என்றவர், நான் வழிமாறி சொல்வதால் உனக்கென்ன லாபம்! எனக்கேட்டார். ஒன்றுமில்லை என்றான் அவன். எந்த லாபமும் இல்லாத ஒன்றைச் செய்யாதே. இறைவனை வணங்கு, நல்லதைச் செய்ய முயற்சி செய், என்றார் முனிவர். இளைஞன் மனதில் எப்படியோ இந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அன்று முதல் அவனும் சாந்தமாகி விட்டான். இதைப்பயன்படுத்தி ஊர்மக்கள் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். சிலர் அடிக்கவும் செய்தனர். உடலெங்கும் காயம் ஏற்பட்டாலும் அவன் அமைதி காத்தான். முனிவர் திரும்ப வந்தார். என்னாச்சு உனக்கு? என்றார். நடந்ததை விளக்கிய அவனிடம், பிறரை நீ அடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். உன்னைத் தாக்க வந்தால் பயமுறுத்த வேண்டாம் என சொல்லவில்லையே! என்றார். அதன்பின் மீண்டும் அவன் பயமுறுத்தலை துவங்க மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர். நல்லவனாய் இருக்கலாம் ஆனால், ஆபத்து வந்தால், அதைத்தடுக்கும் விதத்தில் பயமுறுத்துவதில்தவறில்லை.

00000000000000000000000000000000

வெற்றிப்படிகள்

நம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம் என்பது ஒரு வெற்றியே.முடிவு எப்படியிருப்பினும் கடைசி வரை முயற்சிப்பது வெற்றியே. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்துவது ஒரு வகை வெற்றியே. எதிர் பார்த்த வாய்த்த வாய்ப்புகள் வராதபோதும் கிடைத்த வாய்ப்புகளில் இருந்து கூடிய அளவு அனுபவம் பெற்றுவிடுவதும் வெற்றியே. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டி வந்தாலும் தொடர்ந்து முயல்வதும் அதற்கான உறுதியும் ஒரு வெற்றியே. 'இன்று சிலர் செய்யும் தவறுகள் நாமும் நேற்றுத் தெரியாமல் செய்த தவறுகளே'என்பதை உணர்ந்து அவர்களை மன்னிப்பதும் வெற்றியே.' சிறு செயல்களை செய்தாலும் பலருக்கும் பயன்படும் விதமாக செம்மையாக செய்தோம்'என்ற உள்ளக் களிப்பும் வெற்றியே. பெருந்தோல்வி ஒன்று முழுமையாக வீழ்த்தி விட்ட போதிலும் மாபெரும் கடமைகளால் உந்தப்பட்டு மீண்டும் எழும் உள்ளம்வெற்றிக்கு ஒரு வித்து.

'நல்லதை விழையும் முயற்சியில் நமக்குத் தற்போது அவப்பெயர் வந்தாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்,'என்று பொறுத்துக் காத்திருப்பதும் வெற்றியே. திட்டங்கள் செயல் முறைக்கு வரும்போது நடைமுறை உண்மைகளை கண்டுணர்ந்து தன் தவறுகளை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் ஒரு வெற்றியே.

வெற்றிக்குத் தடையாக இருக்கும் நினைப்புகளை அகற்றுங்கள். யாரோ வேண்டுமென்று உங்கள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்களே, அந்த நினைவை அகற்றுங்கள். நீங்கள் குறுக்கே வந்து விட்டதாக மற்றவர்களும், அவர்கள் குறுக்கே வந்து விட்டதாக நீங்களும் நினைத்துக் கொண்டால் எப்படி?

உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளத் தயங்கும்போதுதான் யாரையேனும் குறை சொல்லி உங்கள் முயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கும்போத்தான் குறுக்கு சுவர்கள் எழுகின்றன. நாம் எழுப்பிய சுவர்களை நாம்தான் உடைக்க வேண்டும்.

எல்லாம் தெரியும் என்ற நினைப்பைக் கைவிடுவதும், தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் தீமைகளைக் கலைவதும் வெற்றிகளே. வேண்டா வெறுப்பை விடுத்து கவனத்தோடு செயலாற்றுவது, பிறருடைய இயல்புகளை அறிந்து நளினமாகச் செயல்படுவது, வேண்டாத பின் விளைவுகள் வராத வண்ணம் சிந்தித்துச் செயல் படுவது, இடையில் வரும் அலுப்பை பொருட் படுத்தாது தொடர்ந்து முயல்வது, முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்யும் கட்டுப்பாடு, எடுத்த வேலையைக் கடைசி வரை செய்து முடித்து விடும் ஈடுபாடு யாவும் நல்ல பண்பின் வெற்றிப்படிகள்.

0000000000000000000000000000

வாழ்க்கையில் உயர்வு அடைய...

ஒரு கூட்டில் அண்ணன், தங்கை என இரண்டு சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. சில நாட்களாக தங்கைக் குருவி மட்டும் பறக்காமல் கூட்டிலேயே இருந்தது. இதைக் கண்ட அண்ணன் குருவிக்கு மிகுந்த ஆச்சர்யம். ஏன் தங்கை இப்படி எங்கும் செல்லாமல் இருக்கிறாள் என்று கவலையுற்று ஒரு நாள் தங்கையிடம் கேட்டே விட்டான். ஏன் இப்படி பறக்காமல் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது நோய் பிடித்திருக்கிறதா? ஆமாம் அண்ணா, எனக்கு நோய் பிடித்துள்ளது. ஆனால் அது என்னுடைய நோய் அல்ல. மனிதர்களின் நோயை நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அண்ணன் குருவி கூறியது.

கடவுள் ஒரு நாள் என் முன் தோன்றினார். என்னை மட்டும் சாதாரணக் குட்டிக் குருவியாகப் படைத்திருக்கிறீர்களே? ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லாம் எவ்வளவு நன்றாக இருக்கிறார்கள். என்னையும் ஒரு மனிதனாகப் படைக்கக் கூடாதா? என்று வேண்டினேன். கடவுள் என்னைப் பார்த்துச் சிரித்தார். முதலில் மனிதர்களின் குணங்களை உனக்குத் தருகிறேன். அதைக் கொஞ்சம் சுமந்து பார் என்று அவர் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். அந்தச் சுமையால்தான் அன்று முதல் என்னால் பறக்க முடியவில்லை.

அப்படியா! மனிதர்களின் அந்தக் குணங்கள் என்னென்ன? என்று ஆவலுடன் கேட்டது அண்ணன் குருவி. கோபம், பொறாமை, பேராசை, வஞ்சனை, தீய எண்ணம், துரோகம், சுயநலம் ஆகிய மனிதர்களின் குணத்தைத்தான் கடவுள் என்னைச் சுமக்கச்சொன்னார். அண்ணன் குருவி அதிர்ந்து போனது. மனிதர்கள் இப்படியெல்லாமா இருக்கிறார்கள்? என்று நொந்து போனது. கடைசியில் தன் தங்கையிடம், கடவுள் தந்த சுமைகளையெல்லாம் நீ ஒவ்வொன்றாகக் கழற்றி தூர எறி, அதன் பின்னர் உன்னால் பறக்க முடியும் என்று யோசனை சொன்னது. தங்கைக் குருவியும் அண்ணன் சொன்னது போலவே செய்ய, தன் உடலின் எடை குறைவதைப் போல் அதற்குத் தோன்றியது. அடுத்த விநாடி அதனால் சுலபமாகத் பறக்கவும் முடிந்தது.

வாழ்க்கையில் உயர்வு அடைதல் என்னும் பறக்கும் ஆசை இருந்தால்மனிதர்களின் ஏழு வகை தீய குணங்களை ஒவ்வொன்றாகத் தூக்கி எறியலாம்.

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -"ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?"

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்... நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹும் சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த...

முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது -

புரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை . சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..

சிறுவன் பெருமூச்சு விடுகிறான்.

"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை"

என்று சமாதானம் ஆகிறான். வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

000000000000000000000000000000

கோபத்திலிருந்து விடுதலை

கோபம் என்பது ஒரு அரக்ககுணம். ஒருவருக்கொருவரிடையே உள்ள மன வேறுபாட்டினாலும் , மற்றவர்களின் பேச்சை,செயலை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும், பலவீனங்களையும் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததாலும் மனிதனுக்கு கோபம் வருகிறது. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

* மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போதும்,ஏற்றுக் கொள்ள இயலாத போதும், எதிர்க்கும் போதும் அன்புடன் அவர்களுக்கு விளக்கி சொல்லி திருத்த முயல வேண்டும்.

* உங்கள் கோபத்தை உங்களாலேயே அடக்க முடியாதபோது அடுத்தவர்களின் குறைகளை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? கோபித்துக் கொள்வதை விடுத்து அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாமே?

* விரோதிகளிடம் பேசும்போது கூட அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள். இதனால் உங்கள் கோபம் தலை தூக்காது. மற்றவர்களின் கோபமும் தணிந்து விடும்.

* அதிக வெப்ப நிலையில் உள்ள இரும்பைக்கூட குளிர்ந்த இரும்பு வெட்டி விடுகிறது. ஆகவே காரசாரமாகப் பேசுபவரிடம் அமைதியாகப் பேசினால் உறுதியாக வெற்றி கிடைக்கும்.

* மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது நாமும் துன்பம் அடைகிறோம் என்பதனை உணர வேண்டும். அமைதியாக காரியங்களை செய்து வெற்றி காண வேண்டும்.

* சிறு கோபமோ, பெரிய கோபமோ முதலில் ஏதோ பலன் கிட்டியதுபோலத் தோன்றினாலும் நன்கு யோசித்தால் அதில் நிரந்தரப் பயன் ஏதும் இல்லை என்பது விளங்கும். எல்லாவற்றிற்கும் மேல் கோபத்தினால் நாம் விலை மதிப்பற்ற நமது நிம்மதியை இழந்து விடுகிறோம்.

* மற்றவர்கள் நம்மீது கோபித்தால் அது நமக்குப் பிடிக்கிறதா? அதேபோல நமது கோபமும் அடுத்தவர்களுக்குப் பிடிக்காதல்லவா? ரோஜாவாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அதை விடுத்து ஏன் ரோஜாவின் முள்ளாக இருக்க வேண்டும்? தீர்க்கமாக சிந்தித்தால் கோபம் நம்மைவிட்டு தானாகவே ஓடிவிடும்!

0000000000000000000000000000

சரியான மனப்பயிற்சி...இனி உங்களின் ஆட்சி!

ஒரு நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுள்ள நடைமுறைப்படி அரசனுக்குப் பின் அவனது வாரிசுக்குதான் அரசுரிமை கிட்டும். ஒருவேளை மன்னனுக்கு வாரிசு இல்லாவிட்டால் அவனது உறவினருக்கு அந்தப் பதவி கிட்டும். அப்படியும் யாரும் இல்லையயென்றால், பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து வீதியில் ஊர்வலம் வரச் செய்வார்கள். அப்போது யானை அந்த மாலையை யாருடைய கழுத்திலாவது போடும். அதனை தெய்வீக

அடையாளமாகக் கருதி அவரையே மன்னராக ஏற்பார்கள். அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டது. அந்த நாட்டு அரசர் வாரிசு யாரும் இன்றி இறந்துபோனார். நடைமுறை சட்டத்தின்படி பட்டத்து யானையை அனுப்ப முடிவு செய்தார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்பதை முன் கூட்டியே உணர்ந்திருந்தான் யானைப் பாகன். அதனால் அவன் ஒரு சூழ்ச்சி செய்திருந்தான். அரசர் நோய்வாய்ப்பட்ட நாள் முதலே அவன் யானைக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் யானையை அனுப்புவார்கள் அல்லவா?

அப்போது யானை, அவனது மருமகனுக்கு மாலை இடவேண்டும் என்பதற்காக தந்திரமாக அந்தப் பயிற்சியைக் கொடுத்தான். அதனால் தினமும் தன் மருமகனை யானை முன் நிற்க வைத்து அவனுக்கு மாலை இடும்படி கட்டளையிட்டான். யானையும் தவறாமல் மாலையை அவன் கழுத்திலேயே போட்டது. பயிற்சியும் தொடர்ந்தது.

ஒருநாள், அவன் வழக்கம் போல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் சிறந்த கல்விமான்,பண்பானவன் என்பதெல்லாம் அவனைப் பார்த்ததுமே புரிந்தது. அரசரைப் பார்த்து வேலை ஏதாவது கேட்க வந்திருந்தான் அவன். ஆனால் அவனால் தன் ரகசியத் திட்டம் அம்பலமாகிவிடுமோ என நினைத்தான் யானை பாகன். அதனால் இந்தப் பக்கமாக வராதே போ...! என்பதுபோல் அவனை நோக்கி சைகை காட்டினான். இளைஞன், யானைதான் கோபமாக இருக்கிறதுபோலும் என் நினைத்து ஒதுங்கிப் போனான்.

குறிப்பிட்ட நாளில் பட்டத்து யானை நகர வீதிகளில் கையில் மாலையுடன் சுற்றிவர ஆரம்பித்தது. யானைபாகன் தன் ஆவலை மறைத்துக் கொண்டு அதன் பின்னாலேயே நடந்தான். இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவன் யானைபாகன். அவனது திட்டப்படி யானை அவன் மருமகன் கழுத்தில் மாலையைப் போட்ட விநாடி முதல் அவன் அரசனின் மாமனார் ஆகிவிடுவான். சந்தோஷக் கனவு அவன் மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. ஆடி அசைந்து வலம் வந்த யானை மெதுவாக ஓரிடத்தில் நின்றது. மெல்ல துதிக்கையை உயர்த்தி பிறகு தாழ்த்தி மாலையை அந்தப் படித்த இளைஞனின் கழுத்தில் போட்டது. மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். யானை பாகனோ திகைத்து நின்றான். எப்படி நடந்தது இது என்று புரியாமல் குழம்பினான். ஒரு முறை பயிற்சி நடந்த இடத்தின் பக்கமாக அந்த இளைஞன்வந்தபோது யானைபாகன் ஏதோ சைகை செய்தான் அல்லவா? அதை யானையும் பார்த்தது. மாலையை அந்த இளைஞனுக்குப் போடுவதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மனதில் பதிந்தது. அதனால் மாலையை இளைஞனின் கழுத்தில் அணிவித்தது. மனிதனுடைய மனமும் யானையைப் போன்றது. அதனை சரியாகப் பழக்கினால்தான் அது பலமாக இருக்கும். தவறினால், அதுவே பலவீனம் ஆகிவிடும். எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கூறி அவர்களது மனதைப் பழக்குங்கள். அப்பொழுது தான் அவர்களது மனம் பலவீனம் ஆகிவிடாமல் பலமாக இருக்கும்.

000000000000000000000000000000000000

தடைகளைக் தாண்டுவது எப்படி ?

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை ! வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் - மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் ! இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன ! இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது ! இந்த இடத்தில் ஒரு சின்ன கதை !

தன் மனைவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை ! கணவனுக்குப் பொருத்தமான மனைவி என்பதால் அவளும் கணவன் மாதிரிதான் ! ஒரு நாள், கணவன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியும் கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கப் போய்விட்டாள். நள்ளிரவு நெருங்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. மனைவி கதவைத் திறந்தாள். கணவன் தான். ஒரு குரங்கை கொண்டு வந்திருந்தான். தான் கொண்டு வந்த குரங்கைப் மனைவி பக்கத்தில் படுக்க வைக்க... மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் பக்கத்தில் குரங்கைப் படுக்க வைக்கிறீர்களே ! நாற்றத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லையா ? கணவன் சொன்னான், கல்யாணமான புதிதில் நாற்றத்தை சமாளிப்பது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போக எனக்குப் பழகி விடவில்லையா ? அதே மாதிரிதான், கொஞ்ச நாளில் குரங்குக்கும் பழகிவிடும்... அவ்வளவுதான், கணவனின் இந்தக் குத்தலாக வார்த்தைகள் மனைவியைக் காயப்படுத்திவிட்டன. இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் அந்த இரவோடு முறிந்துவிட்டது !

இந்த இடத்தில் தலாய்லாமா சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம்.

நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை ! ஆனால், யாரையும் புண்படுத்திவிடாதீர்கள் ! ஆனால், இன்று சில வீடுகளில் நடப்பது என்ன ? கணவனும் மனைவியும் ரணமாகும் வரை ஒருவரை ஒருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் விசித்திரமாகக்கூட இருக்கிறது ! மனித குலத்தின் அறிவு, வளர்ச்சி ஆகியவை வளர வளரத்தான் விவாகரத்து விகிதமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது ! இதற்கு என்ன காரணம் ? இதற்குப் பதில் அறிவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தில இருக்கிறது !

சரி, அறிவு என்பது என்ன ? அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தைகளில் இல்லை ! அறிவு தென்படுவது மனிதனின் நடவடிக்கையில் ! நிர்வாக இயலில் இப்போது அழுத்தம் கொடுத்துப் பேசப்படும் சப்ஜெக்ட் - Inter personal skills ! ஒருவன் தன் சக ஊழியர்களிடம், மேலதிகாரிகளிடம், தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம், வாடிக்கையாளர்களிடம் என்று அனைவரிமும் எப்படி செம்மையான உறவை ஏற்படுத்திக் கொள்வது என்று சொல்லித் தருவது தான் இந்த Interpersonal skills ! பார்க்கும் வேலையில் எத்தகைய குணாதிசயம் நிறைந்தவர்கள் வேகமாக முன்னுக்கு வருகிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது ! இந்த சர்வேயின் முடிவு என்ன தெரியுமா?

ஒருவன் முன்னுக்கு வர, சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் பற்றிய அறிவு 35 சதவிகிதம் இருந்தால் போதும். ஆனால், இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ் 65 சதவிகிதம் வேண்டும் ! அதாவது, உறவை எப்படிப் பலப்படுத்துவது என்று தெரிந்தவனால்தான் எந்தவொரு தடையையும் எளிதாகத் தாண்டி, செய்யும் தொழிலில் முன்னுக்கு வரமுடியும் ! சம்பளத்துக்காக வேலை செய்யும் இடத்திலேயே உறவுகளை வளர்க்கும் திறன் முக்கியம் என்றால், வீட்டிலே இது எந்த அளவுக்கு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒருவர் தவறே செய்திருந்தாலும் நீ செய்ததும் தவறு என்று எப்போதும் கூறாதீர்கள். மாறாக எது சரி ? என்று அவர் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள் ! - இதுதான் இன்டர் பர்சனல் ஸ்கில்ஸின் பாடம் ! இது அலுவலக நடைமுறைக்கு மட்டுமல்ல, இல்லத்தின் இனிய உறவுமுறைக்கும் பொருந்தும்.

இன்று பலரின் வீட்டில் கணவன் - மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ! ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜுராஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது ! உயிர் இருக்கிறது !

March 20, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம