அஞ்ஞானம்
யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இது எதனால்? மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது. ''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது. யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது, ''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!
ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள். யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.
இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள். செய்தி உண்மையானது என்றாலும், ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான். யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார். அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள். இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள். எல்லோரையும் நிந்திப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.
00000000000000000000000000000000000000
பதவிக்கு தகுதி வேண்டும்
ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தை தெளித்து ஓநாயாக்கி விட்டார். பலசாலியான அது, தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி விட்டது. ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனே, ஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார். சிறுத்தையை பார்த்த சிறுத்தை இது நமது இனமாயிற்றே என விட்டுச் சென்றுவிட்டது. சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது . சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார். புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்க நிலைக்கு உயர்ந்த சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளை, இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால், நாம் படாதபாடு படவேண்டியிருக்கும். எனவே, இவரை கொன்று விட வேண்டியது தான், என்றெண்ணி பின்னால் நின்று பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட தண்ணீரைத் தெளித்து போ நாயே! என விரட்ட, அது மீண்டும் சொறிநாயாகி அழுதுகொண்டே சென்றது. ஒருவரது குணமறிந்தே அவரை உயர்ந்த பதவிகளில் வைக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா!
0000000000000000000000000000000000
பிறர் சொல்
ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது. அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது. பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை. ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான் இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது. இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது. அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது பெருந்தலைவர் கேட்டது,
''நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே? இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?''
இந்த காகம் பதில் சொன்னது,
''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.''
என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான் இக்காக்கை கவனித்தது. பெரிய காக்கையின் அலகு தன் அலகை விட மோசமாக வளைந்திருந்தது.
00000000000000000000000000000000000000
நச்சு எண்ணங்கள்
ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.அவை:
00000000000000000000000000000000000
குமுறல்:
நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.
0000000000000000000000000000000000
நழுவல் மனோபாவம்:
மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உள் மனதுக்கு ஏற்படும் விருப்பத்தால், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உள் மனதில் முக்கியமான பணி திசை திருப்பப்படுகிறது.அதன் விளைவாகத் தப்பியதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது.
00000000000000000000000000000000
நீதிக்குத் தகுதி...
நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா! இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார் விக்கிரமாதித்தன். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும், அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.
விக்கிரமாதித்தனின் காலம் முடிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்ததும், அவரது அரண்மனை, சிம்மாசனம் உள்ளிட்டவை மண்ணில் புதைந்து போனது. அவரை அநேகமாக எல்லாரும் மறந்து விட்டனர். விக்கிரமாதித்தனின் அரண்மனை இருந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல் நிலமானது. ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அதில் தங்கள் ஆடுகளை மேயவிடுவார்கள். அவர்கள் பொழுதுபோக்குக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம். ஒருநாள் ஒரு மேடான இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்தான். மற்றவர்களிடம், நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது குற்றம் செய்தவர்கள் போல் நடித்து வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன், என்றான். சக சிறுவர்களும் ஏதோ குற்றம் செய்தது போல், நீதிபதியிடம் முறையிட, நீதிபதி சிறுவன் அருமையாக தீர்ப்பு சொல்வான். அவனது வார்த்தைகள் ஆடு மேய்ப்பவனைப் போலவே இல்லை. ஆணித்தரமாக நடுநிலையோடு இருந்தது. இதுபற்றி, ஊர்மக்கள் கேள்விப்பட்டனர். தங்கள் சொந்த வழக்குகளை அந்த மேட்டில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கொண்டு வந்தனர். சிறுவனும் தரமான தீர்ப்பளிக்கவே வழக்குகள் தேங்குமளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இந்த தகவல் அவ்வூர் மன்னரை எட்டியது. அவர் இதுபற்றி மந்திரிகளிடம் கேட்கவே, மகாராஜா! எங்களுக்கொரு சந்தேகம்! படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருக்கும் மேடான இடத்தில், விக்கிரமாதித்த மகாராஜா அமர்ந்திருந்த சிம்மாசனம் புதைந்திருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தோண்டிப்பார்க்கலாமா! என்றனர். ராஜா சம்மதிக்கவே, அவ்விடத்தைத் தோண்டினர். எதிர்பார்த்தபடி சிம்மாசனம் கிடைத்தது. அதை அரண்மனைக்கு கொண்டு வந்தனர்.
மன்னர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து வழக்கை விசாரிக்க ஆசைப்பட்டு அருகில் சென்றார். அப்போது, சிம்மாசனத்தை தாங்கிய ஒரு தேவதை, ஏ மன்னா! நீ அடுத்தவர் நாட்டை அபகரித்தவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவன் இதில் அமர தகுதியில்லை என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது. மன்னனும் தன் தவறை உணர்ந்து மீண்டும் அமரப்போனான். மற்றொரு தேவதை,நீ அடுத்தவர் நாட்டை மட்டுமல்ல, உன் மக்களுக்கு செலவழிக்க வேண்டிய செல்வத்தையே ஊழல் செய்து கவர்ந்தவன். உனக்கு இதில் இருக்க தகுதியில்லை, என சொல்லி விட்டு மறைந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவதையும் அவனது கெட்ட குணங்களை சொல்லி மறைந்து விட்டன. ஒரே ஒரு தேவதை மட்டுமே எஞ்சியிருந்தது. எல்லா தீய குணங்களையும் நான் விட்டுவிட்டேன். இனியாவது எனக்கு அமரும் தகுதி உண்டா? என அவன் கேட்கவே, நான், எனக்கு என்ற வார்த்தைகளை அழுத்தமாக அகங்காரத்துடன் உச்சரித்த நீ இதில் அமர முடியாது, என சொல்லியபடியே சிம்மாசனத்துடன் மறைந்து விட்டது. ஆசை, கோபம்,விருப்பு, வெறுப்பு இவற்றை எவனொருவன் விடுகிறானோ அவனே தீர்ப்பு சொல்ல தகுதியானவன்.
ஆடு மேய்க்கும் சிறுவனிடம் இவை அத்தனையும் இருந்தன. அதனால், அவன் சரியான தீர்ப்பு சொன்னான். மன்னனுக்கு அத்தகைய தகுதிகள் இல்லாததால், அவனால் தீர்ப்பு சொல்லஇயலவில்லை. நீதி வழங்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்தக் கதையை மனதில் கொள்ள வேண்டும்.
00000000000000000000000000000000000000
விபரமான ஆள்
நமக்கு ஏற்கனவேதெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். அவரைப் பேச விடுங்கள். புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள். இதில் இரு வசதிகள் உண்டு. முதலாவது, ஒரு விசயத்துக்கு எப்படியெல்லாம், எங்கெங்கெல்லாம் கண், காது ஓட்டலாம் என்பது தெரியவரும். அடுத்து நமக்குத் தெரியாத பல புது கிளைச் செய்திகளும் சேர்ந்தே வரும்.
ஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல. அப்படியா என்று ஆர்வமாகக் கேட்டுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.
மெல்ல அதில் சில சந்தேகங்களைக் கேட்டு அந்த ஆள் வெத்து வெட்டு என்று அவரையே உணர வைக்க நம்மால் முடியும் என்றாலும் அது வேண்டாம்.காரணம், அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் தொடங்குவர்.
ஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும் இருவர், ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள். தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும். எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளி நகையாட வேண்டாம். 'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'என்று பக்குவமாக சொல்லலாம் . அல்லது அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு இறுதியாக நம் கருத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். 'மடக்கி விட்டேன் பார்த்தாயா?'என்று காலரை தூக்கி விட்டுக் கொல்லும் தற்காலிகப் பெருமை நமக்குத் தேவையில்லை.
நாம் நம்மை விபரமான ஆளாகக் காட்டிக் கொள்ளும் சுபாவம் நம்மை இரு விதத்தில் பாதிக்கிறது. ஒன்று,எதிராளி நம்மை அவமானப் படுத்த, பழி வாங்க சந்தர்ப்பம் தேட ஆரம்பித்து விடுவான். இரண்டு, இது மற்றவர்களின் நல்லெண்ணத்தையும், நன் மதிப்பையும் பெறத் தடையாயிருக்கிறது. குரலை உயர்த்திப் பேசுவதும், மிக அதிகமாகப் பேசுவதும், முகத்தில் ஏகமாகப் பிரகாசம் காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.
நம்மை அப்பாவி என்று மற்றவர்கள் எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித்தரும். மற்றவர்களும் நம்மை விரோதப் பார்வை பார்க்க மாட்டார்கள்.
காரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில் புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி கொள்வதை விட்டுவிட்டு 'நாம் புத்திசாலி'என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக் கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி விடும்.
March 13, 2013
Comments
Post a Comment