Skip to main content

நெருடிய நெருஞ்சி-23



எல்லோரும் அவதிப்பட்டு பஸ்சை விட்டு இறங்கினார்கள் . நாங்கள் நிதானமாக கடைசியாக இறங்கினோம் . காலை வேளை செம்மஞ்சள் பூசிச் சூரியன் சுட்டெரித்தான் . பஸ்ராண்ட் ஞாயிற்றுக் கிழமையானதால் தூங்கி வழிந்தது . எனக்கு நன்றாக வியர்த்து ஊத்தியது . தண்ணி விடாயால் நாக்கு வறட்டியது . நான் அம்மன் கோயில் மூலையில் இருந்த கடைக்குத் தண்ணிப் போத்தில் வாங்கப் போனேன் . பெறாமக்களும் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் ரொபி வாங்க . அவர்கள் கையில் ஏற்கனவே வல்லிபுரக் கோயிலில் வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நிறைந்திருந்தன . எனக்கு தண்ணிப் போத்திலையும் , அவர்கள் கேட்ட ரொபியையும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி அம்மன் கோயில் வீதியால் நடந்தோம் . வழக்கத்துக்கு மாறாக இன்று அம்மன் கோயில் வீதி வெறிச்சென்று இருந்தது . அங்கொன்றும் இங்கொன்றுமாக சனங்கள் சைக்கிளில் போய் கொண்டிருந்தனர் . நாங்கள் வீதியால் நடப்பது இலகுவாக இருந்தது . வீதியைக் கடந்து ஒழுங்கையில் இறங்கியபொழுது , அங்காங்கே ஆடுகளும் இப்பிலிப்பில் குழைகளைக் கடித்தபடியே எங்களுடன் நடை பயின்றன . பெறாமக்கள் அவைகளுடன் சேட்டை விட்டுக் கொண்டு எங்களுடன் நடந்தார்கள் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது நேரம் காலை 9h30 யைத் தாண்டி இருந்தது . வெய்யிலும் இப்பொழுது நன்றாகவே தனது குணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது . மாமி எங்களுக்காக வெள்ளை அப்பமும் , இடிச்ச சம்பலும் செய்து வைத்திருந்தா . பெறாமக்கள் பேத்தியாருக்கும், அன்ரிக்கும் , தாங்கள் கோயிலுக்குப் போய் வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் . அவர்களும் ஏதோ புதிதாக கேட்பது போல விடுத்து விடுத்து விண்ணாணம் பறைஞ்சு கொண்டிருந்தார்கள் . அப்பமும் சம்பலும் போய் வந்ததிற்கு நல்ல ருசியாக இருந்தாலும் , எனது உணவுக் கட்டுப்பாட்டால் நாலு அப்பத்திற்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை . மாமா வீட்டு வாசலில் இருந்து புளியம்பழம் உடைத்துக் கொண்டிருந்தார் . பிள்ளைகள் சுட்டி ரீவி யுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் . நானோ மாமாவின் வாயைக் கிண்ட முயற்சி செய்து கொண்டிருந்தேன் , எனக்கு ஏதாவது பிரையோசனமாய் இருக்கும் எண்ட நப்பாசையில் .

"அப்ப மாமா இந்தமுறை லெச்சனில ஆருக்கு போடப்போறியள்" ?

"அது......... எவன் உள்ளதைச் சொல்லுறானோ பாப்பம் ".

"ஆரும் அப்பிடிச் சொல்லுறதாய் தெரியேலையே மாமா".

"அப்பிடி சொல்லாதையுங்கோ . இப்ப சனம் எல்லாம் நல்ல தெளிவு கண்டியளோ . ஆர் தங்களுக்கு பிரையோசனமாய் இருக்கீனமோ , அவைக்குப் பின்னால நிக்குங்கள் . இப்ப டக்கிளசு சனத்துக்கு எவ்வளவோ நல்ல விசையங்களை செய்யிறார் . ஆனா, அவரோடை இருக்கிற கொஞ்ச குறுக்கால போனதுகளால அந்தாளுக்கு கள்ளப் பேர் " .

"ஏன் அவரும் நீங்கள் சொல்லுற ஆக்களை தட்டி நிமித்தலாம் தானே மாமா "?

நீங்கள் என்ன சொல்லுங்கோ , அந்தாள் வந்தாப் பிறகுதான் சனங்களின்ர பிரச்சனையள் எல்லாம் வெட்டிக் கொண்டுவாறார் . எந்த நேரத்திலையும் அவரைப் பாக்கலாம் . சரியான எளிமையான மனசன் பாருங்கோ".

" நாங்களும் இங்கை இருந்து பாத்தனாங்கள் தானே எல்லாற்ர விளையாட்டுகளையும்".

" ஏன் மாமா அப்படிச்சொல்லுறியள் "?

"உங்களுக்கு கனக்கத் தெரியாது தம்பி......... , நாங்கள் எல்லாம் , எல்லா வழியாலையும் பாவப்பட்ட சீவனுகளாய் போனம் . அதுகளை சொல்லுறதெண்டால் நெஞ்சுக் கொதி தான் ஏறும்".

ஏன் மாமா இப்பிடிச் சொல்லுறார் . இதில் எது பொய் ? எது உண்மை ? மக்களின் அடிப்படைத் தேவைகளை யார் தீர்த்து வைகின்றார்களோ , அவர்கள் மக்களால் முன்னிலைப் படுத்துவது மனித இயல்போ ? என்று எனது மனம் பலவாறாக அலைபாய்ந்தது . நானும் மாமாவோட சேர்ந்து புளியம்பழம் உடைச்சுக் கொண்டே கதையைத் தொடர்ந்தேன்,

"ஏன் மாமா இயக்கம் சனத்தை செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டாங்களே"?

"அப்பிடி எல்லாம் இல்லை தம்பி......... ஒண்டுரெண்டு கதைக்ககூடிய மட்டத்தில இருந்தாங்கள் . மிச்சமெல்லாம் கதைக்கப் பேசத்தெரியாது . நாங்கள் ஒருத்தரையும் வித்தியாசம் பாக்கேல பாருங்கோ . பசிச்ச வயித்துக்கு சோறு போட்டம் . சில நேரம் சோறு போட்டதுகளுக்கே உலை வைச்சவங்களையும் கண்டிருக்கிறன் ".

"தம்பி உலகத்தில எல்லா இடத்திலையும் நல்லவனும் இருக்கிறாங்கள் , கெட்டவனும் இருக்கிறாங்கள்."

"ஏன் மாமா இதை இங்கை சொல்லுறியள் "?

"எங்கடை பெடியளுக்கு வீரமும் துணிவும் இருக்குது பாருங்கோ. ஆனால் , விவேகம் கொஞ்சம் மட்டு".

"ஏன் அப்பிடி சொல்லுறியள்?"

"நீங்களும் இந்த உலகத்திலதானே இருக்கிறியள் தம்பி."

"எண்டாலும் மாமா நீங்கள் அனுபவசாலிதானே அதுதான் கேட்டனான் என்னை வித்தியாசமாய் எடுக்காதையுங்கோ".

மாமா கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . எனக்கு மாமாவின் சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை . அனுபவப்பட்ட பழுத்த பழங்கள் உப்பிடித்தான் கெக்கே பிக்கே எண்டு சிரிப்பார்களோ ? நானும் பொதுவாய் சிரித்தேன் .

"அப்ப மாமா ஒப்பிறேசன் லிபறேசனில , இந்தியன் ஆமி வந்த மூட்டம் எல்லாம் என்ன நடந்தது?"

"அதெல்லாம் பெரிய கதை தம்பி . எங்கடையாக்களும் சம்பல் அடி குடுத்தாங்கள் கண்டியளோ.ரெண்டு வளத்தாலையும் ஆட்டித்தான் பாத்தினம் . உவன் அத்துலத் முதலியும் நேர இங்கை வந்து நிண்டவன் , தன்ர முதலாளி ஜெயவர்தானாக்கு நேரடி ஒலிபரப்புச் செய்ய , ஒண்டும் நடக்கேல . துண்டைக் காணம் துணியைக் காணம் எண்டு ஓடினாங்கள் பாருங்கோ . இதுக்குள்ள இந்தியாக்காறன் , தான் சாப்பாடு குடுக்கப் போறன் எண்டு கடலுக்கை கப்பல்லை வந்து நிக்கிறான் . பின்னை இவையும் ,அவங்களும் கடலுக்கை நிண்டு விண்ணானம் பறையினம் . அவனும் அம்புலிமாமாக் கதையைக் கதைச்சுக் கொண்டு ..... பிளேனால சாப்பாட்டை கொண்டு வந்து போட்டு , இவைக்கு மூஞ்சயைப் பொத்தி ஒரு குடுவை குடுத்தான் கண்டியளோ சொல்லி வேலையில்லை . ஆனா தம்பி , சனம் செரியா துன்பப் பட்டுபோச்சுதுகள். எவ்வளவு சாவுகள் ? கை கால் இல்லாமல் போனதுகள் எண்டு வகைதொகையில்லை . இதுக்கை ஆரும் தப்பி பிழைச்சு இருக்கிறதெண்டால் அது பெரிய விசையம்".

மாமாவின் கண்கள் கலங்கியிருந்தன. நான் அவரை தேற்றிவிட்டு எங்களது பயண அடுக்குகளை பார்க எங்கள் வீட்டிற்குப் போனேன். நான் உடுப்புகளை அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி வந்து சாப்பிடக் கூப்பிட்டா . மாலில் கைக்குத்தரிசி சோறும் , மரக்கறிகளும் உணவுத் தட்டில் நிறைந்திருந்தன . நான் பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . ஏனோ என் மனம் அம்மாவைச் சுற்றி வட்டமிட்டது . நாளை வவுனியா போகமுதல் இன்றே கோப்பாய்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன் . சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருந்து விட்டு , கோப்பாய்குப் போக வெளிக்கிட்டேன் . மச்சான் என்னை சைக்கிளில் கொண்டு வந்து பஸ்ராண்டில் விட்டார் . நான் வருவதைத் தங்கைச்சியிடம் சொல்லும்படி மனைவியிடம் சொல்லியிருந்தேன் . என்னை ஏற்றிக்கொண்டு பஸ் கோப்பாயை நோக்கி விரைந்தது . வெய்யிலின் கடுமை குறைந்து , கூதல் காற்று பஸ் ஜன்னலின் ஊடாக வீசியது . சாப்பிட்ட சாப்பாட்டின் துணையால் நித்திரை என்னைச் சொக்கியது . அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்மா கனவில் ஈஸ்மன்ட் கலரில் மிதந்தா. பஸ் திரும்பிய வேகத்தில் நித்திரை என்னிடமிருந்து விடை பெற்றுக்கொண்டது . பஸ்சோ இப்பொழுது நீர்வேலிச் சந்தியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது . நான் இறங்குவதற்குத் தயாரானேன் . முகத்தில் வழிந்த வியர்வையை துவாயால் துடைத்தேன் . பஸ் என்னை இறக்கி விட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது . நான் ஒழுங்கையில் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன் .

என்னைக் கண்டதும் எனது மருமகள் மாமா........... மாமா.......... என்று கத்தியவாறே தளிர் நடையில் ஓடி வந்தாள் . அவள் கையில் நான் ஞாபகமாக வாங்கி வந்த ரொபி பைக்கற்றை வைத்தேன் . அவள் லஞ்சமாகக் கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் ஒன்றைத் தந்தாள். வீட்டில் ரெண்டு சின்ன லபோறடர் ரக குட்டி நாய்கள் தளிர் நடைபயின்றன . அவை வெள்ளை நிறத்தில் குண்டுக் குட்டிகளாக இருந்தன . நான் அவகளைக் கைகளில் தூக்கிக் கொண்டேன் .நான் போனதும் நான்கொடுத்த காசுகளை வைத்துக்கொண்டு , அண்ணையிடம் அரிச்செடுத்து அவரின் பெடியள் வாங்கினதாய் தங்கைச்சி சொன்னாள் . நான் முன் விறாந்தையில் இருந்து அம்மா அப்பாவின் கறுப்பு வெள்ளைக் கலியாணவீட்டு படத்தை வைத்த கண் வாங்காமல் பாத்துக்கொண்டிருந்தேன் . தங்கைச்சி தேத்தண்ணியும் முறுக்கும் கொண்டு வந்தாள் . எடுத்துக்கொண்டே,

"அண்ணை எங்கை"?

"இப்ப வந்துடுவற்ரா உன்னை நிக்கச்சொன்வர் . நீ என்னடா கனக்க கதைக்கிறாயில்லை , முந்தின ஆள் இல்லை ".

தங்கைச்சி உடைந்துபோய் சொன்னாள் .

"இல்லையடி நான் ஒரே மாதிரித்தான் இருக்கிறன் ".

வாயில் வலிந்த சிரிப்புடன் சொன்னேன் அவள் சமாதானமான மாதிரி எனக்குத் தெரியவில்லை . எனது மனமோ தனிமையை நாடியது . கேணியடிக்குப் போனால் நல்லது போல் எனக்குத் தோன்றியது .எனது எண்ணத்தைச் செயலாக்கினேன் . என்ர மருமகளும் அடம் பிடித்து என்னுடன் சேரந்து கொண்டாள் . நான் அவள் கையைப் பிடித்து கொண்டு நடந்தேன் . அவளும் பெரிய மனிசியாகத் தனது மொழியில் எனக்கு இடம் காட்டியபடியே நடந்தாள் . நாங்கள் கோயிலடியை அண்மித்து விட்டோம் . நான் கேணிக்கட்டில் அமர்ந்து கொண்டேன் . மருமகளை கோயில் முன்றலில் விளையாட விட்டேன் . பிள்ளையார் அமைதியான சூழலில் மோனத்தவம் செய்தார் . எவ்வளவோ நடத்தும் சாட்சியாக இருந்த இந்தப் பிள்ளையார் பலரைக் காப்பாற்றாதது எனக்குக் கோபமாக வந்தது . காலத்தின் வினோதம் , சிறிய வயதில் பிள்ளையாரே கதி என்று இருந்த என்னை இன்று இப்படி யோசிக்க வைக்கின்றது . சன்னிதியானாவது தனது தேரை எரித்த அப்புகாமியை , அவனின் கனவில் வந்து வெருட்டி அவனைக் காவடி எடுக்கப் பண்ணினான் . ஆனால் இந்தப் பிள்ளையாருக்கு முன்னால் எவ்வளவோ நடந்தது . எனக்கு புரியவில்லை . சிலவேளை புரியாது தான் கடவுளோ ? நான் அலைபாய்ந்து கொண்டிருந்தேன் . மாலைச் சூரியன் வானில் வெத்தலையைத் துப்பி விட்டிருந்தான் . குயில் ஒன்று சோகப் பண் பாடியது . தூரத்தே ஒரு பெண் எங்களை நோக்கி வருவது தெரிந்தது . நானோ சுவாரசியமில்லாமல் பற்றிய சிகரட்டைத் தொடர்ந்து என்மனத்தை சிறகடிக்க விட்டேன் . எங்களை நெருங்கிய பெண் சிறிது நடையைக் குறைத்து ,

" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?"

எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .

"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".

கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .

"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".

பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .

"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".

"என்னகதை ?"

"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?

அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .

"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மானில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".

பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .

"எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்கு வாறான் . இந்தக் கேணயடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது. பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".

என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .

"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".

பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதயில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .

"சொல்லு பாமினி".

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............

"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".

அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் . நான் அண்ணையுடன் தளர் நடையுடன் வீட்டிற்குப் போனேன் . நேரம் மாலை ஆறு மணியாகியிருந்தது . தங்கைச்சி இடியப்பமும் சொதியும் வைத்திருந்தாள் . என்னை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினாள் . நான் அவளது மனதை நோகப்பண்ணாது சிறிது இடியப்பத்தைக் கொறித்தேன் . இருட்டி விட்டதால் அண்ணை என்னை கெதியில் வெளிக்கிடக் கெதிப்படுத்தினார் . நான் எல்லோருடனும் விடைபெறும் பொழுது , தங்கைச்சி நீண்ட காலத்திற்குப் பிறகு அழுகையுடன் என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினாள் . அண்ணை என்னுடன் பஸ்ராண்ட் வரை வந்தார் . என்னை அதிகம் காக்கவைக்காது பஸ் உடனடியாகவே வந்தது. நான் அண்ணையிடம் சொல்லிக் கொண்டு பஸ்சினுள் ஏறினேன் . பஸ்சில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை நான் வசதியாக ஓரிடத்தில் போய் இருந்து கொண்டேன் . என் மனம் என் சொல்கேளாது விசும்பியது . கடவுள் என்னைத்தான் இப்படிச் சோதிக்கறாரோ ? அம்மா இல்லாத வீடும் , பாமனியின் சந்திப்பும் என்னைக் கொல்லாமல் கொன்றன . பஸ் பருத்தித்துறையை நோக்கி விரைந்தது . இருட்டில் ஒன்றுமே என் கண்களில் எத்துப்படவில்லை . நான் கண்களை மூடிக்கொண்டேன் . சிறிது நேரத்தில் பஸ் பருத்திதுறை பஸ்ராண்டில் தன்னை நிலைப்படுத்தியது . நேரம் எட்டு மணியை கடந்திருந்தது . நான் விரைவாக அம்மன் கோயலடியால் நடையைக் கட்டினேன் . நான் வீட்டை அடையும் பொழுது மனைவியும் பெறாமக்களுடன் கேற்றில் நின்று கொண்டிருந்தா . அவாவின் முகத்தில் கலவரரேகைகள் ஓடியிருந்தன . நான் அவாவைச் சமாதானப்படுத்தினேன் . எமது பயணத்துக்கு எல்லாம் பயணப்பொதிகளாக அடுக்கப்பட்டு ஆயத்தமாக இருந்தன . மனைவி தோசையும் ,தோசைக்கறியும் செய்திருந்தா . நாங்கள் எல்லோரும் இருக்க மனைவி பரிமாறினா . மாமியின் கைவண்ணம் தோசைக்கறியில் தெரிந்தது . சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம் . என்னை நித்திரை கட்டிப்பிடித்தது. நான் போய் படுத்து விட்டேன் .நானும் மனைவியும் விடியவே எழும்பி புறப்படத் தயாரானோம் . மாமியினதும் , அன்ரியினதும் முகங்கள் வாட்டமடைந்து இருந்ததை ,நான் அவர்களது முகக்குறிப்பால் உணர்ந்தாலும் , நான் அவர்களுடன் முசுப்பாத்தி விட்டுக் கொண்டே விடைபெற்றேன் . மாமாவும் , மச்சானும் பஸ்ராண்ட் வரை எங்களுடன் வந்தார்கள் .அங்கு கலைந்தும் கலையாத காலைப்பொழுதில் இ .போ .சா பஸ் எங்களுக்காகக் காத்து நின்றது .






October 31, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம