மாலை 6 மணியானாலும். வெய்யிலின் அகோரம் அடங்கவில்லை. அந்த பஸ் குளீரூட்டிய சொகுசு வண்டியானாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மனைவி தந்த தேங்காய்ப்பூ சிறிய துவாய் வியர்வையில் தோய்ந்து ,சிறியதாக வியர்வை மணத்தது.
"இவங்கள் எப்ப வெளிக்கிடுவங்கள் " ?
"ஆக்கள் சேரத்தான் பஸ்சை எடுப்பினம்".
பஸ் போறணை மாதிரி இருந்தது. ஒருவாறு பஸ் வெளிக்கிடத் தொடங்கியதும் முகத்தில் அடித்த காற்று வெக்கைக்கு இதமாக இருந்தது . ஆனாலும் நல்ல வடிவாக இரவு 10 மணிவரையும் பஸ் கொழும்பைக் காட்டியது எனக்கு எரிச்சலாக வந்தது. பின்பு அது கண்டி வீதியில் வேகமெடுத்தது. இருட்டில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. மனைவி களைப்பின் மிகுதியால் எனது தோழில் நித்திரையாகி விட்டா. எனக்கு நித்திரை வரமறுத்தது. பஸ்சில் ஏறும் போதே மனைவி அழுத்தமாக சொல்லியிருந்தா
"யாரோடையும் தேவையில்லாமல் கதைக்கக் கூடது".
குறுகிய ஏ9 வீதியல் பஸ் இருளைக் கிழித்துப் பறந்தது. பல இடங்களில் புதிய சிறிய விகாரைகள் முளைத்து இருந்தன. புத்தரும் அகதியாகி இருக்க இடமில்லாமல் மீள்குடியேற்றப்பட்டுள்ளாரோ ? பஸ்டைறவரும் பஸ்சை நிப்பாட்டி நிப்பாட்டி எல்லாப் புத்தரையும் கும்பிட்டுக் கொண்டு வந்தார். பஸ்சில் நான் ஒருவன் தான் முழிப்பாக இருந்தேன், என்னடைய நிலையப்படி. என்வாழ்க்கையில் கால் நூற்றாண்டைத் துலைத்து புதிய ஐரோப்பிய முகத்துடன் வருவது மனதை பிழிந்தது. என்னுடன் கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் என்னை ஏற்றுக்கொள்வார்களா ? எப்படியாயினும் கண்ணரில் பங்காளியில்லாதவன் தானே. என்னால் கண்ணீரைத் தடுக்கமுடியவில்லை. இருபக்கமும் அடர்ந்த காடுகளின் எச்சசொச்சங்கள் கரைகட்டி நின்றன. இதில் தானே பரணி பாடினோம். தரணியைத் திரும்ப வைத்தோம். எத்தனை பேர் எங்களைப் பார்க்க வரிசையில் நின்றார்கள். அதில் சூது இருந்ததை எப்படி பகுத்தறியாது விட்டோம்? பஸ் வேகத்தைக் குறைத்தது. தூரத்தே இருளில் பல உருவங்களும், வீதியை மறைத்த வீதித்தடையும் தெரிந்தது. எந்த இடம் என்று சரியாகவும் தெரியவில்லை. நேரம் அதிகாலை 1.30 ஐக் காட்டியது. கலவரத்துடன மனைவியை எழுப்பினேன். மற்வர்களும் பரபரப்பானார்கள்.
"இது எந்த இடம்"?
"ஏன் பஸ் மெதுவாகப் போகின்றது"?
சற்றுமுற்றும் பார்த்த மனைவி,
" இதுதான் ஓமந்தைசோதனைச்சாவடி"
"நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் கதைக்கப்படாது".
எனக்குப் பயத்தில் வியர்த்துக்கொட்டியது.மனைவி நிதானமாகத் தனது இலங்கை அடையாள அட்டையையும் இருவரது கடவுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்துக்கொண்டா. எமது பஸ்சின் முன்னே பல வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. தூரத்தே ஐந்தாறு வரிசைகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் முற்றாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இடம் ஒரு நிரந்தர படைமுகாமைற்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் நிறதுத்தி சோதனையிட்டவாறே சாரதிகளை போய் தங்கள் விபரங்களைப் பதியுமாறு கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்கள் இராணுவச் சிப்பாய்கள். எமது பஸ்சில் ஏறிய சிப்பாய்கள் உள்ளூர் ஆட்களை இருக்கும்படியும் வெளிநாட்டவர்களைப் பதியும் இடத்திற்குப் போகும்படி சிங்களத்தில் சொன்னார்கள் . பஸ்சில் இருந்தவர்கள் எங்களை விரோதமாகப் பாரத்தது அப்பட்டமாகவே தெரிந்தது. எங்களால் தங்களுக்குத் தொந்தரவு வரும் என நினைத்தார்களோ? எங்களுடன் இருவருமாக 4 பேர் பஸ்சைவிட்டு இறங்கினோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னே வலிந்த புன்னகையுன் நின்று கொண்டேன். மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி.
June 04, 2011
தொடரும்
தொடரும்
Comments
Post a Comment