தன்னுடன் அதிகம் கதைக்க வேண்டாம் என்று சொன்னபடியால் நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. வயிறும் மனமும் சண்டை பிடித்து மனமே இறுதியில் வென்றது. பஸ் வன்னிப்பெருநிலத்தினூடாக ஊடறுத்து சென்றது. இந்தப்பாதையால் நான் சுலபமாகப் பயணம் செய்வதாகவே உணர்ந்தேன், எனது மக்கள் பட்ட கஸ்ரத்துடன் ஒப்பிடும்பொழுது. எவ்வளவு தூரம் ஆட்டுமந்தைகள்போல வாட்டி வதைக்கப்பட்டார்கள்?பத்தாயரத்திலிருந்து ஐம்பதினாயரம் வரை காசை வாரிஇறைத்தல்லவா பிளேனிலும் கப்பலிலும் போனார்கள். ஒருபுறம் எங்களை அடக்கி, மறுபுறம் எங்களிடமே பணத்தைப் பறித்த பொடிகாமியும் அப்புகாமியும் எங்கள் அதிமேதாவித்தனத்தால் வெளிவருகின்ற "மோடையர்களாகத்" தெரியவில்லை. இப்பொழுது வருகின்ற "இலங்கைப் பொருட்களைப் புறக்கணி" என்ற கோசத்தை அந்தமக்களும் பிளேனுக்கும் கப்பலுக்கும் கடைப்பிடித்திருந்தால் இந்தப்பொடிகாமிக்கும் அப்புகாமிக்கும் சரியான அடியாக இருந்திருக்கும். யார் பார்த்தார்கள்? எல்லோருக்குமே ஒவ்வொரு அத்தியாவசியங்கள். யார் தான் மக்களைப் பார்த்தார்கள்? அத்தியாவசியங்களே அத்தியாவசியங்களாகின. எதிலுமே கூறுகெட்ட அரசியல் அழுகிநாறும் பொழுது மனிதத்தை எங்கே தேடுவது?
பஸ் இடைக்கிடை நின்று இரணுவசிப்பாய்களையும் ஏற்றிக்கொண்டது. எங்கள் மண்டையின் பின்னால் ஒரு மூன்றாவது கண் இருந்து கொண்டே வந்தது. இது எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. பாதையில் பயணம் கடினமாகவே இருந்தது. திருத்தவேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. தூரத்தே தெரியும் புகையிரதப்பாதையையும் திருத்திக்கொண்டு இருந்தார்கள். புகையிரதம் ஓடியதற்கான ஒரு மேட்டு நிலத்தையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. சிலிப்பர் கட்டைகள் தண்டவாளங்கள் எல்லாம் தொலைந்து கனகாலமாகி விட்டிருந்தது. அவை எல்லாமே பங்கர் சென்றிகளுக்குச் சென்றிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறுமையாகவே இருந்தது இடையில் காணப்பட்ட கட்டிடங்களும் குண்டுகளால் செதுக்கிக் காணப்பட்டன ஆனாலும் மக்கள் அயராது அவைகளில் தமது பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடங்கள் மீளக்கட்டுப்படாமலே இருந்தது மனதிற்கு வலியாக இருந்தது. நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொடுத்த காசுகளே இதற்குக் காணுமே, அவையெல்லாம் எங்கே போய்விட்டன? நாங்களும் ஒருவகையில் ஏமாற்றப்பட்டுவிட்டோமா? எங்களின் உணர்சிகளைத் தூண்டி விடுதலைப்புலிகளின் பெயரைச்சொல்லி பலர் தங்களை வளப்படுத்தினார்களா? பஸ் கிளிநொச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் தலைநகரத்தை பார்கின்ற ஆவலால் எனக்குப் பசி மறந்து போயிருந்தது. கிளிநொச்சி எனக்குப் பழக்கப்பட்ட இடம். எனது அப்பா 78களில் கிளிநொச்சியில் பிரதமதபால் அதிபராக இருந்தபடியால் அடிக்கடி வருவோம். எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன். பஸ் டிப்போவை அண்மித்தது. டிப்போ பெயரளவிலேயே இருந்தது.முன்பு எவ்ளவு வடிவாக இருந்தது. நான் பார்த கடை அப்படியே இருந்தது ஆனால் சேதங்களுடன். பொடிகாமி கிளிநொச்சியில் எதையுமே விட்டுவைக்கவில்லை. பொலிஸ் நிலையத்தையும் இராணுவ முகாமையும் அருகருகே நிர்வாகத்துக்குச் சுலபமாக வைத்திருந்தார்கள். தண்ணீர் தாங்கி உருக்குலைந்து போயிருந்தது. அவ்வளவு தூரத்திற்கு மேலிருந்து துளைத்து எடுத்திருந்தார்கள் குண்டுகளால். அதை போரில் வெற்றி கொண்ட சின்னமாகவும், தொல்பொருள் சின்னமாகவும் அறிவத்து தனது புதிய பரம்பரைக்கு விசஊசி அடித்துக் கொண்டிருக்கிறார் மகிந்தர். அவருக்கு விளங்கவில்லை, அவர் கும்புடுகின்ற புத்தர் நாட்டை விட்டு வெளியேறிக் கனகாலமாகி விட்டது என்று.,தபால் நிலையம் இருந்த இடமே தெரியவில்லை. எனக்கு வலி இறுக்கியது.,இந்தக் கந்தோருக்கு முன்னால் எவ்வளவு விளையாட்டுகளை விளையாடியிருப்போம் அப்போது. எனக்கு மிகவும் பிடிச்சது பாலைப்பழம் தான்.,கெடுவில் செங்காயைத் தின்று பால் ஒட்டி கதைக்கமுடியாது அவதிப்படுவோம்.,என்னால் ஒரு பாலைமரத்தையும் காணமுடியவில்லை, வவுனியாவைப்போல பறவைகளையும் காணமுடியவில்லை. அவைகளும் வீரமரணம் அடைஞ்சுட்டுதோ?
ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு தானே நடத்திக்காட்டினோம். இது மற்றய நடமுறை அழுகிய அரசுகளுக்குப் பிடிக்கவில்லையோ?. எங்களுக்கு தலைவணங்கிய மண்ணல்லவா இது. எங்கள் சொல்லைத் தானே இது கேட்டது. இன்று அதன் விசும்பல் என்னைப் பிழிந்தது. பஸ்டிப்போவில் பலர் இறங்கியதால் பஸ் வெளிப்பாகி நல்ல காத்து வந்து வெக்கைக்கு இதமாக இருந்தது. பஸ் கரடிப்போக்குச் சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதில் இறங்கித்தான் எமது கமத்திற்கு செல்ல வேண்டும். இரமநாதபுரம் பஸ் ஏறினால் 2 கட்டை தள்ளி எமது கமம் வரும். சிலவேளைகளில் கரடிப்போக்குச் சந்தியில் இருந்தே நடந்து போவேன் கமத்திற்கு. பழைய கரடிப்போக்குச் சந்தியாக என்னால் பார்க்க முடியவில்லை. செம்மண் பாதை ஒன்று பற்றைகளுடன் இரமநாதபுரம் நோக்கிச் சென்றது தெரிந்தது. பஸ் சிறிது வேகமெடுத்தது. எனக்குப் பக்கத்தில் வந்த கொண்டக்ரர்,
"என்ன தம்பி முகம் செத்துப்போய்கிடக்கது"?
"ஏன் செத்ததெண்டு தெரியேலையோ"?
சரி சரி கொஞ்சம் அடக்கும் பரந்தன் களிய நிப்பாட்டுவம்.
"என்னண்ணை"?
"பத்துநூச ஓட்டந்தானே".
எனக்கு வில்லங்கமாக இருந்தது. சிறிது கண்ணை மூடலாம் என்றாலும் என்னால் முடியவில்லை. மீண்டும் சிப்பாய்கள் பஸ்சில் தொற்றினார்கள், பரந்தன் படைமுகாமில் இறங்குவதற்கு. எனக்கு எரிச்சலாக வந்தது. பஸ் தன்னை வேகப்படுத்தியது. நேரம் காலை 9.30 ஆகி இருந்தது.வெய்யில் உக்கிரமடைந்தது நான் எனது சூரியக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் படைமுகாம் அண்மித்ததால் பஸ் தனது வேகத்தைக் குறைத்தது. சிப்பாய்களும் இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் பஸ்வேகமெடுத்தது. பரந்தனை அண்மித்த பஸ் ஓரமாக தன்னை நிலை நிறுத்தியது.
June 30, 2011
தொடரும்
தொடரும்
Comments
Post a Comment