யாருக்குப் பரிசு?
மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,
''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன். இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது. இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ, அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''
அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர். சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும், தாவியும், நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர். இருபது நிமிடம் ஆயிற்று. அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது. அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார். பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,
''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''
என்று கேட்டார். எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர். அப்போது அவர்,
''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி. நான் முதலில் என்ன சொன்னேன்? பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்? ஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல், தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''
என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது. பேராசிரியர் தொடர்ந்தார்,
''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக் கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம். ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு, அவர்களை அழிக்க, ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''
0000000000000000000000000000000000000
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?
கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.
அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன்.
மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.
0000000000000000000000000000000000000000
எது சந்தோஷம் ?
சுஃபி இலக்கியத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான முல்லா நஸ்ருதீன் ஒரு நாள் சோகமாக உட்கார்ந்திருந்தார். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சிநேகிதன் “ஏன் சோகமாக இருக்கிறாய் ?“ என்று கேட்க, முல்லா அழ ஆரம்பித்துவிட்டார்.
“என் மாமா, தன் பெயரிலிருந்த சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு, போன மாசம் இறந்துவிட்டார். அதை நினைத்தேன்... அழுகிறேன்...“ என்றார் முல்லா.
“உன் மாமாவை எனக்குத் தெரியும். அவருக்கு எண்பது வயதாயிற்றே... மரணம் இயற்கையானதுதானே... அதற்கென்ன இத்தனை பெரிய சோகம் ? உண்மையில் பார்த்தால், அவரது திரண்ட சொத்து கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் “ என்று முல்லாவுக்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான்...
முல்லாவோ, “என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா, போன வாரம்தான் என் சித்தப்பா, என் பெயரில் ஒரு லட்ச ரூபாய் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போனார்“ என்று சொல்லிவிட்டு, இன்னும் பெரிதாகச் சத்தம் போட்டு அழத்தொடங்கினார்.
நண்பனுக்குக் குழப்பம் “உன் சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே... அவருக்கு எண்பத்தைந்து வயது... பணம் வந்ததை நினைத்துச் சந்தோஷப்படாமல் முட்டாளைப்போல இப்படி அழுகிறாயே ?“ என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான்.
“என் சோகம் இன்னும் அதிகம். எனது நூறு வயது தாத்தா இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலே என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு நேற்று இறந்துவிட்டார் “ என்றார் முல்லா. வெறுத்துப்போன நண்பன், “எனக்குப் புரியவில்லை. நீ ஏன்தான் அழுகிறாய் ?“ என்றான்.
முல்லா கண்களைத் துடைத்தபடியே சொன்னார். “செல்வந்தர்களான என் மாமா, சித்தப்பா, தாத்தா மூவருமே இறந்துவிட்டார்கள். இனிமேல் என் பேரில் சொத்து எழுதி வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே“
மிக முக்கியமான ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச்செய்து கொண்டே போனால், எந்தச் சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது.
ஓட்டைவாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ, அதேமாதிரி இதுபோல திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காது. அவர்களின் மனம் சோகமயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப் படும். வாளியில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டால் ஒரு அளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பிவிடுவது போல், மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை (Blind spots) அழித்துவிட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.
இது கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும்“ என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றுக் கொள்கிறது. அந்த “இது“ கள்தான் மனதில் கரும் புள்ளிகள். சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.
அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா போக விசா கிடைத்தால், அதுதான் சந்தோஷம். அதாவது “விசா கிடைக்கும்வரை நான் சந்தோஷப்படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன்...“ என்று அர்த்தம்.
ஆம்... வருங்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை ஓட்டை வாளியைப் போல, இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள் .
இப்படிப்பட்ட “பிளைண்ட் ஸ்பாட்“ மனமுடைய இளைஞர்களுக்கு, அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. விசா கிடைத்த மறுகணமே, “அமெரிக்காவில் வேலை கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும்“ என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச் சொல்லி, இவர்களே தங்களின் சந்தோஷங்களை மீண்டும் ஒத்திப் போட்டுவிடுவார்கள்.
சரி... அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. அப்போதாவது சந்தோஷப்படுவார்களா ? “கிரீன் கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை“ என்பார்கள். அதுவும் கிடைத்துவிட்டால். “அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மாமா, உறவினர்கள், உற்றார்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது“ என்று சொல்லி, மீண்டும் தங்களின் சந்தோஷத்தை ஒத்திப்போட்டுவிடுவார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்கள், சந்தோஷம் என்பது “கடைகளில் விற்பனையாகிறது“ என்ற கருத்து உடையவர்கள். ஆம்... அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும்போது, ரமண மகரிஷி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.
வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கெனவே திரிந்துகொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டுஎலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால், அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ, ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர்,
“மட நாயே அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் “ என்று சொல்ல... வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.
“இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது “ என்று சொல்லி, காய்ந்த எலும்பைப் மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dog’s logic என்று சொல்கிறோம்.
சிந்தித்துப் பாருங்கள்... காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?
000000000000000000000000000000000000
மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்...
அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்... மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.
‘துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல... அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு...
“ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன். இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான். அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.
செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி ‘அடடா இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்... ஆத்திரமாக மாற... அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான். யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார். மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,
“என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் “ என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.
கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம். அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.
“இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன. ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது “ இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான். சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை; மனதில்தான் இருக்கிறது. இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும்கூடத் தெரியவில்லை. அதனால்தான் நாம் பல சமயங்களில் நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் சார்ந்து இருக்கிறோம். மேலதிகாரி, “சபாஷ், நீ நன்றாக வேலை செய்கிறாய் “ என்று பாராட்டினால் நாம் சந்தோஷத்தில் மிதப்போம். அதே மேலதிகாரி, நம்மை ஒரு வார்த்தை திட்டிவிட்டால் சந்தோஷம் ஒட்டுமொத்தமாகப் போய்விடும். போதை தலைக்கேறும் வரை குடித்துவிட்டு வீதியிலே விழுந்து கிடந்த ஒருவனிடம் அவனது குறும்புக்கார நண்பன்,
“டேய் உன் வீட்டுக்குப் போயிருந்தேன். இன்று சாயங்காலம் உன் மனைவி விதவையாகிவிட்டாள். அதனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் உன் மனைவிக்கு ஆறுதல் சொல்“ என்று பொய்யாகப் பதறினான்.
இதைக்கேட்டு “ஐயையோ... என்மனைவி விதவையாகிவிட்டாளாமே “ என்று அந்தக் குடிகாரன் அழ ஆரம்பித்தான். நம்முடைய அறியாமை இந்தக் குடிகாரனின் அறியாமை போன்றதுதான்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒரு குடிகாரன் இருக்கின்றான். உண்மை இல்லாத பல விஷயங்கள்தான் நம்மைப் பல சமயங்கள் சோகத்தில் பிடித்துத் தள்ளுகின்றன. வேறு பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாசாரங்கள் நம் சந்தோஷத்தைப் பறித்துவிடுகின்றன.
இளம் பெண்மணி ஒருத்தி தன் குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள். கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் திடீரென்று ஓர் அலை இழுத்துச் சென்றுவிட்டது.
“ஐயையோ... என் குழந்தை போய்விட்டதே“ என்று அந்தப் பெண் கண்ணீர்விட்டு அழுதாள். அந்தப் பெண்ணின் அழுகை உருக்கமாக இருந்ததால் கடல் தெய்வம், குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது தன் குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாள். குழந்தையின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் இட்டவள் எதேச்சையாக குழந்தையின் காலை கவனித்தான். குழந்தையின் ஒரு காலில்தான் செருப்பு இருந்தது. இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை. உடனே அந்தப் பெண்ணின் மிகிழ்ச்சி பறந்துவிட்டது. ஐயையோ செருப்பு போய்விட்டதே என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இதற்கும் ஒரு படி மேலே ஒரு ரகம் உண்டு. சந்தோஷமான விஷயம்கூடச் சிலருக்குக் கவலையைக் கொடுத்துவிடும். அந்த அளவுக்கு எதிலுமே திருப்தியடையாத மனிதர்களாக இருப்பார்கள்.
அவன் ஒரு விவசாயி. ஒரு பருவத்தில் அவனது தோட்டத்தில் அமோகமாகத் தக்காளி விளைந்திருந்தது.
ஆனால், விவசாயி கவலையோடுதான் உட்கார்ந்திருந்தான்.
“ஏன் கவலையாக இருக்கிறாய் உன் தோட்டத்தில்தான் இந்த வருடம் நல்ல விளைச்சலாயிற்றே...“ என்று ஊர்க்காரர்கள் அவனைக் கேட்க, அதற்கு அவன், “நான் என் தோட்டத்தில் விளையும் தக்காளிகளில் சொத்தைத் தக்காளிகளை எடுத்து என் பன்றிகளுக்குப் போட்டுவிடுவது வழக்கம். இந்த முறை எல்லா தக்காளிகளுமே நன்றாக இருக்கின்றன. ஒரே ஒரு சொத்தைத் தக்காளிகூட இல்லை. பன்றிகளுக்கு எதைப்போடுவேன் ? அதுதான் கவலையோடு இருக்கிறேன்“ என்றானாம்.
எளிமையாகக் சொல்லவேண்டும் என்றால், சந்தோஷம் என்பது ஒரு பூட்டு மாதிரி. அறிவு என்பது சாவியைப் போல. அறிவுச் சாவியை எதிர்ப்பக்கம் திருப்பினால் அது சந்தோஷத்தைப் பூட்டிவிடும். அதே சாவியைச் சரியான பக்கம் திருப்பினால் சந்தோஷக் கதவுகளைத் திறந்துவிடும்.
00000000000000000000000000000000000000000
காணும் இடமெல்லாம் கடவுள்!
துறவி ஒருவர், புத்த மடாலயத்தில் தங்கி இருந்தார். அங்கு மூன்று புத்தர் சிலைகள் இருந்தன. இரவு நேரம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது. துறவியால் குளிரைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவர் கண்களில் அங்கே இருந்த புத்தரின் மரச்சிலைகள் பட்டன. அதில் ஒரு மரச்சிலையை எடுத்து, தீ மூட்டி குளிர் காயத் துவங்கினார். தீ ஜுவாலையின் ஒளியைக் கண்ட மடாலய பூசாரி, ஓடோடி வந்தார். பதறிப் போனார். நீ புத்தமத துறவி என்பதால் தான் உனக்கு இங்கே தங்க இடம் கொடுத்தேன். ஆனால் நீ நாத்திகனா ? புத்தரின் சிலையை எரித்து விட்டாயே என்று திட்டினார். அப்போதும் அந்தத் துறவி, சிலையின் எரிந்த சாம்பலில் ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறாய் ? சாம்பலில் புத்தரின் எலும்புகள் இருக்கிறதா என்று பார்க்கிறேன் ! பூசாரிக்குக் கடும் கோபம் வந்து விட்டது. முட்டாளே, லூஸா நீ ? மரச்சிலையில் எங்கேயாவது எலும்பு இருக்குமா ? அப்படியானால் மற்ற புத்தர் சிலைகளையும் இங்கே கொண்டு வா. குளிர் அதிகமாகிவிட்டது. அதனால் என் உள்ளே இருக்கும் பகவான் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் துறவி. பூசாரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே அந்தத் துறவியைத் துரத்தி விட்டார்.
மறுநாள் காலை, பூசாரி, மடாலயத்தின் வெளியே வந்த போது, அந்தத் துறவி, சாலை ஓரத்தில் இருந்த வழிகாட்டிக் கல்லின் மீது மலர்களை வைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பூசாரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பைத்தியமாய்யா நீ ? இரவு என்னடாவென்றால் புத்தர் சிலையை எரிக்கிறாய். ஆனால் இப்போதோ வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார். புன்னகைத்த துறவி,
எங்கே தலை சாய்க்கப்படுகிறதோ அங்கே கடவுளும் நியமனம் ஆகிறார். என்றார். என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் கலை உங்களுக்கு வந்துவிடுகிறதோ, அன்றைக்கு நீங்கள் எந்தக் கோயிலையும் தேடப் போவதில்லை. அன்றைக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, கோயிலும் அங்கேயே இருக்கும். உங்கள் கோயில், உங்களைச் சுற்றியே சுழன்று கொண்டேயிருக்கும் அது உங்களுக்கான ஒளிமண்டலமாக மாறிவிடும். எங்கெங்கே உண்மையான பக்தன், கால் பதிக்கிறானோ அங்கே ஓர் இறை இல்லம் உருப்பெற்றுவிடுகிறது. மனதுக்குள் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தால். சர்வ வல்லமை பெற்றவர்கள் ஆகிவிடுவோம்.
000000000000000000000000000000000
குறை
ஒரு பெண்மணி,தன் வீட்டுத் தேவைக்கு சற்று தொலைவிலிருந்து தினம் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு கம்பில் இரு முனைகளிலும் இரு பானைகளை தொங்கவிட்டுக் கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வருவார். இரண்டு பானைகளில் ஒரு பானையில் தண்ணீர் கொஞ்சம் ஒழுகும் . இதனால் வீட்டிற்குச் செல்லும்போது அதில் பாதி அளவிற்குத்தான் தண்ணீர் இருக்கும். ஒரு நாள் நல்ல நிலையிலிருந்த பானை ஓட்டைப் பானையைப் பார்த்து கிண்டல் செய்தது,
''உன்னால் முழு உபயோகம் இல்லையே,''
அந்த ஓட்டைப் பானைக்கும் தன் மீதே வருத்தம் வந்தது. அது அந்தப் பெண்மணியிடம் வருத்தத்துடன் சொன்னது,
''அம்மா, என்னால் உனக்கு பாதிப் பானை தண்ணீர் வீணாகிறது. என்னால் உனக்குத் தொல்லை. பேசாமல் என்னை கழட்டிவிட்டு வேறு பானையை உபயோகியுங்கள்,
''அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே சொன்னாள், ''உன்னால் பயன் இல்லை என்று ஏன் எண்ணுகிறாய்?''
நான் வரும் பாதையைப் பார்த்தாயா? உன் பக்கம் தண்ணீர் ஒழுகியதால் நான் அந்தப் பக்கம் சில பூச் செடிகளை நட்டேன். தினமும் தண்ணீர் விழுந்ததால் அச்செடிகள் நன்கு வளர்ந்து இப்போது பூத்துக் குலுங்குகின்றன. எனக்கு நிறைய பூக்கள் கிடைக்கின்றன,
''அந்தப் பானைக்கு தன்னாலும் பயன் இருக்கிறது என்பது தெரிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதுபோலத்தான் நம்மிடையே குறை இல்லாத மனிதர்களே கிடையாது யாரிடம் என்ன குறை இருந்தாலும் அக்குறையுடன் அவர்களை ஏற்றுக் கொள்ளப் பழகினால் அதுதான் உண்மையான நட்பு. உண்மையான பாசம்.
April 02, 2013
Comments
Post a Comment