அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத்தை கொடுத்து விட்டு அதிகாலை வேளையிலேயே நரேன் வேலைக்குப்போனது நினைவு வரவே விலுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள் நிவேதிதா . ஆனாலும் அவளை ஓர் இனம்புரியாத அசதி ஆட்டிப்படைத்தது . தன்னால் நரேனுக்கு ஒரு கோப்பி போட்டுக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை வருத்தியது .
000000000000000000000000000000000000000
நிவேதிதா பிரான்சின் எவியோன் லே வான் நகரில் 7 பனிக்காலங்களை முடித்திருந்தாள் . இயற்கையிலேயே அமைதியை நாடிய நிவேதிதாவுக்கு நரேனும் , எவியோன் லே வான் நகரும் அவளது வாழ்வில் உயிர்பாகவே இருந்தது . குடும்பத்தில் ஒரே மகளான நிவேதிதா நரேன் எப்படியிருப்பானோ என்ற தயக்கத்துடனேயே நரேனைக் கைப்பிடித்தாள் . நரேனது அதிர்ந்து பேசாத ஆழ்கடல் அமைதி அவளை அவனிடம் இயல்பாகவே இறுக்கியது . ஆரம்பகாலங்களில் நிவேதிதாவிற்கு அகண்டு விரிந்த லுமென் வாவியும் தூரத்தே , தெரியும் கோடையிலும் பனி உருகாத எவியோன் மலைச் சிகரமுமே லயிக்கும் இடங்கள் . நேரம் போவது தெரியாமல் லுமென் வாவிக் கரையில் வேரோடிப்போயிருப்பாள் நிவேதிதா . நரேன் , நிவேதிதாவிற்கு கேட்காமலேயே குறிப்பறிந்து எல்லாவற்றையும் செய்து கொடுப்பான் .
பல்கலைகழக மாணவியான நிவேதிதா பிறென்ஞ் மொழியைப் படிப்பதில் அவளுக்குப் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை . அவள் இலகுவாகவே ஓர் தொழில்சார் துறையொன்றைத் தெரிவு செய்து தனது பிறான்ஸ் வாழ்கையை உறுதியாக்கினாள் . அவளின் முன்னேற்றம் நரேனுக்கு மிகவும் மகிழ்சியைக் கொடுத்தது . தெளிந்த நீரோடைபோல் அவர்களது வாழ்க்கை அளவிலாச் சந்தோசத்துடன் ஓடிக் கொண்டிருந்தாலும் , அவர்கள் வாழ்வில் ஒருவித சோகம் என்னவோ ஓரமாக இழையோடிக்கொண்டுதான் இருந்தது.
அந்த அதிகாலையில் சுடச்சுட கோப்பியை போட்டுக்கொண்டு பல்கணி கதவைத் திறந்து தூரத்தே தெரிந்த லுமென் வாவியையையும் எவியோன் மலைச் சிகரத்தையும் கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் நிவேதிதா . பனிக்குளிர் அவள் போட்டிருந்த ஸ்வெற்றரினுள் ஊடறுத்து மூசிப்பாய்ந்தது . நிவேதிதா குளிருக்கு இணைவாக கோப்பி கோப்பையை அணைத்துப் பிடித்தபொழுது , சூடான கோப்பியின் ஆவி அவளை ஒருவித மோனநிலைக்குத் தள்ளியது . ஏதோ ஓர் நெருடல் அவளை உந்தி தள்ள , உள்ளே சென்று தனது டயறியை அவசரமாகப் புரட்டினாள் . அதில் அவளது மாதாந்த சுற்றுகை போனமாதம் பதியப்படாமல் இருந்தது . இந்த முறையும் பீரியட் தள்ளிப் போச்சுதே என்று மனதில் எண்ணியவாறு , இன்று பின்னேரம் வேலையால் வரும் பொழுது டொக்ரர் அந்துவானைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலைக்குப் போகத் தயாராகினாள் நிவேதிதா.
மாலைவேளை டொக்ரர் அந்துவானின் கிளினிக் ஓரளவு பரபரப்பு நிறைந்ததாகவே காணப்பட்டது . அந்துவான் அந்தநகரிலயே பிரபல்யமான டொக்ரர் . அந்துவான் திருமணம் தனது தொழிலுக்குத் தடையாக இருக்கும் என்று திருமணத்தைத் தனது தொழிலுக்காகத் தியாகம் செய்த இலட்சியவாதி . தனது முறை வந்தபொழுது மந்தகாசமான சிரிப்புடன் வரவேற்றார் அந்துவான் . நிவேதிதா தனது மாற்றங்களை மறைக்காது டொக்ரரிடம் சொன்னாள் . அந்துவான் பொறுமையாக் அவள் கூறியதைக் கேட்டுவிட்டு அவளது யூரினை பரிசோதித்து சிறிது நேரத்தில் சந்திக்கும்படி கூறினார் . அவள் தனது யூறினைக் கொடுத்து விட்டு ஒன்றும் புரியாதவளாகப் பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தாள் . அவளின் யூறின் ரெஸ்ற் அறிக்கை வந்தவுடன் அந்துவான் அவளைக் கூப்பிட்டார் . அந்துவான் சிறு சிரிப்புடன் அவள் கர்ப்பமாகியுள்ள விடையத்தை உறுதி செய்தார் . நிவேதிதாவிற்கு மகிழ்ச்சியில் என்னசெய்வதென்று தெரியவில்லை . அவள் சிறுபிள்ளைபோல் டொக்ரர் மேல் ஓ ஃபீமேல் ஓ என்று கேட்டாள் . அவர் சிரிப்புடன் நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தார்.
நிவேதிதா இந்த விடையத்தை நரேனுக்கு றொமான்ரிக் ஆகவே சொல்ல ஆசைப்பட்டாள் . தன்னுடைய அம்மாவிற்கு சொல்ல கைகள் துறுதுறுத்தாலும் அவளிற்கு மனமெங்கும் நரேனே வியாபித்திருந்தாள் . பிள்ளை இல்லாத குறை நரேனில் இருந்தாலும் அவளிடம் அதை அவன் காட்டியதே இல்லை . அவள் ஏதாவது கதைத்தால் கூட இப்ப என்ன அவசரம் என்று புன்னகையுடன் கூறுவான். ஆனாலும் அவளால் அவனது மனவோட்டத்தை நன்றாக உணரக்கூடியதாக இருந்தது . அவன்மேல் வைத்திருந்த அன்பு அவளிற்குக் கூடியதே ஒழியக் குறையவில்லை . நிவேதிதா அவனுக்குப்பிடித்த கோதுமை மா புட்டும் ,கத்தரிக்காய் குளம்பும், முட்டைப்பொரியலும் பொரித்தாள் . வீட்டு லைற்றுகளை எல்லாம் அணைத்து விட்டு மெழுகுதிரிகளை ஏற்றினாள் . நிவேதிதா வெளியில் போய்வந்த களைப்புத் தீர நன்றாக முழுகினாள் . உடைமாற்றும்பொழுது அவளையறியாமலே அவளது கைகள் அவளது வயிற்றைத் தடவிப் பார்த்தன . உலகில் உள்ள எல்லாப் பெண்களும் இப்படித்தான் செய்வார்களோ ? தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் அன்று உதித்த பூரணை நிலவு போல நன்றாகவே தெரிந்தது . நிவேதிதா உடையை மாற்றிக்கொண்டு நரேனின் வருகைக்காகக் காத்திருந்தாள் .
நிவேதிதா ஷம்பூ போட்டுக் குளித்திருந்தால் , அவளது நீண்ட தலைமுடி அவள் தோளெங்கும் விரிந்து பரவி அவளது அழகை மேலும் கூட்டியிருந்தது . அன்றுபார்த்து நரேன் வரத்தாமதமாகியது. நிவேதிதா பொறுமையிழந்து அவளது மடிக்கணணியை நோண்டத் தொடங்கினாள். அன்றய அலைச்சலினால் அவளையறியாமலே தூக்கம் அவளைத் தன்பிடியில் கொண்டு வந்தது . நரேனினது சூடான முத்தம் அவளை எழுப்பியது . நரேன் அவளையும் அந்த அறையினது மாற்றத்தையும் பார்த்து வியந்தவனாக,
" நல்லாத்தானே இருந்தனீர் ? "
என்று குறும்புடன் கேட்டான் . நிவேதிதா இடைமறித்து ,
"முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோ சாப்பிட " என்றாள் கள்ளச்சிரிப்புடன் .
"என்ன…. என்ன விசையம் ஒரு ரைப்பாய் இண்டைக்கு இருக்கிறீர் ? " என்று வினாவிய நரேனை இழுத்து அணைத்தவாறே ,
"கள்ளா என்னை அம்மாவாக்கிப் போட்டியேடா நல்லா இருப்பியா ? " என்று அவன் காதோரம் கிசுகிசுத்தாள் .
" என்னாது…… நீர் அம்மாவோ ? கிழிஞ்சுது போ....... . என்று நிவேதிதாவை ஆதரவுடன் அணைத்து முத்தமிட்டான் நரேன் . நரேன் இரண்டுபக்கத்து அம்மாமாருக்கும் செய்தியைச் சொல்லி வைத்தான் .
இரண்டுபக்க குடும்பமுமே நீண்டகாலத்திற்குப்பின்பு மலரப்போகும் அந்த புதியமலருக்காக ஆவலுடன் காத்திருந்தனர் . நீவேதிதா இப்பொழுது நிறையவே மாற்றங்களை உணர்ந்து கொண்டாள் . அவளால் முன்புபோல் இயல்பாக நடக்கமுடியவில்லை . அவளது புதியமலர் அவள் வயிற்றின் உள்ளே அங்கும் இங்கும் ஓடிவிளையாடி அவ்வப்பொழுது அவளை இடித்துக் கொண்டிருந்தது . நரேன் தனது பதியத்திற்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தான் .
நான்கு மாதங்களைக் கடந்த நிலையில் நரேன் ஒருநாள் மாலை நிவேதிதாவை வழமையான ஸ்கேன் செய்வதற்கு டொக்ரர் அந்துவானிடம் கூட்டிச்சென்றான் . அந்துவான் நிவேதிதாவை பரிசோதித்து விட்டு அவர்கள் இருவரையும் இருக்கச்சொன்னார் . வழமையாக சிரிப்புடனேயே காணப்படும் அந்துவானினது முகம் அன்று இறுகியிருந்ததை நிவேதிதா கவனிக்கத் தவறவில்லை . அவளது மனம் துணுக்குற்றது . அந்துவான் தனது குரலைச் செருமியவாறு அவர்களைப்பார்த்துச் சொல்லத்தொடங்கினார் .
"உங்கள் குழந்தைக்கு முள்ளந்தண்டு வடம் வளரவில்லை. மூளை வளர்ச்சியும் போதுமானதாக இல்லை . ஏறத்தாள 97 வீதம் ஹண்டிக்கப் ஆக உள்ளது . லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படும் . குழந்தை பிறந்தாலும் இந்தக்குழந்தையால் எழுந்திருக்கமுடியாது , நடக்க முடியாது . இதன் மூளை சீராக இயங்காது . இப்படியான குழந்தைகளை நாங்கள் ஆரம்பத்திலேயே பெற்றோர்களது சம்மதத்துடன் அழித்துவிடுவோம் . ஆனால் அதற்கான பிறப்புச் சான்றிதழும் , மரணச்சான்றிதழும் கொடுப்போம் . இதை இப்பொழுதே சத்திரசிகிச்சை மூலம் அழித்துவிடுவது நல்லது".
என்று அந்துவான் அவர்களிடம் கூறி முடித்தார் .
நிவேதிதா அழுகையை அடக்கமாட்டாதவளாய் அழத்தொடங்கினாள் . நரேன் மனதில் எரிமலை குமுறிக் கொண்டிருந்தது .
"அதை அழித்துவிடுவோம் டொக்ரர் . நீங்கள் திகதியை குறியுங்கள் " . என்றான் . அந்துவான் ஒருகிழமை கழித்து தான் வேலை செய்யும் ஹொஸ்பிற்றலில் அந்தமலரைக் கசக்க நாளைக் குறித்தார் . நிவேதிதா முதலில் முரண்டு பிடித்தாலும் , நரேனின் யதார்த்தபூர்வமான ஆலோசனைகளும் , அரவணைப்பும் அவளை ஒரு நிலைக்கு கொண்டுவந்தன . சத்திரசிகிச்சையன்று இருவரும் கையொப்பம் இடவேண்டிய அனைத்துப்பத்திரங்களிலும் கையொப்பமிட்டனர் .
நரேனது முகம் இறுகிப்போயிருந்தது . சில மணித்துளிகள் நரேனைக் கடுமையாகச் சித்திரவதை செய்தன . அவனது பாழும்மனம் வேதனையில் அலைபாய்ந்து துவண்டது . அவனுக்குப் பின்னாலிருந்து அப்பா….. என்று கூப்பிடுவதுபோல் ஓர் உள்ளுணர்வு அவனைத் தாக்கியது . அங்கே அந்துவான் அவனது தோளை ஆதரவுடன் பற்றியவாறே மறுகையில் ஒரு குடுவையுடன் நின்றிருந்தார் . அவன் திரும்பியபோழுது அவனது இரத்தம் உயிரற்று இரசாயனக்கலவையில் மிதந்து கொண்டிருந்தது . நிவேதிதாவுக்குக் கொழுகொம்பாக நின்ற நரேனோ , தனது அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாதவனாக அந்தக் கசக்கிய மலரைப் பார்த்து வீரிட்டு அழுது கொண்டிருந்தான் .
March 04, 2013
Comments
Post a Comment