Skip to main content

வேட்டை.




1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கிறன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 98 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார். நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன்.எல்லாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பழகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை.என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார்.

அப்பர் அடிச்ச காயம் எனக்கு செரியான கோபத்தை கிளறி போட்டுது . நான் சாப்பிடாமல் அடம் பிடிச்சன் . அம்மாச்சி வேப்பண்ணை பூசி சமாதானத்துக்கு வந்திது . நான் அம்மாச்சியோடையும் கதைக்கேலை . இண்டைக்கு காலமை எழும்பி தமிழ் புத்தகத்தை துறந்து வைச்சுக்கொண்டு சும்மா படம் காட்டிக்கொண்டிருந்தன் . சந்திரனும் முயலும் பாட்டும் எனக்கு மண்டையிலை ஏறேலை . எங்கடை கறுவல் நாய் காலடியிலை கிடந்து என்னைப் பாத்து கொண்டிருந்திது .

தூரத்திலை நாயள் குலைச்சு கேட்டிது . அதோடை விசில் சத்தங்களும் கேட்டிது . எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை . நாயள் குலைச்ச சத்தம் வரவர கிட்டீச்சுது என்ரை காலடியியைலை கிடந்த கறுவல் காதை நிமித்தி எழும்பி நிண்டு எதிர்பாட்டு பாட ஆயுத்தப்படுத்தீச்சிது . நான் மெதுவாய் ஒழுங்கையை எட்டிப் பாத்தன் . ஒழுக்கையில ஐஞ்சாறு மண்ணிற வேட்டை நாயள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வந்திதுகள் . அவைக்கு பின்னாலை கறுவல் நிறத்திலை கோமணம் கட்டிக்கொண்டு ஒரு ஏழு எட்டு பேர் வந்து கொண்டிருந்தினம் . அவையளுக்கு பின்னாலை வைத்தியும் புண்ணாக்கும் ஓடிக்கொண்டு வந்தாங்கள்.எங்கடை கேற்றடியிலை நிண்டு என்னை பாத்து சொன்னாங்கள் ,

" டேய் பத்து இடியப்பம் வேட்டைக்காறங்கள் வந்திருக்கிறாங்கள் . வாடா பம்பல் பாப்பம் " எண்டு .

நான் ஒருக்கா வீட்டை பாத்துப் போட்டு நானும் அவங்களோடை சேந்து ஓடினன் . எங்களோடை சேந்து சின்னன் பொன்னன் எல்லாம் எங்களுக்குப் பின்னாலை ஓடியந்திதுகள் . வேட்டை காறர் கேணியடிக்கு பக்கத்திலை இருந்த சிறாப்பற்ரை பத்தை காணியிலை நிண்டாங்கள் . சிறப்பற்றை காணிக்குள்ளை நாயுண்ணி பத்தையளும் கொஞ்சம் பெரிய மரங்களும்தான் கிடக்கு . நாங்கள் நாயளுக்கு பின்னாலை நிண்டம் . எங்களுக்கு கிட்ட போக பயமாய் கிடந்திது.அதுகள் இடுப்புக்கு கிட்ட உயரமாய் நிண்டுதுகள்.

நாங்கள் நாயளை பாத்துக்கொண்டு நிக்க , சிறாப்பற்றை நாயுண்ணிபத்தைக்கை ஒரு அசுமாத்தத்தை கண்ட வேட்டைகாறன் தன்ரை பீப்பீ குழலை ஊதி கொண்டு , நாயளை பாத்து "சூய்............... " எண்டான் . பத்தைக்குள்ளை ரெண்டு காட்டு முயலுகள் பிச்சுக்கொண்டு ஒட , நாயள் விட்டு கலைச்சுதுகள் . நாங்கள் நாயளைப் பாத்து ஓடு........ ஓடு.......... எண்டு கத்தினம் . வேட்டைக்காறர் பீப்பீயை ஊதிறிதை நிப்பாட்டாமல் ஊதீச்சினம் . ஓடின நாயள் தூரத்திலை போய் காட்டுமுயலை கழுத்தான் குத்தியிலை பிடிச்சு கொண்டு திரும்பி எங்கடை பக்கம் ஓடியந்திதுகள் . முயலுகளின்ரை கழுத்திலை ரத்தம் வந்திது . ஒரு வேட்டைக்காறன் முயலுகளை நாயளின்ரை வாயிலை இருந்து எடுத்து , தன்ரை இடுப்பிலை இருந்த வில்லுக்கத்தியாலை முயலின்ரை தோலை உரிச்சான் . மற்றவன் பக்கத்திலை நிண்ட பனை வடலியிலை பனை ஓலையை வெட்டி தொன்னை செஞ்சு அதிலை முயலுகளை போட்டு கட்டினான் .

பக்கத்திலை நிண்ட இலுப்பை மரத்திலை நிண்டு விளையாடிக்கொண்டு இருந்த அணிலுக்கு அண்டைக்கு பாத்து சனி வக்கிரிச்சு போட்டுது . வைத்தியோடை நிண்ட வேட்டைக்காறன் தன்ரை கையில இருந்த கெற்றம் போலாலிலை கல்லை வைச்சு ஒரு கண்ணை மூடிக்கொண்டு இழுத்து அணிலின்ரை தலைக்கு அடிச்சான் . குறி தப்பேலை அணில் சுறுண்டு விழுந்திது . புண்ணாக்கு அணில் விழுந்ததை வாயை பிளந்து கொண்டு பாத்தான் . அணிலும் பனை ஓலை தொன்னைக்குள்ளை போச்சுது . நாயள் பேந்தும் ஒரு முயலை கலைச்சு கொண்டு ஓடீச்சிதுகள் . இந்தமுறை முயல் நாயளை உச்சிப்போட்டுது . ஆனால் நாயள் முயல் ஒழிச்ச பத்தையை சுத்தி ரவுண்டப் பண்ணீட்டுதுகள் . கடைசியில முயலை ஒரு நாய் பத்தைக்குள்ளை பூந்து கழுத்திலை பிடிச்சு கொண்டு வர , மற்ற நாயளும் ஆரவாரப்பட்டு எல்லாம் ஓடி வந்தீச்சிதுகள் . அந்தமுயலும் பனை ஓலைக்குள்ளை போச்சுது .

வேட்டை காறர் அண்டைக்கு செய்த வேலையாலை எங்கடை மூண்டு கூட்டுக்கும் நல்ல பம்பல். அவை எல்லா இறைச்சி தொன்னையளையும் இடுப்பிலை கட்டி நாயளை கூட்டி கொண்டு திரும்ப ஒழுங்கையாலை வந்தீச்சினம் . வேட்டைக்காறங்களை பாத்த அம்மாச்சிக்கு அண்டங்கிண்டம் எல்லாம் பத்தீச்சிது . அவங்களை தூசணத்தாலை பேசி எனக்கு நல்ல மண்டகப்படி தந்துதான் விட்டீச்சுது மனுசிசி .

1985 ஒருநாள் காலமை நான் பள்ளிகூடம் வெளிக்கிட்டு ஒழுங்கை தண்டி பருத்தித்துறை றோட்டுக்கு வந்தன் . தூரத்திலை ஒரு உறுமல் சத்தம் கேக்கிது . எனக்கு விளங்கீட்டுது வேட்டைகாறங்கள் வாறாங்கள் எண்டு . கவசவாகனத்திலை வந்த வேட்டைக்காறர் என்னோடை வந்த வைத்தி , புண்ணாக்கு , தோப்பிளாண்டி , சுறுக்கன் எல்லாரையும் உடுப்பை கழட்டி பெண்டறோடை றோட்டிலை படுக்க வைச்சுபோட்டாங்கள் . அதுவும் பள்ளிக்கூடம் போக நிண்ட பெட்டையளுக்கு முன்னாலை .நாங்கள் சிறாப்பற்றை நாயுண்ணி பத்தைக்குளால ஓடின காட்டுமுயலுகள் மாதிரி முழுசிக்கொண்டு றோட்டிலை படுத்திருந்தம் .





December 30, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...