Skip to main content

நெருடிய நெருஞ்சி-20







என் முன்னே முனை அகலப் பரந்து விரிந்து இருந்தது . தூரத்தே கட்டு மரங்கள் வரிசை கட்டி சென்றன. சூரியனுக்கும் வானத்திற்கும் நடந்த முத்தமிடல் போட்டியில் , வானத்தின் முகம் நாணத்தால் சிவந்தது . அதன் எதிர்வினை கடலிலும் தெரிந்தது . ஒருபுறம் ஆண்கடலும் , மறுபுறம் பெண்கடலுமாக முனை சரிசமனாகப்பிரித்து வினோதம் காட்டிக்கொண்டிருந்தது . மெதுவாக வலதுபுறம் பெண்கடலைத்திரும்பிப் பாரத்தேன் . அங்கே வெண்மணல் பரவி அதில் அலைகள் மூசி அடித்தன . அருகே மண்மூட்டைகள் அடுக்கி பெரிய பாதுகாப்பு அரண்களில் பொடிகாமியள் விறைப்புடன் இருந்தார்கள் . இங்கிருப்பவர்கள் அங்காலை போகமுடியாது . போவதானால் சுற்ரி மீன்சந்தையடியால் தான் மற்ரப்பக்கத்திற்குப் போகமுடியும் . நான் நின்றபகுதியில் கற்பாறைகள் இருந்ததால் அலைகள் தவழ்ந்தே வந்தன . மெதடிஸ் கல்லூரி அமைதி காத்தது . ஏனோ என்மனம் கொதிகலனாகப் புகைந்தது. எவ்வளவு கதைகளைத் தன்னுள் வைத்து அமசடக்கியாக இருந்தது அந்தக்கடல் . எங்களை தாலாட்டி விளையாடிய இந்தக்கடலே , எங்களையும் விழுங்கியது தான் வேதனை . கடைசியில் எங்களுக்கு அது வழியே விடாமல் நந்தி மாதிரியுமல்வா குறுக்கே நின்றது . ஆனால் , உன்னை மாதிரித்தானே இன்னும் ஒரு கடல் மோனஸ் க்கும் அவன் தோழர்கழுக்கும் ஆபத்து நேரத்தில் இரண்டாகப் பிரிந்து அவர்கள் தப்ப வழி செய்தது . அதன் கருணை கூடவா உனக்கு இல்லை ? எனது மனம் முனைக் கடலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது .

மேற்கே சூரியனை மெதுமெதுவாகக் கடல் விழுங்கிக் கொண்டிருந்தது . நாங்கள் மறபக்கம் போவதற்காக , மீண்டும் கல்லூரி வீதி வழியாக பஸ்ராண்டுக்குச் சென்று , மீன் சந்தையின் ஊடாக மறுபக்கமான பெண்கடலை அடைந்தோம் . அங்கு மீனவர்களின் வாடிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக கரைகட்டி நின்றன . ஒரு சிலர் பிய்ந்த வலைகளைக் கோர்த்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள் . கரையிலே படகுகள் வண்ண வண்ண நிறங்களில் கையிற்ரால் கட்டி இருந்தன . அவைகழும் அலைகளின் அதிர்வுக்கு ஏற்ப நடனமாடின . பிள்ளைகள் தண்ணியைக் கண்ட புழுகத்தில் தண்ணிக்குள் இறங்கி விளையாடினார்கள் . நான் கடல்நீரில் காலை வைத்து இறங்கியபொழுது , தண்ணியின் அடியில் இருந்த சின்ன ரக மீன்களும் , சிப்பிகளும் , நண்டுகளும் , சங்குகளும் ஓடிப் பாய்ந்து போக்குக் காட்டின . அலையின் இழுவையால் எனதுகாலின் கீழ் இருந்த மண் என்னை நிலைதடுமாற வைத்தது . நான் ஒரு படகில் ஏறி வசதியாக இருந்து கொண்டே கடலை உத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் . என் மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது . என் மனதில் இனம்புரியாத வலி எங்கும் பரவியது . மற்ரயவர்களுக்கு சந்தோசமாக இருக்கன்ற இந்த முனைக் கடல், எனக்குமட்டும் ஏன் வித்தியாசமாகத் தெரிகின்றது ? சிலவேளை எனது பார்வையில் தான் கோளாறோ ? என்று குளம்பிக்கொண்டு இருந்தேன் . எனது மன ஓட்டத்தை மனைவியின் குரல் கலைத்தது ,

"போவமே கண்ணன் ".

"ஏன் "?

"இருட்டீட்டுது , இனி இங்கை நிக்கேலாது ".

நேரத்தைப் பார்த்தேன் 6 மணியைக் கடந்து இருந்தது . கடலில் கருமை பரவி , தூரத்தே வெளிச்ச வீட்டில் இருந்து விட்டு விட்டு வெளிச்சப்பொட்டு சுழண்டடித்தது .

"சரி போவம்" .

என்று அரைமனதுடன் படகை விட்டு எழும்பினேன் . வாடி வீடுகளில் அரிக்கன் லாம்புகள் மினுக் மினுக் என்று எரிந்தன . அங்கிருந்து தீயலின் வாசம் மூக்கைத் தடவியது . நாங்கள் கோட்டு வாசல் வீதியால் பஸ்ராண்டை நோக்கி நடந்தோம் . இடையில் கோட்டடி பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் இருந்த வௌவ்வாலுகள் வானத்தை நிறைத்தன . எனக்கு அது பெரிய அதிசயமாக இருந்தது . ஒரு சேர இவ்வளவு வௌவ்வாலுகளை முன்பு நான் கண்டதில்லை . அவை வினோத ஒலிகளை எழுப்பிப் பறந்து கொண்டிருந்தது ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது . நாங்கள் பஸ்ராண்டை அண்மித்து விட்டோம் . மனைவியை அம்மன் கோயலடியில் நிக்கச்சொல்லி விட்டு , நானும் , மச்சானும் கிங்பிக்ஷர் பியர் வாங்கப்போனோம் . பியரை இருவரும் வாங்கிக்கொண்டு மனைவி பிள்ளைகளுடன் அம்மன் கோயில் வீதியில் இறங்கினோம் . அப்பத்தட்டிகளில் வியாபாரம் குறைந்திருந்தது . ஒருவாறு நாங்கள் வீட்டை அடைந்தபொழுது இரவு 7 மணியைத் தாண்டி இருந்தது .

முனைக்குப் போனதால் உடலை விட மனது சோர்த்து போய் இருந்தது . சோர்வைப் போக்குவதிற்கு , கிணத்தடியில் போய் கப்பியால் கிணற்ரில் இருந்து தண்ணியை அள்ளி அள்ளிக் குளித்தேன் . மாமா என்னை வினோதமாகப் பார்த்தார் . குளித்ததால் உடலும் மனதும் புத்துணர்சி பெற்ரன . மாமி போட்டுத் தந்த இஞ்சித் தேத்தண்ணி அந்தநேரம் மனதைக் கிளர்சி அடையச் செய்தது . கேற் வாசலில் நின்றிருந்த மச்சானுடன் சேர்ந்து சிகரட் ஒன்றைப் பற்ர வைத்தேன் . மாலின் நடவடிக்கைகள் கூரையினால் வந்த புகையினூடாகத் தெரிந்தன . ஒழுங்கையில் இருந்த இருட்டால் வானம் தெளிவாகவே தெரிந்தது . அதில் நட்சத்திரங்களின் அணிவகுப்பு எனது மனதைக் கொள்ளைகொண்டது. ஒழுங்கை மிகவும் அமைதியாக இருந்தது . அந்த அமைதியும் நட்சத்திரங்களின் அணிவகுப்பிற்கு அழகு சேர்த்தது . நான் அதில் சொக்கிப்போயிருந்தேன் .

எனது மனைவி கிட்ட வந்து சாப்பிடச் சொன்னா . நாங்கள் எல்லோரும் விறாந்தையிலும் , மாலிலும் உட்கார்ந்தோம் . மாமி அவித்த மரவள்ளிக் கிழங்கும் , பச்சைமிளகாய் சம்பலும் தந்தா . இங்கு மெழுகு பூசிய மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிட்ட எனக்கு , ஊர் மரவள்ளிக்கிளங்கு காணாததை கண்டமாதிரி இருந்தது . ஒருகாலத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கும் , பாணுமே எமது பிரதான உணவாய் இருந்தன . ஆனால் ,அப்போது எல்லோரிடமும் சந்தோசம் இருந்தது . இப்பொழுது எல்லா வசதிகள் வந்தும் சந்தோசத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடவேண்டியதாக உள்ளது . நான் ஒன்றுமே பேசாது நிதானமாக மரவள்ளிக்கிழங்கை ரசித்துச் சாப்பிட்டேன் . ஊர் அடங்கி விட்டது . நானும் , மச்சானும் இருட்டில் கேற்ரில் நின்று கொண்டு சிகரட் அடித்துக் கொண்டிருந்தோம் . இருட்டில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன . நான் அவைகளின் அணிவகுப்பில் சொக்கிப்போயிருந்தேன் . நாங்கள் படுக்கைக்குத் தயாரானோம் . இரவுப்பூச்சிகளின் மெல்லிய ஒலியில் நித்திரை என்னைக் கட்டிப்பிடித்தது . வழக்கம்போலவே பக்கத்தி வீட்டுச்சேவல் என்னை விடிய 5 மணிக்கு எழுப்பி விட்டது. எனது வழமையான ஆயத்தங்களுடன் அந்தக்காலையில் பால் வாங்க மந்திகைச் சந்திக்கு பால் பண்ணைக்கு நடந்தேன் . நான் ஆத்தியடி பிள்ளையார் கோயலடியால் வட இந்து மகளிர் கல்லூரிக்கு நடக்கும்பொழுது , அனேகமான வீடுகளில் எழும்பி வீட்டு வாசலிற்கு தண்ணி தெளித்துக் கொண்டிருந்தார்கள் . தண்ணிபட்டு புழுதி வாசம் மூக்கை நிறைத்தது . அந்தக் காலை வேளையிலேயே வருங்கால அறிஞர்கள் ரியூசனுக்கு சைக்கிள்களில் வரிசை கட்டினார்கள் . எனக்கு எனது பள்ளிப்பருவம் ஞாபகத்திற்கு வந்து ஏக்கப்பெருமூச்சாக வெளிப்பட்டது . நான் முதலாங்கட்டைச் சந்தியை அடைந்து பரித்தித்துறை வீதியில் எனது நடையைக் கூட்டினேன் . சந்தடி குறைந்த வீதியில் வியர்வை ஆறகப் பெருகி ஓட நடந்தது , மனதிற்குப் புத்துணர்சியையும் உற்சாகத்தையும் தந்தது . நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .

என்னைக்கடந்து யாழ்ப்பாணம் வவுனியா இ போ சா பஸ் போனது . தோட்டக்கறர்கள் லான்ட் மாஸ்ரறில் தோட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் . வீதி ஓரத்து சில வீட்டு மதில்களில் பொயிலை காயப்போட்டிருந்தார்கள் . வழியில் சென்றியில் நின்ற குரங்கு ஒன்று " ஆய்பவான் மாத்தயா " என்றது . நான் பதிலுக்கு ஆங்கிலத்தில் காலைவணக்கம் சொன்னேன் . நான் பால்பண்ணைய அடந்தபொழுது , அங்கே பலர் பால் கொடுக்க வருவதும் போவதுமாக இருந்தார்கள் . உடனடிப் பாலின் மணம் அங்கு நிரவியிருந்தது .நான் அதை நுகர்ந்துகொண்டே பாலை வாங்கிக்கொண்டு , மீண்டும் வந்தவழியே விறுவிறுவென்று நடந்தேன் . இப்பொழுது வீதியில் வாகனநடமாட்டம் அதிகமானதால் , வீதியின் ஓரமாகவே நடந்தேன் . இப்பொழுது சூரியன் வெளியே எட்டிப் பாரத்து சூட்டுடன் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் .நான் முதலாம் கட்டைச் சந்தியில் உதயன் பத்திரிகை ஒன்று வாங்கிக்கொண்டேன் . இப்பொழுது இந்து மகளிர் கல்லூரி வீதி பரபரப்பாகியிருந்தது . மாணவிகள் சைக்கிள்களில் அணிவகுத்தார்கள் . நான் வியர்வை ஒழுக ஒழுக நடந்துகொண்டிருந்தேன் . நான் வீட்டை வரும்பொழுது மனைவி கேற் வாசலில் என்னைப் பாத்துக்கொண்டிருந்தா .

"என்ன?"

என்று பார்வையால் கேட்டேன்,

"இங்கை பிள்ளையள் எழும்பீட்டாங்கள் , இவ்வளவு நேரமும் என்ன செய்தனிங்கள் "?

"நான் நடந்து போய் வாங்கின்னான் ".

"புது இடத்திலை ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை"?

"ம்.......... நல்லதுக்குக் காலமில்லை ". என்று நான் எனக்குள் முணுமுணுத்தேன் .

"அங்கை உங்களை ஆரோ பாக்கவந்திருக்கினம் ".

"ஆர்"?

"போய்பாருங்கோவன் "

இந்தகாலமை நேரத்தில யாராக இருக்கும் என்று எண்ணியவாறே , நான் மாமாவின் வீட்டை நோக்கிப் போனேன் . அங்கு ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி இருந்தா. நான் போனதும் ,

"இங்கை எங்கட இடத்துக்கு ஆரோ புதாள் வந்திருக்கெண்டு கேள்விப்பட்டன் . அதுதான் பாக்க வந்தனான்".

எனக்கு தலை சுற்ரியது. யாராக இருக்கும் ? மாமா இடைமறித்து ,

"அது தம்பி என்ர ஒண்டவிட்ட தங்கச்சி , உங்களைப் பாக்க வந்தவா ".

என்று எனது குளப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"ஓ............ நீங்களே அந்த மாமி. உங்களைப்பற்ரி மனிசி சொல்லியிருக்கிறா ".

"அப்பிடியே , உவள் என்ன சொன்னவள்"?

நான் பொதுவாக சிரித்தேன் .

"என்ன இருந்தாலும் நீங்கள் எங்கடை மருமோன். உங்களுக்கு எள்ளுப்பா செஞ்சு கொண்டு வந்தனான்".

என்றவாறே , ஒரு பனை ஒலையால் செய்த

மூடுபெட்டி ஒன்றைத்தந்தா. அந்த மூடுபெட்டி கலர் சாயங்கள் போட்டு நேர்த்தியாக இழைக்கப்பட்டிருந்தது . நான் கனகாலத்திற்குப் பிறகு பார்ததால் , அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன் .

"என்ன தம்பி திருப்பி பாக்கிறியள் "?

"இல்லை , கனகாலத்துக்கு பிறகு பாக்கிறன் ".

"நீங்களோ இந்தப் பெட்டி செய்தது"?

ஓ.............நான் தான் பின்னீன்னான் . நான் உங்களுக்கு ஒண்டு பின்னித் தாறன் . எங்கட மருமோனுக்கு இல்லாததே "?

"நீங்கள் குஞ்சுப்பெட்டி, கொட்டைப்பெட்டி , எல்லாம் பின்னுவியளே "?

நான் அவாவின் வாயைக் கிண்டினேன் .

"தம்பி நீங்கள் ஆசைப்பட்டுடியள் எல்லோ ? நீங்கள் போறதுக்குள்ள நீங்கள் கேட்டது இருக்கும்".

இவர்களது விகற்பமில்லாத கதைகள் என்னை நெகிழ வைத்தன . இவர்கள் தான் இந்த மண்ணின் உயிர்பு மூல நாடிகள் . இவர்கள் கலத்திற்குப் பிறகு நாங்கள் ஓரு ஜிப்சி இனமாக மாறிப்போய்விடுவோமா ????? , மனது வலித்தது . மாமி நீங்கள் இருந்து சாப்பிடவேணும் , நான் குளிச்சுட்டு வாறன் . என்று சொல்லி விட்டடு கிணத்தடிக்குப் போய் கப்பியால் அள்ளி அள்ளிக் குளித்தேன் . எனது வியர்த உடம்பிற்கு குளித்தது நல்ல புத்துணர்சியாக இருந்தது . மனைவி தந்த கோப்பியை குடித்தவாறே உதயனை மேய்ந்தேன் . டக்குவின் கவர்சிகர மாநகரசபை தேர்தல் வாக்குறுதிகள் உதயனில் அலங்கரித்தன . கொம்பு சீவி விட்ட சுயோச்சைகளின் அலைப்பரைகளையும் பாத்து வியந்தேன் . இதில் எனக்குப் படிப்பித்த தின்னவேலியில் ஒரு பிரபல்யமான ரியூட்டறி வைத்திருந்த ஐங்கரநேசனும் குதித்தது எனக்கு தாங்கமுடியாமல் இருந்தது . நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஏழாலைக்கு அண்ணை வீட்டிற்குப் போக வெளிக்கிட்டோம் . நாங்கள் 750 இ போ சா பஸ்சில், யாழ்ப்பாணம் போக பஸ்சினுள் ஏறி இருந்தோம். பஸ் யாழப்பாணத்தை நோக்கி மூசியது . பஸ் கோப்பாயை கடந்து வேகம் எடுத்தது. நான் எனது பார்வயில் சுவாரசியமானேன் . நான் சிறுவயதில் படித்த கிறீஸ்தவகல்லூரியை நெருங்கியது பஸ் .நான் ஆவலுடன் கல்லூரியைப் பார்த்தேன் . அருகே இருந்த சேர்ச் சிறிது தளர்வுற்ருக் காணப்பட்டது . தூரத்தே கல்லூரி மைதானம் தெரிந்தது . சிறுவயதில் எவ்வளவு தரம் இதனால் நடைபயின்றேன் ? ஆனால் இன்று நான் அன்னியனாக............ கண்கள் குளம் கட்டியது . நான் கண்களை வலிந்து மூடிக்கொண்டேன் .

பஸ் முத்திரைச்சந்தியை நெருங்கியிருந்தது . மாமன்னன் சங்கிலி குதிரையில் ஆரோகணித்து அதே முறுக்குடன் நின்றான் . மந்திரிமனையைக் காலம் கற்பழித்திருந்தது . பஸ் இவர்களைத் தாண்டி நல்லூரை எனக்கு விசாலப்படுத்தியது . நல்லைக்கந்தன் அதே பொலிவுடன் இருந்தான். பஸ் வேகமெடுத்து யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் தன்னை நிலை நிறுத்தியது . நாங்கள் எல்லோரும் இறங்கினோம் . பஸ்நிலயம் புராதன இடம் போல் எனக்குத் தெரிந்தது . நவீனசந்தைக் கட்டிடத் தொகுதி சிதைந்திருந்தாலும், உயிர்புடன் இருந்தது . நாங்கள் கொண்டக்ரரிடம் கேட்டு காங்கேசன்துறை போகும் பஸ்சில் ஏறி இருந்தோம் . பஸ் காங்கேசன்துறை வீதிவழியாக வேகமெடுத்தது . போகும் வழியெங்கும் செம்மண் தோட்டங்கள் பசுமை போர்த்தின . நான் அண்ணயின் வீட்டைப் பார்கப்போகும் ஆவலில் பரபரப்பானேன் . அண்ணையின் கலியாணமும் எனக்குச் செய்தியாகத்தான் தெரிந்தது . இன்று அவருக்கு வளரந்த பிள்ளைகள் . காலம் என்னை இவ்வளவிற்குப் பழிவாங்கும் என்று நான் அந்த வயதில் நினைக்கவில்லை . எந்தவித நல்லது கெட்டதுகளிலும் பங்காளியாகாத நான் , அவரகளுக்கு சகோதரனாவதற்கு என்ன தகுதி இருக்கின்றது??? என்று எனது மனச்சாட்சி என்னைப்பார்த்து உறுமியது . எனதுமனம் எனது கட்டுப்பாட்டில் நிற்க மறுத்த அடம்பிடித்தது . பஸ் குப்பிளான் சந்தியில் எங்களை இறக்கிவிட்டது . அதிலிருந்து நாங்கள் ஓட்டோ பிடித்து அண்ணையின் வீட்டை அடைந்தோம் .






September 28, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...