மைக்கல் ஏஞ்சலோ ஏன் அழுதார்?
ரெஜினால்ட் ஹொராஸ் ப்ளைத் என்ற ஆங்கில எழுத்தாளர். ஜப்பானியக் கலாசாரத்தினால் கவரப்பட்டவர். ஜென் பற்றி நிறைய எழுதியவர்.
ஒருமுறை அவரிடம் யாரோ கேட்டார்கள்.
‘ஜென் என்கிற விஷயத்தை எங்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் விளக்கமுடியுமா?’
’முடியும்’ என்றார் ப்ளைத். அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை: ‘பர்ஃபெக்ஷன்.’
‘ஜென் என்றால் எதையும் பர்ஃபெக்டாகச் செய்வது’ என்று ப்ளைத் குறிப்பிட்டபோது மற்றவர்கள் சிரித்தார்கள்.
‘அது எப்படி சார் முடியும்? இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள் உண்டா?’
‘தவறு செய்யுங்கள். ஆனால் அதையும் பர்ஃபெக்டாகச் செய்யுங்கள். அதுதான் ஜென்’ என்றார் ப்ளைத். ‘நீங்கள் தோற்றுப்போனாலும், பர்ஃபெக்டாகத் தோற்கப் பழகுங்கள். தினந்தோறும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு வேலையும் பர்ஃபெக்டான ஒரு விஷயமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்கிற விதம் எப்போதும் பர்ஃபெக்டாக இருக்கவேண்டும். எங்கும் எதிலும் அந்த உன்னதத்தைத் தேடியே உங்களுடைய பயணம் அமையவேண்டும்.’
இதற்கு உதாரணமாக, மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் சொல்வார்கள்.
மைக்கேல் ஏஞ்சலோ அப்போது ஒரு புதிய சிலையைச் செய்து முடித்திருந்தார். அதை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு லேசாகக் கண்ணீர் விட்டார்.பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர் கேட்டார். ‘ஏன் அழுகிறீர்கள்? சிலையில் ஏதாவது குறை தெரிகிறதா?’
‘குறையே தெரியவில்லை. அதற்காகதான் அழுகிறேன்.’
‘என்னய்யா இது? குறை இல்லை என்றால் ஏன் அழவேண்டும்?’
’என்னுடைய கண்களுக்குக் குறை கண்டுபிடிக்கும் தன்மை குறைந்துவிட்டது. அதற்காகதான் அழுகிறேன்!’ என்றார் மைக்கேல் ஏஞ்சலோ.
000000000000000000000000000000000
செய்வதை எப்படி செய்யலாம்?
ஒரு ஊரில் குகன் என்ற ஜமீந்தார் இருந்தார். நல்ல செல்வந்தர். ஊரில் உள்ள மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனே ஒடோடிப் போய் செய்வார். நல்ல பக்திமான். பல அறக்கட்டளைகளை நடத்தி வந்தார். எந்தச் சூழ்நிலையிலும் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்.
ஆனால் ஒரு விஷயத்தை கையிலெடுத்தார் என்றால் அவர்தான் தீர்ப்பு சொல்லுவார். அவர் கூறிவிட்டால் மறுவார்த்தை சொல்லாமல் மக்களும் ஒத்துக் கொண்டு போய்விடுவர். அவர் பெயரில் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், திருமண மண்டபம், கல்லூரி என பல இருந்தன. ஆனால் அன்னதானத்திற்கு மட்டும் அவர் தன்வீட்டிலேதான் செய்வார். எதற்கு என்றால் யார் எப்படி சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என அறிய முடியும் என்று அடிக்கடி கூறுவார்.
இந்த அன்னதானம் செய்வதற்கு முன்பு, தினமும் ஒரு வாய் கூட தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, பூஜை செய்து, நன்றாக பிரார்த்தனை செய்வார். அவர் காலையில் 6 மணிக்கு தொடக்கி மதியம் 1 மணிக்கு முடிப்பார். பூஜை முடித்த பின்னரே சாப்பாடு போடுவார். இவர் முடிப்பதற்கு முன்னரே எல்லா பதார்த்தங்களும் சரியாக திண்ணைக்கு வந்துவிடும். முடியாத மக்களும் சரியாக வரிசையில் நின்று விடுவர்.
இந்த சாப்பாடு திண்ணைக்கு வந்து 2 மணி நேரம் ஆனவுடனே தான் அன்னதானம் தொடங்கும். மக்களுக்கு இந்த சாப்பாடு வாசனையினால் இன்னும் பசி அதிகமாக எடுக்கும். இவர் எப்ப பூஜை முடித்து எப்படா போடுவார் என்று காத்துக் கொண்டு இருப்பர். இவர் வந்து தொடங்கினவுடனே மக்களும் நிம்மதி அடைவர். இந்த நிகழ்ச்சி எல்லா நாளும் இப்படித்தான் நடக்கும்.
மக்களுக்கு என்ன வருத்தம் என்றால் இவர் பாட்டுக்கு பூஜை செய்யட்டும். எங்களுக்கு சீக்கிரம் அன்னதானம் போட்டால் தேவலை என்று நினைத்தனர். ஆனால் இவருக்கு யார் அறிவுரை வழங்குவது என்று தெரியவில்லை. இருந்தாலும் இவரால் ஒருவேளை சாப்பாடு கிடைப்பதால் பேசாமல் இருந்தனர். இப்படியே நாட்கள் கடந்த நிலையில், அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவருக்கு மருத்துவம், சாஸ்திரம், என பல விஷயங்கள் தெரியும்.
இந்த ஜமீன்தரை பற்றி கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் மக்கள் அவரிடம் உள்ள குறையை மட்டும் இந்த துறவியிடம் சொல்ல பயப்பட்டனர். அவரும் அவர் போடுகிற சாப்பாட்டை சாப்பிட வந்தார். மக்கள் புலம்புவதை பார்த்து அமைதியாக இருந்தார். இந்த துறவியும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டார்.
ஒரு நாள் இந்த ஜமீன்தாருக்கு தீராத வயிற்று வலி. எததனையோ வைத்தியம் பார்த்தும் வலி குறையவில்லை. இந்தத் துறவியைப் பற்றி அவருடைய நண்பர் ஒருவர் சொன்னவுடன் அவரிடம் வைத்தியம் செய்யலாம் என்று முடிவு செய்தார்.
அந்தத் துறவி வீட்டிற்குச் சென்றார். இவர் போய் அரைமணியில் அனைத்து விதமான மருந்துகளும் தயாராக இருந்தது. ஆனால் அந்தத் துறவி சரியாக மூணு மணி நேரம் கழித்து மருந்து கொடுத்தார். அதற்குள் இந்த ஜமீன்தார் துடித்துப் போய் விட்டார். தொடர்ந்து இதே போல் ஒரு வாரம் வரச் சொன்னார். இதே நேரம் ஆகிவிட்டது. ஒரு வாரம் கழித்து அவருக்கு குணமாகிவிட்டது. இருந்தாலும் அவருக்குத் துறவி மேல் கோபம் இருந்தது.
ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து ஜமீன்தார் கேட்டார். என்ன துறவின்னு சொல்லறீங்க. ஆனா ஒரு வாரமா இந்த மருந்தைக் கொடுத்தீங்க. சரியான நேரத்தில கொடுத்து இருந்தா நேரம் விரயம் ஆகி இருக்காது என்று சொன்னார்.
துறவி சொன்னார் எல்லா விஷயத்தையும் நேரம் கடத்தாம செய்தா யாருக்கும் தொந்திரவு வராது. நீங்களும்தான் அன்னதானம் போடுகிறீர்கள். ஆனால் முன் கூட்டியே சாப்பாடு உங்க திண்ணைக்கு வந்திடுது. ஆனா மக்கள் நீங்க விரதம் முடிச்சு எப்படா சாப்பாடு போடுவீங்கன்னு காத்துகிட்டு இருக்காங்க.
ஒரு வாரம் வயித்தவலி உங்களால தாங்க முடியல. மக்கள் மட்டும் எப்படி பசிய தாங்குவாங்க. என்னைக்குமே ஆறின கஞ்சி பழங்கஞ்சி தான். நீங்க எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் விரதம் இருங்க. ஆனா மக்களுக்கு சரியான நேரத்தில சாப்பாடு போடுங்க. கடவுள் பஞ்ச பூதத்தில் இருக்காருன்னு சொல்கிறோம். என்னைக்காவது அரை மணி நேரம் ஓய்வில இருந்துருக்கா?. எல்லாமே கடவுள் கொடுத்ததுதான்.
கடவுளால படைக்கப்பட்ட பொருள் எல்லாத்தையும் மனுஷன்தான் தன் கட்டுப்பாட்டில வைத்து உரிமை கொண்டாடுகிறான். எல்லாரும் விரதம் இருக்கிறது எதற்கு என்றால், மனசு எப்பவும் அலை பாயும். அதை ஒரு நிலையில் கொண்டு வரணும் என்றால் நமக்கு நாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். அடுத்தவர்கள் மனதால் நோகடிக்காமல் இருந்தாலே, அதுதான் நாம் கடவுள் பெயரால் செய்கின்ற விரதம். எனவே நீங்க விரதம் இருங்க. அன்னதானம் ஒரு பக்கம் நடக்கட்டும் என்று துறவி சொன்னார்.
ஜமீன்தார் மன்னிப்பு கேட்டு, விடை பெற்றார்.
எனக்கு வேலை இருக்கு!
இரண்டாம் உலகப் போரின்போது ஒரு முக்கியமான சர்வதேச ஆளுமையாக உருவெடுத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். சண்டை உச்சத்தில் இருந்தபோது அவரிடம் யாரோ கேட்டார்கள்.
‘இந்தப் போர் என்ன ஆகுமோ என்று நினைத்தால் உங்களுக்குப் பயமோ, கவலையோ இல்லையா?’
‘நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை.’
‘ஒருவேளை, இந்தப் போரில் எதிரி நாடுகள் ஜெயித்துவிட்டால் இங்கிலாந்து என்ன ஆகும்? அதைப்பற்றி நீங்கள் அவ்வப்போது கவலைப்படுவதுண்டா?’
‘இல்லவே இல்லை’ என்றார் சர்ச்சில். ‘எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. கவலைப்பட நேரம் இல்லை!’
சர்ச்சில் சொன்ன இதே விஷயத்தை வாழ்ந்து காட்டிய ஜென் துறவிகள் பலர் உண்டு. ’இந்தக் கணத்தில் வாழுதல்’ எனும் ஜென் அடிப்படைக் கோட்பாட்டை நீட்டித்துப் பார்த்தால், முந்தைய கணத்தின் முடிவுகளைப்பற்றியோ அடுத்த கணத்தின் சாத்தியங்களைப்பற்றியோ கவலைப்பட நேரமில்லாமல் போகும். இந்தக் கணத்தையே முழுமையாக அனுபவித்து வாழமுடியும்.
ஒரு ஜென் துறவி. அவரிடம் யார் என்ன சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக்கொள்வார். ஆச்சர்யப்படமாட்டார். கோபப்படமாட்டார். பயப்படமாட்டார். வாழ்த்துச் சொல்லமாட்டார். திட்டமாட்டார். வெறுமனே கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். இதைப் பார்த்த அவருடைய சிஷ்யர்களுக்கு ஆச்சர்யம். அவர்களெல்லாம் சேர்ந்து தங்களுடைய குருநாதரைப் பரிசோதனை செய்து பார்க்கத் தீர்மானித்தார்கள்.
தினமும் மாலை மூன்று மணியளவில் அவர்களுடைய குருநாதர் தேநீர் தயாரிப்பார். அதைச் சுடச்சுடக் குவளையில் ஊற்றிக்கொண்டு வருவார். வெளியே உட்கார்ந்து இயற்கையை வேடிக்கை பார்த்தபடி அருந்துவார்.
அன்றைக்கு அவர் சூடான தேநீர்க் குவளையோடு நடந்து வரும்போது சில சிஷ்யர்கள் திடீரென்று அவர்முன்னே குதித்தார்கள். பெரிதாகக் கத்தினார்கள். குருநாதர் அவர்களைக் கவனிக்கக்கூட இல்லை. அவர் முகத்தில் சிறு சலனமும் இல்லை. மெதுவாக வெளியே நடந்தார். வழக்கமான இடத்தில் அமர்ந்தார். தேநீர் அருந்த ஆரம்பித்தார். சிஷ்யர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
"குருவே, நாங்கள் உங்களைப் பயமுறுத்தினோமே. நீங்கள் பயப்படவே இல்லையே!’
‘அப்படியா? வேலையாக இருந்தேன். கவனிக்கவில்லை’ என்றார் குருநாதர்.
‘வேண்டுமானால் உங்களுக்காக இப்போது பயந்து காட்டட்டுமா?’
0000000000000000000000000000000
அதிக ஆண்டுகள் உயிர் வாழ ஆசை
வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர்.
மாணிக்கம் ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.
பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.
அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. அவன் முன்னால் கடவுள் தோன்றினார். கடவுளைக் கண்ட முத்து அவரை வணங்கினான்.
"முத்து, உனக்கு இனி எந்த ஆபத்தும் வராது. 100 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்.
"காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி நடித்து அழுதனர்.
"என்ன நடந்தது......" என்று கேட்டனர்.
எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். தான் 100 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழ வேண்டும் என்று திட்டமிட்டனர்.
பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தனர்.அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.
"உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.
தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்.
"கடவுளே நான் 200 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம்.
"நான் 400 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம்.
ரத்தினம் 500 ஆண்டு என்றான். வைரம் 600 என்றான். இருவரும் இப்படி ஆண்டுகளை ஏற்றிக் கொண்டே சென்றனர்.
"நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறனுக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்.
"சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.
"இந்தக் குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.
இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.
வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான்.
யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.
000000000000000000000000000000000
ஓட்டம்
கோவிந்தனின் வீட்டில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் இரண்டு பலாப்பழங்கள் நன்கு பழுத்திருந்தன. ஒருநாள் கோவிந்தனின் அப்பா அந்தப் பலாப்பழங்களை அறுத்து வீட்டினுள் கொண்டுவந்தார். ’ஒரு பெரிய கத்தியை எடுத்துகிட்டு வந்து உட்காரு’ என்றார் அவனிடம். அப்பாவும் கோவிந்தனும் ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார்கள். அறுத்துச் சுளை எடுக்க ஆரம்பித்தார்கள். சில நிமிடங்களில் அப்பா அந்த முதல் பழத்தை இரண்டாகப் பிளந்து சுளைகளைப் பிரித்து எடுத்துப் பாத்திரத்தில் போட்டுவிட்டார். ஆனால் கோவிந்தன் இன்னும் போராடிக்கொண்டிருந்தான். அப்பா சிரித்தார். அவனிடம் இருந்த பழத்தை வாங்கிச் சரசரவென்று ஏதோ வித்தை செய்தார். சுளைகள் தானாக உதிர்ந்து விழுந்தன. கோவிந்தன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.
‘பலாப்பழத்தை அறுக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்வாங்க. ஆனா நீங்கமட்டும் இப்படிப் படபடன்னு அறுத்து முடிச்சுடறீங்களே.
எப்படி? உங்களோட கத்தி ரொம்பக் கூர்மையா இருக்கறதாலயா?’
‘விஷயம் கத்தியில இல்லை’ என்றார் அப்பா. ‘பலாப்பழத்தை நறுக்கும்போது சில இடங்கள்ல பழம் நாம வெட்டறதுக்கு வசதியா வளைஞ்சுகொடுக்கும், வேற சில இடங்கள்ல என்னை வெட்டாதே-ங்கறமாதிரி எதிர்த்துநிற்கும்.’
‘எனக்கு இந்தப் பழம் எங்கே வளையும், எங்கே எதிர்க்கும்ன்னு தெரியும். அதுக்கு ஏத்தமாதிரி என் கத்தியை இடம் மாத்துவேன், அதிக எதிர்ப்பு உள்ள இடங்கள்ல போராடாம, குறைவான எதிர்ப்பு உள்ள இடங்கள்ல கவனம் செலுத்துவேன், அதனால கொஞ்ச நேரத்தில, கொஞ்சம் உழைப்பிலயே பழம் நல்லா வெட்டுப்பட்டுடும்!’
ஜென் இதனை ‘ஓட்டம்’ என்கிறது. நீரோட்டத்தின் போக்கில் மிதக்கிற ஓர் இலை கஷ்டப்படாமல் பயணம் செய்கிறது. அதுபோல நாம் செய்கிற வேலை எதுவானாலும்,
அதன் இயற்கைக் குணங்களை எதிர்த்து நிற்பதில் சக்தியை வீணடிக்காமல் ஓட்டத்தோடு மிதக்கப் பழகினால் அதிகம் சிரமப்படாமல் கூடுதல் தூரம் முன்னேறமுடியும்.
00000000000000000000000000000000000
வீணாய்ப் போன போதனை.
குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம்.
14ஆம் நாள் அதிகாலை
பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறான். மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.” என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”
அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”
“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.
அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார். பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது. சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார். அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான். அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை! ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத் தூக்கித் தன் மடிமீது கிடத்திக் கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.
ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அப்போதுதான் அது நிகழ்ந்தது. பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான். தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:
“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”
பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:
“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
000000000000000000000000000000000
நான்
மிஸ்டர் பரமசிவம் ஒரு ஜென் துறவியைச் சந்திக்கச் சென்றார்.அந்த ஜென் துறவி நாள்முழுவதும் தியானத்தில் இருக்கிறவர். மிக அபூர்வமாகதான் பார்வையாளர்களைச் சந்திப்பார். ஆகவே துறவியின் ஆசிரமத்தில் இவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
‘மன்னிக்கவேண்டும், குருநாதர் இப்போது யாரையும் சந்திப்பதற்கில்லை.’
‘என்ன இப்படிச் சொல்றீங்க?’ என்று கோபப்பட்டார் அவர். ‘நான் யார் தெரியுமா? இந்த ஊர் எம்.எல்.ஏ.’ என்றபடி பாக்கெட்டிலிருந்து ஓர் அட்டையை எடுத்துக் கொடுத்தார். ‘இந்த விசிட்டிங் கார்டை அவர்கிட்டே காட்டுங்க. உடனே என்னைக் கூப்பிட்டுப் பேசுவார்’ என்றார்.
சீடர்கள் உள்ளே சென்றார்கள். துறவியிடம் அட்டையை நீட்டினார்கள். அவர் அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு,
‘எம்.எல்.ஏ.விடம் பேச எனக்கு எதுவும் இல்லையே’ என்றார். ‘அவரைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.’
திரும்பி வந்த சீடர்கள் மிஸ்டர் பரமசிவத்திடம் விஷயத்தைச் சொன்னார்கள். ‘நாங்கதான் அப்பவே சொன்னோம்ல. பந்தாவா கார்டை நீட்டி இந்த நோஸ் கட் தேவையா?’ என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.
பரமசிவம் யோசித்தார். அதே கார்டின் பின்புறத்தில் தன்னுடைய பெயரைமட்டும் எழுதி நீட்டினார். ‘இதை அவர்கிட்ட காட்டுங்க. ப்ளீஸ்!’
சீடர்கள் மீண்டும் உள்ளே சென்றார்கள். துறவி அட்டையைப் பார்த்தார். ‘அடடே, பரமசிவம் வந்திருக்காரா? அவர் எனக்கு நல்ல நண்பராச்சே’ என்றபடி எழுந்து வந்தார்.
‘நான்’ அற்று இருப்பது – நான் அகற்றி இருப்பது ஜென்னின் முதல்படி.
00000000000000000000000000000000000
கடவுள் பச்சோந்தியா?
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது இருந்த சின்ன உயிரினத்தைப் பார்த்தான். திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற உயிரினத்தைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், "நானும் காட்டுக்குள் போன போது அந்த உயிரினத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?" என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த உயிரின் நிறம் மஞ்சள் என்றான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த உயிரினத்தைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது. விவாதத்துக்கு தீர்வு காண அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், "ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் உயிரினத்தைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த உயிரினம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி", என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.
0000000000000000000000000000000000000000
ஆயுதம் எதற்கு?
போகுதென் என்கிற ஒரு சாமுராய். பெரிய வீரர். ஜென் கற்றவர். ஆனால் ஒருபோதும் தன்னுடைய திறமைகளைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார். அமைதியான பேர்வழி.ஒருநாள் போகுதென் படகில் சென்றுகொண்டிருந்தார். அவரோடு இன்னும் ஏழெட்டுப்பேர் அதே படகில் பயணம் செய்தார்கள்.
சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ’நான் பெரிய போர்வீரன். தெரியுமா?’
யாரும் பதில் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரேலென்று எழுத்து நின்றான். வாளை உறுவினான். சுழற்றினான். ’இங்க எவனுக்காச்சும் தைரியம் இருத்தா என்னோட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. பார்த்துடலாம்.’
இப்போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவன் இன்னும் அசிங்கமாகக் கத்தினான். ஆவேசமாகக் குதித்தான். கடைசியாக போகுதென் பேசினார்.
’தம்பி, கொஞ்சம் அமைதியா உட்காருப்பா. நீ இப்படிக் குதிக்கறதால படகு கண்டபடி ஆடுது. அது கவிழ்ந்துட்டா நம்ம எல்லாரோட உயிருக்கும் ஆபத்து.’
அவன் சட்டென்று போகுதெனைப் பிடித்துக்கொண்டான். ’உனக்கு அவ்வளவு அக்கறைன்னா நீ என்னோட சண்டைக்கு வா!’ என்று சவால் விட்டான்.
’சரி’ என்று ஒப்புக்கொண்டார் போகுதென். ’ஆனா இங்கே சண்டை போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே!’
’அதனால?’
’அதோ, அங்கே ஆத்துக்கு நடுவில ஒரு தீவு இருக்கு. நீயும் நானும் அங்கே போய்ச் சண்டை போடலாம்.’
’சரி.’
போகுதென் துடுப்பை எடுத்துக்கொண்டார். அந்தத் தீவை நோக்கிப் படகைச் செலுத்தினார்.
சில நிமிடங்களில் படகு தீவுக்கரையைத் தொட்டது. அந்த வீரன் உருவிய வாளோடு கீழே குதித்தான்.
மறுவிநாடி போகுதென் படகை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தார். அந்த வம்புச்சண்டைக்காரனைத் தீவில் தனியாகப் புலம்பவிட்டுவிட்டுப் படகு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.
படகில் இருந்த மற்றவர்கள் போகுதெனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ’ஐயா, நீங்க பெரிய சாமுராயாச்சே. கத்தியை உருவி ஒரே சீவுல அவன் கதையை முடிச்சிருக்கலாமே!’
’உண்மைதான்’ என்றார் போகுதென். ’ஆனா வாளை உருவாமலே சண்டையில ஜெயிக்கலாம்ங்கறப்போ அநாவசியமா ஆயுதமெல்லாம் எதுக்கு?’
00000000000000000000000000000000000000000
படைப்பின் ரகசியம் என்ன?
ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும் வசித்து வந்தார்கள். பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.
அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி அமைதியாக வாழ்ந்தனர். ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து, போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.
குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும் எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப் பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.
"படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,
"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.
கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே இருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும் அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய கரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென ஏறி, புற்றுக்குள் நுழைந்தது. நுழைந்து மறைந்தும் விட்டது.
அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள் வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு அவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.
அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள் கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டுவிட்டதே!
இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?
அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன் சொன்னான்.
"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!
அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த பள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.
புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அப்போதுதான் அது நடந்தது.
புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு வேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக் கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.
அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன், பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின் மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது. நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு சென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகி விட்டதா என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்து விட்டான்.
இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு ஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து இறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான் .குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
"அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான் புரிந்தது.
00000000000000000000000000000000
நீங்கள் வளர்க்கும் காக்கை எது?
டீ போட்டுக்கொண்டிருந்தான் சீடன். சமையல் அறைக்கு வந்த குரு,
‘வடிகட்டு’ என்றார்.
‘ஆயிற்று குருவே’ என்றான் சீடன்.
‘அதனால்தான் சொல்கிறேன் வடிகட்டு’ என்றார் குரு.
சீடனுக்குப் புரியவில்லை. சரி, குரு சொல்கிறாரே என்று திரும்பவும் ஒருமுறை தேநீர்ச் சாறை வடிகட்டினான். குருவிடம் நீட்டினான்.
‘நான் உன்னை வடிகட்டச் சொன்னேனே?’ என்றார் குரு. சீடனுக்குத் தலை சுற்றியது. தடாலென்று குருவின் காலில் விழுந்தான். ‘புரியவில்லை குருவே’ என்றான்.
குரு சிரித்தார்.
‘தேநீரைச் சொன்னேன் என்று எப்படி நீயே முடிவு செய்துகொண்டாய்?’ என்று கேட்டார்.
இந்தக் கதை புரிய இன்னொரு கதை சொல்லலாம்.
ஒரு காக்கை. ஒரு புறா. இரண்டும் நல்ல நண்பர்கள். இந்தப் புறா மிகவும் நல்ல புறா. எந்த வம்புக்கும் போகாது. தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கும்.
ஆனால் காக்கை அப்படியல்ல. சரியான திருட்டுப் பேர்வழி. ஒரு சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிடும். ஆகவே இவர்கள் இருவரும் நட்பாக இருப்பதைப் பார்த்துப் பலருக்கு ஆச்சரியம். சிலர் புறாவிடம் அறிவுரை சொன்னார்கள்.
‘நீ ஏன் அந்தப் பொல்லாத காக்காவோட சேர்ந்து பழகறே? என்னிக்காவது அவனால உனக்குப் பிரச்னை வரும்!’
புறா அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ‘யார் என்ன சொன்னாலும் அவன் என் நண்பேண்டா’ என்று சொல்லிவிட்டது.
ஒருநாள் இந்தப் புறாவும் காக்கையும் ஜாலியாகப் பேசியபடி பறந்துகொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு விவசாயி வந்தான். அவன் தலையில் ஒரு தயிர்ப் பானை.
அதைப் பார்த்ததும் காக்கை சட்டென்று பறந்து சென்று அந்தப் பானையில் விளிம்பில் உட்கார்ந்தது. உள்ளே இருந்த தயிரைக் குடித்துவிட்டு மாயமாக மறைந்துபோனது.
தலையில் திடீரென்று பாரம் குறைவதை உணர்ந்த விவசாயி நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்ணில் பட்டது அப்பாவிப் புறாதான்.
’திருட்டுப் பறவையே’ என்று கோபப்பட்ட அவன், தன்னுடைய வில்லை எடுத்தான். ஒரே அம்பில் அந்தப் புறாவைக் கொன்றான்.
பக்கம் பார்த்துப் பழகவேண்டிய காலம் இது. உங்களுடைய நட்புகளை வைத்துதான் மற்றவர்கள் உங்களைப்பற்றிச் சொல்வார்கள். அவர்கள் அப்படி என்ன சொல்கிறார்கள்? அது நல்ல விஷயம்தானா? இல்லை எனில் உங்கள் இமேஜைக் கெடுக்கும் அந்தக் ‘காக்கை’ யார்? அதைக் கண்டுபிடியுங்கள். கழற்றிவிடுங்கள். தொடர்ந்து நல்ல நண்பர்களைத் தேடுவதுபோலவே, அவ்வப்போது கெட்டதையும் வடிகட்டவேண்டியது அவசியம்!
00000000000000000000000000000000000000
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
முள்ளம்பன்றி ஒன்று காட்டில் சென்று கொண்டிருந்தது. அதன் எதிரே ஓநாய் ஒன்று வந்து நின்றது. தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நின்றது முள்ளம் பன்றி.
இதைப் பார்த்த ஓநாய், “முள்ளம் பன்றியே பயப்படாதே. நான் உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கிறேன் என்றது.
“என்னது? நான் அழகாக இருக்கிறேனா?”
“ஆமாம். உண்மையில் நீ அழகுதான். ஆனால், அந்த அழகை உன் உடம்புல இருக்கிற முற்கள்தான் கெடுக்கின்றன”
“எங்கள் பாதுகாப்புக்காக இறைவன் கொடுத்தது அந்த முற்கள். அது என் அழகைக் கெடுத்தாலும் எனக்குத் தேவைதானே”
“அழகைக் கண்டு மயங்குபவர்கள் ஆயிரம் பேர். ஆனால் அவர்கள் இந்த முற்களைப் போன்ற ஆபத்தைக் கண்டு ஒதுங்கிப் போய் விடுவார்கள். எனவே உன் முற்களை மட்டும் எடுத்து விட்டால் உன் பின்னால் உன் அழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள்”
ஓநாயின் இனிப்பு வார்த்தையில் மயங்கிப் போனது முள்ளம்பன்றி.
மறுநாள் தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்ற அந்த முள்ளம் பன்றி,
“இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா?” என்று கேட்டது.
“அழகாய் மட்டும் இல்லை, அடித்துச் சாப்பிட வசதியாகவும் இருக்கிறாய்” என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய். முள்ளம் பன்றி ஓநாய்க்கு இரையானது.
இப்படித்தான் பலரும் தங்களைப் பிறர் புகழ்கிறார்களே என்று வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டுத் தங்களை இழந்து நிற்கிறார்கள்.
000000000000000000000000000000000000
மிச்சமுள்ள கேள்வி
அதிகாலை நேரம். ஒரு விவசாயி தன்னுடைய மாட்டை விற்பதற்காகச் சந்தைக்குக் கிளம்பினார். கூடவே அவருடைய சின்னஞ்சிறு மகனும் ஒட்டிக்கொண்டான்.
அந்த விவசாயிக்குத் தன்னுடைய மகன்மீது பாசம் அதிகம். ’சின்னக் குழந்தை நடந்து சிரமப்படவேண்டாமே’ என்று அவனைத் தூக்கி மாட்டின்மீது உட்காரவைத்தார். மாட்டை நடக்கவிட்டுப் பின்னாலேயே சென்றார். சிறிதுதூரம் போனதும் ஒரு காய்கறிக்கடை எதிர்ப்பட்டது. அங்கே கல்லாவில் உட்கார்ந்திருந்தவன்,
‘என்ன ஆளுய்யா நீ? வயசுப் பையன் அவன்பாட்டுக்கு நடந்து வருவான். உனக்குதான் ரொம்ப தூரம் நடந்தா களைப்பாயிடும். பேசாம அவனைக் கீழே இறக்கிட்டு நீ மாட்டுமேலே உட்கார்ந்துக்கோ’ என்றான்.
விவசாயிக்கு அவன் சொல்வது நியாயமாகப் பட்டது. மகனை இறங்கச் சொல்லிவிட்டு இவர் மாட்டின்மீது ஏறிக்கொண்டார். பயணம் தொடர்ந்தது. சற்றுத் தொலைவில் ஒரு கூடைக்காரி வந்தாள்.
‘பாவம், பச்சைப்புள்ளை, அதை நடக்கவெச்சுட்டு நீ ஒய்யாரமா மேலே உட்கார்ந்துகிட்டு வர்றியே, நீயெல்லாம் மனுஷனா?’ என்று காறி உமிழ்ந்தாள்.
விவசாயி யோசித்தார். எதுக்கு வம்பு? மகனையும் தூக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். மறுபடியும் பயணம் தொடர்ந்தது. இப்போது இன்னொருவன் எதிரே வந்தான்.
‘வாயில்லா ஜீவன், அதுமேல 2 பேர் உட்கார்ந்து சவாரி போறீங்களே, உங்களுக்கெல்லாம் இரக்கமே கிடையாதா?’ என்றான்.
அதற்குமேல் விவசாயிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தானும் இறங்கிக்கொண்டார். மகனையும் இறக்கிவிட்டார். மாடு முன்னே நடக்க இவர்கள் இருவரும் பின்னால் நடந்தார்கள். முதலில் இருந்தே இந்தக் காட்சிகளைப் பார்த்தபடி அதே சாலையில் வந்துகொண்டிருந்த ஒரு ஜென் குரு அந்த விவசாயியை அணுகி, சிரித்தபடி சொன்னார்:
‘இன்னும் ஒரு கேள்வி மிச்சம் இருக்கு. ஜாலியா மாட்டுமேல உட்கார்ந்துகிட்டுப் போறதை விட்டுட்டு இப்படி நடந்து வர்றீங்களே, உங்களுக்கென்ன பைத்தியமா?
வாழ்க்கை, ரப்பர் அல்ல. இழுத்தவர் இழுப்புக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தால் நம் வண்டி ஓடாது.
00000000000000000000000000000000000000
பாவம் மன்னிக்கப்படுமா?
ஒரு துறவியிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களிருவரும் தாங்கள் பாவம் செய்தவர்கள் என்றும் அதற்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர்.துறவி இருவரையும் செய்த குற்றங்களை விவரமாகக் கூறும்படி கேட்டார்.
முதலாமவன், “சுவாமி! என்னுடைய ஆத்திரபுத்தியினால் என் நண்பன் ஒருவன் இறக்கக் காரணமாகி விட்டேன். என் மனசாட்சி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று சொல்லி அழுதான்.
இரண்டாமவன், “நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை. சிறிய சிறிய குற்றங்களாகப் பல செய்திருக்கிறேன். அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை.” என்றான்.
துறவி சிறிது நேரம் யோசனை செய்தார். முதலாமவனைப் பார்த்து, “உன்னால் சுமக்கக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்துத் தூக்கிக் கொண்டு வா” என்றார்.
இரண்டாமவனைப் பார்த்து, “ஒரு கோணிப்பை எடுத்துக் கொள். சிறிய சிறிய கற்களாகப் பொறுக்கி எடுத்துக் கோணிப் பையில் போட்டுக் கொண்டு வா” என்று கூறினார்.இருவரும் துறவி கூறியபடியே செய்தனர்.
துறவி முதலாமவனைப் பார்த்து, “நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா” என்றார்.
முதலாமவன் அப்படியே செய்தான்.
பிறகு இரண்டாமவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ, அங்கேயே போட்டுவிட்டு வா” என்றார்.
இரண்டாமவன் விழித்தான். தான் பொறுக்கி எடுத்த இடங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறினான்.
“அன்பர்களே! பாவங்கள் இந்தக் கற்களைப் போன்ற்வையே. பெரும்பாவம் செய்தவன் மனம் பெரிய கல்லைப் போலவே அழுத்திக் கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, நினைத்து வருந்தும் போது, அந்தப் பாவத்தை மன்னித்து விட முடியும். எண்ணற்ற சிறிய சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதையே எண்ணிப் பார்க்க முடியாமல், அவற்றை நினைத்து வருந்தவும் முடியாதவனாக இருப்பதால் அவன் எப்போதும் பாவியாக இருக்கிறான்.
“பாவம் சிறியதானாலும், பெரியதானாலும் அது பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் மன்னிப்பார்” என்றார் துறவி
000000000000000000000000000000000000000
மாபெரும் யுத்தம்
ஒரு ஜென் துறவி. பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார். ஆனால் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர். அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது. இந்தக் கோபக்காரருக்கு நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை.
‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.
அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார்.
‘நீ தைரியமான ஆம்பிளையா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.
துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது.
‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.
அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.
இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’
00000000000000000000000000000000000000000
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
ஒரு அரசனின் பஞசனையில் மந்த விசர்ப்பணி என்கிற சீலைப் பேன் ஒன்று வசித்து வந்தது. இந்த பஞ்சனைக்கு ஒரு மூட்டைப் பூச்சி எப்படியோ வந்து சேர்ந்தது. இதைப் பார்த்த சீலைப் பேனுக்கு பயமாகி விட்டது.
" நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கிருந்து போய் விடு" என்றது அந்த சீலைப் பேன்.
"இந்த ராஜாவின் பஞ்சனை உனக்கு மட்டுமா சொந்தம்? மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம். அவருடைய பஞ்சனையை நீ மட்டும் சொந்தம் கொண்டாடுவதா? நான் போக முடியாது." என்று மறுத்தது அந்த மூட்டைப் பூச்சி.
" நீ பொல்லாதவன். முட்களைப் போன்ற உன் பற்களால் தூங்குவதற்கு முன்பே கடிப்பவன். சமய சந்தர்ப்பம் தெரியாத நீ இந்த ராஜாவின் படுக்கையில் இருக்கத் தகுதி உடையவனல்ல. இந்த இடத்தை விட்டு உடனே போய் விடு." என்று சீலைப்பேன் சொல்லியது. அதற்கல்லவா தெரியும் பக்குவமாக அந்தப் பஞ்சனையில் நாளைத் தள்ளி வருவதில் உள்ள சிரமம்.
ஆனால் கெட்டிக்கார மூட்டைப் பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு," நான் இங்கே அப்படி செய்ய மாட்டேன். நீ சொன்னபடியெல்லாம் கேட்பேன். என்னை இங்கிருக்க அனுமதிக்க வேண்டும." என்று கெஞ்சியது. அரசனுடைய ரத்தம் அதற்கு உணவாகக் கிடைக்கும் போது காலைப் பிடித்துக் கெஞ்சுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டது அந்த மூட்டைப் பூச்சி.
காலைப் பிடித்து கெஞ்சிக் கேட்டதால் கடுமையாகப் பேச முடியாத சீலைப் பேன் தன் நிலையில் இருந்து சற்று இறங்கி வந்தது.
"அரசர் உடலில் வெடுக்கென்று கடிக்கக் கூடாது. அவர் தூங்கிய பின்பு அவருக்கு வலி ஏற்படாமல் கடிக்க வேண்டும். அளவாக ரத்தம் குடிக்க வேண்டும்" என்று சில நிபந்தனைகளை விதித்து அங்கே தங்கிக் கொள்ள அனுமதித்தது.
இரவு நேரமாகி விட்டதால் அரசர் களைப்புடன் பஞ்சனையில் வந்து படுத்தார். சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அந்த மூட்டைப் பூச்சி அரசனின் இரத்தத்தைக் குடிக்கும் ஆர்வத்துடன் நறுக்கென்று கடித்தது. தன்னை ஏதோ ஒன்று கடிப்பதை உணர்ந்த அரசன் திடுக்கிட்டு எழுந்து சேவகர்களை அழைத்தான். சேவகர்களிடம் இந்தப் பஞ்சனையில் ஏதோ ஒன்று கடிப்பது போலிருக்கிறது பாருங்கள் என்று கட்டளையிட்டான்.
அவர்கள் பஞ்சனை முழுவதும் தேடினார்கள். மூட்டைப் பூச்சி வேகமாகக் கட்டிலின் இடுக்கிற்குள் சென்று மறைந்து கொண்டது. சீலைப் பேன் போர்வையில் ஒட்டிக் கொண்டிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டு நசுக்கப்பட்டது.தகுதியில்லாதவருக்கு அளிக்கும் அடைக்கலம் தனக்குத்தான் ஆபத்தைத் தரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
00000000000000000000000000000000000
அழுக்கு
இரண்டு சிறுவர்கள். மகிழ்ச்சியாகப் பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அவர்களில் ஒருவன் பந்தை உயரமாகத் தூக்கி வீசினான். அது ஒரு மரத்தின் உச்சாணிக் கிளையில் சென்று சிக்கிக்கொண்டது. அந்தச் சிறுவர்கள் இருவருக்கும் மரம் ஏறத் தெரியாது. திருதிருவென்று விழித்தபடி அந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு சாமியார் வந்தார். அழுக்கான தோற்றம். பல நாள் தாடி, மீசை. அவர் குளித்துச் சில மாதங்களாவது ஆகியிருக்கும் என்பது பார்த்தாலே தெரிந்தது.
அந்தச் சாமியார் இந்தச் சிறுவர்களைப் பார்த்தார். பக்கத்தில் வந்து ‘என்னப்பா பிரச்னை?’ என்று விசாரித்தார். முதல் பையன் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
‘என்ன பிரச்னையா இருந்தா உனக்கென்ன? உன் வேலையைப் பார்த்துகிட்டுப் போய்யா!’ என்றான்.
இரண்டாவது பையன் அப்படிச் செய்யவில்லை. சாமியாருக்கு வணக்கம் சொன்னான். ‘பந்து மரத்தின்மீது சிக்கிக்கொண்டுவிட்டது’ என்றான்.
சாமியார் சிரித்தார். தன்னுடைய பையிலிருந்து சில வைக்கோல்களை எடுத்தார். அந்த இரண்டாவது பையன் கையில் கொடுத்தார். அவன் காதில் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்.
‘இந்த மந்திரத்தைச் சொல்லி ஒரு வைக்கோலைத் தூக்கி எறி’ என்றார்.
அந்தப் பையன் சாமியார் சொன்னபடி செய்தான். அந்த வைக்கோல் பந்தின்மீது சென்று தாக்கி அதைக் கீழே தள்ளியது. பூமராங்போல அவன் கைக்கே திரும்பியது.
சிறுவர்கள் அசந்துபோனார்கள். சாமியாரை மரியாதையோடு பார்த்தார்கள். பிறகு குஷியாக விளையாடச் சென்றுவிட்டார்கள்.
அப்போது அவர்களுக்குத் தோன்றாத ஒரு விஷயம், அழுக்குச் சாமியாரை அலட்சியமாகப் பார்த்த சிறுவனுக்கு ஒரு மந்திரம் நஷ்டம், ஒரு வித்தை நஷ்டம், ஓர் ஆயுதம் நஷ்டம்.
நீங்கள் எப்படி? ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துத்தான் மதிப்பிடுவீர்களா? அதனால் இழப்பு யாருக்கு?
நம் மகிழ்ச்சி பிறருக்குத் தொல்லையாக இருக்கலாமா?
மதிய வேளை. மரப்பொந்து ஒன்றில் ஆந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் ஆந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அந்தப் பாட்டு சகிக்க முடியாத நிலையில், வெட்டுக்கிளியிடம் அது பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது. ஆனால் வெட்டுக்கிளி கேட்கவில்லை.அது ஆந்தையிடம் கோபமாக,
“நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை காட்டுவதில்லை. எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய். இரவில் உன்னைப் போன்ற திருடர்கள்தான் வெளியில் திரிவார்கள்.” என்று திட்டியது.
ஆந்தை சிறிது நேரம் யோசனை செய்தது. நம் தந்திரத்தால்தான் இந்த வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தது.சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு,
"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே...உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா,தருகிறேன்"என்றது.
ஆந்தையின் இனிமையான பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையிடம் போனது. வெட்டுக்கிளி பக்கத்தில் வந்ததும் ஆந்தை, அப்படியே பிடித்து நசுக்கிக் கொன்றது.பிறருக்கு நம்முடைய மகிழ்ச்சி தொல்லையில்லாத வரை நமக்கும் தொல்லை இல்லை.
February 24, 2013
Comments
Post a Comment